Violance

கோவையில் நடைபெற்ற கலவரத்தின்போது, “கொடூரமான தாக்குதலிலும் சாகாமல் ஒரு ஆள் மட்டும் துடித்துக் கொண்டே இருந்தார். அப்போது ஒரு போலிஸ்காரர் ஓடினார். பக்கத்தில் இருந்த போலிஸ் வாகனம் ஒன்றில் இருந்து பீர் பாட்டிலில் பெட்ரோலைப் பிடித்துக் கொண்டு வந்து அந்த ஆள் மீது ஊற்றினார். அந்த இளைஞர் எழுந்து உட்கார்ந்து அதிர்ச்சியுடன் பார்க்க... யாரோ ஒருவன் ஓடிவந்து தீக்குச்சியைச் சுண்டிப் போட்டான். அவ்வளவுதான்... அந்த இளைஞர் தகதகவென்று எரியத் தொடங்கினார். ஒரு டாக்டர் தீயை அணைக்க முயன்றார். உடனே சுற்றி நின்றவர்கள் அந்த டாக்டரைப் பார்த்து சத்தம் போட -வேறு வழி தெரியாமல் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள அங்கிருந்து டாக்டர் பின்வாங்கி ஓட வேண்டியதாகிவிட்டது.”

‘ஜுனியர் விகடன்', டிசம்பர் 7, 1997

கோயம்புத்தூரில் 1997 ஆம் ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் இந்துக்கள் நடத்திய வெறியாட்டத்தின் விளைவாக 19 இளைஞர்கள் கொல்லப்பட்டனர். அது ஏற்படுத்திய அதிர்ச்சியிலிருந்து கோவை மக்கள் மீண்டு வரும் முன் 1998 பிப்ரவரி 14 அன்று கோவை நகரின் பல இடங்களில் குண்டு வெடித்தது. தமிழகத்தில் வேறு எந்தப் பகுதியிலும் இல்லாத அளவுக்கு இந்து அமைப்புகள் இங்கு வலுவாக வளர்ந்திருப்பதன் பின்னணியும், 1997 கலவரத்திற்கான பின்னணியும் -இந்து அமைப்புகளின் திட்டமிட்ட சதி வலையை அம்பலப்படுத்துகின்றன.

“வியாபாரத்திற்காக இங்கு வந்த மார்வாடிகள், ஆரம்ப காலத்தில் வருவதும் போவதுமாக மட்டுமே இருந்தனர். அவர்கள் 70களுக்குப் பிறகு இங்கேயே நிரந்தரமாக இடம் வாங்கி குடியிருக்கத் தொடங்கினர். அதன் பிறகு அவர்கள் பல்வேறு தொழில்களிலும் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினர். 80களில் ஈழப் பிரச்சனையின் தாக்கம் அதிகமாக இருந்த காரணத்தால், தமிழ் -தமிழர் என்ற குரல் ஓங்கி ஒலித்தது. இது என்றாவது தங்களுக்கு எதிராக செல்லக் கூடும் என்று மார்வாடிகள் அஞ்சினர். அதன் காரணமாக தங்களின் பாதுகாப்புக்காக கோடிக்கணக்கில் செலவு செய்து இந்து அமைப்புகளை வளர்த்துவிட்டனர். இதற்கிடையில் முஸ்லிம்களும் பெருமளவில் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்ததால், வணிக ரீதியான போட்டிகளும் இருந்தன. இது, சிறு சிறு சம்பவங்களாக வெளிப்பட்டன. மார்வாடிகள் திட்டமிட்டு அனைத்துத் தரப்பினரையும் இந்து அமைப்புகளுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டனர். குறிப்பாக தலித்துகளை அதிகம் ஈடுபடுத்தினர். இப்படி இந்து என்ற அடிப்படையில் ஒன்று திரள்வது, முஸ்லிம்களுக்கு ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். அதனால் அவர்களும் அமைப்பு ரீதியாக அணி திரளத் தயாராக இருந்திருக்கலாம்” என்கிறார் பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கோவை ராமகிருஷ்ணன்.

1988 முதல் இரு தரப்பிலும் தொடர்ந்து மதப் படுகொலைகள் நடந்துள்ளன. ஆனால், இந்த வழக்குகளில் யாரும் தண்டிக்கப்படவில்லை. இதன் உச்சக்கட்டம்தான் 1997 நவம்பர் 29, 30 மற்றும் டிசம்பர் 1, 2 ஆகிய நாட்களில் நடைபெற்ற கலவரங்கள். முதலில் இது தனி நபர் சார்ந்த பிரச்சினையாக இருந்தது. ஒரு சரியான வாய்ப்புக்காக காத்திருந்தது போல, 1997இல் அது கலவரமாக வெடித்தது. காவல் துறையினர் கைகட்டி வேடிக்கை பார்த்ததால், மதவெறி கும்பல் தாங்கள் நினைத்ததை சாதித்தது.

கலவரம், அதைத் தொடர்ந்து குண்டு வெடிப்பு என இந்த இரண்டு நிகழ்வுகளிலுமே ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். ஆனால் இந்த இரண்டிற்கும் நடந்த விசாரணைகள், வழக்கு நடத்தப்பட்ட விதம், தீர்ப்பு அனைத்துமே முற்றிலும் நேரெதிர் நிலைகளில் இருந்தன. கலவரத்தில் 19 பேர் கொல்லப்பட்டதற்காக நடந்த வழக்குகளில், இன்று வரை ஒருவர்கூட தண்டிக்கப்படவில்லை. கீழ் நீதிமன்றத்தில் தண்டிக்கப்பட்ட அர்ஜுன் சம்பத் போன்ற இந்து பயங்கரவாதிகளும் உயர் நீதிமன்றத்தில் விடுதலை செய்யப்பட்டனர். கலவரத்திற்கு மூளையாக இருந்து சதித்திட்டம் தீட்டிய ராம கோபாலன் இன்று வரை சுதந்திரமாக அதே கோவை நகரில் இந்து வெறியைத் தூண்டிக் கொண்டிருக்கிறார்.

ஆனால், குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட 168 பேரில் ஒருவருக்குகூட வழக்கு நடந்த ஒன்பதரை ஆண்டு காலமாகப் பிணை வழங்கப்படவில்லை. முக்கியக் குற்றச்சாட்டிற்கு ஆளாகியிருந்த மதானி நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர். அவருக்கு முறையான சிகிச்சை அளிக்கவும், அவரது சிகிச்சைக்காக பிணை வழங்குவதற்கும்கூட அரசு அனுமதி மறுத்தது. இறுதியில் மதானி உட்பட 8 பேர் மீதான எந்தக் குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லை என்று கூறிய அதே நீதிமன்றம், அந்த நிலையில்கூட அவர்களை விடுவிக்க மறுத்து, விரும்பினால் அவர்கள் பிணை மனு செய்து, பிணையில் வெளியே செல்லலாம் என்றது. அனைவருக்கும் பொதுவாக இருக்க வேண்டிய அரசும் நீதித்துறையும் ஒரு சார்பாக அதுவும் மதச்சார்பாக நின்றது.

“கலவரத்தை முன்னின்று நடத்திய உதவி ஆணையர் மாசாண மூர்த்தி, இன்று சென்னையில் உதவி ஆணையராக இருக்கிறார். கலவரத்தில் ஈடுபட்ட எந்த காவல்துறை அதிகாரி மீதும் துறை சார்ந்த நடவடிக்கைகூட எடுக்கப்படவில்லை. கலவரத்திற்குப் பின்னணியில் இருந்த சதியில் ஈடுபட்டவர்களில் முக்கியமானவர் ராம. கோபாலன். ஆனால், அவர் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. கைது செய்யப்பட்டவர்களும் எளிதில் விடுதலையாகும் வண்ணமே வழக்கின் அமைப்பு இருந்தது. “அரசு, காவல் துறை என மொத்தமும் இரு கண்ணோட்டத்துடனேயே செயல்படுகிறது” என்கிறார், தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவர் பேராசிரியர் ஜவாகிருல்லா.

கலவரக்காரர்களுடன் காவல் துறையின் திட்டமிட்ட ஒத்துழைப்பு, தொடக்கம் முதலே இருந்திருக்கிறது. முதல் தகவல் அறிக்கையே சரிவர பதிவு செய்யப்படவில்லை. 19 பேர் கொல்லப்பட்டதற்கு ஒருவர்கூட தண்டிக்கப்படாத அளவிலேயே காவல் துறை வழக்கை அமைத்த விதம் இருந்தது. நீதிபதி கோகுல கிருஷ்ணன் தலைமையில் அமைக்கப்பட்ட விசாரண கமிஷனின் அறிக்கையில்கூட, குற்றவாளிகள் பற்றி தெளிவாக எதுவும் கூறப்படவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணத்தைப் பற்றி சரியான வழிகாட்டுதலை அளித்தது ஒன்றுதான் அவ்வறிக்கை செய்த ஒரே நன்மை.

கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க முஸ்லிம் அமைப்புகளும் "ஜமாத்”களும் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டனர். கலவரத்தில் நேரடியாக ஈடுபட்ட காவல் துறை அதிகாரிகளின் பெயரை குறிப்பிட்டே புகார் அளித்தனர். புதுதில்லியில் உள்ள சிறுபான்மை நலத்துறை ஆணையம் வரை சென்று மனு அளித்தனர். அதற்கு பலன் ஏற்படலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்ட நேரத்தில், 1998 பிப்ரவரி 14 அன்று கோவையில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது.

Abdul Madhaniஇதனால் மீண்டும் ஒட்டுமொத்தமாக முஸ்லிம்களை குற்றவாளிகளாகப் பார்க்கும் சூழல் ஏற்பட்டது. இவ்வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்ட இந்து அமைப்புகள், முஸ்லிம்களுக்கு எதிராக மிக வேகமான பிரச்சாரத்தை முடுக்கி விட்டனர். முஸ்லிம்கள் பயங்கரவாதிகளாக சித்தரிக்கப்பட்டனர். முஸ்லிம் இளைஞர்கள் நூற்றுக்கணக்கில் கைது செய்யப்பட்டனர். விசாரøணையே இன்றி பல ஆண்டு காலம் சிறையில் வைக்கப்பட்டனர். இதனால் அவர்களின் குடும்பங்களும் சிதைந்தன.

“எங்கள் குடும்பம் இந்த கோவையில் ஓரளவு நல்ல புகழ் வாய்ந்த குடும்பம். எனது அப்பா, பெரியப்பா எல்லாருமே ஜமாத்தில் உறுப்பினர்களாக இருந்தவர்கள். 2000இல் நடந்த ஒரு பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக காவல் துறையினர் திடீரென என்னை கைது செய்தனர். காவல் துறையின் பிடியில் ஏராளமான சித்ரவதைகளையும் கொடுமைகளையும் அனுபவித்தேன். என் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் வழக்குப் போட்டனர். 1998 குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டவர்களோடு என்னை சிறையில் வைத்தனர். அதில் பெரும்பாலானவர்கள் மிகவும் வயதில் குறைந்த இளைஞர்கள். இவர்கள் கைது செய்யப்பட்டதால் இவர்கள் குடும்பம் பட்ட துன்பங்களை அருகிலிருந்து பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. அது என் மனதை மிகவும் பாதித்தது. எனது குடும்பம் பெரிய குடும்பம். எனக்கு ஏதாவது ஒன்று என்றால் என் மனைவி, பிள்ளைகளை -என் குடும்பத்தினர், சகோதரர்கள் பார்த்துக் கொள்வார்கள். அதனால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என நினைத்து, நான் வெளியே வந்த உடன் அதையே முழு நேர வேலையாக எடுத்துக் கொண்டேன். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு என்னாலான உதவிகளை செய்து வருகிறேன்” என்கிறார் பெயர் சொல்ல விரும்பாத ஒருவர்.

கோவை மேட்டுப்பாளையம் சாலையையொட்டி அமைந்துள்ள கருணாநிதி நகர் பகுதியைச் சேர்ந்த 38 பேர் மீது குண்டு வெடிப்பு வழக்கு பாய்ந்துள்ளது. இவர்களுக்கும் குண்டு வெடிப்பிற்கும் ஒரு விதத் தொடர்பும் இல்லை என்பதை வழக்கறிஞர்கள் விசாரணையின்போது நிரூபித்துள்ளனர்.

குண்டு வெடித்த அன்று மாலையில் இந்து முன்னணியினர் கருணாநிதி நகரினுள் புகுந்து, கலவரம் நடத்தி, இந்த 38 பேரையும் காவல் துறையினரிடம் அன்றே ஒப்படைத்திருக்கின்றனர். ஆனால் காவல் துறைஇவர்களை இரண்டு நாட்கள் கழித்து 16.2.98 அன்று கைது செய்ததாகக் காட்டியிருக்கிறது. இந்த 38 பேர்களுக்கு எதிராக வாக்குமூலம் கொடுத்த வீ.என். ராஜன், இந்து முன்னணியைச் சேர்ந்த முழுநேர ஊழியர். அதோடு இவர்களுக்கு எதிராக சாட்சியம் அளித்த அனைவரும் வி.என். ராஜனின் உறவினர்கள். இவை அனைத்தையும் எதிர்த்தரப்பு வழக்குரைஞர்கள் விசாரணையின் பொழுது நிரூபித்துள்ளனர். எனினும், ஒரு இந்து முன்னணி குடும்பத்தின் பொய் சாட்சியத்தை நம்பி, 38 முஸ்லிம் குடும்பங்களைத் தண்டித்திருக்கிறது நீதிமன்றம். ஆனால் அதே வேளை, கோவை கலவரத்தின்போது காவல் துறையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டதோடு அல்லாமல் சுடப்பட்டு காயமடைந்த முஸ்தபா என்பவர், தான் எங்கு வந்து வேண்டுமானாலும் சாட்சியம் அளிக்கத் தயார் என்று கூறியும் இன்று வரை அவர் எந்த வழக்கு விசாரணைக்கும் உட்படுத்தப்படவில்லை.

1997 நவம்பர் 29, 30 ஆகிய இரு நாட்களும் பெரும் கலவரம் நடந்ததன் விளைவாக டிசம்பர் 1 அன்று மத்திய அரசு காவல் துறையும், ராணுவமும் கோவையில் வந்து இறங்கின. நகரம் அவர்களின் கட்டுப்பாட்டில் வந்ததாக அறிவிக்கப்பட்டது. வானொலி மற்றும் தொலைக்காட்சிகளில் கலவரம் எதுவும் இல்லை எனவும் நகரம், இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிக் கொண்டிருப்பதாகவும் தொடர்ந்து செய்திகள் வெளியிடப்பட்டன. இதனால் சற்று தெம்படைந்த முஸ்தபாவும் அவரது நண்பர் உபைதூர் ரகுமானும் கோட்டை மேடு பகுதியில் உள்ள உபைதூர் ரகுமானின் சகோதரி வீட்டிற்கு கிளம்பினர்.

“டிசம்பர் 1 அன்று இரவு 7.30 மணி அளவில் நானும் எனது நண்பர் உபைதூர் ரகுமானும் கோட்டை மேடு நோக்கிச் சென்றோம். உக்கடம் அருகில் சென்றபோது நாங்கள் சென்ற யமஹா வண்டியை காவல் துறையினர் வழிமறித்தனர். அச்சமயம் சாலையில் வண்டிகள் போக்குவரத்தும் இருக்கத்தான் செய்தது. எங்களை நிறுத்திய காவல் துறையினர், எங்கள் பெயர் விவரங்களை கேட்டவாறே எங்களை தனியே அழைத்துச் சென்றனர்.

“சாலையிலிருந்து சற்றுத் தொலைவில் வந்தவுடன் காவலர்கள் என்னை கடுமையாகத் தாக்கத் தொடங்கினர். முதலில் அடித்துவிட்டு ஏதேனும் பொய் வழக்கு போடும் நோக்கில் தாக்குகிறார்கள் என்று நினைத்தேன். ஆனால் ஏறத்தாழ சுயநினைவை இழக்கும் நிலைவரைக்கும் என்னை அடித்த அவர்கள், ஒரு கட்டத்தில் துப்பாக்கி முனையில் இருக்கும் கத்தியால் என் தொண்டையில் குத்த முற்பட்டனர்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த நான் தலையை முன்புறம் சாய்த்தேன். இதனால் கத்தி என் வாயில் பாய்ந்தது. என் பற்களை உடைத்துக் கொண்டும் நாக்கை கிழித்துக் கொண்டும் உள்ளே இறங்கியது. ஏற்கனவே அடி வாங்கியதில் மிகவும் சோர்ந்திருந்த நான் இதனால் ஏறத்தாழ மயக்க நிலைக்குச் சென்றேன். வாயிலிருந்து ரத்தம் கொட்டியது. எப்படியாவது உயிர் பிழைத்தால்போதுமென ஓட முனைந்தேன். அப்போது துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது. சத்தம் கேட்ட திசையில் பார்த்தால், என்னுடன் வந்த என் நண்பர் உபைதூர் ரகுமான் நெற்றியில் குண்டு காயம் பட்டு தரையில் விழுந்து துடித்துக் கொண்டிருந்தார். அவர் அருகில் சென்று பெயரிட்டு அழைத்தேன். அதற்குள் என்னையும் சுட உத்தரவிடும் சத்தம் கேட்டது. இருந்த தெம்பையெல்லாம் திரட்டிக் கொண்டு ஓடத் தொடங்கினேன். ஓட ஓட என்னை நோக்கிச் சுட்டனர். முதல் 3 குண்டுகள் என் மீது படவில்லை. நான்காவது குண்டு என் முதுகைத் துளைத்து தோள் வழியாக வெளியேறியது” என்கிறார் முஸ்தபா.

ரத்தம் கொட்ட கொட்ட ஓடி, கோட்டை மேட்டில் உள்ள முஸ்லிம்கள் வாழும் பகுதியை அடைந்திருக்கிறார் அவர். அங்கு அவரை அப்பகுதியில் உள்ள டாக்டர் அஸ்லாம் என்பவரிடம் எடுத்துச் சென்றுள்ள னர். ஆனால் காயம் பலமாக இருப்பதால், உடனே ஏதேனும் பெரிய மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லாவிட்டால் ஆபத்து என்றிருக்கிறார் மருத்துவர். உடனே அப்பகுதியைச் சேர்ந்த முஸ்லிம் பெரியவர்கள் ஒன்றுகூடி ஆலோசித்திருக்கின்றனர். ஏற்கனவே அடிபட்டு அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட முஸ்லிம்கள் பலர் மருத்துவமனையிலேயே கொல்லப்பட்டிருந்தனர். அதனால் முஸ்தபாவையும் அங்கு கொண்டு சென்றால், அவருக்கு மட்டுமல்லாது அவருடன் செல்பவர்களுக்கும் ஆபத்து என உணர்ந்தனர். இதனால் மாவட்ட ஆட்சித் தலைவரை உடனே தொடர்பு கொண்டு செய்தியை தெரிவித்து பாதுகாப்பு கோரியுள்ளனர். மாவட்ட ஆட்சித் தலைவரும் உடனடியாக ஒரு ஜீப் நிறைய ராணுவத்தினரையும் ஆர்.டி.ஓ.வையும் அனுப்பியிருக்கிறார்.

அரசு மருத்துவமனைக்குச் சென்றால் பிரச்சினையாகும் என்பதை அவர்களிடம் தெரிவித்த முஸ்லிம் பெரியவர்கள், தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லுமாறு கூறினர். அதன்படியே ஒரு தனியார் மருத்துவமனைக்கு முஸ்தபா கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கும் காவல் துறையின் மிரட்டல் தொடர்ந்தது. இதனால் அங்கு பணிபுரியும் செவிலியர்களே வந்து “இங்கிருப்பது உங்களுக்கு பாதுகாப்பு இல்லை.

உடனே வெளியேறி விடுங்கள்” என்று சொன்னதால் மறுநாள் காலையில் சிகிச்சை முழுமையாக முடியாத நிலையிலும் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

“என்னைச் சுட்டவர் எஸ்.அய். சந்திரசேகர்தான். எனக்கு அவரை நன்றாகத் தெரியும். 1997லிருந்து இன்று வரை நான் காத்திருக்கிறேன். எந்த இடத்தில் வந்து சாட்சியம் சொல்லவும் நான் தயாராக இருக்கிறேன். ஆனால், இதுவரை எனக்கு நியாயம் கிடைக்கவேயில்லை.

அன்று கோவை மாவட்ட காவல் துறை கமிஷனராக இருந்த நாஞ்சில் குமரன் டிசம்பர் 27 அன்று, அதாவது நிகழ்வு நடந்து 26 நாட்களுக்குப் பிறகு என்னை அழைத்து விசாரித்தார். என் உடல் காயங்களையும் பார்த்தார். என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற ஆர்.டி.ஓவும் அவரிடம் சாட்சியம் அளித்தார். அனைத்தையும் கேட்ட கமிஷனர், ‘இவர்கள் என்ன மனிதர்களா மிருகங்களா... இப்படித் தாக்கியுள்ளனரே' என்று வருந்தப்பட்டு கூறினார். அத்தோடு அது முடிந்தது” என்கிறார் முஸ்தபா.

“பின்னர் நீதிபதி கோகுல கிருஷ்ணன் தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணை கமிஷன் முன்பு சாட்சியமளிக்க அழைத் தனர். நான் சென்று நடந்ததைச் சொன் னேன். மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டதற்கான ஆதாரங்களைக் காட்டினேன். இது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் தொடங்கி குடியரசுத் தலைவர் வரை மனு அனுப்பிருப்பதையும் கூறினேன். அனைத்தையும் கேட்ட நீதிபதி ஒரே வரியில், இவர் ஒரு "அய்விட்னஸ்' -நேரடி சாட்சி என்றதோடு முடித்துக் கொண்டார். அதன் பிறகு எனக்கு எந்த நிவாரணமோ, என்னைச் சுட்டவர்கள் மீது எந்த நடவடிக்கையோ இல்லை.

“என்னைச் சுட்ட எஸ்.அய். சந்திரசேகருக்கு அண்ணா விருது கொடுக்கப் பட்டு, அவர் இன்று பதவி உயர்வு பெற்று நல்ல நிலையில் இருக்கிறார். நான் இன்றும் நீதிக்காக காத்திருக்கிறேன்” என்று வேதனையோடு குமுறுகிறார் முஸ்தபா.
அடுத்த இதழில் பார்ப்போம்

அநீதிமன்றம்?

கோவை குண்டுவெடிப்பு விசாரணையின் போது, சாட்சிகள் குற்றவாளிகளை அடையாளம் காட்ட முடியாமல் தடுமாறியபொழுது, காவல் துறையினரே சாட்சிகளுக்குக் குற்றவாளிகளை அடையாளம் காட்டி உதவினர். நீதிபதியோ, காவல் துறையினரின் இந்த அத்துமீறலைக் கையைக் கட்டிக் கொண்டு வேடிக்கை பார்த்திருக்கிறார். குற்றவாளிகளைச் சிறையில் இருந்து நீதிமன்றத்திற்கு அழைத்து வரும்பொழுதும், சிறைச்சாலை வாசலில் சாட்சிகளை நிற்க வைத்து, அவர்களுக்குக் குற்றவாளிகளை காவல் துறையினர் அடையாளம் காட்டியிருக்கின்றனர். காவல் துறையினரின் இந்த சட்டவிரோத நடவடிக்கையை, குற்றவாளிகள் நீதிமன்றத்தில் முறையிட்ட பிறகும்கூட, சாட்சிகளை காவல் துறையினர் தயார்படுத்துவதை நீதிபதி தடுக்கவில்லை.

இந்த வழக்கில் சாட்சியம் அளித்த 1,300 சாட்சியங்களுள் பெரும்பாலானவை, காவல் துறையினர் தயார்படுத்திக் கொண்டுவந்த பொய் சாட்சியங்கள் அல்லது "இந்து முன்னணி'யைச் சேர்ந்தவர்கள் என்பதை விசாரணையின்போது எதிர்த்தரப்பு வழக்குரைஞர்கள் நிரூபித்துள்ளனர். எனினும், அந்த சாட்சியங்களின் அடிப்படையிலேயே தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

-பூங்குழலி