இந்திய யு.எஸ். அணு ஒப்பந்தம் கையெழுத்தாவதில் மத்திய அரசு எடுத்த உறுதியான நிலையை தொடர்ந்து சி.பி.ஐ(எம்) தலைமையிலான இடதுசாரி கட்சிகள் தாங்கள் மத்திய அரசிற்கு வெளியிலிருந்து அளித்து வந்த ஆதரவினை வாபஸ் பெற்று உள்ளன. அதனைத் தொடர்ந்து அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு மத்திய அரசின்மீது நம்பிக்கை தெரிவிக்கும் வகையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்று அதில் மத்திய அரசு வெற்றியும் பெற்றுள்ளது. இச்சூழ்நிலையில் அரசு இழந்த இடதுசாரி கட்சிகளின் ஆதரவை ஈடு கட்டும் விதத்தில் சமாஜ்வாதி கட்சி தனது ஆதரவினை காங்கிரஸ் ஆட்சிக்கு தருவதற்கு முன்வந்தது. அது தவிர ஒரு கட்சி என்ற ரீதியில் ஜார்கண்ட் முக்தி மோர்சாவும் மத்திய அரசிற்கு ஆதரவளிக்க முன் வந்தது.

ஆரம்பத்தில் நம்பிக்கை வாக்கு பெறுவது அத்தனை சிரமம் அல்ல என்பது போல் தோன்றினாலும் சமாஜ்வாதிக் கட்சியின் 6 எம்.பிக்கள் மாறி வாக்களிப்பர் என்ற நிலை தோன்றியவுடன் இழுபறி நிலையே ஏற்படும் என்ற சூழ்நிலை தோன்றியது. அது சமீபத்திய தேர்தல்களில் ஹிமாசலப்பிரதேசம், கர்நாடகா, குஜராத் ஆகிய மாநிலங்களில் வெற்றி பெற்று மத்திய ஆட்சிக்கு அடுத்து நாம் வந்து விடலாம் என்ற பெரும் நம்பிக்கையோடு இருந்த பாரதிய ஜனதாக் கட்சியின் நாவில் நீர் சுரக்கச் செய்தது. இந் நம்பிக்கை வாக்கெடுப்பில் மத்திய அரசிற்கு ஒரு தோல்வி ஏற்பட்டால் அது வரப்போகும் தங்களின் வெற்றியை முன்னறிவிப்பதாக இருக்கும் என்ற எண்ணத்தில் பெரும் முனைப்புடன் அக்கட்சி தன் கட்சி அணிகளை நம்பிக்கை வாக்கெடுப்பில் அதனை எதிர்த்து வாக்களிப்பதற்காக அணி திரட்டுவதிலும், பிற கட்சிகளை அணுகி அவற்றின் ஆதரவினை கோருவதிலும் மும்முரமாக ஈடுபட்டது.

இறையாண்மையை முன்னிறுத்தும் போக்கு

சி.பி.ஐ.(எம்) கட்சியைப் பொறுத்தவரை அது இந்த ஒப்பந்த விஷயத்தில் கடந்த 2 ஆண்டு காலமாக பேச்சு வார்த்தை என்ற பெயரிலான பல நாடகங்களை நடத்தி வந்தது. முதலில் இந்த ஒப்பந்தத்தை காட்டிலும், இதனை ஒட்டி அமெரிக்கா இந்தியாவை உலக அரங்கில் அது ஆற்ற நினைக்கும் செயல்களுக்கு ஒரு பங்காளியாக ஆக்கும் போக்கையே தாங்கள் வலுவாக எதிர்ப்பதாக அக்கட்சி கூறியது. தன் பின்னர் அமெரிக்காவின் உள்நாட்டு சட்டமான ஹைடு சட்டத்தின் ஷரத்துக்களை கோடிட்டுக் காட்டி அது இந்தியாவின் இறையாண்மையை பாதிக்கும் என்று கூறி அதனையே பிரதானமாக எதிர்ப்பதாக அறிவித்தது. இவ்வாறாக எந்த நிலையிலும் இந்த ஒப்பந்தத்தை கையெழுத்திட அனுமதிக்கப் போவதில்லை என்ற நிலையை எடுத்துவிட்ட போதிலும் பேச்சு வார்த்தை, பேச்சுவார்த்தை என்ற பெயரில் அக்கட்சி நாட்களை கடத்திக் கொண்டே வந்தது.

தற்போது நாடாளுமன்றத்தின் ஆயுட்காலம் ஒரு ஆண்டே உள்ள நிலையில் தங்களது எதிர்ப்பை இன்னும் பலமாக்கி எந்த சூழ்நிலையிலும் இந்த ஒப்பந்தத்தை கையெழுத்திட அனுமதிக்கப் போவதில்லை என்ற தனது இறுதி முடிவினை அறிவித்தது. காங்கிரஸ் கட்சியில் மற்ற தலைவர்கள் எப்படியோ ஆனால் மன்மோகன்சிங்கைப் பொறுத்தவரையில் அவர் இரண்டாண்டுகளுக்கு முன்பே தெளிவுபடக் கூறிவிட்டார் இந்த ஒப்பந்தம் நிச்சயம் கையெழுத்தாகும் என்று. இடது சாரிகட்சிகளின் எதிர்ப்பு மிகக் கடுமையாக உள்ள நிலையில் இதனை எப்படி செய்யப் போகிறீர்கள் என்று பத்திரிக்கையாளர்கள் வினவிய போது, ஒரு படி மேலே சென்று ஒப்பந்தம் கையெழுத்தாகப் போவது உறுதி; அந்த நிலையில் இடது சாரிக் கட்சிகள் அவற்றிற்கு சரியெனப்படும் எதையும் செய்து கொள்ளட்டும் என்று அவர் கூறினார்.

பாம்பும் நோகாமல் பாம்பு அடித்த கம்பும் நோகாமல்

அன்றைய சூழ்நிலையில் கரன்தாப்பர் போன்ற ஊடக பிரமுகர்கள் ‘ஒப்பந்தத்தை கையெழுத்தாகவிடாமல் செய்ய வேண்டுமென்றால், நீங்கள் உங்களது ஆதரவினை வாபஸ் வாங்கினாலே காங்கிரஸ் கட்சி ஆட்சியை விட்டு இறங்கிவிடும். அந்நிலையில் அது எவ்வாறு அவ்வொப்பந்தத்தை போடமுடியும்; அவ்வாறு இருக்கையில் பேச்சுவார்த்தை என்ற பெயரில் ஏன் காலம் தாழ்த்துகிறீர்கள்’ என்று சீத்தாராம்யெச்சூரியிடம் கேட்ட பொழுது, ‘தாங்கள் வாபஸ் பெறுவதால் அரசு கவிழும்; அவ்வாறு கவிழ்ந்தால் அடுத்து வரும் கட்சி இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடவே செய்யும் அதனால் நாங்கள் ஆதரவை வாபஸ் பெறப்போவதில்லை’ என்று அவர் கூறினார். ‘அத்துடன் நாங்கள் ஒப்பந்தம் எட்டப்படக் கூடாது என்பதையே மீண்டும், மீண்டும் வலியுறுத்துகிறோம். ஆனால் நீங்கள் (அதாவது கரன்தாப்பர்) மீண்டும், மீண்டும் ஆட்சியை கவிழ்ப்பதையே வலியுறுத்துகிறீர்கள்’ என்றும் காட்டமாக கூறினார்.

பி.ஜே.பி யுடன் கைகோர்த்து...

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் எடுத்த இந்த நிலையை கூர்மையாக பார்த்த எவரும் பாரதிய ஜனதாக் கட்சியுடன் இணைந்து நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு எதிராக அவர்கள் வாக்களிப்பார்கள் என்று எண்ணியிருக்க முடியாது. ஆனால் இன்று சி.பி.ஐ(எம்) கட்சி அப்படியொரு நிலையை எடுத்துள்ளது. அதுவும் எந்த சூழ்நிலையில் என்றால் பாரதிய ஜனதாக் கட்சி மீண்டும் மீண்டும் அமெரிக்காவுடனான மேம்பட்டு வரும் உறவு எங்களுக்கு மிகவும் உடன்பாடானது; இன்று அவர்களின் பங்காளியாக உலக அரங்கில் நாம் உருவெடுப்பது மிகவும் வரவேற்கத்தக்கது என்று வெளிப்படையாக அறிவித்துள்ள நிலையில். அதாவது சி.பி.ஐ(எம்) கட்சியினர் அணு ஒப்பந்தத்தை காட்டிலும் மிகவும் அபாயகரமானது என்று எதை வர்ணித்தார்களா, அந்த இந்தியா அமெரிக்காவின் பங்காளியாவதை வெளிப்படையாக அது வரவேற்றுள்ள நிலையில் அக்கட்சியுடன் சேர்ந்து அரசை எதிர்த்து வாக்களித்துள்ளனர். மேலும் வகுப்பு வாதமும் தங்களது முக்கிய எதிரி என்று இவர்கள் கூறி வந்த கருத்தின் அடிப்படையில் பலரும் ஊகித்து வைத்திருந்த முடிவான அதிகபட்சம் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது இவர்கள் வெளிநடப்பு செய்வார்கள் என்ற எதிர்பார்ப்பையும் இது பொய்யாக்கியுள்ளது.

எடுபடாத அமெரிக்க எதிர்ப்பு

இந்த ஒப்பந்தத்தின் மூலம் அமெரிக்காவுடனான உறவுகளும் இந்தியா தன் இளைய பங்காளியாகும் வாய்ப்பும் அதிகரித்துள்ளது; அது அபாயகரமானது என்பதே சி.பி.ஐ(எம்) கட்சியினரின் முக்கிய வாதமாகும். அந்த வாதம் முழுக்க முழுக்க உண்மையானதே. ஆனால் அந்த வாதத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு மக்களின் எதிர்ப்பை தட்டி எழுப்ப வேண்டும் என்றால் ஒட்டுமொத்தத்தில் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான வாதங்கள் முழுமையாக மக்களிடம் கொண்டு செல்லப்பட வேண்டும். இல்லையெனில் அமெரிக்கா என்ற ஒரு நாட்டிற்கெதிரான நிலைபாடாகவே அது இருக்கும். மக்களிடையே அது அத்தனை எடுபடாது. ஏனெனில் இன்றைய உலகமய சூழ்நிலையில் ஏராளமான படித்த மத்தியதர வர்க்கத்தினரின் அபிலாசையே தங்கள் பிள்ளைகளை கல்வி கற்கவோ அல்லது வேலைவாய்ப்பினைப் பெறவோ அமெரிக்காவிற்கு அனுப்ப வேண்டும் என்பதாகவே உள்ளது. அமெரிக்காவை ஒரு நாடு என்ற ரீதியில் யாரும் மோசமாகப் பார்க்கவில்லை.

நமது நாட்டைப் பொறுத்த வரையில் தொழிலாளிவர்க்கம் முழுமையாக அணிதிரட்டப்பட்டு அவர்களிடம் வர்க்க அரசியல் முன்னெடுத்து செல்லப்படவில்லை. இந்நிலையில், சமூகத்தின் பொதுக்கருத்தை ஏற்படுத்துபவர்களாக மத்திய தர வர்க்கத்தினரே உள்ளனர். எனவே, அவர்களுடைய கருத்து சமூகத்தில் செல்வாக்கு செலுத்தக் கூடிய கருத்தாக நிச்சயம் இருக்கும். எனவே வெறுமனே ஒரு நாடு என்ற ரீதியில் அமெரிக்காவிற்கு எதிரான நிலை பரந்துபட்ட மக்கள் மத்தியில் எடுபடாது என்பதே உண்மை.

எதிர்க்கப்பட வேண்டியது ஏகாதிபத்தியமே

இந்நிலையில் உழைக்கும் வர்க்கத்தை அணிதிரட்ட வேண்டுமென்றால் அதனிடம் ஏகாதிபத்திய எதிர்ப்பு மனநிலையை உருவாக்கி அதன்மூலம் அமெரிக்க ஏகாதிபத்தியம் எவ்வாறு உலக ஏகாதிபத்தியங்களின் தலைவனாக இருந்து கொண்டு பிற நாடுகளை அச்சுறுத்தக்கூடியதாக உள்ளது என்பதை எடுத்துக்கூற வேண்டும். அவ்வாறு கூறுகையில் நமது நாடும் தேசிய மூலதனத்தை வளர்த்தெடுத்து ஏகபோகங்களை உருவாக்கி வங்கி மூலதனத்துடன் நிதி மூலதனத்தை ஒருங்கிணைத்து வேறு நாடுகளுக்கு சரக்குகளை ஏற்றுமதி செய்வதோடு மூலதனத்தையும் ஏற்றுமதி செய்யும் ஒரு ஏகாதிபத்திய நாடாக மாறி இருப்பதையும் நிச்சயம் முன் வைக்கவே வேண்டியிருக்கும். ஏனெனில் நமது மூலதனம் நம்மைச் சுற்றியுள்ள பின்தங்கிய நாடுகளை தவிர நம்மைக் காட்டிலும் வளர்ச்சி அடைந்த பிற அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கும் பெரிய அளவில் ஏற்றுமதியாகிக்கொண்டிருக்கிறது. இதற்கு ஒரு எடுத்துக்காட்டு தற்போது இங்கிலாந்து நாட்டில் இருக்கும் அந்நிய முதலீடுகளில் அமெரிக்க முதலீட்டிற்கு அடுத்தபடியாக 16 சதவிகிதம் என்ற அளவில் இருப்பது இந்திய மூலதனமே. இதையே மாறியுள்ள (Reverse) ஏகாதிபத்திய சூழ்நிலை என்று இங்கிலாந்து நாட்டின் அரசியல் நோக்கர்கள் வர்ணிக்கிறார்கள்.

ஒரு கூட்டுப் பறவைகள்

இந்த கூறுகள் அனைத்தும் அமெரிக்கா அளவிற்கு இல்லையெனினும் இந்தியாவும், வளர்ந்து வரும் ஒரு ஏகாதிபத்திய நாடாக உள்ளது என்பதையே கோடிட்டு காட்டுகிறது. இதைத் தான் அந்நிய ஆட்சி தளையின் கீழ் 400 ஆண்டுகள் சிக்குண்டு சீரழிந்த நமது மக்களின் மனதில் ஏகாதிபத்திய எதிர்ப்பு மனநிலை மங்கி மறைந்து விடாமல் இருப்பதால் இந்தியா ஒரு ஏகாதிபத்தியமாக ஆகிவிட்டது என்று கூறாமல் இங்குள்ள முதலாளித்துவ அரசியல் கட்சிகள் அது ஒரு வல்லரசாக ஆகிவருகிறது என்று மூடி மறைத்து கூறுகிறார்கள். எனவே, அமெரிக்காவும் இந்தியாவும் ஒன்று சேர்ந்து இருப்பது, இந்தியா அமெரிக்காவின் இளைய பங்காளியாக ஆவது ஆகியவை ஒரு கூட்டு பறவைகள் ஒன்று சேர்ந்திருப்பது போன்ற சூழ்நிலையே தவிர, ஒரு பின் தங்கிய நாட்டின் இறையாண்மையை ஒரு ஏகாதிபத்திய நாடு பறிக்க முயலும் சூழ்ச்சி அல்ல.

எனவே வளர்ந்து வரும் ஏகாதிபத்திய நாடு வளர்ச்சி அடைந்த ஒரு ஏகாதிபத்திய நாட்டுடன் பங்காளியாவது பிற வளர்ச்சி அடையாத நாடுகளின் இறையாண்மைகளப் பறிக்கும் அளவிற்கு செல்லும் வாய்ப்பினைக் கொண்டுள்ளது என்ற அடிப்படையிலேயே எதிர்ப்பு இருக்க வேண்டும். சோஷலிச முகாம் என்று ஒன்று இன்று இல்லாத நிலையில் நடுநிலை நாடுகள் என்ற அமைப்பின் கீழ் ஒருங்கிணைந்து முன்னேறிய நாடுகளுடன் ஒரு மேலான பேரம் பேசி தனது நாட்டின் முதலாளித்துவத்தை வளர்த்தெடுப்பதற்கான சூழ்நிலை இன்று இந்தியாவிற்கு இல்லை.

இந்நிலையில் இந்திய முதலாளித்துவம் தனது அடுத்த கட்ட வளர்ச்சிக்கு சார்ந்திருக்க வேண்டியது தன்னை காட்டிலும் முன்னேறிய ஏகாதிபத்திய நாடுகளையே என்ற சூழ்நிலை வெளிப்படையாக தோன்றியுள்ளது. இந்த பின்னணியில் அனைத்து ஏகாதிபத்தியங் களயும், ஏகாதிபத்திய போக்குகளயும் எதிர்ப்பதோடு தன் ஒரு பகுதியாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தையும் எதிர்க்கும் நிலையினை இந்த இடதுசாரி கட்சிகள் எடுக்காமல் குருட்டுத்தனமான அமெரிக்க எதிர்ப்பு வாதங்களை மட்டும் அவர்கள் முன்வைத்தது மக்களிடையே சுத்தமாக எடுபடவில்லை. மேலும் ஏகாதிபத்திய எதிர்ப்பு நிலையினை இக்கட்சிகள் எடுத்தால் அப்போது இந்தியாவும் ஒரு வளர்ந்து வரும் ஏகாதிபத்தியம் என்ற ரீதியில் இந்திய முதலாளித்துவத்தையும் இவர்கள் எதிர்க்க வேண்டியிருக்கும்.


முதலாளித்துவத்தை எதிர்க்காமல் ஏகாதிபத்தியத்தை எதிர்க்க முடியாது

ஏனெனில் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டம் எதையும் அதற்கு உருக்கொடுக்கும் ஊற்றுக் கண்ணாக உள்ள முதலாளித்துவத்தை எதிர்க்காமல் நடத்த முடியாது. ஆனால் உள்நாட்டின் பகாசுர முதலாளியான டாடாவுடன் கூடிக்குலாவும் முதலமைச்சரை தனது கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினராக கொண்டுள்ள சி.பி.ஐ.(எம்) கட்சியினால் தலைமை தாங்கப்படும் இடதுசாரி கட்சிகள் எவ்வாறு உள்நாட்டு முதலாளிகளை எதிர்க்க முடியும்? எனவேதான் இந்த இடதுசாரி கட்சிகளில் ஆர்.எஸ்.பி. கட்சியை தவிர மற்ற கட்சிகள் அனைத்தும் இந்திய முதலாளிகள் உலகமயத்தின் அப்பாவி பலிகிடாய்கள் என்ற கருத்தையே ஒப்புவித்து வருகின்றனர். ஆர்.எஸ்.பி. கட்சியைப் பொறுத்தவரையிலும் கூட அது கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நான்காவது சேர்ந்த மைப்பாக இருப்பதால் அந்த அகிலத்தின் ஸ்தாபகத் தலைவர் ட்ராட்ஸ்கியின் கருத்துப்படி சமூகத்தின் அடிப்படையான மாற்றம் உலக அளவில் ஏற்படமுடியுமே அன்றி ஒரு நாட்டில் ஏற்பட முடியாது என்ற கருத்தைக் கடைப்பிடித்து, உலகம் முழுவதிலும் சமூக மாற்றப்போக்கு வரும் வரையில் சி.பி.ஐ.(எம்) கட்சிக்கு பக்கவாத்தியம் வாசித்து பதவி சுகத்தை நுகரும் போக்கைக் கடைப்பிடித்து வருகிறது.

தனது இந்த தேசிய முதலாளித்துவ ஆதரவு எண்ணத்தை பிரதிபலிக்கும் விதத்தில் தான் கரன்தாப்பர் உடனான உரையாடலில் தாங்கள் இந்தியாவின் நலனை உயர்த்திப் பிடிப்பதாக சீத்தாராம்யெச்சூரி திரும்ப திரும்பக் கூறினார்.

இந்தியாவின் தேசிய நலன் என்பது தேசிய முதலாளிகளின் நலனே

இந்தியாவின் நலன் என்றால் இந்திய சமூகத்தில் அனைத்து இந்திய மக்களுக்குமான பொதுவான நலனா? நேர் எதிராக முரண்பட்ட நலன்களக் கொண்ட வர்க்கங்களால் பிளவுபட்ட எந்த ஒரு சமூகத்திலும் அனைத்து மக்களின் பொதுவான நலன் என்று ஒன்று இருக்கவே முடியாது. ஒன்று அது இந்திய முதலாளிகளின் நலனாக இருக்க வேண்டும்; அல்லது அது இந்திய உழைக்கும் மக்களின் நலனாக இருக்க வேண்டும். இந்திய முதலாளித்துவத்தின் வளர்ந்து வரும் ஏகாதிபத்தியக் கூறுகளை மூடி மறைத்து இந்திய முதலாளிகள் உலக மயத்தின் அப்பாவி பலிகிடாய்கள் என்று அவர்களுக்காக பரிந்து பேசி இந்திய முதலாளிகளின் முதன்மை தலைவராக விளங்கக் கூடிய டாடா குழுமத்துடன் மேற்கு வங்கத்தின் தொழில் வளர்ச்சிக்காக என்ற சாக்குடன் கூடிக் குலாவும் ஒரு கட்சியின் தலைவர், நாங்கள் பார்ப்பது இந்திய தேசிய நலனே என்று கூறினால் அது அசலும் நகலும் இந்திய முதலாளித்துவத்தின் நலனாக இருக்க முடியுமே தவிர அது இந்திய பாட்டாளி வர்க்கத்தின் நலனாக ஒரு போதும் இருக்க முடியாது.

அது தவிர இந்த ஒப்பந்தம் இந்திய முதலாளிகளின் நலனுக்கு முழுக்க முழுக்க உகந்த ஒன்று. ஏனெனில் உலகில் உயர்ந்து வரும் எண்ணெய் விலைகள், உள்நாட்டில் வரம்பிற்குட்பட்ட விதத்தில் இருக்கும் இயற்கை மின்உற்பத்தி சாதனங்கள் இவற்றைக் கொண்டு, இன்று உலகமய உற்பத்திக்கு மிக முக்கியமானதாக விளங்கும் தொழிலாளரின் உழைப்புத் திறன் என்ற சக்தியை ஒப்பு நோக்குமிடத்து மிக அதிகம் கொண்டிருக்கக் கூடிய இந்தியா தன் கண்முன்னுள்ள வளர்ச்சிக்கான சாதக அம்சங்களை பயன்படுத்த முடியாது. எனவே இந்திய முதலாளித்துவம் தன் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு மேலே விவரித்த மின் உற்பத்தி நிலையங்களாடு தீராத மின் சக்தியை தரவல்ல அணுசக்தியையும் பயன்படுத்த நினைப்பது மிகவும் இயல்பானது. மேலும் இந்த ஒப்பந்தத்தின் மூலம் அதற்குக் கிடைக்கும் உயர்தொழில் நுட்பத்தையும் பயன்படுத்தி அது போர்த் தளவாட உற்பத்தியில் ஈடுபட்டால் அதுவும் இந்திய முதலாளி வர்க்கத்திற்கு மிகவும் உடன்பாடனதே.

எனவேதான் எவ்வளவு உரத்த குரலில் தேசிய நலன், தேசிய நலன் என்று சீத்தாராம்யெச்சூரியும் அவரது கட்சியும் முழக்கமிட்டு இந்த அணுசக்தி ஒப்பந்தத்தை ஒரு முதலாளித்துவ எதிர்க்கட்சி என்ற ரீதியில் தனது நாடாளுமன்ற வாத அரசியல் நலன்களை மனதில் கொண்டு எதிர்த்த போதிலும், இந்த ஒப்பந்தம் ஆளும் வர்க்கத்திற்கு சாதகமானதாக இருப்பதால் ஆளும் வர்க்கமும் தன் பிரச்சார சாதனங்களும் இந்த ஒப்பந்தத்தை வெளிப்படையாகவும், நாசூக்காகவும் தன்னால் முடிந்த அனைத்துவகையிலும் ஆதரிக்கவே செய்தன. இதனால் தான் சி.பி.ஐ(எம்) கட்சியின் எதிர்ப்புக் குரல் வனாந்தரத்தில் எழுப்பிய சத்தத்தைப் போல் எதிரொலி ஏதுமின்றி மங்கி மறைந்து மக்களிடையே எடுபடாமல் போனது.

கம்யூனிஸ்ட் முகவிலாசம் முழுமையாகப் போய் விடாமல் காக்கவே ஆதரவு வாபஸ் முடிவு

இப்படியொரு நிலை இவர்கள் எடுத்திருப்பதற்கு காரணம் என்ன? அதாவது ஆட்சி கவிழ்ந்தாலும், ஒன்று உடனடியாகத் தேர்தல் வரும்; இல்லாவிட்டால் குதிரை வியாபாரத்தில் ஈடுபட்டு பாரதிய ஜனதாக் கட்சி ஆட்சிக்கு வர முயலும். என்னதான் கடைசி நேரத்தில் மூன்றாவது அணி, மாயாவதி பிரதமர் என்றெல்லாம் பேசினாலும் அது உடனடியாக நடைபெறப் போகும் நடைமுறை சாத்தியமான விஷயமல்ல. அப்படியிருந்தும் பாரதிய ஜனதாக் கட்சியுடன் இணைந்து வாக்களிக்கும் அளவிற்கு இக்கட்சி சென்றதற்கான காரணங்களில் ஒன்று தன்னிடமிருந்த கம்யூனிஸ்டுகள் என்ற அடையாளங்களில் பலவற்றை ஒன்றன் பின் ஒன்றாக இழந்துவிட்ட சி.பி.ஐ(எம்) கட்சி அமெரிக்க எதிர்ப்பு என்ற இந்த அடையாளத்தை விடாப்பிடியாகப் பிடித்து கம்யூனிஸ்ட் முகவிலாசம் தங்களை விட்டு முற்றாகப் போய்விடவில்லை என்று காட்ட முயன்றதேயாகும்.

மற்றொன்று இந்த விஷயத்தில் அரசிற்கு அடிக்கடி நெருக்கடி கொடுத்து ஊடகங்களிலும் பத்திரிக்கைகளிலும் தலைப்பு செய்தியில் இடம் பெற்று பிரபலமாகி வந்த இவர்களின் பொது செயலாளரின் முக்கியத்துவத்தை இன்னும் அதிகப்படுத்தி அதனை பயன்படுத்தி நாடாளுமன்ற அரசியலில் சாதகமடையும் போக்கு. ஏனெனில் இவர்களது கட்சி அகில இந்தியக் கட்சி என்று தன்னை ழைத்துக் கொண்டாலும் கேரளம், மேற்கு வங்கம், திரிபுரா ஆகிய மாநிலங்களை தவிர வேறு எங்கும் தனித்து நின்று ஒரு இடம் கூட பெற முடியாத நிலையிலேயே உள்ளது. எனவே இந்த விஷயத்தில் அகில இந்திய ஊடகங்களும் பத்திரிக்கைகளும் தன் தலைவருக்கு அளித்து வரும் முக்கியத்துவத்தை பயன்படுத்தி அகில இந்திய அரசியலில் முடிந்த அளவு காலூன்றலாம் என்ற எண்ணத்தின் அடிப்படையிலேயே இவர்கள் செயல்பட்டார்கள்.

மேலும் உறுப்பினர் எண்ணிக்கையை மட்டும் வைத்துப் பார்த்தால் அரசு பிழைக்காது என்ற நிலையை மட்டும் கணக்கிலெடுத்து காங்கிரஸ் கட்சி அணு ஒப்பந்தத்தைக் கைவிட்டிருக்குமானால் அதைச் செய்து முடித்த கதாநாயகனே பிரகாஷ் கரத் தான் என்ற எண்ணம் மேலோங்கியிருக்கும். அது அடுத்து வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் கேரளத்திலும், மேற்கு வங்கத்திலும் காங்கிரஸிற்கு எதிராக மத்தியில் ஆதரவு மாநிலத்தில் எதிர்ப்பு என்ற பாணியில் நடத்தி வந்த நிழல் யுத்தத்தை மாற்றி ஓரளவு தேர்தல் போட்டியை நிஜ யுத்தமாகவும் ஆக்கிவிடும். அந்நிலையில் தனது அடுத்த கட்ட வளர்ச்சிக்கு ஒரு நிலையான சக்தி வாய்ந்த அரசு இருப்பதையே விரும்பும் இந்திய முதலாளிவர்க்கத்தின் முன் காங்கிரஸ் கட்சி காலாவதியான ஒரு சக்தியாக ஆகிவிடும். அந் நிலையில் பாரதிய ஜனதாக் கட்சிக்கு முதலாளி வர்க்கம் ஆதரவளிக்க முன் வந்தாலும் அதற்கு அத்தனை அமைப்பு ரீதியான வலு கேரளம் மற்றும் மேற்கு வங்கத்தில் இல்லாததால் சி.பி.ஐ(எம்) கட்சியை அது பெரிதாகப் பாதிக்காது. எனவே இந்த நிலை குறைந்தபட்சம் கேரளம் மற்றும் மேற்குவங்கத்தில் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பலத்தை தக்கவைக்க உதவும்.

மூன்றாவது அணியும் தன் முதலாளித்துவ சேவையும்

பலவீனமான காங்கிரஸை எதிர் கொண்டு தாங்கள் ஏற்கனவே பெற்ற வெற்றியை தக்க வைக்க முடிந்தால் கூட, மூன்றாவது அணி என்ற வாதத்தை முன் வைத்து முதலாளித்துவத்திற்கு சேவை செய்யும் கட்சிகளின் வரிசையில் வாய்ப்பு கிடைத்தால் காங்கிரஸைப் பின்தள்ளி பாரதிய ஜனதா கட்சிக்கு அடுத்து ஆட்சிக்கு வரவாய்ப்புள்ள கட்சியாகத் தன்னை ஆக்கிக் கொள்ள முடிந்தாலும் முடியலாம் என்பதே சி.பி.ஐ(எம்) கட்சியின் திட்டமாகும்.

ஆனால் காங்கிரஸ் கட்சி அத்திட்டத்திற்கு இரையாகாமல் அணு ஒப்பந்த விஷயத்தில் உறுதியாக இருந்து, தற்காக நம்பிக்கை வாக்கெடுப்பு அவரை சென்று அவர்களது திட்டத்தில் மண்ணைப் போட்டுவிட்டது. இந்த விஷயத்தில் மக்களைத் திரட்டி வழக்கமாக அது அவ்வப்போது நடத்தும் பாவனைப் போராட்டத்தையும் நடத்த முடியாமல் போய்விட்டது. மேலும் பாவனைப் போராட்டம் நடத்தி மக்களிடம் கொண்டு செல்வதற்குத் தேவைப்படும் தர்க்க ரீதியான, ஆக்கப்பூர்வமான வாதங்களும்கூட அதற்கு இல்லாமல் போய்விட்டது.

இருந்தாலும் இந்த அணுசக்தி ஒப்பந்த விஷயத்தில் இவர்கள் நடத்திய நாடகத்தின் சுவாரஸ்யம் என்னவென்றால் காட்சியின் முடிவு இதுதான் என்று தெரிந்து கொண்டே இரண்டாண்டு காலம் அதனைத் தொய்வின்றி இழுக்க முடிந்தது தான். ஆளும் வர்க்கத்திற்கு இந்த ஒப்பந்தம் மிகவும் தேவையானது என்பதனால் காங்கிரஸ் கட்சி இதிலிருந்து பின் வாங்காது என்பதை அறிந்து கொண்டே அவர்கள் பேச்சு வார்த்தை, பேச்சு வார்த்தை என்று அதிகபட்ச நாட்களைக் கடத்தி பாராளுமன்றத்தின் ஆட்சிக் காலம் ஏறக்குறைய முடிவுறும் நிலையில் தங்களது ஆதரவினை வாபஸ் பெற்று ஒரு உச்சகட்ட அரசியல் சூழ்நிலையை உருவாக்கினர்.

அடுத்து இந்த ஒப்பந்தத்தை தேசிய நலன், இறையாண்மை அடிப்படைகளில் எதிர்ப்பதாகக் கூறும் பாரதிய ஜனதாக் கட்சியினைப் பற்றி பார்ப்போம். இன்று மீண்டும் அணுகுண்டு வெடிக்கும் நமது உரிமைக்கு இந்த ஒப்பந்தம் முட்டுக்கட்டைபோடும் என்பதால் அதை எதிர்ப்பதாகக் கூறும் பாரதிய ஜனதாக் கட்சியின் போலித்தனத்தை இவர்கள் ஆட்சியில் இருந்தபோது அமெரிக்காவுடனான உறவு விஷயத்தில் கடைப்பிடித்த கொள்கைகளில் இருந்தே தெளிவாகத் தெரிந்து கொள்ள முடியும்.

இரண்டாவது பொக்ரான் அணுகுண்டு வெடித்த பின்பு அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்த நிலையில் அப்போது பாரதிய ஜனதா கட்சியின் பிரதமராக இருந்த வாஜ்பேய் அவர்கள் இனி இந்தியா அணுகுண்டு வெடிக்க வேண்டிய அவசியம் ஏற்படாது என்று அமெரிக்காவைத் தாஜா செய்து வாக்குறுதி அளித்தார். அதுமட்டுமல்ல அணுகுண்டு சோதனை நடத்துவதை தடைசெய்யும் சி.டி.பி.டி. என்று அழைக்கப்படும் ஒப்பந்தத்திலும் அவர் கையொப்பம் இடத் தயாராக இருந்த தனது நிலையை வெளிப்படுத்தினார். இன்று ஹிந்து பத்திரிக்கையாளர் என்.ராம் உடனான நேர்காணலின் போது இதுகுறித்த கேள்வி வந்தபோது பாரதிய ஜனதாக் கட்சியின் தலைவர் எல்.கே. அத்வானி அவர்கள் அது எந்த நிர்ப்பந்தமும் இன்றி வாஜ்பேய் அவர்கள் தானாக அறிவித்தது என்று சாதுர்யமாக குறிப்பிட்டுள்ளார். அதாவது யாரும் கும்பிட்டு விழச் சொல்லி நிர்பந்திக்காமலேயே அவராகவே கும்பிட்டு விழத்தயாராக இருந்ததாக அவர் கூறுகிறார்.

இதைவிட மோசமான ஒப்பந்தத்திலும் கையொப்பமிடத் தயாராக இருந்த பி.ஜே.பி.

இதிலிருந்து நாம் அறிந்து கொள்வது இன்று பாரதிய ஜனதாக் கட்சி ஆட்சியில் இருந்தால் அது இதையொத்த அல்லது இதைவிட மோசமான ஒரு ஒப்பந்தத்தைக்கூட அமெரிக்காவுடன் செய்து கொள்ளத் தயாராக இருந்திருக்கும் என்பதுதான். மேலும் இந்த ஒப்பந்தத்தை ஒட்டி ஏற்பட்டுள்ள இந்தியா உலகவிவகாரங்களில் அமெரிக்காவின் பங்காளியாக ஆகியுள்ளதை மனப்பூர்வமாக வரவேற்கும் கட்சியுமாகும் அது. அப்படியிருந்தும் இந்த ஒப்பந்தத்தை எதிர்த்து வாக்களிப்பதில் பாரதிய ஜனதாக் கட்சி காட்டும் ஆர்வம், உருவாகியுள்ள இந்த நெருக்கடி சூழ்நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்த எண்ணும் தன் நடவடிக்கையே தவிர இதில் வேறு கொள்கை கோட்பாடு என்ற விஷயங்களுக்கு இடம் இல்லை.

நிலையான பார்வையற்ற பிராந்தியக் கட்சிகள்

இந்த மூன்று முக்கிய அகில இந்திய கட்சிகள் தவிர பிற சமாஜ்வாதி கட்சி, தி.மு.க., போன்ற பிராந்திய கட்சிகள் இந்த அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் ஒரு உறுதியான நிலைபாட்டை எப்போதும் எடுக்கவில்லை. இரண்டாண்டுகளுக்கு முன்பு சி.பி.ஐ.(எம்) கட்சியின் வேண்டுதலின் பேரில் இந்த ஒப்பந்த விஷயத்தில் விடாப்பிடியாக இருந்து அதனால் ஆட்சிக் கவிழ்ப்பை ஏற்படுத்தி விடாதீர்கள் என்று மத்திய அரசிடம் தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறினார். ஆனால் இன்று இந்த ஒப்பந்தத்திற்கு முழுமையாக ஆதரவளித்துள்ளார். உத்திரபிரதேச தேர்தலில் மாயாவதி வெற்றி பெறுவதற்கு முன்பு அங்கு ஆட்சி அதிகாரத்தில் இருந்த சமாஜ்வாதி கட்சி, காங்கிரஸ் 'ராகுல் காந்தியை' பிரபலபடுத்தி அது உத்திரபிரதேசத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் கொண்டுவர முயற்சித்த வேளைகளில் இந்த அணுஒப்பந்தம் உள்பட காங்கிரஸ் கொண்டுவந்த திட்டங்கள் அனைத்தையும் எதிர்த்து வந்தது. ஆனால் தற்போது உத்திரபிரதேசத்தில் ஆட்சி அதிகாரத்தை இழந்துவிட்ட நிலையில் காங்கிரஸ் கட்சியும் எப்படியாவது நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறுவதற்காக தன்னை அணுகவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் அடுத்து வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலை மனதிற்கொண்டு தற்போது இந்த ஒப்பந்தத்திற்கு ஆதரவாக நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களித்துள்ளது. எனவே இதுபோன்ற பிராந்திய கட்சிகளுக்கு இந்த அணுசக்தி ஒப்பந்தத்தை ஆதரிப்பது, எதிர்ப்பது என்ற முடிவுகளில் அவர்களது அரசியல் எதிர்காலம் என்பது பொருட்டாக இருந்திருக்கிறதே தவிர வேறு எந்த கண்ணோட்டமும் பொருட்டாக இருந்திருக்கவில்லை.

கூறிய காரணங்களும் உண்மைக் காரணமும்

ஒட்டுமொத்தத்தில் இந்த அணுசக்தி ஒப்பந்தம் இந்திய ஆளும் வர்க்கத்திற்கு சேவை செய்யும் அரசியல் கட்சிகளின் அப்பட்டமான சந்தர்ப்பவாத போக்குகளையே முன்னுக்கு கொண்டுவந்துள்ளது. தங்களது சந்தர்ப்பவாத நிலைபாடுகளை இக்கட்சிகள் சாதுர்யமான பலவார்த்தைகளுக்கு பின்னால் ஒளிந்து கொண்டு நியாயப்படுத்தியுள்ளனவே தவிர கோட்பாடு ரீதியான நிலை எதையும் இக்கட்சிகள் எடுக்கவில்லை.

எடுத்துக்காட்டாக பாரதிய ஜனதாக் கட்சியும், இடதுசாரிக் கட்சிகளும் தாங்கள் வெவ்வேறு காரணங்களுக்காக இந்த ஒப்பந்தத்தை எதிர்ப்பதாக கூறிவந்தன. பாரதிய ஜனதாக்கட்சி அடுத்து அணுகுண்டு வெடிப்பதற்கு இந்தியாவிற்கு இந்த ஒப்பந்தத்தினால் முட்டுக்கட்டைகள் போடப்படுவதாலேயே தாங்கள் முக்கியமாக இதனை எதிர்ப்பதாக கூறியது. சி.பி.ஐ(எம்) கட்சியோ தாங்கள் அமெரிக்காவின் ஹைடு சட்டவிதிகள் முன்வைக்கும் நிபந்தனைகளை மனதிற்கொண்டே இதனை எதிர்ப்பதாகக் கூறியது. ஹைடு சட்ட விதிகளில் பெரும்பாலானவை இந்தியா அது பெறும் செறிவு செய்யப்பட்ட யுரேனியத்தையும், தொழில் நுட்பத்தையும் அணுகுண்டு தயாரிப்புக்கு பயன்படுத்தக் கூடாது என்பதை கருத்திற்கொண்ட பல நிபந்தனைகளயே கொண்டுள்ளன.

ஒட்டு மொத்தத்தில் இந்தியா அடுத்த அணுகுண்டு வெடிக்கும் நடவடிக்கைக்கு முட்டுக்கட்டை எதுவும் இருக்கக் கூடாது என்பதே இவ்விரு கட்சிகளின் எதிர்ப்புக்கான காரணமாகும். எனவே இவ்விரு கட்சிகளும் ஒப்பந்தத்தை எதிர்ப்பதற்கான அடிப்படைக் காரணம் ஒன்றுதான். ஆனாலும் இக்கட்சிகள் இரண்டும் தங்களது எதிர்ப்பிற்கான காரணங்கள் வெவ்வேறு என்று கூறிக்கொள்கின்றன.

நாடாளுமன்ற வாதமே சி.பி.ஐ.(எம்)ஐ ஆட்டிப் படைக்கும் ஆயுதம்

ஒட்டு மொத்தத்தில் இந்த ஒப்பந்தம் இந்திய தேசிய முதலாளிகளுக்கு சாதகமான ஒன்று; அதற்கு பாரதிய ஜனதாக் கட்சி, சி.பி.ஐ(எம்) போன்ற கட்சிகள் முன்வைக்கும் எதிர்ப்புகள் அக்கட்சிகளின் நாடாளுமன்றவாத நலன்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படுபவையே தவிர தனது நலன் குறித்த விஷயத்தில் தொலைநோக்குப் பார்வை கொண்டவையல்ல என்பதால் ஆளும் வர்க்கமும் தன் பிரச்சார சாதனங்களும் தங்களது ஆதரவினை இவ்விஷயத்தில் காங்கிரஸ் கட்சிக்கு வாரி வழங்கியுள்ளன.

அதனால்தான் நம்பிக்கை வாக்கெடுப்பில் தான் வெற்றி பெறுவதற்கு போதிய எண்ணிக்கையிலான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இவ்விஷயத்தில் இல்லை என்பதை அறிந்திருந்தும் கூடஆளும் வர்க்க சக்திகள் அதனை எப்படியேனும் திரட்டி தந்துவிடும் என்ற நம்பிக்கையுடனே நம்பிக்கை வாக்கெடுப்பில் துணிச்சலாக மன்மோகன்சிங் இறங்கினார். அவர் எதிர்பார்த்தது பொய்யாகிவிடவில்லை. இதுவரை எந்தவொரு நம்பிக்கை வாக்கெடுப்பும் சந்தித்திராத விதத்தில் ஆளும் வர்க்கம் செலவு செய்து இவ்வெற்றியை சாதித்துத் தந்துள்ளது.

பணம், பதவி பெற வாக்கு கொடுத்தல் போன்றவற்றின் மூலமாக காங்கிரஸ் கட்சியும் தன் பங்கிற்கு செயல்பட்டு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளது. தன் மூலம் ஒப்பந்தத்தை செயல்படுத்தும் அனுமதியை பிரதமர் பெற்றுள்ளார். ஆளும் வர்க்க நலனே இறுதியில் எதையும் தீர்மானிக்கும் என்ற தாரக மந்திரத்தை உறுதியாக பின்பற்றியதன் மூலம் சரிந்துவந்த காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கை சோனியா காந்தியும், மன்மோகன்சிங்கும் பெருமளவு தூக்கி நிறுத்தியுள்ளனர்.

குயுக்திகள் நீண்டகாலப் பலனைத் தராது

ஒரு தொழிலாளி வர்க்க கட்சி கடைபிடிக்க வேண்டிய நேர்மையான வழிமுறையை கடைபிடிக்கத் தவறி, குயுக்திகள், ஆளும் வர்க்க பிரச்சாரசாதனங்களின் விளம்பரம் ஆகியவற்றை நம்பியிருந்ததால் சி.பி.ஐ.(எம்) கட்சியின் செல்வாக்கில் நிச்சயம் பெரும் சரிவை திருவாளர் பிரகாஷ் கரத் ஏற்படுத்தியுள்ளார்.

பல மாநிலங்களில் அடுத்தடுத்து தான் பெற்று வந்த வெற்றிகளால் மதிமயங்கி டுத்துதான் ஆட்சிக்கு வருவதை யாரும் தடுக்க முடியாது என்ற எண்ணத்தில் வெகு வேகமாக பயணித்து வந்த பாரதிய ஜனதாக் கட்சிக்கு இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசியல் ரீதியாக அது அடைந்த தோல்வி ஒரு மிகப்பெரும் வேகத்தடையாக மைந்துவிட்டது. அணுசக்தி ஒப்பந்தம் செயல்படுத்தப்படுவது அசுர வேகத்தில் நகரத் தொடங்கியுள்ளது. இந்தியாவின் அமெரிக்காவுடனான நெருக்கமும் அதிகரித்துள்ளது.

முதலாளித்துவ எதிர்ப்பு சோசலிசப் புரட்சியே ஒரே வழி

இதிலிருந்து உண்மையான உழைக்கும் வர்க்க இயக்கத்திற்கு கிடைத்த படிப்பினை என்ன? இப்போது அமெரிக்காவின் இளைய பங்காளியாக இந்தியா ஆகியிருப்பது வெளிப்படையான உண்மை ஆகியுள்ளது. இந்த அபாயகரமான வளர்ச்சிப் போக்கை தடுக்க உழைக்கும் வர்க்கம் செய்ய வேண்டியது என்ன? உலக அரங்கில் அமெரிக்காவுடனும், இஸ்ரேல் போன்ற நாடுகளுடனும் உறவுகளை மேம்படுத்திக் கொண்டு நமது மக்களின் ஏகாதிபத்திய எதிர்ப்பு பாரம்பரியத்தை ஆட்சியாளர்கள் துச்சமென தூக்கி எறிந்துள்ளனர். இந்நிலை தோன்றியுள்ளதன் காரணம் என்ன? இந்த அனைத்து வளர்ச்சி போக்குகளும் ஏற்படுவதற்கு மூலகாரணம், இந்திய முதலாளித்துவமும், தன் நலம் பேணும் அனைத்து கட்சிகளின் அரசியலுமே.

எந்தக் கட்சி ஆட்சியிலிருந்தாலும் இப்போக்குகள் அனைத்தும் நிச்சயம் ஏற்பட்டே இருக்கும். எனவே முதலாளித்துவத்தை, எதிர்க்காமல் முதலாளித்துவ எதிர்ப்பு சோலிச சமூக மாற்ற பாதையில் உறுதியாக பயணித்து அதற்குகந்த வகையில் உழைக்கும் வர்க்க வெகுஜனப் போராட்டங்களை வளர்த்தெடுக்காமல், இந்த அபாயகரமான வளர்ச்சி போக்குகளத் தடுத்து நிறுத்த அல்ல மட்டுபடுத்தக்கூட முடியாது. இதுவே உழைக்கும் வர்க்கத்திற்கு இதன் மூலம் கிடைத்துள்ள படிப்பினையும், மேலே நாம் முன்வைத்த கேள்விகளுக்கான பொருத்தமான விடைகளுமாகும்.

வாசகர் கருத்துக்கள்
raja venkatesh
2009-01-10 02:07:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

this article is very important article of this year 2008 . i like this

Pin It