mu_ramesh_330

       'இரவின் உயரம்' என்னும் புதிய படிமத்தினை உருவாக்கி, தனக்கான இலக்கிய இடத்தினைப் பற்றிக் கொண்டவர் மு. ரமேஷ். சென்னை பல்கலைக் கழகத்தில் படிக்கும்போதே ஒரு கவிதைத் தொகுப்பை வெளியிட்டு, நவீன இலக்கியக் கட்டுமானத்தில் தனக்கான கற்களையும் அடுக்கத் தொடங்கியவர் அவர். தற்பொழுது சேலம் அரசினர் கலைக் கல்லூரியில் தமிழ்த்துறையில் துணைப் பேராசிரியராகப் பணியாற்றும் இவருடைய மொழி ஆளுமை, நம்மை வியக்க வைக்கிறது. தமிழின் தொன்மையான இலக்கிய நூல்கள் அனைத்தையும் கற்றுத் தேர்ந்து அவர் எழுதுகின்ற கட்டுரைகள், சங்கத் தமிழ் இலக்கியத்தினை வேறு நோக்கில் மறுவாசிப்புக்கு உட்படுத்துகின்றன.மு. ரமேஷின் ஆழ்ந்த கல்விப் புலம் அவரை ஒரு எழுத்தாளராக மாற்றியிருக்கிறது. "என் தேசத்து ஜதிகள்', "வார்த்தைக்குள் சிக்காத இரவின் உயரம்', "மழையில் கரையும் இரவின் வாசனை', "கவிதையியல் மறுவõசிப்பு' ஆகிய நூல்களை எழுதியுள்ள மு. ரமேஷ், மேலும் பல கட்டுரைகளை பல சிற்றிதழ்களில் எழுதிக் கொண்டிருக்கிறார்.

ஆய்வாளர்கள் தங்களுக்கு மிகவும் ஏற்ற தலைப்புகளை தேர்வு செய்து கொண்டு, எவ்வளவு முடியுமோ அவ்வளவு விரைவில் தங்கள் ஆய்வினை முடித்துவிடும் சூழலில், தனக்கான ஆய்வு என்னும் நிலையைக் கடந்து, சமூகத்திற்கான ஆய்வினைத் தொடர்கிறார் ரமேஷ். சமூகத்தின் கொடுங்கரங்களால் ஒதுக்கப்பட்ட நிலையில் இன்று வரை நாம் இருக்கிறோம். நம் முன்னோர்கள் இன்னும் மோசமாக ஒதுக்குதலுக்கும் ஒடுக்குதலுக்கும் உள்ளாகி இருப்பார்கள். இந்த சமூக ஒதுக்குதல் எப்படியிருந்தது என்பதை ஆய்வு செய்ய வேண்டும். அதை ஆதியிலிருந்தே கொண்டு வர வேண்டும் என்னும் உந்துதல் இவருக்கு உண்டு.

மற்ற எல்லா வகையான ஒதுக்குமுறைகளையும்விட மொழி ரீதியானது மிகவும் மோசமானது. சங்க காலங்களில் எழுதப்பட்ட இலக்கியங்களில் தலித்துகள் எவ்வாறு ஒதுக்கப்பட்டனர் என்பதை ஆய்ந்தறிந்து, அதற்கான குறிப்புச் சொற்களை கண்டடைந்து, அதை வெளிப்படுத்துவது என்பது மிகவும் அவசியமாகப்படுகிறது. இது, ரமேஷின் இலக்கியக் கொள்கை. அதற்காக அவர் வட்டார மொழியைத் திரட்டி, தலித் சொல்லாடல்கள் பண்பாட்டு ரீதியாக உருவாக்கப்பட்ட பின்புலத்தை கண்டறிவதைத் தன் இலக்கியத் தேடலாக்கி இருக்கிறார்.

உடல் பற்றி பேசும்போது, “சங்க இலக்கிய ஆய்வில் கருப்பு உடல் என்பது தலித்துகளையே குறிக்கிறது. திசை ரீதியாகப் பார்த்தால் அதை தென்திசை உடல் என்றும், அதன் பிறகு அதை திராவிட உடல் என்றும் கூறுகிறார்கள். சங்க இலக்கியப் பாடல்களில் வீரனைப் பற்றிப் பாடும்போது அதாவது, வேட்டையாடுபவர்களைப் பற்றிப் பேசும்போது, கருப்பு என்னும் சொல்லாடல் உருவாக்கப்பட்டிருக்கிறது. அதேபோல, பரத்தையர்கள் பற்றி பேசும்போது கருப்பு என்பது பேசப்படுகிறது. நுட்பமாக ஆய்ந்தால், மன்னர்களுக்கு உழைத்துத் தரவேண்டியவர்களாக தலித் ஆண்களும், பரத்தையர்களாக தலித் பெண்களும் ஆக்கப்பட்டிருக்கின்றனர் என்பது தெளிவாகிறது.

“பழங்காலத்தில் தலித்துகள் எவ்வாறெல்லாம் ஒதுக்கப்பட்டனர் என்பதை இக்குறிப்புகள் புலப்படுத்துகின்றன. இதற்கு நிறைய எடுத்துக்காட்டுகளை தரலாம். குறுந்தொகைப் பாடல் 384 இல் பரத்தையர் பற்றிய செய்திகளைக் கூறும்போது, கருத்த உடல் உள்ளவள் என்று கூறப்படுகிறது. மற்ற பெண்களை மாநிறம் என்றும் மூங்கில் நிறம் என்றும் வர்ணித்திருப்பதை அறியலாம்'' என்கிறார் ரமேஷ்.

சங்க இலக்கியத்தில் நிலம், உடல், மனம், பற்றிய கருத்தியல் கட்டமைப்பு என்ற கட்டுரையில் ரமேஷ், “அடிமைத் தொகுதி என்பதும் முற்றிலும் சமூகத் தன்னிலையாக உள்ள அங்கீகரிக்கப்படாததும்; உடல் இருப்பு என்பது வெறும் உழைப்புப் தசைக்குறிகளாக மட்டுமே இருத்தி வைக்கப்பட்டதாக உள்ளது. இக்கருத்தின் அடிப்படையில் உப்பு விளைத்தோர், வணிகம் செய்தோர் இவர்கள் யாவரும் உடைமைச் சமூகத்தின் பங்காளிகளாக மாறிப்போனதும், துடியர், பாணர், பறையர் இவர்களது வாழ்வு உடல் வருத்தத்தையும் தாண்டி சிதறிப்போனதும்...'' என்று எழுதுகிறார். ஆக, தலித் உடலை சிதைத்ததற்கான காரணமும், அவற்றை கண்டடைவதற்கான ஆய்வும், அதை நேர் செய்வதற்கான களப்பணியும் இப்போது தேவையாயிருக்கிறது என்கிறார்.

சாதி ஆதிக்கத்திற்கு மொழி எப்படியெல்லாம் துணை புரிந்திருக்கிறது என்பதை நாம் தெரிந்து கொண்டால், மொழிக்கு இப்போது நாம் செய்ய வேண்டியது என்ன என்பது புலனாகும். தமிழ்ப் பெயரைச் சூட்டுதல் என்னும் தமிழ் தேசியக் கருத்தியலை, பண்பாட்டு ரீதியாக தலித்துகள்தான் கடைப்பிடிக்கிறார்கள். தலித்துகள் "குஞ்சாண்டி' என்ற பெயரை வைக்கும்போது தலித் அல்லாதோர் கனகலிங்கம் என்று பெயர் வைக்கின்றனர். அதற்கு "பொன்குஞ்சு' என்று பொருள். "அபிதகுசலாம்பாள்' என்று அவர்கள் பெருமையாக சொல்லும் பெயர் "பெருஞ்சூத்தி' என்று கேலியாக சேரிமொழியில் சொல்லப்படுகிறது. இன்றைக்கு “தமிழ்த் தேசியம் குறித்துப் பேசுவதற்கு தலித்துகளுக்கு மட்டும் தான் உரிமை இருக்கிறது'' என்பேன் என்று உறுதியாகக் கூறுகிறார் ரமேஷ்.

எப்போது எழுதத் தொடங்கினீர்கள் என்ற வினாவிற்கு, “எழுத்து வலிக்கான விடுதலை. சமூகத்தில் புறந்தள்ளப்பட்ட மக்கள் தங்களின் கருத்துகளை எழுத்தின் மூலம்தான் வெளிப்படுத்த முடியும். என்னுடைய தாத்தா பதினெட்டுப்பட்டிக்கும் தலைவராக இருந்தவர். எல்லாவற்றுக்கும் அவர்தான் மோளம் கட்டுவார். சடங்குகளைச் செய்வார். அவரிடம் நிலம் இருந்தது. எங்களுடைய வீடுகள் மொத்தம் அறுபதுதான் இருந்தன. அதைச்சுற்றி வேற்று சாதியினரின் நிலங்கள் இருந்தன. அவர்களுக்கு நாங்கள்தான் எதையும் செய்ய வேண்டியிருந்தது. அதனால் எங்கள் மீது எப்போதும் அவர்களுக்கு அச்சம் இருந்தது. அவற்றைப் பற்றியெல்லாம் பதிவாக்க வேண்டும் என்பதுதான் என் எழுத்துக்கு காரணம்'' என்கிறார்.

தலித் எழுத்தாளராக நீங்கள் அறியப்படுவதை எப்படி எதிர்கொள்கிறீர்கள் என்ற கேள்விக்கு அவர் அளித்த பதில் : “இப்போது எனக்குப் பொது அடையாளம்தான் இருக்கிறது. மேலும், எழுத்தின் தொடக்க காலத்தில்தான் நான் இருக்கிறேன். இப்பொது அடையாளம் என்பதுகூட பல குப்பைக் கூளங்கள் என்மேல் நிறைந்திருப்பது மாதிரிதான். அவற்றை ஒவ்வொன்றாகத் தேய்த்து தேய்த்து தான் தலித் என்ற அடையாளத்தை நான் பெற வேண்டும். எனக்கான வேரை நான் கண்டுபிடித்து, அதில் உறுதியாக இருக்க வேண்டும். இது, மய்யத்திலிருந்து விளிம்பு நோக்கி வருவது. அப்போது நான் உறுதியாக தலித் அடையாளத்தோடுதான் இருப்பேன்.

“ஆனால், இன்றைக்கு நிறைய எழுத்தாளர்கள் தலித் கதைகளை எழுதிவிட்டு, பெயரும் புகழும் பெற்ற பிறகு தலித் எழுத்தாளர் என்ற அடையாளம் தனக்குப் பொருந்தாது என்று சொல்லி விடுகின்றனர். இது, நீர்த்துப் போதல் தானே! விளிம்பிலிருந்து மய்யத்திற்குப் போதல் என்பதே தலித் என்னும் அடையாளத்தை இழத்தல்தானே. அதனால்தான் தொண்ணூறுகளில் தலித் எழுத்துகளுக்கு இருந்த வீரியமும் காரமும் இப்போது இல்லை. பொது அடையாளத்தை நம்மீது இந்த ஆதிக்கச் சமூகம் சுமத்தும்போதே அது பல தடைகளையும் நம்மீது திணித்து விடுகிறது. என்னுடைய ஆய்வின் கூறாக நான் முன் வைப்பதே தலித் அடையாளங்களைத் தேடி அவற்றை அடைவதுதான்.'' ரமேஷின் பல கட்டுரைகள் இத்தகைய தொனியில்தான் அமைந்துள்ளன.

ரமேஷ் தர்மபுரி மாவட்டத்திலுள்ள குட்டம்பட்டியில் பிறந்தவர். தொடக்கக் கல்வியை தர்மபுரி பார்வையற்றோர் பள்ளியிலும், உயர்நிலைக் கல்வியை சேலத்திலும், மேல்நிலைப் படிப்பை பூவிருந்தவல்லி பார்வையற்றோர் பள்ளியிலும் படித்து முடித்து, மயிலம் தமிழ்க் கல்லூரியில் தமிழ் இலக்கியம் பயின்றுள்ளார். சென்னை பல்கலைக் கழகத்தில் எம்.பில். படித்து முடித்துவிட்டு, தற்பொழுது முனைவர் பட்ட ஆய்வினை மேற்கொண்டு வருகிறார்.

அவருடைய அண்ணன் சித்த மருத்துவம் படித்தவர். படிக்கும்போது தேங்காய் விற்று படித்திருக்கிறார். ரமேஷ் படிக்கின்றபோது தொடர்வண்டியில் இஞ்சி மரப்பா, பேனா, நாட்குறிப்பு என தேவைக்கேற்ப விற்று அதில் வந்த பணத்தில் படித்திருக்கிறார். "அப்போது மிகவும் நன்றாக இருந்தது' என்று கூறும் அவருடைய உழைப்பின் அனுபவிப்பை, நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது. நவீன இலக்கியத்தில் சாதியம் குறித்து கேட்டதற்கு, “என்னைப் பற்றி பேசும்போது மற்றவரைப் பற்றி குறைந்தபட்சம் கேட்பவர்களையாவது நினைக்க வேண்டும். ஆனால், தற்பொழுது அவர்களைப் பற்றி மட்டும் பேசும் வழக்கம் ஏற்பட்டிருக்கிறது. மற்றவர்களைப் பின்னுக்குத் தள்ளிவிட வேண்டும் என்னும் எண்ணம்தான் மேலோங்கி இருக்கிறது. கீழே இருப்பவரைப் பற்றி கவலை கொள்ளாமல் இருக்கும் போக்கே தொடர்கிறது.

பின்நவீனத்துவத்தில் சாதியக் கூறுகள் பற்றி கேட்டதற்கு, பின்நவீனத்துவம் என்பது ஓர் அணுகுமுறை என்றும், அது தலித் விடுதலைக்கான தத்துவங்களை உருவாக்கக் கூடியது என்பதும் அவருடைய கருத்து. ஒரு தலித்தாக எப்போது உணர்கிறீர்கள் என்ற கேள்விக்கு, "தான் பணியாற்றும் கல்வி நிலையங்களில்' என்ற அவருடைய பதில் தூக்கிவாரிப் போட்டது! எஸ்.சி.,எஸ்.டி. அமைப்பை எப்போது அழிக்கலாம் என்றுதான் எல்லோரும் நினைக்கிறார்கள். பழகும்போது நம்மிடம் ஒரு மாதிரியாகவும், அவர்களுக்குள் ஒரு மாதிரியாகவும்தான் பழகுகின்றனர். இதையெல்லாம் மீறிதான் வரவேண்டியிருக்கிறது என்று உறுதிபடக் கூறுகிறார் மு. ரமேஷ்.

தலித் எழுத்துக்கான செயல்களையும் சிந்தனையையும் ஆய்வியல் சொற்களையும் உடைய ரமேஷ், நவீன தலித் இலக்கியத்திற்கான நம்பிக்கை.

– யாழன்ஆதி

மு. ரமேஷை தொடர்பு கொள்ள : 99421 97838   

Pin It