சாதி அமைப்பில் கடைநிலையிலும், வாழ்நிலையில் படுகுழியிலும் நிற்கும் துப்புரவுத் தொழிலாளர்களான அருந்ததியின மக்களின் வாழ்க்கை, நாடு விடுதலையடைந்து இந்த அறுபதாண்டுகளில் இம்மியளவும் மாறவில்லை. வல்லரசுக் கனவோடு அணு ஆயுதங்களுக்காக பல்லாயிரம் கோடிகளைக் கொட்டிக் கரியாக்கும் இந்த இந்திய தேசத்தில், லட்சக்கணக்கான மக்கள் அவர்களின் முன்னோர், வாரிசுகள் எனத் தலைமுறை தலைமுறையாய் தினம் தினம் மலக்குழிக்குள் இறக்கிவிடப்படுகின்றனர். சவக்குழிக்குள் இறங்குவதை விடவும் நூறு மடங்கு வேதனையான இந்த வழக்கத்தைத் தொழிலாக்கி, மலமள்ளுவதை வாழ்வாதாரமாக அனுமதித்திருக்கும் இந்நாடு எப்படி உருப்படும், முன்னேறும், வல்லரசாகும்?

Tirunelveli
அருந்ததியின மக்கள் மீது துப்புரவு செய்யும் வழக்கம் நூற்றாண்டுகளாகத் திணிக்கப்பட்டு வருகிறது. எனினும், 1993 இல் தான் சட்டப்படி அது தடைசெய்யப்பட்டது. ‘துப்புரவுத் தொழிலாளர்களைப் பணியில் அமர்த்தும் மற்றும் உலர் கழிப்பிடங்கள் கட்டுமானத் தடைச் சட்டம் 1993' என்ற அந்தச் சட்டத்தை எந்த மாநில அரசும் மதிக்கவில்லை. சுமார் பத்து ஆண்டுகள் கழித்தே போனால் போகட்டுமென சில மாநிலங்கள் அச்சட்டத்தை ஏற்றுக் கொண்டன. தங்கள் மாநிலத்தில் துப்புரவுத் தொழிலாளர்களே இல்லை என மறுத்து, பல மாநில அரசுகள் அச்சட்டத்தைப் புறக்கணித்தன. அருந்ததியின மக்களுக்கான ‘சபாய் கரம்சா அந்தோலன்' அமைப்பு, பிற அமைப்புகளுடன் இணைந்து, துப்புரவுத் தொழிலாளர்கள் தடைச் சட்டத்தை நடைமுறைப்படுத்தக் கோரி 2003 இல் உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கைத் தொடர்ந்தது. அதற்கு பதிலளித்த மாநில அரசுகள், தங்கள் மாநிலத்தில் உலர் கழிப்பிடங்கள் இல்லை; அதனால் துப்புரவுத் தொழிலாளர்கள் இல்லை எனக் காட்டமாக மறுத்தன. மேலும், துப்புரவுத் தொழிலாளர்கள் மாற்றுத் தொழில்களில் அமர்த்தப்பட்டு, மறுவாழ்வு அளிக்கப்பட்டதாக அப்பட்டமாகப் புளுகின. ‘சபாய் கரம்சா அந்தோலன்' அமைப்பின் தேசிய ஆலோசகரான பெசவாடா வில்சன் வருத்தப்படுவது போல, ஒரு பிரச்சனை இருக்கிறது என்பதை ஒப்புக் கொண்டால்தானே அதற்கான தீர்வைப் பற்றி யோசிக்க முடியும்! இல்லாத துப்புரவுத் தொழிலாளர்களை எப்படி மேம்படுத்துவது என்று மாநில அரசுகள் கேட்கின்றன... அதுசரி!

மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரப்படுத்தும் அமைச்சகம் 2002-03 ஆண்டுகளில் வெளியிட்ட புள்ளிவிவரத்தின் படி, 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 6.76 லட்சம் பேர் துப்புரவுத் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாகவும், 92 லட்சம் உலர் கழிப்பிடங்கள் இருப்பதாகவும் கூறியிருக்கிறது. ஆனால், இந்தக் கணக்கே பாதிக்கு பாதிதான். இந்தியா முழுக்க சுமார் 13 லட்சம் துப்புரவுத் தொழிலாளர்கள் இருப்பது, தங்கள் அமைப்பு நடத்திய உதாரண கணக்கெடுப்பில் தெரிய வந்ததாக பெசவாடா வில்சன் கூறுகிறார். எத்தனை ஆதாரங்களைக் கொடுத்தாலும், மாநில அரசுகள் துப்புரவுத் தொழிலாளர்களே இல்லையென சாதிக்கின்றன. துப்புரவுத் தொழிலாளர்கள் மறுவாழ்வுக்கென ஒதுக்கப்படும் கோடிக்கணக்கான நிதியை விழுங்கி ஏப்பம் விட்டு மாநில அரசுகள் பொய் சொல்கின்றன. உச்ச நீதிமன்றம் அதை ஏற்றுக் கொள்கிறது. எந்தப் பின்புலமும் இல்லாத மக்கள் நியாயம் கேட்டு வேறெங்கு செல்ல முடியும்? மலமள்ளும் கொடுமை கேட்பாரற்றுத் தொடர்வது அதனால்தான்!

‘ப்ரண்ட் லைன்' ஆங்கில ஏடு (22.9.2006) தனது ஆய்வில், இந்தியாவின் தலைநகரான டெல்லியிலும் இந்த அவலம் இருப்பதைப் போட்டுடைக்கிறது. டெல்லி அரசு உச்ச நீதிமன்றத்துக்கு அளித்த பதில் அறிக்கையில், ‘உண்மையைக் கண்டறியாமல் அரசுக்கு எதிராக அவதூறு பரப்புவதாக' வழக்குத் தொடுத்தவர்களான ‘சபாய் கரம்சா அந்தோலன்' அமைப்பினரைக் குற்றம் சாட்டியது. உண்மையைக் கண்டறியும் பொருட்டு ‘ப்ரண்ட் லைன்' குழு டெல்லியின் நந்த் நகரி என்ற பகுதிக்குச் சென்று, அங்கு இருபது வயது மீனாவை சந்தித்தது. தான் ஒன்பது வயதிலிருந்தே துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருப்பதாகக் கூறும் மீனா, தனது முதல் அனுபவத்தை நடுக்கத்தோடு விவரிக்கிறார்: "கூடை நிறைய மலத்தைத் தலையில் சுமந்து கொண்டு நடந்தேன். அப்போது கால்கள் தடுமாறி கீழே விழுந்தேன். அழுது கொண்டிருந்த என்னைத் தூக்கிவிட யாரும் வரவில்லை. காரணம், கூடையிலிருந்த மொத்த மலமும் என் மேல் கொட்டியிருந்தது. இன்னொரு துப்புரவுப் பெண் வந்து தூக்கிவிடும் வரை நான் அழுதபடி அப்படியே கிடந்தேன். மொத்த உலகத்தில் மிகவும் துரதிர்ஷ்டமான பெண்ணாக என்னை அப்போது உணர்ந்தேன்.''

மீனா கூறும் கணக்குப்படி, அந்தப் பகுதியில் மட்டும் சுமார் நூற்றைம்பது துப்புரவுத் தொழிலாளர்கள் உள்ளனர். டெல்லியில் பல பகுதிகளில் மக்கள் திறந்தவெளிகள் அல்லது நிலத்தில் குழிதோண்டி, அதில் மலம் கழிப்பதும் பின்னர் குறிப்பிட்ட அருந்ததியின மக்களை அழைத்து சுத்தம் செய்யச் சொல்வதும் அங்கு எழுதப்படாத சட்டம். இந்த அவலத்தை சுமக்கக் கொடுக்கப்படும் கூலி, வீட்டுக்கு மாதம் பத்து ரூபாய்.

‘நவ்சர்ஜன்' என்ற அமைப்பு குஜராத்தில் 55,000 துப்புரவுத் தொழிலாளர்களை கண்டறிந்துள்ளது. அரசாங்கம், உள்ளூர் நிறுவனங்கள் மற்றும் பஞ்சாயத்துகளில் பணிபுரிவோரை வைத்து சேகரிக்கப்பட்ட புள்ளி விவரம் இது. அரியானாவும் பஞ்சாப்பும், துப்புரவுத் தொழிலாளர்களே இல்லை என்று அடித்துக் கூறுகின்றன. இவை துப்புரவுத் தொழிலை ஒழிக்கத் தவறியதோடு, உச்ச நீதிமன்றத்திடம் பொய்யும் சொல்லியுள்ளன. உலர் கழிப்பிடங்களையும் மலமள்ளும் தொழிலாளர்களையும் அங்கு எந்த நாளும் பார்க்க முடியும். உச்ச நீதிமன்றம் என்ன தெருவுக்கு வந்து கண்டுபிடிக்கவா போகிறது? அப்படியே கண்டுபிடித்தாலும் இந்த ‘சாதாரணத் தவறு'க்காக தண்டித்துவிடவா போகிறது!

அரியானாவைச் சேர்ந்த துப்புரவுப் பணிப்பெண் பாலா, பதினெட்டு ஆண்டுகளாக வீடுகளில் உள்ள உலர் கழிப்பிடங்களை சுத்தம் செய்கிறார். "அடுத்தவங்க மலத்தை சுத்தம் செய்ய யாரு விரும்புவா? நாங்க ஏழைகளா இருக்கறதுனால இதச் செய்ய நிர்பந்திக்கப்படுறோம். எந்த வீடும் 15 ரூபாய்க்கு மேல தர்றதில்ல. அரசாங்கம் மாற்றுத் தொழில் ஏற்பாடு செஞ்சா தாராளமா செய்வேன்'' என்கிறார். துப்புரவுத் தொழிலாளர்களின் வலியும் வேதனையும் எந்த அரசாங்கத்தின் உணர்வையும் தொடவில்லை. அரியானாவும் உச்ச நீதிமன்றத்தில் பொய்யறிக்கையையே அளித்தது. அதில் 1992 வரை 2.02 லட்சம் உலர் கழிப்பிடங்கள் இருந்ததாகவும், தற்போது அத்தனையும் ஒழிக்கப்பட்டு ஒன்றுகூட இல்லையெனவும் குறிப்பிட்டது. மேலும், மத்திய அரசிடமிருந்து பெறப்பட்ட 18.36 கோடி துப்புரவுத் தொழிலாளர்களைப் பயிற்றுவிக்கவும், மறுவாழ்வு அளிக்கவும் செலவழிக்கப்பட்டதால், தற்போது அரியானா துப்புரவுத் தொழிலாளர்களே இல்லாத மாநிலமாக ஒளிர்கிறதாம்!
பொய் சொல்வதில் அரியானாவை மிஞ்சியது பஞ்சாப். ‘தேசிய வங்கிகள் இம்மக்களுக்கு கடனுதவி செய்யத் தாமதிப்பதால், ‘பஞ்சாப் தாழ்த்தப்பட்டோர் நில மேம்பாடு மற்றும் நிதி ஆணையம்' கடனுதவி வழங்க ஏற்பாடு செய்தது. ஆனால், இந்த மக்கள் கடனுதவியைப் பெற ஆர்வம் காட்டவில்லை. ஆகையால் துணை ஆணையர்களை வைத்து, புதிதாக ஒரு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன்படி, ‘பஞ்சாபில் வெறும் 531 துப்புரவுத் தொழிலாளர்களே உள்ளனர் என்பது கண்டறியப்பட்டு, அதில் 389 பேர் தாமாகவே வேறு தொழில்களைத் தேடிக்கொண்டனர்; மீதமுள்ள 142 பேர் மாநகராட்சி மூலம் மறு வாழ்வு அளிக்கப்பட்டனர்' என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளது.

ஆனால், பஞ்சாப் மாநில துப்புரவுத் தொழிலாளர்களோ, அரசாங்கம் தங்களுக்காக இத்தனைத் திட்டங்களை வகுத்து, அவர்களை முன்னேற்றத் துடிப்பதை அறியாதவர்களாக இருக்கின்றனர். உலர் கழிப்பிடங்களை சுத்தம் செய்யும் சுமார் 15 பெண்களிடம் அரசாங்கத் திட்டங்கள் குறித்து விசாரித்தபோது, தங்களைப் பயிற்றுவிக்கும், மறுவாழ்வளிக்கும் எந்த அரசாங்கத் திட்டம் குறித்தும் தாங்கள் கேள்விப்படவில்லை எனவும், ‘லோன் வேணுமா லோன்' என எந்த அதிகாரியும் தங்களைத் தேடி வரவில்லை எனவும் பரிதாபமாகக் கூறியிருக்கின்றனர். ‘சபாய் கரம்சா அந்தோலன்' அமைப்பினர் தலையீடு இல்லையெனில், அரசு கணக்கெடுப்பிலிருந்தும் தாங்கள் விடுபட்டிருப்போம் என்கிறார்கள்.

தமிழகத்தைப் பொறுத்தவரை, 2006-07 நிதியறிக்கையில், ‘துப்புரவுத் தொழில் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு, இந்தத் தொழிலாளர்கள் மாற்றுத் தொழிலில் ஈடுபடுத்தப்படுவார்கள். அதன்படி 11,691 பேர் ரூ. 50 கோடி செலவில் புனரமைக்கப்படுவார்கள்' என ஆளும் தி.மு.க. அரசு கூறியுள்ளது.

ஆனால், இந்த எண்ணிக்கையானது, உண்மையான மக்கள் தொகையில் மிகவும் சொற்பமே! இதில் ஒரே ஆறுதல் என்னவெனில், கடந்த அ.தி.மு.க. அரசு, துப்புரவுத் தொழிலாளர்களும் உலர் கழிப்பிடங்களும் தமிழகத்தில் முற்றிலுமாக இல்லை என உச்ச நீதிமன்றத்தில் மறுத்ததை மாற்றி, இந்த அளவுக்கேனும் தி.மு.க. அரசு அதை ஒப்புக் கொண்டிருக்கிறது என்பதே. துப்புரவுத் தொழிலாளர் பிரச்சனை மாநிலம் முழுக்க 12 மாவட்டங்களில் மிகத் தீவிரமாக இருப்பதாக ஆய்வுகள் உணர்த்தியுள்ளன. துப்புரவுத் தொழிலாளர்களைப் பணியிலமர்த்தும் மற்றும் உலர் கழிப்பிடங்கள் கட்டுமானத் தடைச் சட்டத்தை முதன் முதலில் ஏற்றுக் கொண்ட மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. ஆனால், மாற்றம் மட்டும் நிகழவில்லை.

Toilet cleaning
தெருவில் கண்ட இடங்களில் மலம் கழிக்கும் பழக்கத்தால், அதை சுத்தப்படுத்த துப்புரவுத் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். 2001 இல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, தமிழகம் முழுவதும் 1.41 கோடி வீடுகள் உள்ளதாகவும் அவற்றில் 91.90 லட்சம் வீடுகளில் கழிப்பறைகள் இல்லையெனவும், 32.91 லட்சம் வீடுகளில் தண்ணீர் வசதியுள்ள கழிப்பறைகளும், 6.56 லட்சம் வீடுகளில் உலர் கழிப்பறைகளும், 10.35 லட்சம் குழிக்கழிப்பறைகளும் உள்ளன. வீட்டுக்கு வீடு வண்ணத் தொலைக்காட்சி கொடுப்பதில் காட்டும் ஈடுபாட்டை, உருப்படியாக கழிப்பறைகள் கட்டித் தருவதில் காட்ட அரசுக்கும் ஆர்வமில்லை; மக்களுக்கும் விருப்பமில்லை.

ஆந்திரப் பிரதேசம் இந்தக் கொடுமைக்கு விதிவிலக்கல்ல. சட்டம் இயற்றப்பட்டு அய்ந்தாண்டுகள் கழித்துதான் அதை சட்டை செய்தது. 2002 டிசம்பலிருந்து மாநிலம் முழுக்க உலர் கழிப்பிடங்களை ஒழிக்க முயன்று, அது முடியாமல் 2005 டிசம்பர் வரை நீட்டிக்கப்பட்டு, நிலைமை இன்று வரை சற்றும் மாறவில்லை. இங்கேயும் அதே கதிதான். சரியான புள்ளி விவரங்களைக் கண்டறிய அரசு மெனக்கெடவில்லை. ஆந்திரப் பிரதேச துப்புரவுத் தொழில் ஒழிப்புத் திட்டம், மாநிலம் முழுவதும் சுமார் மூன்று லட்சம் உலர் கழிப்பிடங்கள் இருப்பதாகக் கூறுகிறது. தென்னிந்தியாவிலேயே மிக அதிகமான எண்ணிக்கை இது. ரூ 61.43 கோடி செலவில் 28,099 துப்புரவுத் தொழிலாளர்கள் கவுரவமான வேலைகளுக்கு மாற்றப்பட்டு விட்டார்கள் என்ற அரசு தரப்பு வாதத்தில் எந்த அளவுக்கு உண்மையிருக்கும் என்பது தெரிந்ததே! மேலும், 11,975 பேர் மற்றும் அவர்களை சார்ந்த குடும்பத்தாரை வாழ வைக்கக் கூடுதலாக 23.96 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறதாம்! நம்ப வேண்டியதுதான்.

நாட்டிலேயே அதிகம் பேரை (1.49 லட்சம்) துப்புரவுத் தொழிலில் ஈடுபடுத்தியிருக்கும் மாநிலமான உத்திரப் பிரதேசத்தில் துப்புரவுத் தொழிலாளர் தடைச் சட்டம் நடைமுறைக்கு வந்தது வெகு அண்மையில்தான். அதுவும் பல்வேறு சமூகஆர்வலர்களின் தொடர் போராட்டத்தின் விளைவாக...

மேற்கு வங்கத்தைப் பொறுத்தவரை, நிலைமை மாறுபட்டிருப்பதாக அம்மாநில அரசு கூறியிருக்கிறது. எட்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை சுமார் இருபதாயிரம் துப்புரவுத் தொழிலாளர்கள் இருந்ததாகவும், வெகு சிலரைத் தவிர அனைவரும் விடுவிக்கப்பட்டு, வெவ்வேறு பணிகளில் அமர்த்தப்பட்டு விட்டனர் என்பதும் அரசு தரப்பு வாதம். புனரமைக்கப்பட்டோர் தவிர 178 பேர் பாக்கி உள்ளனர். "நாங்களே எங்களுக்கோர் முடிவு நாளை வகுத்துக் கொண்டு பணியாற்றி வருகிறோம். இன்னும் சிறிது காலத்தில் மேற்கு வங்கத்தில் ஒரு நபர்கூட இந்தக் கேவலமான பணியில் இருக்க மாட்டார்கள்'' என நகராட்சி விவகாரம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சர் அசோக் (பட்டாச்சார்யா) வாக்கு மூலம் கொடுத்திருக்கிறார். மேலும், பிற மாநிலங்களுக்கும் மேற்கு வங்கத்திற்கும் உள்ள மிக முக்கியமான வேறுபாடாக அவர் கருதுவது, எஞ்சிய துப்புரவுத் தொழிலாளர்களுக்கும் பிற அரசு அலுவலர்களைப் போல கவுரவமான ஊதியம், வசிப்பிடம், சலுகைகள், உரிமைகள் அனைத்தும் வழங்கப்பட்டிருக்கின்றன என்பதே!

எல்லா சாதிக்காரர்களிலும் ஏழைகள் இருக்கிறார்கள். அந்த ஏழைகளின் வறுமையை ஒழிக்கவும், வாழ்நிலையை மேம்படுத்தவும் அரசு இதேபோல அவர்களையும் துப்புரவுப் பணியில் ஈடுபடுத்தலாமே! அருந்ததியர் அல்லாத பிற சாதியினர் கோடி ரூபாய் கொடுத்தாலும், மலமள்ளும் தொழிலை செய்யத் துணிவார்களா? அதைத் தங்கள் சாதி கவுரவத்திற்கும் சுயமரியாதைக்கும் ஏற்பட்ட இழுக்காக கருதி சண்டைக்கு வரமாட்டார்களா? மாதச் சம்பளம், குடியிருப்பு வசதிகள், சலுகைகள் என எவ்வளவு கொடுத்தாலும் கடைசியில் மலமள்ளத்தானே அருந்ததியரை நிர்பந்திக்கிறது அரசு. இந்த சாதிய சிந்தனையை அரசாங்கம் எந்தளவுக்கு ஊக்குவிக்கிறது என்றால், வேலைவாய்ப்பு அளிக்கப்படும்போது, துப்புரவுப் பணிக்கு அருந்ததியர்களுக்கு மட்டுமே விண்ணப்பப் படிவம் அனுப்புகிறது. அவர்களின் கல்வித் தகுதி என்னவாக இருந்தாலும், அதுபற்றி அரசுக்கு அக்கறையில்லை. பியூன், பெருக்கும் பணி, தோட்ட வேலை இவற்றுக்குக்கூட அருந்ததியர்கள் தகுதியற்றவர்கள் என்றும், மலமள்ளுவது ஒன்றே அவர்களுக்கு விதிக்கப்பட்டதாக அரசு உறுதியாக நம்புகிறது. அதனாலேயே அதை ஒழிக்கத் துணிவற்று கட்டிக் காக்கிறது.

சட்டம் வகுத்து, நிதி ஒதுக்கீடு செய்ததோடு தன் கடமை முடிந்ததென மத்திய அரசு பிரச்சனையை புறந்தள்ளி விட்டது. அதனால்தான் கோடிகளை விழுங்கி ஏப்பம் விட்டு, மலைப்பாம்பைப் போல சோம்பிக் கிடக்கின்றன மாநில அரசுகள். ‘சபாய் கரம்சா அந்தோலன்' அமைப்பினர் தொடுத்த வழக்கை கடந்த ஏப்ரலில் விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உச்ச நீதிமன்றம், ஆறு மாதங்களுக்குள் பதில் அளிக்கக் கோரி மாநில அரசுகளுக்கு நோட்டிஸ் அனுப்பியது. துப்புரவுத் தொழில் இன்னும் ஒழிக்கப்படாமல் இருந்தால், ஒழிப்பதற்கான கால வரையறையை நிர்ணயித்து முழு வீச்சில் செயல்படுமாறும் அது கேட்டுக் கொண்டது. மேலும், பொய்யான வாதங்களைக் கூற வேண்டாம் என்றும் எச்சரித்தது. அடுத்ததாக நவம்பரிலும், 2006 ஏப்ரலிலும் விசாரணை நடந்தபோது, அனைத்து மாநில அரசுகளும் சொல்லி வைத்தாற்போல், தங்கள் மாநிலங்களில் உலர் கழிப்பிடங்கள் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிட்டதாக அறிக்கை தாக்கல் செய்தன. ‘சபாய் கரம்சா அந்தோலன்' அமைப்பினர் மாநில அரசுகளின் முகமூடிகளைக் கிழிப்பதற்காக, இப்போது போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

சாதியை உள்ளடக்கிய தொழில்களில் துப்புரவுத் தொழிலும் ஒன்று என்பதால்தான் வெட்கங்கெட்ட இந்நாட்டிலிருந்து அதை விரட்ட முடியவில்லை. ‘தாங்கள் இந்தத் தொழில் செய்யவே படைக்கப்பட்டவர்கள்' என அருந்ததியினரை நம்ப வைத்து, இன்று வரை காரியம் சாதித்து வருகிறது சாதியச் சமூகம். அந்த அடிமைச் சிந்தனையிலிருந்து ஒவ்வொருவரையும் வெளியேற்றி, விடுதலையுணர்வை அளிக்க வேண்டியதே முதற் கடமை. பொய் சொல்லும் நாக்குகளை அறுக்கும் துணிவை, அந்த விடுதலை உணர்வே தரும்.

புகைப்படங்கள் மற்றும் ஆதாரம் : Frontline
Pin It