வெள்ளையன் இங்குத் தனது வணிகக் கொள்ளைக்கு வந்தபிறகுதான் ‘இந்தியா’ என்ற ஒற்றை நாடு உருவானது. அதற்குமுன் எப்போதும் ‘இந்தியா’ இருந்ததில்லை.

இந்தியத் துணைக் கண்டத்தில் பல்வேறு மொழி பேசும் தேசிய இனங்கள் வாழ்கின்றன. அவற்றுள் தொன்மைப் பண்பாடும் தனித்த அடையாளங்களும் கொண்ட நம் தமிழ்த் தேசிய இனமும் ஒன்று. 1947 இல் நாடு விடுதலை அடைந்ததாகச் சொல்லப்படு கிறது. ஆனால் இந்தியத் துணைக் கண்டத்தின் எல்லாத் தேசிய இனங்களும் தில்லி வல்லாண்மையின் அடிமை இனங்களாக ஆக்கப்பட்டது அப்போதுதான்! நடுவண் அரசில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மாநில அரசுகள் இங்குள்ள தேசிய இனமக்களைத் தில்லி ஆட்சிக்கு மண்டியிட வைப்பதே எப்போதும் வழக்கம்.

ஈழத்தில் நடந்து முடிந்த போரில் சிங்கள இனவெறி அரசு பல்லாயிரக்கணக்கில் தமிழர்களைப் படு கொலை செய்தது. அந்த இனக்கொலைகள் அத்தனைக்கும் இந்திய அரசு எல்லா உதவிகளையும் செய்தது. அனைத்து நாட்டுப் போர் மரபுகளுக்கும் புறம்பாக இனவெறியன் இராசபக்சே கொத்துக் குண்டுகள் போட்டுப் பள்ளிகள், மருத்துவமனைகள், வழிபாட்டு இடங்கள் என்றெல்லாம் நோக்காமல் குழந்தைகள், பெண்கள், முதியோர் உள்ளிட்ட எல்லோரையும் ஈவு இரக்கமின்றிக் கொன்றொழித் ததை உலகின் பிற நாட்டுத் தலைவர்கள் கண்டித்தும் இந்தியா இதுவரை வாய் திறக்கவில்லை.

ஈழத் தமிழர்கள் கொல்லப்படுவது போல் இப்போது இந்தியத் தமிழர்கள் எனப்படும் தமிழக மீனவர்கள் அன்றாடம் கொல்லப்படுகிறார்கள். நடுக்கடலில் கொடு மையான முறையில் தாக்கப்படுகிறார்கள். அவர்களின் மீன்பிடி படகுகள் அடித்து நொறுக்கப்படுகின்றன. எவ் வகை கேள்வி முறையும் இன்றி அவர்கள் இலங்கைக் கடற்படையினரால் இழுத்துச் செல்லப்பட்டுச் சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.

சின்னஞ்சிறிய பரப்பளவே கொண்ட இந்தச் சிங்கள வெறிப்படை நாட்டைத் தட்டி கேட்க, ஆறுகோடிக்கும் மேலான மக்களைக் கொண்ட தமிழர்களுக்கு உரிமை இல்லை. ஏனென்றால் தனித்த இறையாண்மை கொண்ட நாடாகத் தமிழ்நாடு இல்லை.

கடந்த 15.2.2011 அன்று கடலில் மீன்பிடிக்கச் சென்ற நாகப்பட்டினம், காரைக்கால் பகுதிகளைச் சேர்ந்த 106 தமிழக மீனவர்கள் அக்கரைப் பேட்டையைச் சேர்ந்த மீனவர் ஒருவர் தொலைபேசி வழியாகத் தந்த தகவலில் பேரில்தான் இந்தச் சிறைப்பிடிப்பு நிகழ்வே மற்றவர்களுக்குத் தெரியவந்தது.

இதற்குமுன் கடந்த 23.1.201 அன்று வேதாரணி யத்தை அடுத்த புட்பவனம் பகுதியைச் சேர்ந்த மூன்று மீனவர்கள் இந்திய எல்லைக்குள் மீன்பிடித்துக் கொண் டிருந்தபோது சிங்களக் கடற்படையினர் அவர்களைத் தாக்கினர். அந்த மூவரில் செயகுமார் என்ற இளைஞர் ஆழிப் பேரலைச் சுழலில் சிக்கிக் கை ஊனம் உற்றவர். சிங்களக் கடற்படை வெறியர்கள் அவர் கழுத்தில் கயிற்றைச் சுருக்காக மாட்டிக் கடலில் மூழ்கச் செய்து துடிக்கத் துடிக்கச் சாகடித்தனர்.

இக்கொலை நடந்த ஒரு கிழமைக்கு முன்னர்தான் புதுக்கோட்டையை அடுத்த செகதாப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த மீனவர் வீரபாண்டியன் என்பவர் இந்தியக் கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கே அத்துமீறி நுழைந்த சிங்களக் கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

தொடர்ந்து இக்கொலைகளை நிகழ்த்துவதோடு மட்டுமன்றித் தமிழ் மீனவர்களை இழிவுபடுத்திப் பேசுவது, அவர்கள் மீது வெற்று பீர்புட்டிகளை வீசுவது, சும்மா இருந்தாலும் நையப்புடைத்து விரட்டவது என்கிற அடாத செய்கைளைச் சிங்களக் கடற்படை தொடர்ந்து செய்து வருகிறது.

தமிழகத்தில் நேர்ந்த கடும் எதிர்ப்புக் காரணமாக இந்திய வெளியுறவுத் துறைச் செயலாளர் நிருபமா ராவ் இலங்கைக்கு அனுப்பப்பட்டார். ஒப்புக்குப் பேச்சு வார்த்தை நடந்ததோடு சரி. எல்லாம் கண்துடைப்பு நாடகம். மீண்டும் இப்போது தாக்குதல்கள் தலை யெடுக்கத் தொடங்கிவிட்டன.

பிப்ரவரி 15 அன்று 106 தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டதைக் கண்டித்துத் தமிழகத்தின் ஆளுங்கட்சியான தி.மு.க. தமிழகம் முழுவதும் ஆர்ப் பாட்டம் நடத்தியது. 6 நாடாளுமன்ற உறுப்பினர்கள், 15 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 15 ஆயிரத் திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். மாநி லத்தை ஆளும் தி.மு.க. இதில் சொத்தை அதிகாரங் கூட இல்லாத சப்பைக் கட்சியாகும். நாற்காலி பறி போகும் என்ற நடுக்கத்தால் அழுவதைக்கூட அது அளவு பார்த்துதான் செய்யும்.

இதற்கிடையில் கைது செய்யப்பட்ட 106 மீனவர் களும் பருத்தித்துறை நீதிமன்றத்தில் நேர் நிறுத்தப் பட்டனர். நீதிபதி ஸ்ரீமணி நந்தசேகரன், அவர்களை 15 நாள் காவலில் வைக்க ஆணையிட்டார்.

இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியாக இன்ற ளவும் கருதப்படும் இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ‘இலங்கை இந்தியாவுடன் நல்லுறவைப் பேண விரும்புகிறது. அதனால்தான் விடுமுறை நாளில் கூட இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது’ என்று கருணைவானைப் போலக் கடைந் தெடுத்த கயவனாகப் பேசினார்.

இதே நாளில் இந்தியா முழுவதிலும் உள்ள தொலைக் காட்சி ஊடகவியலாளர்களுக்கு நேர்காணல் அளித்த தலைமை அமைச்சர் மன்மோகன் சிங் “தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை தாக்குதல் நடத்துவதை ஏற்க முடியாது. இது தீவிர செய்தியாகக் கருதப்படுகிறது” என்கிற அளவோடு மட்டும் பேசி தன் வாயைப் பொத்திக் கொண்டார்.

இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா இலங்கை வெளியுறவு அமைச்சர் பெரிசுடன் தொடர்பு கொண்டு “இலங்கை மீனவர்கள் சட்டத்தைக் கையில் எடுத்துக் கொள்வதை ஏற்க முடியாது” என்று சொன் னதன் மூலம் இதில் இலங்கை அரசுக்கோ, இலங்கை கடற்படைக்கோ எந்தத் தொடர்பும் இல்லை. இலங்கை மீனவர்கள்தான் அத்துமீறல் செய்கிறார்கள் என்பது போலக் கயமைத்தனமாகக் கருத்து வெளியிட்டுள்ளார்.

ஈழப் போரில் பல்லாயிரக்கணக்கான மக்களைப் படுகொலை செய்ய இலங்கை அரசுக்கு இந்திய அரசு தான் எல்லா வகையிலும் துணைநின்றது. அப்போரில் விடுதலைப் புலிகளைக் கொன்று குவிக்க இந்திய அரசு தனது கடலோரக் காவல் படைக்குச் சொந்தமான ‘விக்ரகா’ என்ற போர்க் கப்பலை 2008ஆம் ஆண்டி லேயே கொடுத்து உதவியது. புலிகளுடன் ஆன போர் முடிவுக்கு வந்த நிலையில் கடந்த 23.1.2011 அன்று கொச்சித் துறைமுகத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் இலங்கைக் கடற்படை மேற்கு மண்டலத் தளபதி தமயந்தர தரும சிரிவர்த்தனா இந்தியக் கடலோரக் காவற்படை மேற்குமண்டலத் தலவர் எஸ்.பி.எஸ். பஸ்ராவிடம் அக்கப்பலைத் திரும்ப இந்தியாவிடம் ஒப்ப டைத்தார்.

இலங்கை வானூர்திப் படையின் 16ஆம் ஆண்டு நிறைவு விழா இன்னும் சில நாள்களில் கொழும்பில் நடைபெறவுள்ளது. அவ்விழாவில் இந்தியாவின் ‘சுகோய்’ வகைப் போர் வானூர்திகளைப் பங்கேற்கச் செய்வது என்று இருநாட்டு அரசுகளும் முடிவு செய்துள்ளன.

இன்றளவும், ஈழத்தமிழர்களில் பல இலட்சம் பேர் முள்வேலிக் கம்பிகளுக்கு நடுவே நடைபிணங்களாய் வாழ்ந்து வருகின்றனர். ஆனால் இனப்படுகொலைகள் நிகழ்த்திய இராசபக்சேவைக் காமன்வெல்த் விளை யாட்டுப் போட்டிகளின் நிறைவு விழாவிற்குச் சிறப்பு விருந்தினராய் அழைத்துத் தன் அருகில் அமர வைத் துக் கொண்டார் மன்மோகன் சிங்.

பிப்ரவரி 15இல் நாகை மீனவர்கள் 106 பேரைச் சிறையில் அடைத்துக் கொடுமை செய்த மறுநாளே புதுக்கோட்டையைச் சேர்ந்த 24 மீனவர்களைக் கைது செய்து இலங்கைக் கடற்படை அட்டூழியப்படுத்தியது. அன்றிரவு கடலில் மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீன வர்கள் மூவர் மீது பெட்ரோல் குண்டுகளை வீசியது. இதில் இராசாமுகமது என்கிற மீனவர் கடுமையான தீக்காயங்களுடன் மணமேல்குடி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல்கள் நெருங்கு கின்றன. வாக்குப் பொறுக்க நாக்கு நீட்டும் எல்லா அரசியல் கட்சிகளும் ‘எரிகிற வீட்டில் பிடுங்கிய வரை இலாபம்’ என்கிற கணக்கில் மீனவர் செய்தியில் மேலே மேலே விழுந்து ஒப்பாரி வைக்கின்றன. அரசியலில் அடிவைப்பதா வேண்டாமா என ஆழம் பார்த்துக் கொண்டிருந்த திரைப்பட நடிகர் விஜய் என்பவர்கூட மீனவன் ஒப்பனையோடு களத்தில் இறங்கப் போகி றார். மற்ற கட்சிகளைக் காட்டிலும் பா.ச.க. உரக்க ஒப்பாரி வைத்து முந்தப் பார்க்கிறது. நடுவண் ஆட்சிப் பொறுப்பில் தான் இருந்த காலத்தில் தமிழக மீனவர் சார்பாக எப்போதும் நடந்து கொள்ளாதது மட்டுமல்ல, விடுதலைப்புலிகளுக்கு வெளிப்படையாகவே இரண்ட கம் இழைத்து ஈழப்போரை ஒடுக்கிய கட்சி பா.ச.க. ஆகும்.

தமிழ்நாட்டில் போராட்டம் நடத்தும் எல்லாக் கட்சி களும் இலங்கை அரசை எதிர்த்து ஓங்கி முழக்கமிடு கின்றன. இராசபக்சேவின் கொடும்பாவிதான் கொளுத் தப்படுகிறது. ஆனால் மானமுள்ள தமிழர்கள் முதலில் கொளுத்த வேண்டியது மன்மோகன்சிங் கொடும் பாவியைத்தான்.

கைதான மீனவர்கள் விடுவிக்கப்பட்டுவிட்டார்கள். மீண்டும் அடுத்த சில நாள்களில் இக்கொடுமை தலை தூக்கும். மீண்டும் மீண்டும் போராட்டம், ஆர்ப்பாட்டம் என நடத்திக் கொண்டிருப்பதால் எந்தப் பயனும் இல்லை. ஆதிக்கச் சக்தியாகத் தமிழினத்தை அடிமைப் படுத்தும் தில்லி அரசின் தலையில் மரண அடி கொடுக்காதவரை தமிழுக்கோ, தமிழனுக்கோ மீட்சி இல்லை.

Pin It