தாழ்த்தப்பட்ட மக்களை கொலை செய்வதில் பெயர் போன மேலூர் பகுதியில் மீண்டும் ஒரு மேலவளவு படுகொலையை நிகழ்த்தத் துடிக்கும் மேலூர் பகுதி கள்ளர்களின் சாதி வெறித்தனம் அண்மைக் காலமாக தொடங்கப்பட்டிருக்கிறது. சென்னகரம்பட்டியைச் சேர்ந்த சிவலிங்கம் என்ற தாழ்த்தப்பட்டவர் சேர் ஆட்டோ வாங்கி மேலூரிலிருந்து அழகர் கோவில் வரை பயணிகளை ஏற்றி இறக்கி வேலை செய்து வந்தார்.

அ. வல்லாளபட்டி கிராமத்தைச் சேர்ந்த கள்ளர் சமூகத்தைச் சேர்ந்த சிவக்குமார் என்பவர் தனக்கு சொந்தமாக 4 சேர் ஆட்டோக்கள் வைத்திருப்பதால் வேறு ஒரு கிராமத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்டவன் நம் கிராமம் வழியாக ஓட்டினால் தன்னுடைய வருமானம் பாதிக்கும் எனக் கருதி சிவலிங்கத்தை ஓட்ட விடாமல் தடுத்தார். சிவலிங்கம் மீறி ஓட்டவும் 10க்கும் மேற்பட்டவர்களுடன் வல்லாள பட்டிக்கு அருகில் காத்திருந்து சிவலிங்கம் வரவும் அவரின் ஆட்டோவை மறித்து ஆட்டோ டயரில் உள்ள காற்றை பிடுங்கி அவரை கம்பி, கட்டைகளாலும் தாக்கினார்கள்.

 சிவலிங்கம் அவர்களின் தாக்குதலை பொறுக்க முடியாமல் அருகில் உள்ள தாழ்த்தப்பட்ட பகுதிக்குத் தப்பி ஓடினார். அங்கிருந்து கொண்டே மேலவளவு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். 2 மணி நேரம் கழித்து வந்த காவலர்கள் சிவலிங்கத்தை மீட்டு மேலவளவு அழைத்துச் சென்று புகார் மனு பெற்றுக் கொண்டு அனுப்பி விட்டார்கள்.

பின்பு அதே காவலர்கள் கள்ளர் சாதிக்காரர்களிட மும் சிவலிங்கம் பத்து பேரை அடித்ததாக புகார் மனு வாங்கி அந்த வழக்கை அப்படியே கிடப்பில் போட்டார்கள். இந்தச் செய்தியைக் கேள்விப்பட்ட த.ஒ.வி.இ. தோழர்கள் டி.எஸ்.பி.யை அணுகி விபரம் சொன்னவுடன் நடவடிக்கை எடுப்பதாகக் கூறியும் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு போகச் சொன் னார். நாங்கள் காவல் நிலையத்திற்குச் சென்றோம்.

கள்ளர் சமூகத்தைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் வந்து எங்களிடம் சமாதானமாக போங்கள் இல்லை யென்றால் நீங்கள் ஆட்டோ ஓட்டுகிற சிவலிங்கத்திற்கு தொடர்ச்சியாக பாதுகாப்பு உங்களால் தர முடியுமா என எங்களை பயமுறுத்தும் விதமாக எங்களிடம் சமாதானம் பேசினார்கள். நாங்கள் மேலூர் காவல் நிலைய ஆய்வாளரிடம் பேசிக் கொள்ளலாம் என முடிவு செய்து கொண்டு வெளியேறினோம். இந்நிலையில் பாதுகாப்பு கொடுத்த வல்லாளபட்டி தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் சின்னமணியையும் அவரது தம்பியையும் பயங்கரமாகத் தாக்கினார்கள்.

அவர்கள் இருவரையும் மேலூர் அரசு மருத்துவ மனையில் சேர்த்துவிட்டு காவல் துறையிடம் தகவல் கொடுத்தோம். அவர்கள் கண்டு கொள்ளவில்லை. 2 மணி நேரம் கழித்து இருவரையும் தாக்கிய கள்ளர் சமூகத்தினர், தாழ்த்தப்பட்டவர்கள் எங்களை அடித்து விட்டார்கள் எனக் கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். காவல் துறையினர் இரு தரப்பினர் மீதும் வழக்கைப் போட்டு தன்னுடைய சாதிய விசுவாசத்தை மெய்ப்பித்துக் கொண்டது காவல்துறை.

இதுபோலவே மேலூர் அருகே உள்ள மணப்பட்டிலைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல பேருந்தில் பயணம் செய்யும் பொழுது அந்தப் பகுதியில் உள்ள கள்ளர் சாதியைச் சேர்ந்த மாணவர்களும் பயணம் செய்ய தாழ்த்தப்பட்ட மாணவர்கள் செல்போனில் அழைப்பு வரவும், அழைப்புப் பாடலாக (இச்டூடூஞுணூ கூதணஞு) வைத்திருந்த அம்பேத்கர் பாட்டு ஒலிக்கவும், கள்ளர் சமூக மாணவர்கள் தங்கள் அலைப் பேசியில் பதிவு பண்ணி வைத்திருந்த முத்துராமலிங்கத் தேவர் பாட்டைப் போட்டு பேருந்தினுள் சாதிப் பெருமிதம் பேசும் நிலை உருவாகியுள்ளது.

இதைப் பார்த்த கல்லூரி மாணவரான தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த நாகராஜ் என்பவர் தாழ்த்தப்பட்ட மாணவர்களை நோக்கி அமைதியாக இருக்குமாறு சத்தம் போட்டுள்ளார். மேலும் பிரச்சனை அதிகமாகி வரும் என்பதால் பள்ளி மாணவர்களை பாதுகாப்பாக பேருந்திலிருந்து இறக்கி விட்டு இவர் பயணித்துள்ளார். இதை அறிந்த கள்ளர் சமூக மாணவர்கள் மேலூர் பேருந்து நிலையம் வந்தவுடன் நாகராஜை பேருந்து நிலையத்திற்குள் வைத்து 15க்கும் மேற்பட்ட கள்ளர் சமூக மாணவர்கள் கடுமையாகத் தாக்கியுள்ளனர். ஆனால் அருகிலிருந்தவர் யாரும் காப்பாற்ற முன்வரவில்லை. அவரால் எழுந்து நடக்க முடியாமல் அங்கேயே சிறிது நேரம் இருந்து பின்பு தன்னுடைய உறவினர்களிடம் கூறி, அரசு மருத்துவமனையில் சேர்ந்துள்ளார்.

காலையில் 9 மணிக்கு நடந்த நிகழ்வை மாலை 6 மணி வரை காவல் துறை இப்பிரச்சனையைக் கண்டு கொள்ளாததால், த.ஒ.வி.இ. தோழர்கள் காவல் நிலையம் சென்று வழக்குப்பதிவு செய்ய போராடியும் இன்று வரை வழக்கு பதிவு செய்யவில்லை. மேலும் தாக்கிய கள்ளர் சமூக மாணவர்களிடம் புகார் மனு பெற்று வழக்கை கிடப்பில் போட்டுள்ளது காவல் துறை.

இதுபோல நம்முடைய பார்வைக்கு வராமல் எத்தனையோ நிகழ்வுகள் காணாமல் போகின்றன. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு காவல் அரணாக இருப்ப வர்கள் என நம்பிக் கொண்டிருந்த தாழ்த்தப்பட்ட இயக்கங்கள் காவல் துறையின் புரோக்கர்களாகவும், கள்ளர் சாதியினரிடம் கள்ள உறவாடி தங்கள் வாழ்க்கையை மேம்படுத்திக் கொண்டுள்ளனர். புரட்சி பேசும் கம்யூனிஸ்டுகள் இந்தப் பகுதியில் நடக்கும் சாதிய வன்கொடுமைகளை கண்டு கொள்வதில்லை.

உண்மையிலேயே சாதி வெறிகள் என்றாலே தமிழ்நாட்டில் உசிலம்பட்டி பகுதிதான் நம்முடைய நினைவுக்கு வரும். ஆனால் உசிலம்பட்டியில் கூட மேலூர் பகுதியில் நடந்த அளவிற்கு மனிதப் படுகொலைகள் நடக்கவில்லை. இத்தனை கொலைகள் நடந்த பின்பும் தமிழக அரசு மேலூர் பகுதி மேல் சிறப்புக் கவனம் கொள்ளவில்லை. காவல் துறையிலும் கள்ளர் (சமூகம்) சாதியைச் சேர்ந்த வர்களே நிறைந்துள்ளனர்.

தமிழ்த் தேச விடுதலைக்காகப் போராடுகிற நாம் தாக்கப்படும் தாழ்த்தப்பட்ட மக்களை எவ்வாறு காக்கப் போகிறோம். தாழ்த்தப்பட்ட மக்களை சாதி வெறிக்கு பலியாக்கி விட்டு தமிழ்த் தேசம் படைக்க முடியுமா? என்ற கேள்வி இன்னும் நீடித்துக் கொண்டே போகிறது. சாதி மறுப்பு சிந்தனையாளர்களே சனநாயக ஆற்றல்களே ஒன்று சேர்ந்து ஆதிக்கச் சாதி வெறித்தனத்தை முறியடிப்போம், சமநீதி படைப்போம்!