delhi 295

தில்லி இந்தியாவின் தலைநகரமாகும். இந்தியப் பெருநகரங்களில் இரண்டாவது மிகப்பெரிய மாநகரமாகும். பழமையும், புதுமையும் கலந்த தனிச்சிறப்புடைய நகரம் தில்லி. முகலாயப் பேரரசரான ஷாஜகானால் நிறுவப்பட்ட தில்லி மாநகரானது, ஏழு புராதான நகரங்களால் உருவான வரலாற்றுச் சிறப்புமிக்க நிலப்பரப்பாகும். அதுவே, தில்லி/டில்லி/ டெல்லி என்றழைக்கப்படுகிறது.

யமுனை ஆற்றங்கரையில் அமைந்துள்ள இந்நகரம் நீண்டகாலம் தொடர்ச்சியாக மக்கள் குடியிருப்புப் பகுதியாக விளங்கி வருகிறது. இங்கு எத்தனையோ ராஜ ரகசியங்கள், சாணக்கிய வேலைகள், மாக்கியவல்லியின் அணுகுமுறைகள் எனப் பல காட்சிகள் அரங்கேறியுள்ளன என்று அகஸ்தியன் தமது ‘தில்லி நூறு’ என்ற கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். கங்கைச் சமவெளியில் அமைந்துள்ள தில்லியில், கி.மு. ஆறாம் நூற்றாண்டுக் காலப் பகுதியிலிருந்தே மக்கள் வாழ்ந்து வருவதற்கான தொல்லியல் சான்றுகள் காணப்படுகின்றன.

சம பூமியாக இருந்த தில்லிக்கு ஆபரணம் போன்று ஒரு குன்று இருந்துள்ளது. இக்குன்றுக்கு ஆங்கிலேயர்கள் ‘ரிட்ஜ்’ என்று பெயரிட்டுள்ளனர். பூசா ரோட்டுக்கும் புதுதில்லிக்கும் இடையே ஒரு அடர்ந்த காடும் கூனி என்றொரு கால்வாயும் இருந்துள்ளது. சிப்பாய்க் கலகத்தில் ஏற்பட்ட சண்டையின் போது பிரிட்டிஷ் வீரர்கள் சுட்டதில் ஏராளமான இந்திய சிப்பாய்கள் காயமடைந்தனர்.இரண்டு படைகளுக்கிடையே ஏற்பட்ட கலவரத்தினால் கமலா நேரு ஏரி ரத்த வண்ணத்தில் மாறியதாகவும் அதனாலேயே ‘கூனி ஜில்’ (ரத்த ஏரி) என வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்தியக் குடியரசின் காரியாலயம் அமைந்துள்ள பகுதி எட்டாவது தில்லி என்றும் இன்று பழைய தில்லி என்றழைக்கப்படும் பகுதி ஏழாவது தில்லி என்றும் கூறப்படுகிறது. முகலாயர் காலத்தில் நான்கு தில்லிகள் தோன்றி மறைந்துவிட்டன என்று வரலாறு கூறுகிறது. பாண்டவரின் தலைநகரான இந்திரப்பிரஸ்தத்தில் தில்லி அமைந்துள்ளதால் இதற்கு இந்திரப்பிரஸ்தா என்ற இன்னொரு பெயரும் உண்டு. தில்லியின் துணை நகரமான துவாரகாவில் இப்பெயரில் பல்கலைக்கழகம் ஒன்று நிறுவப்பட்டிருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் தில்லி நிறைய மாறுதல்களைச் சந்தித்துள்ளது. குன்றுகள் வெட்டப்பட்டு, காடுகள் அழிக்கப்பட்டு குடியிருப்புகளாக்கப்பட்டுள்ளன. நரிகள் ஊளையிடும் காடாக இருந்த ராமகிருஷ்ணாபுரம் எனப்படும் ஆர்.கே.புரம் பிற்காலத்தில் ஆசியாவிலேயே மிகப்பெரிய குடியிருப்பு பகுதி!. பூங்காக்கள் கடைவீதிகளாக மாறியுள்ளன. திருடர்கள் தங்கள் திருட்டுச் சொத்தைப் பங்குபோட்டுக்கொண்டிருந்த இடங்கள் இப்போது விஞ்ஞான ஆராய்ச்சிக் கூடங்களாக மாறிவிட்டன என்று வர்ணிக்கப்படுகிறது. ஆள் நடமாட்டம் இல்லாதிருந்த பகுதிகள் இப்போது மால்கள்(Malls) கொண்ட அதிநவீன நகரங்களாக மாறியுள்ளன.திருடர்கள் கத்தியைக் காட்டி வழிப்பறி செய்த இடங்கள் உயர்வருவாய்ப் பிரிவினர் வாழும் குடுயிருப்புக்களாக உருமாறியுள்ளன.

ஆங்கிலேயர் சூட்டிய பாம்பே, கல்கத்தா, மெட்ராஸ் ஆகிய பெயர்களை முறையே மும்பை, கொல்கத்தா, சென்னை என்று இந்திய அரசு மாற்றியமைத்தது. ராஜபுத்திர அரசர்கள் காலத்தில் இப்போதைய தில்லி இருக்கின்ற பகுதியில் புழங்கிய நாணயம் தெஹ்லிவால் எனப்பட்டது. இந்து-கங்கைச் சமவெளிப்பகுதிக்கு வாயிலாகத் தில்லி திகழ்ந்தது என்பதைக் குறிக்கும் வகையில் வாயிற்படி என்னும் பொருள் கொண்ட தெஹ்லீஸ் அல்லதுதெஹாலி என்‌னும் சொற்களிலிருந்து தில்லி என்ற பெயர் பெறப்பட்டது. இதனை நிலைநாட்டும் வகையில் தில்லி என்ற பெயரைத் தெஹ்லி என்று பெயர் மாற்றம் செய்யவும் சில மண்டலத் தன்னார்வ அமைப்புக்களால் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இப்பொழுதுவரை அம்முயற்சி கைகூடவில்லை.

மேற்கத்திய சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில், வரலாற்றுச் சிறப்புமிக்க தில்லி நகரின் பெயரை ‘Imperial City of Shahjehnabad’ என்றும் புது தில்லியை ‘Imperial City of Delhi’ என்றும் பெயர் மாற்றம் செய்யும் முயற்சியில் ஆளும் மத்திய அரசு முனைப்புக் காட்டி வருகிறது.(Welcome to the Imperial City: Modisarkar’s bizarre proposal to rename Delhi. Source: Firstpost)

தில்லி உருவான வரலாற்றைக் கோவில்கள், மசூதிகள், இடப்பெயர்கள் அடிப்படையில் கள ஆய்வு செய்து மாற்றுக் கோணத்தில் கட்டமைத்துள்ளார் விக்ரம்ஜித் சிங் ரூப்ராய் என்னும் வரலாற்று ஆராய்ச்சியாளர்.

சிப்பாய் கலகத்திற்குப் பின், இந்தியாவின் பெரும்பாலான பகுதிகள் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பெனியின் நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. கல்கத்தாவே நாட்டின் தலைமையிடமாக விளங்கியது. கல்கத்தா, இந்தியாவின் கிழக்குப் பகுதியில் இருந்ததால் தகவல் பரிமாற்றத்தில் சிக்கல்கள் ஏற்பட்டன. இச் சிக்கல்களுக்குத் தீர்வாகத் தலைநகரத்தைக் கல்கத்தாவிலிருந்து நாட்டின் வடபகுதியில் இருக்கும் தில்லிக்கு மாற்றினார் (1911) ஐந்தாம் ஜார்ஜ் (George Frederick Ernest Albert-1865-1936) என்னும் ஆங்கிலேயர். உடனே, 12.12.1911-இல் ஐந்தாம் ஜார்ஜ் டில்லியில் பட்டமும் ஏற்றார். பிரமாண்டமாக நடந்த இந்நிகழ்வு Great Dharbaar என்று வர்ணிக்கப்பட்டது. இவருடைய பெயரை நினைவூட்டும் வகையில் கிங்க்ஸ்வே கேம்ப் (Kingsway Camp) என்னும் பகுதி பழைய தில்லியில் உள்ளது.

தில்லி நகரமானது தன்னுடைய நான்கு புறங்களிலும் விஸ்தரிக்கும் தன்மை கொண்டதாக இருந்தது, இதனாலேயே தில்லி தலைநகராக மாற்றப்பட்டது என்ற கருத்தும் நிலவுகிறது. பஞ்சாப் மாகாணத்தின் ஒரு மாவட்டமாக தில்லி அறிவிக்கப்பட்டு பின்னர் பிரிட்டிஷ் இந்தியாவின் தலைநகராகவும் அறிவிக்கப்பட்டது.

இருபத்தைந்து சதுர மைல்கள் பரப்பில் புதிய நகரை நிர்மாணிக்கத் திட்டமிடப்பட்டு, அரசப்பிரதிநிதிகள் தங்குவதற்காகப் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டன. அரசுப் பரிவாரக் கட்டிடங்கள் உயரத்தில் இருக்கவேண்டும் என்பதற்காகத் திட்டமிட்டு ரைசினா மலையில் (Raisina Hills) குடியரசுத் தலைவர் மாளிகையையும் அதனருகில் நார்த், சவுத் பிளாக்குகளையும் கட்டத் திட்டமிடப்பட்டது. இங்கிலாந்திலுள்ள ராயல் கிராண்ட் நகரமான பாத் என்பதற்கு நிகரான அமைப்பில் தில்லி நிர்மாணிக்கப்பட்டது. இதன் நினைவாகவே, ராஜ் பாத், சாந்தி பாத், ஜன் பாத் ஆகியவை உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். இப்பகுதிக்குப்,புது தில்லி எனப் பெயரிட்டுப் புதிய தலைநகரம் உருவாக்கப்பட்டது. இது Imperial Capital என்றும் அழைக்கப்பட்டது. இந்தியா கேட் அமைக்கும் பணி 1921-இல் துவக்கப்பட்டது. 1922 வாக்கில் தில்லிப் பல்கலைக்கழகம், புனித ஸ்டீபன் கல்லூரி, இந்துக் கல்லூரி,ராம்ஜாஸ் கல்லூரி ஆகியன தொடங்கப்பட்டன.

புது டில்லியின் பெரும்பகுதியான கட்டுமானங்கள் ஆங்கிலேயக் கட்டிடக்கலை வல்லுனரான திரு.எட்வின் லுட்டியென்ஸ்‌ (Edwin Lutyens) என்பவரால் வடிவமைக்கப்பட்டவை. அதனால் புது டெல்லிக்கு ‘லுட்டியென்ஸ் டெல்லி’ என்ற பெயரும்கூட உள்ளது.‌ மற்றுமொரு கட்டிடக்கலை நிபுணரான திரு. ஹெர்பர்ட் பேக்கர் (Sir Herbert Baker) மற்றும் கட்டுமான ஒப்பந்தகாரர் திரு சோபா சிங் (Sobha Singh) ஆகியோரின் பங்களிப்பும் தில்லி நகர வடிவமைப்பில் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கதாகும்.

மூன்றில் ஒரு பகுதியில் பூங்காக்கள், பூந்தோட்டங்கள் அமைக்கப்பட்டதும், மூன்றில் இரண்டு பகுதியில் கட்டிடங்கள் கட்டப்பட்டதும்தான் டெல்லி அழகான தோற்றத்துடனும், திட்டமிட்ட வடிவமைப்புடனும் இருப்பதற்குக் காரணம்.

இந்தியா விடுதலை பெற்ற பின்னரும் இதுவே தலைநகராகத் தொடர்கிறது. தில்லி, புது தில்லி, தில்லி கண்டோன்மெண்ட் ஆகிய முப்பெரும் நகரங்கள் ஒன்றிணைந்த பகுதியே தற்போதைய தலைநகராகத் திகழ்கிறது. நாட்டில் நடைபெற்ற பல்வேறு ஆட்சிகளின் அரசியல் பிரதிபலிப்பினாலும் கால மாற்றத்தினாலும் தில்லி தன் வடிவத்தை அவ்வப்போது மாற்றிக்கொண்டிருக்கிறது.

பல நூற்றாண்டுகளாக மட்டுமல்ல, சரித்திரம் தோன்றிய காலத்திலிருந்தே தில்லி சில தனிச்சிறப்புகளுடன் விளங்கி வந்திருக்கிறது. புராதன காலத்திலிருந்தே, அரசர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தினருக்கும் தில்லி மீது கிருபை விழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அந்த அடிப்படையில் பாண்டவர்கள் இங்கு மிகப்பெரிய கோட்டையொன்று கட்டினார்கள் என்றும், அவர்களுடைய இடிந்த கோட்டையின் மீதே முகலாய அரசர்கள் இன்னும் ஒரு கோட்டையைக் கட்டினார்கள் என்றும், அதுதான் புரானா கிலா அதாவது பழைய கோட்டை என்றும் கூறுகிறார்கள்.

ஆரியர்கள் இந்த நாட்டிற்குள் புகுந்து , சப்த சிந்து என்று அவர்கள் பெயரிட்ட வடமேற்கு பாகத்தில் வசிக்க ஆரம்பித்து ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகிவிட்டன. சிறிது காலத்திற்குப் பிறகு அவர்கள் கிழக்கு நோக்கி முன்னேறினார்கள். ஆரியர்களின் கூட்டம் கிழக்கு நோக்கி நகர்ந்து யமுனை நதிக்கரையை அடைந்ததும், அகஸ்திய முனிவரோ அல்லது கௌசிக முனிவரோ, இவர்களின் வம்சத்தைச் சேர்ந்த ஒருவர் அங்கே தங்கும்படி அவர்களைக் கட்டளையிட்டிருக்க வேண்டும். தில்லி தோன்றியதன் ரகசியம் அந்தக் கட்டளையில்தான் அடங்கியிருக்க வேண்டும் என்று ராஜேந்திரலால் ஹாண்டா தமது டில்லியில் பத்து ஆண்டுகள்-1940-1950 (1968)என்ற நூலில் பதிவு செய்துள்ளார்.

நாட்டின் பல மாநிலங்களிலிருந்தும் அண்டை நாடுகளிலிருந்தும் மக்கள் குடிபெயர்ந்ததால் பல இன, மொழி,மத, கலாச்சார மக்கள் வாழும் நகரமாகத் தில்லி திகழ்கிறது. அத்துடன் இந்தியாவின் முக்கியமான பண்பாட்டு, அரசியல் அதிகார, வணிக மையமாகவும் தில்லி விளங்குகிறது. இங்குப் பழங்கால மற்றும் மத்திய காலத்து நினைவுச் சின்னங்களும் தொல்லியல் களங்களும் அமைந்துள்ளன. ஹூமாயூன் சமாதி, ஜந்தர் மாந்தர், லோதி கார்டன், இந்தியா கேட், செங்கோட்டை, குதுப்மினார், ஷாதரா முதலான வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களும் இங்குள்ளன. இவற்றுள் குதூப்மினார், செங்கோட்டை, ஹூமாயூன் சமாதி ஆகியன யுனெஸ்கோ உலகப் பாரம்பரியச் சின்னங்கள். பெருமைமிக்க ஏசியன் விளையாட்டுப் போட்டிகளை இரண்டு முறையும் (1951,1982), 2010-இல் பொது நலவாய விளையாட்டுப் போட்டிகளை (Common                                                         Wealth Games) ஒருமுறையும் கண்டுள்ளது தில்லி.

நில அதிர்வுப் பகுதியின் கீழ் வரும் இப்பகுதியில், கோடை காலங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாகவும் குளிர் காலங்களில் வெப்பநிலை வெகுவாகக் குறைந்தும் காணப்படும். கங்கைச் சமவெளியில் அமைந்துள்ள தில்லியின் ஊடாக இந்துக்களின் புனித நதியான யமுனை பாய்கிறது. புது தில்லி உட்பட்ட நகரின் முக்கிய பகுதிகள் யமுனை ஆற்றின் மேற்குப் பகுதியிலேயே அமைந்துள்ளன. பிரிட்டிஷாரின் தில்லி ஆளுகைக்கு முன் யமுனை நதிக்கரையின் கிழக்குப் பகுதியில் மனிதர்கள் யாரும் வாழவில்லை என்கிறார் ரூப்ராய். தில்லி தற்பொழுது, ஹரியானா, உத்திரப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலுள்ள சில நகரங்களை உள்ளடக்கிய தேசியத் தலைநகர மண்டலத்தையும் (National Capital Region- NCR) தன்னுடைய பரப்பெல்லையாகக் கொண்டு திகழ்கிறது.

பரப்பில் விரிந்த நாடாளுமன்றம், குடியரசுத் தலைவர் மாளிகை, உச்ச நீதிமன்ற வளாகம், பலநாட்டுத் தூதரகங்கள், துணைநகரங்கள், ஸ்டேடியங்கள், மியூசியங்கள், விண்ணை முட்டும் அடுக்குமாடிக் குடியிருப்புக்கள், அண்டர் கிரவுண்ட் மார்க்கெட்டுகள்-மால்கள், வானுயர்ந்த அலுவலகக் கட்டிடங்கள், பிரமிக்க வைக்கும் விமானத்தளங்கள், மரங்கள் நிறைந்த நெடிய அகண்ட சாலைகள், மெய்சிலிர்க்க வைக்கும் பூங்காக்கள், மேம்படுத்தப்பட்ட சாலை, ரயில் வசதிகள், ஆக்டோபஸ் மேம்பாலங்கள், மெட்ரோ என தில்லி இப்பொழுது எவ்வளவோ மாறிவிட்டது. மொத்தத்தில் பல்வேறு நவீன வசதிகள், வளர்ச்சிகள் கொண்ட நகரமாகவும், வேகமாக வளர்ந்துவரும் பெருநகரமாகவும் தில்லி விளங்கிவருகிறது.  

மாறும் இந்த யுகத்தில் ஓணானைப்போல் தில்லி எத்தனை முறை மாறியுள்ளது, தில்லிக்கென்று தனித்த சீதோஷ்ண நிலை என்பது கிடையாது. சிம்லா, ஸ்ரீநகரில் பனிப்பொழிவு ஏற்பட்டால் டில்லியில் மழையும் குளிரும் அடிக்கும். உத்தரப்பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய பகுதிகளுக்கு இடையே உள்ள இடம் தில்லி. இந்த மூன்று ராஜ்ஜியங்களின் பூகோளமும் தில்லியைப் பாதித்துவருகிறது. உத்தரப் பிரதேசத்தைப்போல, மழைக் காலத்தின்போது டில்லியிலும் அதிகம் மழை பெய்வது வழக்கம். பஞ்சாபின் வெயிலும், குளிரும் டில்லியிலும் உள்ளது. ராஜஸ்தான் பாலைவனத்தின் கடும் வெயிலும், மணலுடன் கூடிய புழுதிப்புயலும் கோடைக் காலத்தில் தில்லியைப் புரட்டிப் போடும். கூடவே குளிர்ச்சியையும் கொண்டுவரும் என்கிறார் ராஜேந்திரலால் ஹாண்டா.

அதே சமயம் தில்லிக்கென்று தனித்த சீதோஷ்ண நிலை உண்டு என்று தில்லியிலுள்ள மரங்கள் மற்றும் பசுமையைப் பற்றி ஆராய்ந்த பிரதீப் கிரிஷன் தமது கட்டுரை ஒன்றில் குறிப்பிடுகின்றார். (ConfusingClimate, The Hindu, November, 3, 2012)

- முனைவர் ச. சீனிவாசன், தமிழ் இணைப்பேராசிரியர், ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்லூரி, தில்லிப் பல்கலைக்கழகம்

Pin It