அக்கறை கொண்ட யாரேனும் ஒருவர், சுதந்திரத் தொழிலாளர் கட்சியின் அறிக்கையைப் படித்தால் அதன் கொள்கை, கோட்பாடுகள் புரியும். அதற்கு மாபெரும் ஆற்றல் உண்டு என்பதும் விளங்கும். அது ஒரு ரகசியமான அமைப்பல்ல; சாதி, மத நம்பிக்கை எதுவாக இருந்தபோதிலும் அனைவரும் அதில் சேரலாம். அதற்கென்று கொள்கைத் திட்டம் உண்டு. தாழ்த்தப்பட்ட மக்களின் சிறப்புத் தேவைகளை அது வலியுறுத்தினாலும், தொழிலாளர் வர்க்கத்தின் அனைத்துப் பிரிவுகளுக்கும் அதில் இடமுண்டு. சுதந்திரத் தொழிலாளர் கட்சியின் வளர்ச்சிக்கும் விரிவாக்கத்திற்கும் தடைக் கல்லாக நிற்பது சமூகம்தான்; அரசியல் அல்ல.
உண்மையில், இக்கட்சி தாழ்த்தப்பட்ட மக்களையே கருவாகக் கொண்டிருப்பதுதான் - கட்சியின் வளர்ச்சிக்கும் விரிவாக்கத்திற்கும் தடையாக இருக்கிறது. அதனால்தான் ஜாதி இந்து தொழிலாளர்கள் அதில் சேர மறுக்கிறார்கள். சுதந்திரத் தொழிலாளர் கட்சியின் வளர்ச்சியை எதிர்க்கும் இவர்கள், வேறு வழிகளில் எதிர்மறை உணர்வுகளை உசுப்பிவிட்டு அறியாமையும் மூட நம்பிக்கையும் மிகுந்துள்ள தொழிலாளர்களை அதில் சேர விடாமல் தடுத்து வருகிறார்கள்.
ஆனால், சுதந்திரத் தொழிலாளர் கட்சியின் நேரடியான, நேர்மையான அரசியல் - ஓர் ஆற்றல் மிக்க சாதனையாக எல்லா தொழிலாளர் உறுப்பினரையும் கவர்ந்திழுத்து, இந்து சமூக அமைப்பிலிருந்து வெளிப்படும் நாசகார சக்திகளுக்கு தோல்வியைத் தரும் என்று நம்புகிறேன். தாணா, கெலாபா, ரத்தினகிரி போன்ற பகுதிகளில் கட்சி நன்றாக வேரூன்றியிருக்கிறது. மற்ற மாகாணங்களிலும் பரவி வருகிறது. சி.பி. மாகாணத்திலும் பெராலிலும் கட்சி செயல்படுகிறது. இந்தியாவின் பிற மாகாணங்களுக்கும் நாளடைவில் அது பரவும். எனவே, அது ஒன்றுதான் தொழிலாளர் வர்க்கத்தின் ஆதரவுக்குரிய கட்சி.
தாழ்த்தப்பட்ட மக்களுக்கான ஒரு தொழிலாளர் அமைப்பை ஏற்படுத்துவதன் மூலம் ஒட்டுமொத்தமான இந்தியத் தொழிலாளர் வர்க்கத்திற்கு, நாம் பெரிய உந்து சக்தியாக இருக்க முடியும். திரு. காமேஜ் என்பவர் இங்கிலாந்து சார்ட்டிஸ்ட் இயக்கத்தின் மாணவர். அவர் குறிப்பிட்டார் : ""சமூக வேர்கள் இல்லாமல் ஒரு மாபெரும் அரசியல் இயக்கம் தோன்றுவது சந்தேகம்தான். சமூக இன்பத்திற்கான சாதனங்களைப் பெறுவதே மனித இனத்தின் தலையான பொருளியல் நோக்கம். இந்த சாதனங்களை இவர்கள் பெறமுடிந்தால், அரசியல் தடுமாற்றத்திற்கு ஆளாக மாட்டார்கள். மாபெரும் சமூக அநீதிகள் மூலம்தான் அரசியல் உரிமைகளின் மதிப்பு பொதுமக்களுக்கு தெரிய வருகிறது.''
உங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் மிகப் பெரியவை. அவை உண்மையானவை. எனவே உங்கள் அரசியல் நேர்மையாக இருக்க வேண்டும். இதை நீங்கள் உணர்ந்தால் இந்தியத் தொழிலாளர் வர்க்கத்திற்கு நீங்கள் கலங்கரை விளக்கமாகத் திகழ்வீர்கள். உங்களுக்கென்று சட்டமன்றத்தில் இடஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தகைய இடஒதுக்கீட்டின் மூலம் தொழிலாளர்களுக்குக் கிடைக்கக் கூடிய லாபங்களைப் பற்றி சில தொழிலாளர் தலைவர்களுக்கு ஒன்றுமே தெரியவில்லை.
தேர்தல்கள் பெரும்பாலும் சூதாட்டங்களே! எந்தத் தேர்தல் அமைப்பிலும் எந்தக் கட்சியும் சாதாரணமான வழிகளில் தங்களின் சட்டமன்றப் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாத்துக் கொள்ள முடியாது. எந்தத் தேர்தல் அமைப்பும் எந்த வாக்காளர் தொகுதிக்கும் அவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் பிரதிநிதித்துவம் வழங்காது. இங்கிலாந்து தேர்தல் வரலாற்றைப் பாருங்கள். பல்வேறு கட்சிகளுக்கு எத்தகைய வியக்கத்தக்க அழிவுகள் நேர்ந்துள்ளன என்பதை கவனியுங்கள். நமக்கு அந்த நிலையில்லை. கண்டிப்பாக இடஒதுக்கீடு அதை உறுதி செய்யும். இந்த இடஒதுக்கீடு தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு மட்டுமல்ல, தொழிலாளர் வர்க்கம் முழுமைக்கும் பயன்தரக் கூடியது.
தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்குப் பிரதிநிதித்துவம் உண்டு என்றால், அதன் மூலம் பிற தொழிலாளர் வகுப்பினர் அரசியல் அடிப்படையில் திரள்வதற்கு தாழ்த்தப்பட்ட வகுப்பினர் உதவ முடியும். தொழிலாளி வர்க்கம் ஆதரவு கோரினால் போதும். தாழ்த்தப்பட்டவர்கள் ஆதரவு தருவார்கள். இந்த ஆதரவின் வலிமை கடந்த தேர்தலில் நிரூபிக்கப்பட்டது. சுதந்திரத் தொழிலாளர் கட்சியின் சார்பில் போட்டியிட்ட மூன்று சாதி இந்துக்கள், பம்பாய் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களுடைய தேர்வுக்கு தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் ஆதரவுதான் காரணமாக இருந்தது.
இதேபோல் நமது கட்சி சார்பில் போட்டியிடவில்லை என்றாலும் கட்சி ஆதரவை மட்டும் வைத்துக் கொண்டே பலர் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர். ஆகவே நமது முயற்சிகள் மூலம் லாபம் அடைய விரும்புகின்றவர்களுக்கு, தாழ்த்தப்பட்ட வகுப்பினர் தாங்களாகவே மிகப் பெரிய பங்களிப்பைச் செய்து காட்ட முடியும். அதனால் அவர்களுக்கும் பயனுண்டு; ஒட்டுமொத்தமான தொழிலாளர் வர்க்கத்துக்கும் பயனுண்டு..
இவையெல்லாம் நீங்கள் எந்தளவுக்கு உயர்வாகவும், விரைவாகவும் திரள்கின்றீர்கள் என்பதைப் பொறுத்தே அமையும். நீங்கள் அமைப்பு அடிப்படையில் ஏன் திரள வேண்டும் என்றும், அப்படித் திரள்வதன் மூலம் என்ன சாதிக்க முடியும் என்றும் நான் சொன்னேன். இனி அமைப்பு ரீதியாக திரளத் தொடங்குங்கள். அதற்கான நேரம் வரும் என்று காத்திருக்காதீர்கள். நீங்கள் வெற்றி பெற என் வாழ்த்துகள்!
(பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு: 17(3), பக்கம்: 190)
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
சமூக வேர்களின்றி அரசியல் இயக்கம் தோன்ற முடியாது - IX
- விவரங்கள்
- அம்பேத்கர்
- பிரிவு: அம்பேத்கர்