கப்பலில் பயணம் செல்பவர்கள் ஏதாவது விபத்து ஏற்பட்டால் பக்கத்தில் இருக்கின்ற தீவுக்கு நீந்திச் சென்று தப்பிப் பிழைப்பது, அங்கே இருக்கின்ற புதையலை கண்டுபிடிப்பது போன்ற சாகஸங்கள் கதைகளில் தான் நடக்கும். உண்மையில் கடலில் ஏற்படும் விபத்தில் சிக்கியவர்கள் லைப்போட்டின் மூலம் காப்பாற்றப்பட்டாலும் அவர்கள் அதிக நாட்கள் உயிர் பிழைத்து இருப்பதில்லை. உதவிக்கரம் வருவதற்குள் அவர்கள் இறந்து விடுகின்றனர். காரணம் என்ன? பசியும் தாகமும் தான்.

தங்களைச் சுற்றி கடல்நீர் விரிந்து பரந்து இருந்தாலும் அதில் இருந்து ஒரு துளியைக்கூட அவர்களினால் பருக முடியாத விபரீதம். கடல்நீர் நடுவே பயணம் போல்; குடிநீர் தருபவர் யாரோ? என்ற திரைப்படப் பாடலை நினைத்துப் பாருங்கள் அது தான் உண்மை. கடல்நீரைப் பருக முடியாத காரணத்தினால் தான் காப்பாற்றுவதற்கு யாராவது வரும் வரையில் தாக்குப்பிடிக்க முடியாமல் கப்பல் பயணிகள் இறக்கின்றனர். இது குறித்து ஆராய்ச்சிகள் மேற்கொண்டார் ஒரு பிரஞ்சு மருத்துவர். அவர் பெயர் ஆலன் பம்பார்டு.

ஓரு மனிதனால் கடல் நீரைக் குடிக்க முடியுமானால் யாராவது உதவி செய்வதற்கு வரும்வரையில் அவனால் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முடியும் என்பதை உலகிற்கு எடுத்துக் காட்ட விரும்பினார். இந்த விஷப்பரீட்சையில் ஈடுபட யார் வருவார்கள்? யாரும் கிடைக்காத காரணத்தினால் மருத்துவர் ஆலன் தன்னையே பரிசோதனைக் கூடத்து எலியாக மாற்றிக் கொண்டார். அதாவது இந்த உயிர் காக்கும் அல்லது போக்கும் முயற்சியில் தன்னையே ஈடுபடுத்திக் கொண்டார்.

1953 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 19 ம் நாள் அவர் ஒரு சிறிய படகில் அட்லாண்டிக் கடலை கடந்து மேற்கிந்தியத் தீவுகளுக்கு பயணத்தை மேற்கொண்டார். கானரி தீவுகளை விட்டு கிளம்பியபோது அவர் தனது படகில் ஒரு சொட்டு தண்ணீரோ அல்லது உணவுப் பொருட்களோ எடுத்துக் கொள்ளவில்லை.

கடற்பயணத்தின் போது அவர் கடல்நீரையே குடித்தார், பிளாங்க்டன் எனப்படும் கடற்தாவரங்களையே உணவாக்கிக் கொண்டார். கடலில் தனது குத்தீட்டியால் பிடித்த மீன்களே அவரது பிரதான உணவாக இருந்தது. 65 நாட்கள் பயணம் செய்து அவர் கரைக்குத் திரும்பினார். இந்த சாதனையால் அவர் இழந்தது தன்னுடைய உடல் எடையில் முப்பது கிலோ. இருந்தாலும் என்ன? தான் சொன்ன வார்த்தைகள் உண்மையானவை என்பதை நிருபித்து விட்டார்.

‘என்னுடைய பெயர் ஆக். நூன் ஒரு கடற்படை தளபதி. இன்னும் திருமணமாகத வாலிபன். ஏன்னுடைய வயது இருபத்தி இரண்டு. நான் இருபது வயது அழகிய பெண்ணை மணந்து கொள்ள விரும்புகிறேன். இந்த தகவலை காண்பவர்கள் கீழ்கண்ட முகவரிக்குத் தொடர்பு கொள்ளவும்’ என்று ஒரு ஸ்வீடனைச் சேர்ந்த கடலோடி தெரிவித்திருந்தார்.

சரி, இது என்ன ஊர் உலகத்தில் இதுவரையில் யாரும் தராத செய்தியா? அல்லது அதிசயமான விளம்பரமா? இது போன்ற விளம்பரங்களை ஆயிரக்கணக்கில் வாரந்தோறும் செய்தித்தாள்களில் பார்க்கலாமே என்று உங்களில் பலர் கேட்கக்கூடும். இது அதிசயமான விளம்பரம் தான். ஏன் என்றால் இந்த விளம்பரம் செய்தித்தாளில் வெளியிடப்படவில்லை. ஒரு காகிதத்தில் எழுதப்பட்டு, காற்றுப் புகாமல் ஒரு பாட்டிலில் அடைக்கப்பட்டு கடலில் வீசி எறியப்பட்டிருந்தது.

இந்த சீசா ஒரு மீனவனின் வலையில் மாட்டியது. அதை எடுத்து வந்து அவன் தனது ஒரே பெண்ணிடம கொடுத்தான். அதிருஷ்டவசமாக அவளுக்கு அப்போது இருபது வயது நடந்து கொண்டிருந்தது. அவள இந்த விளம்பரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை. இருந்தாலும் பார்க்கலாமே என்ற எண்ணத்தில் பதில் எழுதிப் போட்டாள். சில நாட்களுக்குப் பிறகு அவளுக்கு பதில் வந்தது. தொடர்பு வளர்ந்தது. மீனவப் பெண்ணும், கடல்படை தளபதி ஆக்கும் திருணம் செய்து கொண்டனர்.

இது போன்ற தகவலை அந்தக் காலத்தில் பலரும் பாட்டில் மூலமாக தெரிவித்து இருக்கின்றனர். எல்லாம் ஒரு பொழுது போக்கிற்காகத்தான். ஜெர்மனியின் ஆராய்ச்சிக் கழகம் ஒன்று 1929 ஆம் ஆண்டு, ஒரு தகவலை எழுதி அதை பாட்டிலில் அடைத்தது. பாட்டிலைத் திறக்காமலேயே அந்தச் செய்தியை படித்து விடலாம். இந்த பாட்டிலை பார்ப்பவர்கள் கீழ்கண்ட முகவரியுடன் தொடர்பு கொள்ளவும். பாட்டிலை எங்கே கண்டு எடுத்தீர்கள் என்பதையும் அதை மறுபடியும் எத்தனை நாட்கள் கழித்து கடலில் எறிந்தீர்கள் என்பதையும் அந்த முகவரிக்கு தெரிவிக்கவும் என்று அந்த செய்தி கேட்டுக் கொண்டது.

ஆராய்ச்சிக் கழகம் கடலில் எறிந்த பாட்டிலை பலர் கண்டெடுத்தனர். அதில் சொல்லிய குறிப்பின்படியே தகவலும் கொடுத்தனர். மறுபடியும் கடலில் எறிந்தும் விட்டனர். இந்தியக் கடலில் எறியப்பட்ட பாட்டில் ஆச்சரியப்படும் விதமாக, பல நாடுகளில் உள்ளவர்களால் கண்டெடுக்கப்பட்டது. ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, ஐரோப்பா, ஆகிய நாடுகளுக்கு ஆறு ஆண்டுகள் பயணம் செய்தது அந்த பாட்டில். இவ்வாறு அந்த சீசா பயணம் செய்த நாட்கள் 2447. அது பயணம் செய்த தொலைவு 16000 மைல்கள்.

- வேணு சீனிவாசன்

Pin It