ஒரு நடுத்தர வயதுப் பெண் கவலையுடன் தனக்குத் தெரிந்த மகப்பேறு மருத்துவரிடம் சென்று, "டாக்டர், எனக்கு ஒரு பிரச்னை, அதை தீர்க்க உங்கள் உதவி நாடி வந்திருக்கிறேன்" என்றாள்.

"என் கைக்குழந்தைக்கு இன்னும் ஒரு வயது கூட முடியவில்லை. அதற்குள் மறுபடியும் கர்ப்பமாயிருக்கிறேன். அடுத்த குழந்தை இப்போது வேண்டாமென்று நினைக்கிறன்" என்றாள்.

டாக்டர், " அது சரி, அதற்கு நான் என்ன செய்யவேண்டும்?" என்றார்.

அவள், "நீங்கள் என் கருவைக் கலைத்து விட வேண்டும், உங்களைத்தான் மலை போல் நம்பியிருக்கிறேன்" என்றாள்.

டாக்டர் சற்று நேரம் யோசித்தார். சில நிமிட மௌனத்திற்குப் பின் அந்தப் பெண்ணிடம் சொன்னார், "உன் பிரச்னைக்கு என் மனதில் ஒரு நல்ல தீர்வு இருக்கிறதென்று நினைக்கிறேன். இதில் உனக்கும் எந்த ஆபத்துமில்லை " என்றார்.

"தன் வேண்டுதலை டாக்டர் ஒத்துக் கொள்கிறார்" என்று அந்த பெண்ணின் முகத்தில் மகிழ்ச்சி தெரிந்தது.

டாக்டர், "இதோ பாரம்மா, ஒரே நேரத்தில் உன்னால் இரண்டு குழந்தைகளைக் கவனிக்க முடியவில்லை என்றால், இப்போது உன் கையிலிருக்கும் ஒரு குழந்தையைக் கொன்று விடுவோம். இப்படிச் செய்வதனால், கருவிலிருக்கும் அடுத்த குழந்தை பிறப்பதற்கு முன் நீ நன்றாக ஓய்வெடுத்துக் கொள்ளலாம்" என்றார்.

"உன் கையிலிருக்கும்  குழந்தையைக் கொல்லலாம் என்று முடிவெடுத்தால் உன் உயிருக்கும் ஒன்றும் ஆபத்தில்லை, என்ன செய்யலாம் நீயே சொல்" என்றார்.

அந்தப் பெண் மிகவும் அரண்டுபோய், "வேண்டாம் டாக்டர், வேண்டாம் ! நினைக்கவே பயங்கரம். ஒரு குழந்தையைக் கொல்வது பெருங்குற்றம்"  என்றாள்.   

"ஒத்துக் கொள்கிறேன், ஒரு குழந்தையைக் கொல்ல முடிவெடுத்தபின் பிறந்ததைக் கொன்றால் என்ன? பிறக்கப் போவதைக் கொன்றாலென்ன? இது உனக்குச் சரியாகத் தோன்றினால் இது ஒன்றுதான் ஒரேவழி" என்றார்.

அந்தப்பெண் "இரண்டு குழந்தையும் வேண்டும்" என்று மனம் திருந்தி டாக்டருக்கு நன்றி சொல்லி வீட்டுக்குச் சென்றாள்.

கருத்து: கருக் கலைப்பு என்பது, "என் நன்மைக்காக மற்ற உயிரைத் (கருவில் உள்ள குழந்தை) தியாகம் செய்வது"  என்ற கொள்கை.

அன்பு என்பது "மற்றவர் நன்மைக்காக நான் என்னையே தியாகம் செய்வேன்" என்ற கொள்கை.

கருக்கலைப்பு என்பது இரண்டு உயிர்க்கும் ஆபத்தானது. எனவே, மருத்துவக் காரணங்களினால், மருத்துவரின் ஆலோசனையின் பேரில், தகுதியுள்ள மருத்துவர் மட்டுமே கருக்கலைப்பு செய்ய அனுமதியுண்டு.

- வ.க.கன்னியப்பன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It