விக்கிரமன்: ச்சே… மனுஷங்களா இவங்க. சுயநலப் பேய்கள். ஒரு மரம், செடிய விடறதில்ல. ஒரு மீன், பூச்சிய விடறதில்ல. ஒரு பறவை, விலங்குகள வாழவிடறதில்ல. தனக்கு தேவைன்னா எல்லாத்தையும் அழிச்சு தீர்த்து விடுகிறார்கள். சே… சே… சே…
வீரப்பிரதாபன்: என்ன வரும்போதே ஒரே புலம்பல்? ஏன் மனிதரின் மேல் வெறுப்பு? பல தாவரங்கள் காணாமல், அதாவது மறைந்துவிட்டனவே, அந்த வேதனையோ? பல விலங்கினங்கள், சில பறவையினங்கள் முற்றிலும் அழிந்துவிட்டனவே, அதனாலா?
(சிட்டுக்குருவி மூர்த்தி, படம் நன்றி: ETV Bharat)
விக்கிரமன்: எல்லாம்தான். மனிதரில் நல்லவர்களே இல்லையா? எல்லாருமே கொடுமைக்காரர்கள்தான் போலிருக்கிறது.
வீரப்பிரதாபன்: அப்படி பொத்தாம் பொதுவாக கூறிவிட முடியாது. மேற்கு ராஜஸ்தானில் வனவிலங்கு புகைப்படக் கலைஞர் ஷர்வன் படேல் அப்படியல்ல. தனது கேமராவில் தார் பாலைவன அழகையும் அதன் குன்றுகளையும் படம் பிடித்து அதன் வறட்சியை உலகிற்கு வெளியிட்டார். அப்போது பிளாக் பக் மற்றும் சிங்காரா மான்கள் போன்ற வனவிலங்குகள் திடீர் திடீரென்று செத்து விழுவதைக் கண்டார். தண்ணீர் குடிக்க வழி இன்றி தாகத்தால் அவை இறப்பதை அறிந்தார். தனது கிராமத்தில் மக்களிடம் இதைக் கூறினார். கிராம மக்கள் தாங்களே சிறிய அளவில் ஒரு குளம் வெட்டினர். அதில் மழைநீர் நிரம்பியதும் வனவிலங்குகள் வந்து குடித்துச் செல்வதை ஷர்வன் பார்த்து படமெடுத்து வெளியிட்டார். இதைப் படித்து பார்மர், ஜோத்பூர், ஜெய்சால்மர் உள்ளிட்ட பல மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் தம் ஊர்களில் நூற்றுக்கும் மேற்பட்ட குளங்களை உருவாக்கினர். இது ஒரு சமூக இயக்கமானது. மேற்கு ராஜஸ்தானில் வனப்பகுதிகள் குறைவு; தோப்புகள்தான் அதிகம். அவை மழைநீர்ப்பிடிப்பு மண்டலங்களாகும்.
விக்கிரமன்: அறிவேன். ஒரு காலத்தில் பாலைவனங்களைச் சோலையாக்கலாம் என்று சூலி என்ற தாவரங்கள் அங்கு பயிரிடப்பட்டன. ஜவுளி, சாயத்தொழில் மற்றும் எஃகுத் தொழில் நிறுவனங்களின் கழிவுகள் அங்குள்ள ஜோஜாரி நதியில் கலக்கப்பட்டன. அந்த நதியில் நீர் குடித்த வனவிலங்குகள் இறந்தன. அங்கு வளர்ந்த நூற்றுக்கணக்கான மரங்கள் பட்டுப்போய்விட்டன. நான் சொன்னது சரிதானே? மனிதர்கள் கெட்டவர்கள் தானே?
வீரப்பிரதாபன்: இல்லை, பிறகு நடந்ததைக் கூறுகிறேன். அந்த நதியின் இருபுறமும் கரையை ஒட்டி நன்னீர் குடிக்க ஏதுவாக குளம் வெட்டி அதில் தண்ணீர் நிரப்பி குடிக்கச் செய்யலாம் என்ற ஆலோசனை தோன்றியது. தினம் ஒரு ரூபாய் என்ற ஒரு வாட்ஸ்அப் குழு தொடங்கினர். நிதி திரட்டினர். நதியின் இருபுறமும் மூன்று அடி ஆழமுள்ள குளங்களை வெட்டி தண்ணீர் நிரப்பினர். அவற்றில் டேங்கர் லாரிகளில் சுத்தமான நீரைக்கொண்டு வந்து நிரப்பினர். பல வனவிலங்குகள் வந்து தண்ணீரைக் குடித்துச் சென்றன. ஒரு குளம் வெட்ட நாற்பதாயிரம் ரூபாய் வரையில் செலவானது. இதைக் கவனித்த அரசும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் களமிறங்கின. வாரம் ஒருமுறை மாற்றுத் தண்ணீர் நிரப்புவர். மழைநீர் சேகரிப்புத் தொட்டிகளில் இருந்து சொட்டுநீர் முறைகளில் இந்தக் குளத்துக்கு நீர் பாய்ச்சி விட்டு, வனவிலங்குகளை எப்போதும் எளிதாக தாகம் தணிக்க வைக்கின்றனர். இந்த வகையில் 130-க்கும் மேற்பட்ட ஆழம் குறைந்த குளங்கள் அந்த ஷர்வன் படேல் புகைப்படக் கலைஞர் குழுக்களால் உருவாக்கப்பட்டுள்ளன. இப்போது இந்தப் பகுதியில் நானூறு கலைமான்கள், பாலைவன நரிகள், ஒட்டகங்கள் மட்டுமன்றி இங்கு புலம்பெயர்ந்து வரும் அயல்நாட்டுப் பறவைகளும் இந்தக் குடிநீரை அருந்தி வாழ்கின்றன. மனிதம் மறையவில்லை மனிதா!
விக்கிரமன்: இப்படிப்பட்ட நல்லவர்களும் இருக்கிறார்களா? நம்மூரில் அப்படி யாரும் இருக்கிறார்களா?
வீரப்பிரதாபன்: கிரிக்கெட் மூர்த்தி பற்றி அறிந்ததில்லையா? சிட்டுக்குருவி நேசராயிற்றே அவர், மனிதநேயர்.
விக்கிரமன்: கிரிக்கெட்டுக்கும் குருவிக்கும் என்ன தொடர்பு?
வீரப்பிரதாபன்: பல்லுயிர்ப் பெருக்கத்துக்கு முக்கியக் காரணமாக இருப்பவை சிட்டுக்குருவிகள். வயல்வெளிகளில் தானியங்களை உண்ணும் வெட்டுக்கிளி, கம்பளிப்பூச்சி உள்ளிட்ட பூச்சிகளைத் தின்று பயிர்களைப் பாதுகாக்கும்; மகரந்தச் சேர்க்கைக்கு உதவும். இதனால் குருவிகளை உழவர்களின் நண்பன் என்பர். உள்ளூர் குருவி, மனையுடைக் குருவி, உள்ளறைக் குருவி, அடைக்கலத்தான் குருவி என்று கூறப்படும் சிட்டுக்குருவிகள் மனிதரை நம்பி வாழ்பவை. மனிதர்கள் சிட்டுக்குருவிகளைப் புகழ்வர். அவை வீட்டுக்குள் வந்தால் லட்சுமி கடாட்சம் என்பர். அவற்றின் இனிமையான கீச்சுச்சத்தம் வீட்டுக்குள் எதிர்மறைச் சக்தியைக் குறைத்து நேர்மறை ஆற்றலைப் பெருக்கும் என்று அறிவியல் பேசுவர். சிட்டுக்குருவி எச்சம் துர்நாற்றம் வீசாது. ஆனால், அதிக கதிர்வீச்சு அலைபேசிக் கோபுரங்கள் அமைத்து அழிவுக்கு வழிவகுத்தனர். மரங்களை வெட்டித்தள்ளி அவற்றை வரவிடாமல் செய்தனர். இப்போது சிட்டுக்குருவிகளைப் பார்ப்பதே மிக அரிதாகிவிட்டது. மனிதர்கள் சுயநலவாதிகள் தானே?
வீரப்பிரதாபன்: மனிதர்களை நம்பி வாழும் சிட்டுக்குருவிகளைக் காப்பது நம் கடமை எனும் சிட்டுக்குருவி மூர்த்தி அப்படியல்ல. திருநெல்வேலி, விக்கிரமசிங்கபுரம் மூர்த்தி புள்ளியியல் துறை உதவி இயக்குநராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார். சமூக விழிப்புணர்வுக் கருத்துகளைப் பரப்பவே கிரிக்கெட் போட்டிகள் நடத்துபவர். வீட்டை சுத்தம் செய்த போது சிட்டுக்குருவி ஒன்று வீட்டுக்குள் வந்துவிடவே, ஒரு கூடு செய்து வீட்டுக்கு வெளியே தாழ்வாரத்தில் தொங்கவிட்டார். சில நாட்களில் குருவிக் குடும்பம் அங்கேயே தங்கிவிட்டது. இதில் ஆர்வம் ஏற்பட்டு நிறைய கூடுகள் செய்து வைக்க, குருவிகளால் வீடு நிறைந்தது. இதைப் பார்த்து ஊர் மக்களும் கூடுகள் வாங்கி குருவிகள் வளர்க்க ஆரம்பித்தனர். ஏழு ஆண்டுகளில் எட்டாயிரம் கூடுகள் தயாரித்து வழங்கியுள்ளார்.
எல்லாரும் அறிந்தது போல சிட்டுக்குருவிகள் குறைவதற்கு அவற்றின் வாழ்விடங்கள் குறைந்ததும் உணவுப் பற்றாக்குறையுமே முக்கியக் காரணங்களாகும். கதிர்வீச்சு அடுத்த காரணம். அவற்றுக்கான கூடுகளை வீடுகளில் வைத்து வளர்க்கலாம். கூட்டை மேற்கூரை உள்ள தாழ்வாரத்திலோ, கூரையிலோ தொங்கவிடலாம். அடுக்குமாடிக் குடியிருப்பு பால்கனிகளில் வைக்கலாம். ஆறு, ஏழு மாடி என்று உயரமான இடங்களில் வைக்கக் கூடாது; குருவிகளால் அவ்வளவு உயரம் பறக்க முடியாது. உண்பதற்குத் தினை, கம்பு, ராகி, குருணை போன்றவை வைக்கலாம். முக்கியமாகக் குடிநீர் வைக்க வேண்டும். வீடுகளின் அருகே உள்ள மரங்களில் கூடு வைக்க வேண்டாம்; மழை பெய்தால் கூடுகள் நனையும்; பாம்புகள் வரலாம். பூனைகள் இருக்கும் இடத்தில் குருவிகள் வருவதில்லை. நாய்கள் இருக்கும் இடத்தில் அவை எட்டிப் பார்ப்பதில்லை. குருவிக் கூடுகள் அருகில் ஈரத்துணிகள் காயப் போடலாம். வீட்டுக்குள் இருக்கும் ஈ, கொசு, கரப்பான் போன்ற சிறு பூச்சிகளைத் தின்று அழிப்பதால் நமக்கு நன்மைதான். பிஸ்கெட் அட்டைப் பெட்டியில் செய்த கூண்டுகள் என்றால் அவை விரும்பித் தங்கும். மூன்று முதல் ஆறு முட்டைகள் வரை இடும்; பத்திரமாகப் பார்த்துக் கொள்ளும். நாம் அவற்றின் அருகில் நாய், பூனை, எலி போன்றவை அண்டாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். குருவிகளின் ஆயுட்காலம் அதிகபட்சம் பதின்மூன்று ஆண்டுகள். அவற்றால் அதிக உயரம் பறக்க முடியாது. நம்மையோ, நம் குழந்தைகளையோ அவை கொத்த வராது. அவற்றின் சத்தம் நமக்குத் தொல்லை தராது; வீட்டில் நாற்றம் வீசாது. அவற்றுக்குத் தடுப்பூசி என்று ஏதும் தேவையில்லை. இவையெல்லாம் அந்த சிட்டுக்குருவி மூர்த்தி கூறிய குறிப்புகள்.
விக்கிரமன்: இப்படிப்பட்ட நல்லவர்கள்/மனிதர்கள் சிலர் இருப்பதால்தான் உலகம் சீராக இயங்குகிறது. ஓரளவு நம்பிக்கை வருகிறது மனிதர் மேல். ஆயினும்….
- புழல் தி.பாலகுமார்