பேச்சின் ஒலிப்பு வேறுபாடுகளைக் காட்டத் தேவைப்படுகின்ற குறிகளை ‘நிறுத்தக்குறிகள்’ என அழைக்கிறோம். பின்வரும் நிறுத்தக்குறிகள் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.

1. கால்புள்ளி ( , )

2. அரைப்புள்ளி ( ; )

3. முக்கால்புள்ளி ( : )

4. முற்றுப்புள்ளி ( . )

5. கேள்விக்குறி ( ? )

6. உணர்ச்சிக்குறி ( ! )

7. இரட்டை மேற்கோள்குறி ( “ ” )

8. ஒற்றை மேற்கோள்குறி ( ‘ ’ )

9. மேற்படிக்குறி (”)

10. பிறை அடைப்பு ( )

11. சதுர அடைப்பு [ ]

12. இணைப்புக்கோடு (-)

13. சாய்கோடு (/)

14. அடிக்கோடு ( _ )

15. உடுக்குறி (*)

நிறுத்தக்குறிகளைப் பயன்படுத்த சில விதிமுறைகள் அவசியம்.

1. கால்புள்ளி ( , )

கால்புள்ளி இட வேண்டிய இடங்கள்:

1.1 ஒரே எழுவாயைக் கொண்டு அடுக்கி வரும் முற்றுவினைகளுக்கு இடையில் கால்புள்ளி இட வேண்டும்.

எ-டு

உங்கள் நூலைப் படித்தேன், ரசித்தேன், சிரித்தேன்.

1.2 ஒரே பெயரைத் தழுவும் சொற்களுக்கு இடையிலும் தொடர்களுக்கு இடையிலும் கால்புள்ளி இட வேண்டும்.

எ-டு

இங்குச் சாதி, மத, நிற வேறுபாடுகள் கிடையாது.

1.3 ஒரே வினையைத் தரும் சொற்களுக்கு இடையிலும் தொடர்களுக்கு இடையிலும் கால்புள்ளி இட வேண்டும்.

எ-டு

அந்தப் பாடல் இனிமையாக, சுகமாக, எளிமையாக, நயமாக இருந்தது.

1.4 தொடர்புபடுத்திக் கூறப்படும் சொற்களுக்கு இடையிலும் தொடர்புகளுக்கு இடையிலும் கால்புள்ளி இட வேண்டும்.

எ-டு

தாய், தந்தை இருவர் முகத்திலும் மகிழ்ச்சி.

1.5 ஒரே சொல் அல்லது தொடர் இருமுறை அடுக்கி வரும்போது அவற்றிற்கு இடையில் கால்புள்ளி இட வேண்டும்.

எ-டு

பகுத்தறிவு, பகுத்தறிவு என்று பேசாதீர்.

1.6 ஒரு வாக்கியத்தை அதன் முன் உள்ள வாக்கியத்துடன் தொடர்புபடுத்தும் சொற்களையும் தொடர்களையும் அடுத்துக் கால்புள்ளி இட வேண்டும்.

எ-டு

அவர் நல்லவர். ஆனால், வல்லவர் அல்ல.

அங்குச் சென்றனர். அடுத்து, ஓய்வு எடுத்தனர்.

1.7 வாக்கியத்தின் தொடக்கத்தில் வாக்கியத்திற்கே வினையடையாக வரும் சொற்களையும் தொடர்களையும் அடுத்துக் கால்புள்ளி இட வேண்டும்.

எ-டு

பொதுவாக, அவர் அரசியலில் ஈடுபாடு கொள்வதில்லை.

1.8 ‘குறிப்பாக’, ‘அதாவது’ என்னும் சொற்களைக் கொண்ட தொடருக்கு முன்னும் பின்னும் கால்புள்ளி இட வேண்டும்.

எ-டு

இந்தியர்கள், குறிப்பாகத் தமிழர்கள், நல்ல உழைப்பாளிகள்.

1.9 அழுத்தத்திற்காக வரிசைமுறை மாற்றி எழுதப்படும் தொடர்களுக்கு இடையில் கால்புள்ளி இட வேண்டும்.

எ-டு

அறையில் மண்டிக்கிடந்தது, குப்பை.

1.10 ஒரு முழுமையான கூற்று வாக்கியத்தைத் தொடர்ந்து வரும் ‘இல்லையா’, ‘அல்லவா’ போன்ற சொற்களுக்கு முன் கால்புள்ளி இட வேண்டும்.

எ-டு

ஆசிரியர் கடுமையாகத் திட்டினார், இல்லையா?

1.11 ஒரே வாக்கியத்தில் அடுக்கி வரும் வினாத் தொடர்களுக்கு இடையில் கால்புள்ளி இட வேண்டும்.

எ-டு

அவன் வருவானோ, மாட்டானோ?

1.12 ஒரே வாக்கியத்தில் அடுத்தடுத்து வரும் ஏவல் வினைகளுக்கு இடையில் கால்புள்ளி இட வேண்டும்.

எ-டு

அவரைத் தடுக்காதே, செல்ல விடு.

1.13 எழுவாய்க்கும் பயனிலைக்கும் இடையில் தொடர் வரும்போது எழுவாயை அடுத்துக் கால்புள்ளி இட வேண்டும்.

எ-டு

என் தங்கையின் திருமணம், வருகிற 30ஆம் தேதி நடைபெற உள்ளது.

1.14 உணர்ச்சிகளைத் தெரிவிக்கும் வாக்கியத்தில் இடம்பெறும் உணர்ச்சியைக் குறிப்பிடும் சொல்லை அடுத்துக் கால்புள்ளி இட வேண்டும்.

எ-டு

சே, என்ன வாழ்க்கை இது!

ஆ, என்ன அழகு!

1.15 வாக்கியத்தின் தொடக்கத்தில் வரும் ‘ஆமாம்’, ‘இல்லை’, ‘ஓ’, ‘ஓகோ’போன்ற சொற்களை அடுத்துக் கால்புள்ளி இட வேண்டும்.

எ-டு

ஆமாம், நான் ஏழைதான்.

இல்லை, நான் பள்ளிக்குச் செல்லவில்லை.

ஓ, நீங்கள் போகலாம்.

ஓகோ, நீங்கள்தான் மாணவர் தலைவரா?

1.16 இரு வினாக்களுக்கு இடையில் வரும் ‘இல்லை’ என்ற சொல்லை அடுத்துக் கால்புள்ளி இட வேண்டும்.

எ-டு

இது சரியா, இல்லை, தவறா?

1.17 விளிக்கும் சொற்களை அடுத்துக் கால்புள்ளி இட வேண்டும்.

எ-டு

“பாட்டி, சாப்பீட்டீர்களா?” என்றான் பேரன்.

1.18 கடிதத்தில் இடம்பெறும் விளிக்கும் சொல் அல்லது தொடர், முடிக்கும் சொல் அல்லது தொடர் ஆகியவற்றை அடுத்துக் கால்புள்ளி இட வேண்டும்.

எ-டு

ஐயா,

அன்புள்ள தங்கைக்கு,

இப்படிக்கு,

தங்கள் உண்மையுள்ள,

1.19 முகவரியில் பெயர், பதவி, நிறுவனம் போன்ற விவரங்கள் ஒவ்வொன்றையும் அடுத்துக் கால்புள்ளி இட வேண்டும்.

எ-டு

முனைவர் கண்ணகி,

செயலாளர்,

41, இலக்குவனார் சாலை,

அண்ணா நகர்,

சென்னை.

1.20 தலைப்பு எழுத்தைப் பெயருக்குப் பின்னால் பயன்படுத்தும்போது பெயரை அடுத்துக் கால்புள்ளி இட வேண்டும்.

எ-டு

கோவலன், மா.

1.21 பட்டங்களைக் குறிக்கும் சுருக்கக் குறியீடுகளுக்கு இடையில் கால்புள்ளி இட வேண்டும்.

எ-டு

முனைவர் சு. செல்லப்பன் எம்.ஏ., பி.டி., பி.எல்., பிஎச்.டி.

1.22மாதத்தின் பெயரைத் தொடர்ந்து வரும் தேதிக்கும், ஆண்டுக்கும் இடையில் கால்புள்ளி இட வேண்டும்.

எ-டு

ஏப்ரல் 30, 2014

2. அரைப்புள்ளி ( ; )

அரைப்புள்ளி இட வேண்டிய இடங்கள்:

2.1 ஒரு குறிப்பிட்ட கருத்தை மையமாகக் கொண்ட முற்றுத்தொடர்களுக்கு இடையில் அரைப்புள்ளி இட வேண்டும்.

எ-டு

எல்லாப் பணிகளிலும் தமிழ் இடம்பெற வேண்டும்;

தமிழ்மொழி வளர வேண்டும்; தமிழ் சிறப்புப்பெற வேண்டும்.

2.2 ‘ஒப்புமைப்படுத்துதல்’, ‘மாறுபட்ட நிலைகளை இணைத்துக் காட்டுதல்’என்னும் பொருட்கூறுகளை அடிப்படையாகக் கொண்ட முற்றுத் தொடர்களுக்கு இடையில் அரைப்புள்ளி இட வேண்டும்.

எ-டு

அறிஞர் அடக்கமாக இருப்பர்; மூடர் ஆரவாரம் செய்வர்.

தாய், மகள் இருவரும் ஒரு பக்கம்; தந்தை மட்டும் இன்னொரு பக்கம்.

2.3 ஒரு தொகுப்பு ஒன்றுக்கு மேற்பட்ட விவரங்களைக் கொண்டிருக்கும்போது தொகுப்புகளுக்கு இடையில் அரைப்புள்ளி இட வேண்டும்.

எ-டு

வெற்றி பெற்றவர்கள்:

கண்ணகி, கோவை; மணிமேகலை, சேலம்; கௌதமி, திருச்சி;

வாசுகி தருமபுரி; இந்திரா, சென்னை.

3. முக்கால்புள்ளி ( : )

முக்கால்புள்ளி இட வேண்டிய இடங்கள்:

எ-டு

எல்லோரும் கேட்ட கேள்வி: அடுத்த சந்திப்பு எப்போது?

சொத்து வரி: முழுச் சொத்து மதிப்பின் மீதான வரி.

பட்டா : நிலம், வீட்டு மனை முதலியவை குறித்த ஆவணம்.

3.1 விவரங்களைப் பட்டியல் முறையில் ஒன்றன்பின் ஒன்றாகத் தரும்போது முக்கால்புள்ளி இட வேண்டும்.

எ-டு

பெயர் : கொ. அமுதினி

பிறந்த தேதி : 17 . 1 . 1 996

பிறந்த ஊர் : சென்னை

3.2 ஒருவரை அவருடைய செயல்பாட்டோடு அல்லது செயல்பாட்டுக்கு உரியதோடு தொடர்புபடுத்த முக்கால்புள்ளி இட வேண்டும்.

எ-டு

வசனம் : சோமு

இயக்கம் : யாழினி

பாட்டு : மணி

3.3 தலைப்புச் செய்திகளில் தலைப்புக்கும் அதனோடு தொடர்புடைய நபர், நிறுவனம் போன்றவற்றிற்கும் இடையில் முக்கால்புள்ளி இட வேண்டும்.

எ-டு

இடைத்தேர்தல் : சம்பத் ஆணை

சரக்கு வரி : மத்திய அரசு சட்டம் இயற்ற வலியுறுத்தல்

4. முற்றுப்புள்ளி ( . )

எ-டு

திருமணம் என்பது காலத்தின் கட்டாயம்.

 “இந்த உலகில் மனிதன்தான் உயர்ந்தவன்.”

பின்வரும் இடங்களில் முற்றுப்புள்ளி தேவை இல்லை.

எ-டு

திருமதி விசாலாட்சி

சேலம் க. மாதவன்

அறிஞர் அண்ணா

முனைவர் இரா. மணிவேலன்

செந்தமிழ்ச்செல்வர் பன்மொழிப்புலவர் கா. அப்பாதுரை

5. கேள்விக்குறி ( ? )

5.1 வினா வாக்கியத்தின் முடிவில் கேள்விக்குறி இட வேண்டும்.

எ-டு

கணினியின் பயன்கள் எவை?

5.2 ஐயம், நம்பிக்கையின்மை ஆகியவை தொனிக்கும் வாக்கிய முடிவில் கேள்விக்குறி இட வேண்டும்.

எ-டு

சிபாரிசு இல்லாமல் வேலை கிடைக்கும்?

5.3 வினாக் குறிப்பு அடங்கிய, முற்றுப் பெறாத வாக்கியத்தின் முடிவில்.

எ-டு

அப்பெண்ணின் கதி....?

5.4 வியப்போடு ஒன்றை வினவும்போது கேள்விக்குறியையும் உணர்ச்சிக் குறியையும் சேர்த்துப் பயன்படுத்தலாம்.

எ-டு

அமெரிக்காவிற்கா போகிறீர்கள்?!

5.5 அடுக்கி வரும் வினாக்களுக்கு இடையில் தேவையில்லை. (இறுதி வினாவில் மட்டும் இடலாம்.)

எ-டு

இது வீடா, இல்லை, மாளிகையா?

6. உணர்ச்சிக்குறி ( ! )

6.1 உணர்ச்சியைக் குறிக்கும் சொல்லையடுத்து உணர்ச்சிக்குறி இட வேண்டும்.

எ-டு

ஆஹா! ஐயோ!

6.2 உணர்ச்சியைக் குறிக்கும் சொல் இரட்டித்து வரும்போது அதில் இரண்டாவதாக வருவதை அடுத்து உணர்ச்சிக்குறி வரும்.

எ-டு

ஆஹா ஆஹா! ஆ ஆ! ஐயோ ஐயோ!

6.3 கவனத்தை ஈர்க்கும் வகையில் ஒரே சொல்லை இரு முறை கூறும்போது ஒவ்வொன்றின் பின்னும் உணர்ச்சிக்குறி வரும்.

எ-டு

பாம்பு! பாம்பு!

6.4 விளிச்சொற்களையும் விளித்தொடர்களையும் அடுத்து உணர்ச்சிக்குறி வரும்.

எ-டு

உடன்பிறப்புகளே!

7. இரட்டை மேற்கோள்குறி ( “ ” )

ஒருவரின் கூற்றைத் தனித்துக் காட்ட இரட்டை மேற்கோள் குறியை இட வேண்டும்.

எ-டு

“இது எப்படி இருக்கிறது?” என்றான் அவன்.

8. ஒற்றை மேற்கோள்குறி ( ‘ ’ )

ஒருவரின் கூற்றுக்குள் (இரட்டை மேற்கோள்குறிக்குள்) வரும் இன்னொருவரின் கூற்றைத் தனித்துக் காட்ட.

எ-டு

“களவியல் சங்க காலத்தைச் சார்ந்தது என்ற கருத்தையே இவர் ஏற்றுக்கொண்டு, ‘இதன் காலம் கி.பி. 2ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டதாகாது’ என்கிறார்.”

(முனைவர் மணிமேகலை புஷ்பராஜ் எழுதிய ‘தமிழில் ஒற்றுப் பிழையின்றி எழுத மிக எளிய விதிகள்’ நூலிலிருந்து...)

Pin It