Ambedkar

பம்பாய் பிரதேசத்தை தனி மாநிலமாக அறிவிப்பதா அல்லது "அகண்ட மகாராஷ்டிரம்' என்ற ஒரு புதுப்பகுதியை உருவாக்கி அதனுடன் பம்பாய் பிரதேசத்தை இணைப்பதா? என்ற பெரும் புயல் கிளப்பும் விவாதம், இந்த நாடாளுமன்றத்தில் எழுந்துள்ளது. பம்பாய் நகரத்தை நமது அரசியல் சட்டம் நம் நாட்டின் எல்லையாக வரையறை செய்கிறது. ஆனால், அந்த நகரத்தை, அந்தமான், நிகோபர் தீவுகளுக்கு இணையாக கீழ்மைப் படுத்தியுள்ளனர். இதன் மூலம் பம்பாய் பிரதேசம், தனக்கென தனியாக சட்ட மன்றம் மற்றும் ஆட்சி அமைக்கும் தலைமையகம் ஆகியவற்றைப் பெறும் வாய்பை இழந்து விடுகிறது. இதை நான் ஓர் அறிவற்ற செயலாகக் கருதுகிறேன்.

இந்த நாட்டின் முன்னணி நகரம், இந்தியாவிற்கு அரசியல் கருத்தை வழங்கிய நகரம் தற்பொழுது லட்சத்தீவு, மாலத்தீவு மற்றும் நிகோபர் தீவுகளுக்கு இணையான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. மராத்தியர்களும், குஜராத்திகளும் பம்பாய் பகுதியே தங்களுடையது என்கின்றனர். இவர்களது கோரிக்கையில் எவ்வித நியாயமும் இல்லை. இதே கோரிக்கையை மொரார்ஜிதேசாய் தன்னுடைய தலையாய நிபந்தனையாக விதித்துள்ளார்.

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் குடியுரிமை என்பது, இந்த நாடு முழுமைக்கும் பொதுவாக இருந்தது. ஒரு மாநிலத்தில் வாழ்பவர் வேறு எந்த இந்திய மாநிலத்திலும் வாழலாம். இது, பல தலைமுறையாக பழக்கத்தில் இருந்து வருகிறது.

ஆனால், சென்னை மாநகரத்தை தமிழர்களுக்கான மாநிலமாக அறிவித்தால், அதை சென்னையில் வசிக்கும் எந்த தமிழ் அல்லாதோரும் எதிர்ப்பதில்லை. இதைப் போலவே கல்கத்தா நகரமும் ஆகும். நான், கல்கத்தாவில் வாழும் தொழிலாளர்களின் நிலையை ஆய்வு செய்வதற்காகப் பல முறை அங்கு சென்றுள்ளேன். அங்குள்ள மக்கள் வங்காளர்கள் என்று தங்களை அழைத்துக் கொள்வதில்லை. மாறாக, கல்கத்தியர்கள் என்று தான் அழைத்துக் கொள்கிறார்கள். காரணம், கல்கத்தா நகரம் குடியேறியவர்களின் நகரம்.

பம்பாயில் குஜராத்தியர்கள் பதினைந்து சதவிகிதம் உள்ளனர். கிட்டத்தட்ட இதே சதவிகிதம் வங்காளிகள் அங்கு வசிக்கின்றனர். மற்றும் தென்னிந்தியர்களும் வாழ்கின்றனர். இருப்பினும், பம்பாயின் முதல் குடிகள் யார் என்பதை நாம் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். கோலி எனப்படும் மீனவர்கள் தான் பம்பாயின் முதல் குடிகள். இவர்கள் இன்று ஏதுமறியாத அப்பாவி சிறுபான்மையினராய் உள்ளனர். நான் பம்பாயை வேறு மாநிலத்துடன் இணைப்பதையோ, ஒன்றுபட்ட மகாராஷ்டிரத்துடன் இணைப்பதையோ எதிர்க்கிறேன். பம்பாய் தனி மாநிலமாக உருவாக்கப்பட வேண்டும் என்பது என் கருத்து. இதற்காக எந்தவிதப் போராட்டத்தையும் மேற்கொள்ள நான் தயாராக உள்ளேன்.

அய்ரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்க நாடுகள், மிகக் குறைந்த அளவு மக்கள் தொகையைக் கொண்டிருப்பினும், அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து தனி மாநிலங்கள் அமைக்கப்பட்டுள்ளது. நம் நாட்டில் நாம் பிரதேச உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல், வலிமையான நாடு என்ற பெயரில் செயல்பட்டால் நாம் உள்நாட்டுப் போரை விரைவில் சந்திக்க வேண்டியிருக்கும். ஒவ்வொரு பகுதி பூர்வகுடிகளுக்கும் இது நமக்கான நாடு, நமக்கான உரிமைகளை அங்கீகரிக்கும் வகையில் இந்த நாட்டின் பிரிவுகள் அமைந்துள்ளன என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். இல்லாவிடில், வருங்கால சந்ததியினர்களுக்கு, பூர்வ குடிகளின் போரையும், அமைதியற்ற சூழலையும்தான் விட்டுச் செல்ல இயலும்.

இந்த நாட்டில் உணவுக்காகவும், உடைக்காகவும், கல்விக்காகவும் மண்ணின் பூர்வ குடிகள், குடியேறியவர்களிடம் கையேந்த வேண்டிய நிலைமைதான் உள்ளது. பராமரிக்க இயலாத அளவுக்கான பரந்த பகுதியை குறுகிய எண்ணங்கள் கொண்ட ஒரே வர்க்கம் தொடர்ந்து ஆளுவதுதான் இதற்குக் காரணம்.

இதைப் போலவே, நமது நாட்டிற்கு இரண்டு தலைநகரங்கள் தேவை. தென்பகுதியில் உள்ள அய்திராபாத்தை சில காலம் தலைநகரமாக நாம் கொள்ளலாம். இது, தென்னிந்திய மக்களின் உணர்வுகளை மதிக்கும் வகையில் அமையும். தென்பகுதி மக்கள் தங்களுக்கான தலைநகரம் அருகில் உள்ளது என்ற எண்ணம் மேலோங்க, தென்பகுதியிலேயே இந்த நாட்டின் தலைநகரத்தை அமைக்கலாம்.

டில்லியே தொடர்ந்து தலைநகராக இருந்தால், தங்களது நாட்டின் தலைநகரம் ஏதோ ஒரு அயல் நாட்டில் இருப்பது போல தென்னிந்தியர்கள் அதிருப்தி அடைவார்கள். எனவே, இந்த நாட்டின் தலைநகரம் டில்லியை தவிர்த்து தென்பகுதியில் நிறுவப்பட வேண்டும். இதுவே மக்களின் உணர்வுகளுக்கு நாம் அளிக்கும் மதிப்பு.

("பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு' : 15 பக்கம் : 962) 

Pin It