நிலமும் பொழுதும் முதற்பொருள் என்பார் தொல்காப்பியர். முல்லைத் திணையின் முதற் பொருள்களாக நிலம் என்னும் முறையில் காடும் காடு சார்ந்த இடமும், பெரும்பொழுதாக கார் காலமும், சிறுபொழுதாக மாலைப் பொழுதும் இடம்பெறுகின்றன. இவ்வகையில்தான், “எழிலி பெரும் பெயல் பொழிந்த சிறு புன் மாலை” - முகில் முதற் பெயலைப் பொழிந்த மாலைக் காலம் என்று கவின்பெறு கார்காலத்தையும் அதன் மாலைப் பொழுதையும் வர்ணிக்கிறது முல்லைப்பாட்டு. முல்லைப்பாட்டு, அகநானூறு, குறுந்தொகை, ஐங்குறுநூறு, நற்றிணை, கலித்தொகை ஆகிய சங்க இலக்கியங்களில் கார்காலம் கொள்ளும் அழகுக்கோலம், அவை உயிரினங்களின் உணர்வைத் தூண்டும்விதம் ஆகியன மிகவும் விரிவான முறையில் எடுத்துரைக்கப்பட்டுள்ளன.

கார் காலத்தில் மழை முழங்குகிறது. முல்லை மலர்கின்றது. முல்லை மொட்டின் நறுமணம் காற்றை நிறைக்கிறது. செடிகளில் எல்லாம் நீர்த் துளிகள் நிறைந்து நிற்கின்றன. இலைகளில் நீர்த் துளி திரண்டு தெரிகின்றது. மலரில் மதுவருந்தும் வண்டுகள் இசைக்கின்றன. வனப்புமிக்க செம்பவளப் பூச்சிகள் பறக்கின்றன. மரப் பொந்துகளில் பேடைகள் தங்கள் இணையுடன் கூடி மகிழ்கின்றன. பிணை மான்கள் துள்ளித் திரிகின்றன. வெப்பமும் தட்பமும் மிகாது, நீரும் நிழலுமாய் நிலம் குளிர்ந்து இயற்கைச் சூழல் இதமாய் இருக்கின்றது. இவ்வாறு கார் காலம் உயிரினங்களை உயிர் தளிர்ப்பத் தீண்டி காமக் குறிப்பினைக் காட்டுகின்றது. காமக் குறிப்புக் காட்டும் இயற்கையின் தூண்டலால் மாந்தரது அகம் காமவயப்படுகின்றது. காமம் படரும் பெரும் பொழுதாகவும், அக்காமத்தின் வேதனையை மிகுவிக்கும் சிறுபொழுதாகவும் கார்காலம் சங்க இலக்கியப் படைப்புக்களில் சித்திரமாகியுள்ளது. முல்லைத் திணை காட்டும் உயிரியற்கையாம் காமத்தை, வள்ளுவன் கடலன்ன காமம் என்றும் நாணம் என்னும் தாழ்ப்பாளை உடைக்கும் ஒரு கோடரி என்றும் வர்ணிக்கிறான்.

கார்காலத் தொடக்கத்தில் வருவேன்; அது வரைக்கும் ஆற்றியிரு என்று தலைவன் சொல்வதும் தலைமகள் அவ்வாறு ஆற்றியிருப்பதும் முல்லைத் திணையின், திணை ஒழுக்கமாகும். தலைமகள், ‘கடவுட் கற்பின் மடவோள்’ என அழைக்கப் படுவாள்.

கார் காலத்தின் மாலைப் பொழுது காமத் துயர் வாட்டும் மாலைப் பொழுதாகச் சங்க இலக்கியங்களில் வருகின்றது. ‘எழிலி பெரும் பெயல் பொழிந்த சிறு புன் மாலை’ (முகில் முதற் பெயலைப் பொழிந்த மாலைக் காலம்) என்று முல்லைப் பாட்டு கூறும். ‘புன்கண் மாலை’ - ‘புலம்பு கொள் மாலை’ என மாலை நேரத்தின் துன்பத்தை அகநானூறு எடுத்துப் பேசும். காம நோயை மிகுவிக்கும் இந்த மாலைப் பொழுதின் துயரை முல்லைப் பாட்டு, அகநானூறு போன்ற சங்க இலக்கியங்கள் எடுத்துரைக்கும் அதே தன்மையில் - அத்தகைய தொனிப்பொருளில் தானும் சித்திர மாக்குகிறான் வள்ளுவன்.

மாலையோ அல்லை, மருள் மாலை, பனி அரும்பிப் பைதல் கொள் மாலை, காதலர் இல்வழி மாலை, மாலைக்குச் செய்த பகை, மாலை நோய் செய்தல், மாலை மலரும் இந் நோய், மாலைப் பொழுதின் கண் மலரா நிற்கும், மாலைக்குத் தூதாகி, மாலை படர்தரும் போழ்து - இவ்வாறு குறளிள், காமத்துப் பாலின், ‘பொழுது கண்டு இரங்கல்’ அதிகாரத்தில் வரும் பத்துப் பாடல் களும் முல்லைத் திணையின் கார் காலச் சிறு பொழுதைப் பொருண்மையாகக் கொண்டிருக் கின்றன.

முல்லைத் திணையில், இரு காரணங்கள், பிரிவுக்கான காரணங்கள் என்று சொல்லப்படும். பொருள் தேட்டம் ஒரு காரணம்; வேந்தனின் போர்த்தொழில் மற்றொரு காரணம். இவ்விரு காரணங்களால் ஏற்படும் பிரிவு, ‘வினைவயிற் பிரிவு’ என அழைக்கப்படும். பிரிவால் உடலில் ஏற்படும் நிற மாறுபாடு ‘பசலை’ என அழைக்கப் பெறுகிறது.

இந்தப் பசலை நோய் அகநானூறில், ‘பழங் கண் கொண்ட பசலை மேனியள்’, ‘நல்நிறம் பரந்த பசலையள்’ என்று பேசப்படுகின்றது. பிரிவுத் துயரால் தலைமகளுக்கு ஏற்படும் இந்தப் பசலை நோய் காமத்துப் பாலில், ‘பசப்பு உறு பருவரல்’ என்னும் தலைப்பில் உள்ள பத்துப் பாடல்களின் வழி விளக்கப்படுகிறது.

தலைமகனைப் பிரிந்த தலைமகள் பிரிவாற்றாது கண்ணீர் விடுகின்றாள். அவளது கண்ணீரை, ‘கழி படர் உழந்த பனிவார் உண்கண்’ (பெருந்துயரால் வருந்திக் கண்ணீர் விடும் மையுண்ட கண்கள்) என்று சொல்கிறது அகநானூறு. நற்றிணையில் ‘அழல் தொடங்கினளே ஆயிழை’ என்பதாக இக்கருத்து வருகிறது. இவ்வாறு காதலர் பிரிவால் அழும் தலைமகளின் கண்ணீரைக் காமத்துப் பாலின் ‘கண் விதுப்பு அழிதல்’ அதிகாரத்தின் பத்துப் பாடல்களும் விளக்கி நிற்கின்றன.

“உழந்து உழந்து உள்நீர் அறுக விழைந்து இழைந்து

 வேண்டி அவர்க்கண்ட கண்”

தான் விரும்பியவரைக் காண விரும்பிய கண்கள், இப்போது வருந்தி வருந்தி அழுது கண்ணீர் அற்றுப் போய்விட்டன என்று தோழிக்குத் தலைமகள் கூறுவதாக இப்பாடலின் பொருள் அமைந்து நிற்கிறது.

காதலனின் பிரிவால் பசலை நோய் கண்டு, கண்ணீர் சொரியும் தலைவியின் உறுப்பு நலன் அழிதல் பற்றி, ‘தோள், இலங்குவளை நெகிழ்த்த கலங்கு அஞர்’ என்று தோளின் வளைகள் நெகிழ்ந்து தோள் மெலிவுற்றதைக் கூறுகிறது நற்றிணை. பிரிவுத் துயரால் தோள் வளை கழன்று மெலிவுற்றதைப் பற்றி, ‘இறைவளை நெகிழ்த்த எவ்வ நோயொடு’ என்பதாகப் பேசுகிறது குறுந்தொகை. இவ்வாறு நற்றிணை, குறுந்தொகை போன்ற சங்க நூல்களின் அடியொற்றி காமத்துப்பால் இவ்வாறு பேசுகிறது.

“தொடியொடு தோள் நெகிழ நோவல் அவரைக்

 கொடியர் எனக்கூறல் நொந்து”

அழகிழந்து மெலிந்த தோள்கள், வளைகள் கழன்ற தோள்கள் பிரிந்திருக்கும் காதலரைக் கொடியவர் என்று தூற்றுகின்றன என்று காமத்துப் பாலின் ‘உறுப்பு நலன் அழிதல்’ அதிகாரத்தின் பாடலொன்று இவ்வாறு பேசுகிறது.

முல்லைத் திணையின் உரிப்பொருள் இருத்தலும் இருத்தல் நிமித்தமும் ஆகும். பொருளீட்டுதல் பொருட்டோ, போர் செய்தல் பொருட்டோ வினை மேற்கொண்டு பிரியும் தலைவன் கார் காலத் தொடக்கத்தில் விரைந்து வரும் வரைக்கும் தலைவி ஆற்றியிருப்பாள் என்பதனை, ‘முல்லை சான்ற கற்பின்’, ‘கடவுட் கற்பின் மடவோள்’ போன்ற தொடர்கள் நமக்கு விளக்கி நிற்கின்றன.

பொருள் வயின் பிரிவைக் காட்டிலும் வேந்தனது போர்த்தொழில் காரணமாக வினை மேற்கொண்ட தலைமகனைப் பற்றிய குறிப்பே காமத்துப் பாலில் தென்படுகிறது.

“வினை கலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து

 மாலை அயர்கம் விருந்து”

வேந்தன் போர்க்களத்தில் வெற்றி பெறுவானாக, அவ்வாறு வெற்றி பெறும்பொழுது, இல்லத்தில் மனைவியுடன் இருந்து, மாலைக் காலத்தில் பலருக்கும் விருந்து கொடுப்போம் என்று பாடல் பொருள் விரிக்கிறது.

இறுதியில், வினை மேற்கொண்ட தலைவன், வெற்றியுடன் வீடு திரும்புகிறான். தலைமகனும் தலைமகளும் மகிழ்வெய்துகின்றனர்.

கடலன்ன காமம் மேனியில் பசலையைத் தந்து, கண்களில் நீர் பெருகச் செய்து, உறுப்பு நலனை அழித்தாலும்கூட அத்துணையையும் பொறுத்து ஆற்றியிருக்கும் முல்லை சான்ற கற்பின் திண்மையைக் காட்டும் நோக்கிலேயே முல்லைத் திணையின் அகப் பாடல்கள் அமைந்துள்ளன. முல்லைத் திணையின் பொதுமைகளைச் சங்கப் பாடல்கள் சித்திரப் படுத்தியுள்ள நிலைகளை அடியொற்றி, குறளின் காமத்துப் பாலின் பாடல்கள் நடைபோடுவதை நாம் காண இயல்கிறது. இவ்வாறாகக் காமத்துப் பாலில் முல்லைத் திணைச் சிந்தனைகளை இனம் காணமுடியும்.

அறம் தெருட்டும் ஓர் ஆசானாக - பொருள் உரைக்கும் ஒரு போதகனாக அறத்துப்பாலிலும் பொருட்பாலிலும் வரும் வள்ளுவனின் கவித்துவம், காமத்துப் பாலில் தெரியவருகின்றது. காமத்துப் பாலில், தன்னை ஒரு கவித்துவம் நிறைந்த கவிஞனாக வெளிக்காட்டும் வள்ளுவன், புலவி நுணுக்கம் அதிகாரத்தின் வாயிலாக ஒரு நாடகாசிரியன் என்னும் நிலை நிறுத்துகிறான்.

Pin It