மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியின் சார்பில், 8-1-2011 அன்று மறைமலை நகரில் நடைபெற்ற தேசிய இனங்களின் தன்னுரிமை மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

இப்போது உள்ள இந்திய அரசமைப்புச் சட்டம்-இந்தியாவுக்கு விடுதலை வருவதற்கு முன்னரே, 1946இல் தேர்ந்தெடுக்கப்பட்டவர் களால், 9-12-1946 முதலே தொடங்கிச் செய்யப்பட்டது. அப்போது இருந்த மாகாணங்களில் ஒப்புதலைப் பெறாமலே 26-11-1949 இல் அது நிறைவேற்றப்பட்டது.

அதனால் “இந்தியா” என்னும் ஒரு துணைக் கண்டத்தை மய்யப்படுத்தப்பட்ட ஒற்றை ஆட்சி நாடாகவே அச்சட்டம் வைத்துக் கொண்டது. முதன்மையான எல்லா அதிகாரங்களையும், எல்லாப் பெரியவருமான வழிகளையும், எல்லா இயற்கை வளங்களையும் பற்றிய உரிமை மய்ய அரசே தன்னிடம் வைத்துக் கொண்டது. 3-1-1977 இல் மாநில அரசின் கல்வி உரிமையைப் பொது அதிகாரப் பட்டியலில் சேர்த்து மாநில அரசுகளின் கல்வி உரிமையைப் பறித்துக் கொண்டது. இப்படிச் செய்து, மாநில அரசுகளின் தாய்மொழி உரிமை, பண்பாட்டுப் பாதுகாப்பு உரிமை, கல்வித் திட்ட உரிமை, வரலாற்று உரிமை எல்லாவற்றையும் பறித்துக் கொண்டுவிட்டது.

அத்துடன் (1) இந்திய சமுதாயத்தில் மனிதரி டையே தாழ்வைச் சுமத்தும் பிறவி வருண சாதி அமைப்பு (2) பழைய நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள் பாதுகாப்பு இவற்றை அரசமைப்பு விதிகள் 13, 25, 373 இவற்றில் கெட்டியாக வைத்துக் கொண்டது. (3) பகுதி XVII இல் உள்ள விதிகள் 343, 344 முதல் 348, 361 இவற்றின் மூலம் ‘இந்தி மட்டுமே இந்தியாவின் அலுவல் மொழி-ஆட்சி மொழி’ என்பதை உறுதிப்படுத்திக் கொண்டது.

இந்த ஏற்பாடு மூலம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு, பஞ்சாபி, வங்காளி மொழிகளைப் பேசும் இந்திக்காரர்கள் அல்லாத வர்களை இந்தியை ஏற்கச் செய்துவிட்டது.

இன்றுள்ள நாடாளுமன்றத் தேர்தல் கட்சிகள் வெளிப்படையாகவும், கட்சிக் கொள்கை அளவிலும் இந்திய ஒற்றை ஆட்சியின் மேலே கண்ட ஏகாதிபத்திய-பழைமை போக்கை எதிர்ப்பதை முன்னிறுத்தவில்லை.

மொழிவழித் தன்னுரிமை கோருகிற (அ) பிரிவினை கோருகிற சில அமைப்புகள் இந்தி ஆட்சிமொழி என்பதை எதிர்க்கின்ற; சில அமைப்புகள் வருண சாதிப் பாதுகாப்பை எதிர்க்கின்றன; இன்னும் சில அமைப்புகள் அரசமைப்பின் மதச் சார்பான தன்மையை எதிர்க்கின்றன; சில அமைப்புகள் உண்மையான சமதர்ம அரசு அமைப்பை விரும்புகின்றன.

மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி பழைய நம்பிக்கைக்கு உள்ள பாதுகாப்பு-பழைய பழக்கவழக்கங்களுக்கு உள்ள பாதுகாப்பு-பிறவி வருண சாதிப் பாதுகாப்பு ஒழிந்த, மதச் சார்பு அற்ற-சமதர்ம ஆட்சி அமைக்கப்படுவதற்கான புதிய அரசமைப்பை விரும்புகிறது.

தீர்மானம் I :    இத்தன்மையிலான அரசு அமைக்கப்பட, இந்திய ஒற்றை ஆட்சியின் முதன்மையான கண்ணிகளாக உள்ள (1) இந்தி மட்மே ஆட்சி மொழி (2) இந்திய அரசு நிருவாகத்துக்கான இந்திய ஆட்சிப்பணி, இந்தியக் காவல்பணி, இந்திய அயலகப் பணி (3) இந்திய நீதித்துறை என்னும் கட்டுக் கொடிகளை ஒவ்வொன்றாக அறுக்கும் பணிகளை மாநிலங்கள் மேற்கொள்ள வேண்டும் என மா.பெ.பொ.க. விரும்புகிறது. தமிழ் நாட்டிலும் மற்ற மாநிலங்களிலும் இதற்கான விழிப்புணர்வை உண்டாக்கிட விரும்புகிறது. எனேவ இதற்கான களப்பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என இம்மாநாடு தீர்மானிக்கிறது.

முதற்கட்டமாக, இவற்றை முன்வைத்து அனைத்திந்திய அளவிலான ஒரு இந்தியக் கூட்டாட்சி மாநாட்டை சென்னையில் 2011 ஆம் ஆண்டில் நடத்துவது என்று தீர்மானிப்பதுடன் இதில் ஒத்த கருத்துள்ள அமைப்பினரும் தமிழ்ப் பெருமக்களும் இந்த முயற்சிக்கு எல்லாவகையான ஒத்துழைப்புகளையும் நல்க வேண்டுமென வேண்டிக் கொள்கிறது.

தீர்மானம் II:     தமிழ்நாடு தனக்கென ஓர் அரசமைப்புச் சட்டம், தனி நாடாளுமன்றம் தனி உச்சநீதிமன்றம் இவற்றைப் பெற்றுற்ற தன்னுரிமை நாடாக அமைக்கப்பட வேண்டும்மென்றும்; ஒவ்வொரு மொழி மாநிலமும் இத்தகைய தன்னுரி மையைப் பெற்றிட வேண்டுமென்றும்; அவ்வாறு தன்னுரிமை பெற்ற மாநிலங்கள் விரும்பி விட்டுத் தருகிற இரண்டொரு அதிகாரங்களை மட்டுமே மய்ய அரச பெற்றுக் கொண்டு, உண்மையான கூட்டாட்சித் தன்மையுடன் இயங்கும் இந்தியத் கூட்டாட்சி அரசும், அதற்கான புது அரசமைப்புச் சட்டமும் இனி இயற்றப்பட வேண்டும் என்றும் இம்மாநாடு அனைவர்க்கும் தெரிவிப்பதுடன், இது கைகூட ஏற்றவற்றைச் செய்ய முன்வரவேண்டும் என இம்மாநாடு அனைவரையும் வேண்டிக் கொள்கிறது.

தீர்மானம் III :   இப்போது உள்ள அரசமைப்பிலும், இனிமேல் வரையப்படும் புதிய அரசமைப்பிலும் அரசுக் கல்வி, அரசு வேலை, இவற்றிலும், அரசு உதவி பெறும் அமைப்புகளிலும் விழுக்காடு இடங்களும் எல்லா மதவகுப்புகளுக்கும், எல்லாச் சாதி வகுப்புகளுக்கும் இடையே அவரவர் மதவகுப்பு, சாதி வகுப்பு எண்ணிக்கைக்குச் சமமான விகிதத்தில் பங்கிட்டுத் தரப்படும் வகையில் அரசமைப்பு விதிகளை உருவாக்க வேண்டும் என இம்மாநாடு கோருகிறது.

தீர்மானம் IV :   இந்திய அரசு அனைத்திந்திய அளவில் மருத்துவத் துறை மாணவர் சேர்க்கைக்கென நுழைவுத்தேர்வு நடத்துவற்காகச் சட்டம் இயற்ற முயல்வதை இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது.

Pin It