தொடுமின்! தொழுமின்! கொழுமின்!
மேற்கண்ட மூன்றும், சமயப் புரட்சியாளர் இராமனுஜர், சொன்ன மூன்று மொழிகள்.
சமயம் எல்லோருக்கும் பொதுவானது எனக்கூறி, தாழ்த்தப்பட்ட வரை வைணவ சமயத்தில் புகுத்தி புரட்சி செய்தவர்.
அதுமட்டுமன்று, தமிழ் மொழிக்கும் முதன்மைக் கொடுத்தவர். இவற்றின் காரணமாக, தொடக்கத்திலிருந்தே, அவரைக் கொல்வதற்காக, பல முயற்சிகள் மேற்கொள்ளப் பெற்றன.
அவற்றையெல்லாம் மிக எளிதில் கடந்து, ஒரு நூற்றாண்டுக்குமேல் வாழ்ந்த வைணவ சமயப் புரட்சியாளர் என்பதால், அவரை சமூக சிந்தனையாளர்கள் இன்றளவும் போற்றுகின்றனர்.
இச்சமயத்தில், அவரின் உயிரைக் காப்பாற்றிய திருவரங்கத்துப் பெண்ணென்னும் பெருந்தகையாளை நினைவு கூர்வது பொருத்தமானது.
நற்குணமுடைய பெண்கள், தங்களால் உலகில் எந்த ஓர் உயிருக்கும் தீங்கு ஏற்படக்கூடாது என்ற எண்ணம் கொண்டவர்கள். தங்கள் முன்னே, ஓர் உயிர் துன்புறுகிறது என்றால் துடிதுடிப்பார்கள். பொதுவாக பெண்கள் இளகிய மனம் படைத்தோர். அத்தகையப் பெண்கள் சில நேரங்களில், அரக்க குணம் படைத்த ஆண்களின் செயல்களையும் அனுசரித்துப் போக வேண்டிய நிலையும் ஏற்படுகிறது.
அத்தகைய நிலை ஒருநாள் திருவரங்கத்தில் வாழ்ந்த பார்ப்பனர் ஒருவரின் மனைவிக்கு, இராமானுஜர் காலத்தில் ஏற்பட்டது.
இராமானுஜர், திருவரங்கத்தில் அரங்கநாத பெருமாள் கோயிலின் மடாதிபதியாக இருந்தபோது பல சீர்திருத்தங்களைச் செய்தார்.
இச்செயல்கள் யாவும் அங்கு வாழ்ந்த வைதீகப் பார்ப்பனர்களுக்குப் பிடிக்கவில்லை. தான் மடாதிபதியாக இருந்தாலும் பிச்சை ஏந்தி உண்பதைத்தான் மரபாகக் கொண்டிருந்தார்.
ஒருநாள், 6 வீடுகளில் பிச்சை வாங்கி 7ஆவது வீட்டிற்கு சென்று பிச்சைக் கேட்டார்.
இவரை சாகடிக்க இதுதான் நல்வாய்ப்பெனக் கருதிய கொடூர உள்ளம் கொண்ட அந்த வீட்டு வைதீகப் பார்ப்பனர், தன் மனவி இராமானுஜருக்கு கொடுக்க கொண்டு வந்த உணவில் விஷத்தைக் கலந்து அந்த சண்டாளனுக்குக் கொடு என்றான்.
நல்ல உள்ளம் கொண்ட அந்தப் பெண்மணி மறுத்தார். இது உன் கணவனின் கட்டளை, நிறைவேற்றுவது, உன் கடமை என்றான்.
தன் கண்களில் நீர் தாரைத் தாரையாக வழிய, அழுதவாறே, விஷம் கலந்த அந்த உணவை எடுத்து வந்து, மற்ற உணவுகளோடு கலந்து விடாமல், இராமானுஜர் வைத்திருந்த வேறு பாத்திரத்தில் கொட்டிவிட்டு, அது விஷம் கலந்த உணவு என்பதை குறிப்பால் உணர்த்தி, திரும்பிப் பார்க்காமல் உள்ளே சென்று விட்டார்.
ஏதோ சூழ்ச்சி நடந்துள்ளது என்பதை உணர்ந்த இராமானுஜர், அந்த உணவை சாப்பிடாது காவிரி ஆற்றிலே கொட்டி, அந்த உணவை உண்ட மீன்கள் இறக்க, பின்னர் உண்மையறிந்தார் இராமானுஜர் என்பது வரலாறு.
இத்தகைய பெருந்தகையாளர்களும் இந்த உலகில் என்றும் இருக்கின்றனர் என்பதற்கு இச்செய்தி ஓர் எடுத்துக்காட்டு.
- ப.தியாகராசன்