நமது தொன்மையான பழக்கங்களினால், சில சொற்களின் பொருளை மிகவும் குறுகிய கண்ணோட்டத்துடனே புரிந்து கொண்டுள்ளோம். விவசாயக் கூலிகள், விவசாயிகள், விவசாயம் சார் உழைப்பாளிகள், மூட்டை சுமப்பவர்கள் பற்றி டாக்டர் தேஷ்முக் ஒரு கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து என்னுடைய விளக்கத்தை அளிக்க விரும்புகிறேன்.

அய்ந்து லட்சம் ரூபாய் வரி செலுத்தக்கூடிய அளவிற்கு நிலம் வைத்திருக்கும் பெரு விவசாய நிலத்தின் உடைமையாளர்களைத் தவிர, பிற விவசாயம் சார் உழைப்பாளிகளை நான் விவசாயத் தொழிலாளர்கள் என்று குறிப்பிடுகிறேன்.

மேலும் நிலத்தை குத்தகைக்கு எடுத்துப் பயிர் செய்பவர்கள், சொந்தமாக நிலம் வைத்து பயிர் செய்பவர்கள், தன்னிடம் உள்ள நிலத்தில் குறைந்தது இரண்டு ஏக்கர் நிலத்திலாவது பயிர் செய்பவர்கள் ஆகியோர் விவசாயத் தொழிலாளர்கள் என்ற வரையறைக்குள் அடங்குவர்.

இந்தத் தொழிலாளர்களுக்கு அரசு, விவசாயம் பற்றிய அடிப்படையான கல்வி அளிக்க முயற்சி மேற்கொள்கிறது. விவசாயக் கல்வி, விவசாயம் பற்றிய ஆய்வு, பயிர் பாதுகாப்பு, பயிர்களைப் பூச்சிகளிடம் இருந்து பாதுகாப்பது பற்றிய விவரங்களை விவசாயத் தொழிலாளர்களுக்கு அரசு அளிப்பது மிகவும் இன்றியமையாததாகும்.

நிலத்தின் மீது உரிமை அல்லது நிலச் சட்டங்கள், நிலம் என்ற சொத்தின் உரிமையாளர் மற்றும் அந்த நிலத்தைக் குத்தகைக்கு எடுப்பவர்களிடையே எழும் பிரச்சனைகளைத் தீர்க்கும் வகையிலான சட்டம் ஆகியவற்றை நான் பிரிவு 26அ-ல் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளேன்.

இதில் உள்ள சட்டங்கள், சாமான்ய மனிதனின் நலத்தை உறுதி செய்வதையே முதன்மையானதாகக் கொண்டு வரையறை செய்யப்பட்டுள்ளது. இந்தச் சட்டங்களைத் தங்களது வழிச் சட்டங்களாகக் கொண்டு மாநில அரசுகள் செயல்பட வழிவகையும் செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சட்டத்தில், தொழிலாளி என்ற சொல்லை தொழிற்சாலைகளில் பணிபுரியும் உழைப்பாளிகளுக்கும் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் பொதுவான சொல்லாக உரிமையாகவே பயன்படுத்தியுள்ளேன்.

எனவே, பிற்காலத்தில் தொழிற்சாலைகளை மய்யப்படுத்தி இயற்றப்படும் சட்டங்களும் அதன் வழிப் பயனும் நமது நாட்டின் விவசாயத் தொழிலாளர்களுக்கும் உரிமையானது என்பதை இங்கு தெளிவாக்குகிறேன். இந்த உரிமையை பிரிவு 26, விவசாயிகளுக்கு உறுதி செய்கிறது.

இதைத் தவிர, வேலை செய்யும் நிர்பந்தம், வேலையின் தன்மை, தொழிலாளர் வைப்பு நிதி மற்றும் வேலை தரும் முதலாளி, தொழிலாளிகளுக்குச் செய்ய வேண்டிய அடிப்படை வசதிகள், வேலைக்கேற்ற கூலி, உடல் நலத்தைக் காக்க "இன்ஸ்சூரன்ஸ்' வசதி, குறைந்தபட்ச பென்ஷன் போன்றவைகளை விவசாயத்தில் உழைக்கும் உழைப்பாளிகளும் பெறும் வகையில், நான் சட்டத்தை வடிவமைத்துள்ளேன்.

இதுவரை தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு மட்டும் என்ற வகையில் உள்ள நடைமுறைப் பயன்கள், இனி விவசாயப் பணியில் ஈடுபட்டு அதன் மூலம் வாழ்க்கை நடத்தும் தொழிலாளர்களுக்கும் பொருந்தும்.

இதன் மூலம் பிரிவு 21 மற்றும் 24 ஆகியவற்றில் வரையறுக்கப்பட்டுள்ள உரிமைகள், ஆலைத் தொழிலாளர்கள், தொழிற்சாலைப் பணியாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள் ஆகியவர்கள் ஒரே நிலையில் வைத்து நீதி செய்யப்படுவர்.

பிரிவு 28, தொழிலாளர் அமைப்பு உருவாக்கி செயல்படும் உரிமையை விவரிக்கிறது. இத்தகைய அமைப்பு அல்லது சங்கங்களை தொழிற்சாலைப் பணியாளர்கள் போலவே, விவசாயத் தொழிலாளர்களும் அமைத்து நிர்வாகம் செய்யலாம். தங்களின் தேவைகளை சட்டத்தின் முன் வைத்து அதற்கான நீதியைப் பெறலாம்.

விவசாயிகளுக்கு தொழிற்சாலைப் பணியாளர்களுக்கு அளிக்கப்படும் அனைத்து வித உரிமைகளையும் நான் சட்டத்தில் உறுதி செய்துள்ளேன். இதைத் தவிர்த்து, விவசாயிகளுக்குக் கூடுதலான உரிமைகளைப் பின்வரும் சட்டங்கள் மூலம் கிளைச் சட்டங்களை உருவாக்க, நான் போதுமான வழிவகைகளை ஏற்படுத்தியுள்ளேன்.

‘பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு' : 13 பக்கம் : 932
 
Pin It