அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலை தமிழ்த் தேசியச் சக்திகளும், தமிழின உணர்வாளர்களும், புரட்சிகர, சமூக விடுதலை இயக்கங்களும் எப்படி அணுகுவது என்பது குறித்த ஒருவிவாதம் நடைபெற்று வரும் சூழலில், நம் உள்ள முக்கிய கேள்வி, நாம் அதனை ஒருவாய்ப்பாக எடுத்துக் கொண்டு செயல்படப் போகிறாமா? அல்லது இந்தத் தேர்தலால் எந்த உருப்படியான பயனும் ஏற்படப் போவதில்லை என்று முடிவெடுத்து ஒதுங்கி நிற்கப் போகிறோமா? என்பதே.

புரட்சிகர இயக்கங்களானாலும், தமிழ்த் தேசிய விடுதலையை இலக்காகக் கொண்ட பொதுவுடைமை கொள்கையடிப்படையிலான இயக்கங்களானாலும் இரண்டாவது முடிவில்தான் உறுதியாக நிற்கிறார்கள் என்பது தெரிகிறது. அப்படிப்பட்ட முடிவு, இன்றைய சூழலில் தமிழினம் எதிர் கொண்டு வரும் சிக்கல்களின் அடிப்படையில் நோக்கும்போது சரியானதாக இருக்குமா என்பதை நாம் ஆழ்ந்து சிந்திக்கவேண்டும்.

கடந்த ஆண்டுநடைபெற்ற மக்களவைத் தேர்தலிலும் இந்த விவாதம் வலிமையாக எழுந்தது. தேர்தலில்பங்கேற்காத மக்கள் அரசியல் சக்திகள் பலவும் "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்' என்ற பெயரில் தமிழின அழிப்பில் ஈடுபட்டிருந்த மகிந்த ராஜபக்சேவின் சிங்கள பௌத்த இனவெறி அரசுக்கு எல்லா வகையிலும் உதவிக் கொணிடருந்த காங்கிரஸ் தலைமையிலான டெல்லி அரசிற்கு பாடம் புகட்ட, காங்கிரஸைத் தோற்கடிப்போம் என்ற முழக்கத்தோடு பரப்புரை மேற்கொண்டன.

இதில் சில சக்திகள், காங்கிரஸ் திமுக கூட்டணியை வீழ்த்த, எதிரணியான அஇஅதிமுக தலைமையிலான கூட்டணிக்கு வாக்களிக்குமாறு நேரடியாக பரப்புரை செய்தன. ஆனால் தமிழ்த்தேசிய பொதுவுடைமை சக்திகள் அந்த நிலைப்பாட்டை எதிர்த்த அதேநேரத்தில், அந்தத் தேர்தலை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி காங்கிரசை வீழ்த்துமாறு பரப்புரை செய்தன. மக்களிடையே இந்த வேறுபாடு எந்த ஒரு விவாதத்தையும் ஏற்படுத்தவில்லை என்றாலும், தமிழின அழிப்பில் காங்கிரஸ் துணை போனது என்கிற உண்மை பெருமளவிற்கு அழுத்தமாக மக்கள் மனதில் பதிந்தது. அதன் விளைவு காங்கிரஸ் கட்சியின் மூன்று பெரிய தலைகள் தங்கபாலு, ஈவிகேஎஸ் இளங்கோவன், மணி சங்கர் ஐயர் ஆகியோர் தோற்கடிக்கப்பட்டனர். சிவகங்கை மக்களவைத் தொகுதியில் ப. சிதம்பரமும் தோற்கடிக்கப்பட்டார். பிறகு வென்றதாக அறிவிக்கப்பட்டார். ஆயினும் 2004 ஆம் ஆண்டுத் தேர்தலில் இரண்டரை இலட்சம் வாக்குகளில் வெற்றி பெற்ற சிதம்பரம், அடுத்த தேர்தலில் முதலில் 4 வாக்குகளில் தோற்று, பிறகு 3 ஆயிரம் வாக்குகளில் வென்றதாக அறிவிக்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. இது தமிழ்த்தேச சக்திகளின் வலிமையான பரப்புரைக்கும், களப் பணிக்கும் கிடைத்த வெற்றியாகும். அதாவது, ஈழத் தமிழினத்திற்கு எதிராக இரகசியமாகச் செயல்பட்ட காங்கிரஸ் கட்சியின் துரோகச் செயலை மக்கள் முன் அம்பலப்படுத்தி, அதனைத் தமிழக மக்களிடமிருந்து அந்நியப்படச் செய்ததே அந்த மிகப் பெரும் வெற்றியாகும்.

காங்கிரஸ் போட்டியிட்ட மற்ற தொகுதிகளிலும் அது கடும் எதிர்ப்பை சந்தித்தது. ஆனால் பண பலம் அதனை 9 இடங்களில் கரையேற்றியது. தமிழ்நாட்டின் தேர்தல் வரலாறு காணா அளவிற்கு பணம் தண்ணீராக ஓடிய நிலையிலும் காங்கிரஸ் திமுக அணிக்கு பெருத்தபின்னடைவு ஏற்பட்டது. அது 12 தொகுதி களை எதிர் அணியிடம் இழந்தது. காங்கிரஸ் திமுக அணிக்கு ஏற்பட்ட இந்தப் பின்னடைவு தமிழ்த் தேசச் சக்திகளுக்குக் கிடைத்த பெரும் வெற்றியாகும். "வெற்றி' என்று குறிப்பிடுவது, தமிழ்த் தேச சக்திகள் செய்த பரப்புரை தமிழ்நாட்டு மக்களிடையே ஏற்படுத்திய விழிப்புணர்வு என்பதே. அதுமட்டு மல்ல, தமிழ்த்தேசச் சக்திகளின் பரப்புரை, தமிழீழ விடுதலையை தமிழ்நாட்டின் மையமான தேர்தல் பிரச்சனை ஆக்கியதும் குறிப்பிடத்தக்கதாகும்.

தமிழ்நாட்டில் காங்கிரஸ் கூட்டணிக்கு ஏற்பட்ட பின்னடைவு, மத்தியில் அது ஆட்சியமைப்பதைத் தடுக்கவில்லை என்றாலும், தமிழ்நாட்டின்அரசியல் சிந்தனைப் போக்கில் காங்கிரஸ் எதிர்ப்பு, திமுக துரோகம், டெல்லி எதிர்ப்பு ஆகியன முன்னெப் போதும் இல்லாத அளவிற்கு ஆழமாகப் பதிந்தது.

அதுமட்டுமல்ல, எதிரணியில் நின்ற கட்சிகளும் இலங்கையில் நடந்து வந்த தமிழினப் படுகொலையை தடுத்துநிறுத்தாத குற்றச்சாட்டுக்கு ஆளானதற்கும் தமிழ்த் தேசியச் சக்திகளின் பரப்புரையே காரண மாகும்.

இது மற்றுமொரு கூடுதல் பயனையும் தந்தது. இலங்கையில் தமிழினப் படுகொலையை தடுத்து நிறுத்துமாறு தேர்தலுக்கு முன்னர் இருந்தே தமிழ்த் தேசியச் சக்திகள் மேற்கொண்ட பரப்புரை, தேர்தலின் போதும் தொடர்ந்தது. ஈழத்தமிழர் சிக்கலை தேர்தல் அரசியலிற்கு மட்டுமே பயன்படுத்தி வந்த கட்சிகள், தேர்தலிற்குப் பிறகு அமைதியாகிவிட்ட நிலையில் முழு வீச்சுடன் ஈழத் தமிழர் அரசியல் விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாகவும், இனப் படுகொலைக்கு நீதி கேட்டும் முன்னை விட வலிமையான போராட்டத்தைத் தொடர உதவியது. தமிழ்த் தேசச் சக்திகள், புரட்சிகர இயக்கங்கள், சமூக விடுதலை இயக்கங்கள், மனித உரிமை அமைப்புகள் ஆகிய அனைத்தும் ஈழத்தில் தமிழினத்திற்கு இழைக்கப்பட்ட கொடுமையை எதிர்த்து தனித்தும், பல நேரங்களில் இணைந்தும் குரல் கொடுத்தன. போராடின. அதன்விளைவாக, தமிழ்நாட்டின் குறிப்பிடத்தக்க அரசியல் கட்சிகளின் துணையேது மின்றி, பல வெற்றிகளைப் பெற்றன. அதுடெல்லி அரசிற்கும், சிங்கள பௌத்த இனவெறியன் ராஜபக்சவிற்கு பலத்த அடியாக விழுந்தது.

வன்னி முள்வேலி முகாம்களில் அடைக்கப் பட்டிருந்த மக்களை, வடகிழக்குப் பருவ மழை பெய்யும் போது ஏற்படும் வெள்ளத்தினால் உருவாகும் தொற்று நோய் பரவி, கொத்துக்கொத்தாக தமிழர்கள் கொல்லப்படும் அபாயம் தெரியப்படுத்தப்பட்ட வுடன், அதனைபெரும் கூக்குரலாக்கி, அப்படி ஒரு நிலை ஏற்படுவதை முன்னெச்சரிக்கை செய்து தடுத்ததில் மனித உரிமை அமைப்புகளுக்கும், தமிழ்த் தேசியச் சக்திகளுக்கும் பெரும் பங்கு உண்டு. மழை ஆபத்தை ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் பேச வைக்கும் அளவிற்கு தமிழினத்தின் குரல் ஓங்கி ஒலித்தது.

2. தமிழினப் படுகொலையை உலகின் பார்வையிலிருந்து மறைக்கவும், இலங்கையை அமைதி தவழும் பூமியாகக் காட்டவும் இனப் படுகொலையாளன் ராஜபக்ச, இந்திய தொழில் வர்த்தக அமைப்புகளின் கூட்டமைப்போடு (ஃபிக்கி) இணைந்து கொழும்புவில் நடத்திய இந்திய சர்வதேச திரைப்பட விருது வழங்கு விழாவை முழுமையாக தோற்கடித்ததாகும்.

இதில் தமிழ்நாடு மட்டுமின்றி, மும்பை வாழ் தமிழின உணர்வாளர்களும் பெரும் போராட்டங்களை முன்னெடுத்தனர். தமிழின உணர்வாளர்களும், தமிழ்த் தேசியச் சக்திகளும், புரட்சிகர இயக்கங்களும் ஒன்றிணைந்து நடத்திய காரணத்தினால்தான் கொழும்பு ஐஃபா விழாவை தோற்கடிக்க முடிந்தது.

3. ராஜபக்சேவுடன் கைகோர்த்து ஜஃபா விழாவை நடத்த ஒத்துழைத்த ஃபிக்கியின் தலைவர் ராஜன் பார்த்தி மிட்டல் தலைமை செயல் அலுவலராக இருக்கும் ஏர்டெல் செல்பேசி சேவையை புறக்கணிக் கும் போராட்டம் இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இத்தோடு நின்றுவிடவில்லை.

4. சிறப்பு முகாமை இழுத்து மூடும் போராட்டம், மீனவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களைக் கண்டித்து நடத்தப்பட்டு வரும் இயக்கங்கள், 5. ராஜீவ் படுகொலை குற்றவாளிகளை விடுவிக்க வேண்டும் என்று கோரி நடத்தப்படும் இயக்கங்கள் என்று மிக முக்கியப் பிரச்சினைகளில் தமிழ்த்தேசியச் சக்திகள், புரட்சிகர இயக்கங்கள், சமூக விடுதலை இயக்கங்கள், மனித உரிமை அமைப்புகள் என்று ஒன்றிணைந்து பணியாற்றிவரும் நிலையில், அந்தஒருமித்த பணியின் பல்வேறு நோக்கங்களை முன்னகர்த்தும்ஒரு வாய்ப்பாக எதிர்வரும் தமிழக சட்டப் பேரவைத் தேர்தலைப் பயன்படுத்தவேண்டும் என்பதே எதார்த்தம் சார்ந்த சரியானசெயல் முடியாக இருக்கும்.

காங்கிரசே இத்தேர்தலிலும் நமது இலக்கு!

எனவே கடந்த தேர்தலில் எந்த முழக்கத்தை முன் வைத்துஇறங்கிச் செயல்பட்டோமோ, அதே இலக்குதான், நமக்கு இந்தத் தேர்தலிலும், அது காங்கிரஸ் கட்சி, தமிழினப் படுகொலைக்கு துணை போன, ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் சிறிலங்க அரசிற்கு எதிரான போர்க் குற்ற விசாரணை நடத்த வலியுறுத்தும் தீர்மானம் கொண்டு வரப்பட்டபோது அதனை எதிர்த்துச் செயல்பட்ட, சிறிலங்க அரசிற்குப் பன்னாட்டு நாணய நிதியத்திலிருந்து 2.6 பில்லியன் டாலர் கடன் பெற்றுத் தந்து ராஜபக்ச அரசை கடன் நெருக்கடியிலிருந்து காத்த, போரினால் இடம் பெயர்ந்த தமிழர்களை அவர்கள் வாழ்ந்த இடத்தில் மீள் குடியமர்த்தாமல், வன்னி முகாம்களில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்களை மற்ற இடங்களிலுள்ள பள்ளிகள், அரங்குகள் ஆகியவற்றில் தொடர்ந்து அகதிகளாகவே வைத்திருக்கின்ற, அவர்களின் காணிகளைப் பறித்து சிங்களர்களுக்குக் கொடுத்து அவர்களை தமிழர் பகுதிகளில் குடியமர்த்துகின்ற மகிந்த ராஜபக்சவின் திட்டமிட்ட இன ஒடுக்கலுக்கு துணை போய்க் கொண்டிருக்கும் டெல்லி அரசிற்குப் பாடம் புகட்ட, "காங்கிரசை வேரோடும் வேரடி மண்ணோடும் ஒழிப்போம்' என்ற முழக்கத்துடன் தமிழ்த் தேசியச்சக்திகளும், புரட்சிகர, சமூக விடுதலை இயக்கங்களும் ஒன்றிணைந்து இத் தேர்தலில் களப்பணி ஆற்றிட வேண்டும். ஈழத்தமிழினத்தை திட்டமிட்டு அழித்த இனப் படுகொலைப் போரில் டெல்லி அரசின் சதியை மறைத்து, உண்ணாவிரத நாடகமாடிய தமிழக முதல்வர் கருணாநிதியின் பித்தலாட்டத்தையும் மக்கள் மன்றத்தில் தோலுரிக்க வேண்டும். தமிழினப் படுகொலைக்கு துணைநின்ற காங்கிரசோடு தேர்தல் உறவு கொள்ளத் துடிக்கும் அஇஅதிமுக, பாமக கட்சித் தலைமைகளின் அயோக்கியத்தனத்தை மக்களிடம் விளக்க வேண்டும். ஆயினும் நமது குறி ஒன்றுதான்; அது காங்கிரசை அழிப்பதே.

இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 60 முதல் 70 இடங்களைப் பெற்று போட்டியிட முயற்சி செய்கிறது. காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளிலேயே நமதுஆற்றலை முழுமையாக அணி சேர்த்துச் செயல்பட வேண்டும். ஈழத் தமிழினத்திற்கு எதிரான அதன் துரோகத்தைமட்டுமின்றி, தமிழ்நாட்டின் தலையாய பிரச்சினைகளான காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு பிரச்சனைகளில் அது கண்டு கொள்ளாமல் காலை வாரி விடுகிறது என்பதையும் மக்களிடம் தோலுரித்துக் காட்ட வேண்டும்.

காஷ்மீரிலும், வடகிழக்கு மாநிலங்களிலும் அது கட்டவிழ்த்துவிட்டுள்ள ஒடுக்குமுறைகள், தண்டகாரண்யத்தில் பழங்குடி மக்களுக்கு எதிராகவும் அது மேற்கொண்டுவரும் படுகொலைகளை இந்தத் தேர்தல் பரப்புரையில் எடுத்துரைக்கவேண்டும்.

விவசாயத்தை அழிக்க அது மேற்கொண்டு வரும் சட்டப்பூர்வமான முயற்சிகள், நாட்டு ரக விதைகளை முற்றிலும் அழித்திட அது மேற்கொண்டு வரும் மரபணு மாற்ற விதைப் பயன்பாட்டுச் சட்ட வரைவு, சிறப்புப் பொருளாதார மண்டலங்களை உருவாக்க விளைநிலங்களை கைப்பற்றுவது, இந்தியாவை சுற்றுலா நாடாக்க உள்நாட்டு கட்டமைப்பை மேம்படுத்துவது என்ற பெயரில் விவசாயம் உள்ளிட்ட பாரம்பரிய தொழில்களை மறைமுகமாக அழிப்பதுஎன்று அதன் திட்டமிட்ட வாழ்வழிப்பு நடவடிக்கைகளை மக்களிடம் கொண்டு செல்லும் நல்வாய்ப்பை இத்தேர்தல் நமக்கு அளிக்கிறது.

எல்லாவற்றிற்கும் மேலாக, தமிழ்த் தேசிய சக்தி களின் வலிமையை மறைமுகமாக உணர்த்தும் வாய்ப்பு இது. பல அடிப்படைகளில் இதனைச் சாதித்தாக வேண்டிய கட்டாயம் உள்ளது. சாதிக்கத் தயாராவோம்.