கடந்த 2016-17 –ஆம் ஆண்டில் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் 8,672 கோடிக்கு வணிகம் செய்து, அதில் 2,342 கோடி ஊதியம் அடைந்ததாக அண்மையில் வெளியான செய்தியைப் பார்த்து மகிழ்ச்சியாக இருந்தது.
தமிழ்நாட்டில்தாம் எவ்வளவு கனிம வளங்கள் கொட்டிக்கின்றன!
1828 – ஆம் ஆண்டில் நெய்வேலியில் ஆங்கிலேயரால் நிலக்கரி இருப்பு கண்டறியப்பட்டாலும், 1943 – இல் அங்கு 500 கல்லெடை(டன்) அளவில் நிலக்கரி இருக்கும் என்றே நம்பினார்கள். அதன்பிறகு 1951 – இல் 20 ஆயிரம் கல்லெடை(டன்) அளவில் நிலக்கரி இருக்கலாம் எனக் கருதினார்கள்.
ஆனால், இந்த ஆண்டு நெய்வேலியில் வெட்டியெடுக்கப்பட்ட நிலக்கரி அளவு நம்மை மலைக்க வைக்கிறது. 2016-17- ஆம் தொகை(நிதி) ஆண்டில் மட்டும் 2 கோடியே 76 இலக்கத்து 17 ஆயிரம் கல்லெடை(டன்) பழுப்பு நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்டுள்ளதாம்.
நீங்கள் இன்னொன்றையும் தெரிந்துகொள்ளவேண்டும். 1956 –ஆம் ஆண்டு தொடங்கி 60 ஆண்டுகளுக்குப் பிறகும், இந்த அளவு இரண்டே முக்கால் கோடி கல்லெடை(டன்) நிலக்கரியை வெட்டி எடுக்க முடிகிறது என்றால் தமிழகத்தின் கனிமச்செல்வங்கள் எவ்வளவு வளமுடையன, சிறப்புடையன என்பதைக் கணக்கிட்டுப் பார்த்துக்கொள்ள வேண்டும்.
நெய்வேலியின் சிறப்பபென்பது நிலக்கரியோடு முடிவடையவில்லை, மின்சார உருவாக்கத்திலான வரவிலும் நெய்வேலி சிறப்பானது.
கடந்த தொகை(நிதி)யாண்டில் மட்டும் 2,234 கோடியே 5 இலக்கத்து 90 ஆயிரம் மின்னளவி(யூனிட்) மின்சாரம் நெய்வேலியில் உருவாக்கப்பட்டிருக்கிறது.
ஆக, நெய்வேலியிலிருந்து இவ்வளவு கிடைத்தாலும் அவையெல்லாம் எங்கே, யாருக்குப் போகின்றன? நெய்வேலி மக்களுக்கா? தமிழக மக்களுக்கா? அல்லது தமிழக அரசுக்கா? - என்பதையெல்லாம்கூட நம்மவர்களில் பலர் தெரிந்துகொள்ளாமல் இருக்கிறோம்.
நெய்வேலியில் ஆண்டுக்கு ஏறத்தாழ 8300 கோடி உருபாய் மிதிப்பீட்டளவிற்கு நிலக்கரி கிடைத்தும், அதில் நான்கில் ஒரு பங்கு, அதாவது ஏறத்தாழ 2300 கோடி உருபாய் ஊதியம்(இலாபம்) என்றானபோதும் அவற்றிலிருந்தெல்லாம் ஒரு விழுக்காடும் தமிழகத்திற்கோ, தமிழக அரசுக்கோ கிடைத்திடவில்லை என்பதுதான் கொடுமை.
ஆனால் அதேபோது, அசாமிலோ, குசராத்திலோ கிடைத்திடும் கனிமப் பொருள்களுக்கோ, கன்னெய்(பெட்ரோலு)க்கோ 20 விழுக்காடு மதிப்புத்தொகையாக அந்தந்த அரசுகளுக்குக் கொடுக்கப்படுகின்றது. அவ்வாறான மதிப்புத்தொகையைப் போராடி அந்தந்த அரசுகள் பெற்றிருக்கின்றன. அதுமட்டுமல்ல அப்படியான மதிப்புத் தொகை காலந்தாழ்த்திக் கொடுக்கப்படுகிறபோது, அதற்குரிய வட்டியோடேயே அத் தொகை அந்தந்த அரசுகளால் பெறப்பட்டிருக்கின்றன என்பதையும் தெரிந்துகொள்ளவேண்டும்.
இதற்காக 1948 – இல் போடப்பட்ட ஒழுங்கமைவு மற்றும் வளர்ச்சிச் சட்டம் மதிப்பீட்டுத்தொகை பற்றிப் பல வழிமுறைகளைச் சொல்லியிருக்கிறபோதும், தமிழக அரசோ, தமிழக அரசியல் கட்சிகளோ வாய்மூடிக்கிடக்கின்றன.
நெய்வேலி நகரியமே தமிழர்களுக்கோ, தமிழக அரசுக்கோ சொந்தமில்லை என்கிற நிலை இருக்க, நெய்வேலி நிலக்கரியை, அங்கு உருவாக்கப்படும் மின்சாரத்தை தமிழகம் எங்கே, எப்போது சொந்தம் கொண்டாடப்போகிறது?
இந்தியா பறித்துகொண்ட நெய்வேலியை மீட்பது குறித்து காலம் மட்டுமல்ல, தமிழர்களும் விடைசொல்லியாகவேண்டும்... எப்போது?
- பொழிலன், பொதுச்செயலர் - தமிழக மக்கள் முன்னணி