interviewநேர்காணல்களின் போது வந்திருப்பவர் நம்முடைய நிறுவனத்தில் நீண்ட காலம் வேலை பார்ப்பாரா? என்பதை உறுதி செய்வதற்காகப் பெரும்பாலான நிறுவனங்களில் சில கேள்விகள் கேட்கப்படுகின்றன. ஒன்றை நன்றாக நினைவில் கொள்ளுங்கள். நேரடியாகக் கேட்கப்படும் எந்தக் கேள்விக்கும் நேரடியாகவே பதில் சொல்ல வேண்டும் என்று கட்டாயம் இல்லை. பல நேரங்களில் நேர்க்கேள்விகளுக்கு நேராகப் பதில் சொல்ல முடியாது. அப்படிப் பட்ட கேள்விகள் சிலவற்றை இங்கு பார்ப்போம்.

  • நீங்கள் எத்தனை ஆண்டுகள் எங்கள் நிறுவனத்தில் இருப்பீர்கள்? 

இந்தக் கேள்விக்கு எத்தனை ஆண்டுகள் நீங்கள் சொன்னாலும் மாட்டிக்கொள்வீர்கள். எடுத்துக்காட்டாக, ‘நான் ஐந்து வருடம் உங்களுடன் இருப்பேன்’ என்று சொல்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். உடனே, ‘ஏன் ஐந்து வருடம் தானா? அதற்கு மேல் இருக்க மாட்டீர்களா?’ என்று கேட்பார்கள். அப்போது நாம் திகைத்துப் போவோம். எனவே இந்தக் கேள்விக்கு ஆண்டு எண்ணிக்கையை விடையாகச் சொல்ல முடியாது. அப்படியானால் என்ன சொல்வது? உண்மையைச் சொல்லுங்கள்.

­எவ்வளவு பெரிய நிறுவனமாக இருந்தாலும் சரி, வேலை செய்யும் சூழல் சரியாக இருந்தால் மட்டுமே நம்மால் மன நிம்மதியுடன் வேலை செய்ய முடியும். கோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும் வேலை பிடிக்கவில்லை என்றால் ஊழியர்கள் இருக்க மாட்டார்கள். வேலை செய்யும் சூழல் நன்றாக இல்லாவிட்டாலும் இருக்க மாட்டார்கள். எனவே, இந்தக் கேள்விக்கு, ‘நான் கற்றுக்கொள்ளும் அளவில், நல்ல வேலைவாய்ப்புச் சூழல் நிலவும் வரை நான் வேறு நிறுவனத்தைத் தேட மாட்டேன்’ என்று பதில் சொல்லலாம்.

  • வேறொரு பெரிய நிறுவனத்தில் வேலை கிடைத்தால் அங்கு போய் விடுவீர்களா? 

சிறிய நிறுவனங்களின் நேர்காணல்களில் இது போன்ற கேள்வி பரவலாகக் கேட்கப்படுவது உண்டு. ‘கட்டாயம் உங்கள் நிறுவனத்தை விட்டுப் போக மாட்டேன்’ என்று இதற்குப் பதில் சொன்னால் அது வெளிப்படையாகவே பொய் என்று தெரியும். எனவே அதைச் சொல்வதில் அர்த்தமில்லை.

அதற்குப் பதிலாகக் கீழ்க்காணும் பதில்களில் உங்களுக்கு எது பொருந்துமோ அதைச் சொல்லலாம்.

  1. ‘பெரிய நிறுவனங்களில் நாம் செய்யும் வேலை என்பது கடலில் கரைத்த காயத்தைப் போல; இலட்சத்தில் ஒருவராகத் தான் நாம் இருப்போம். அதே வேளை, உங்களுடைய நிறுவனத்தைப் போல சின்ன நிறுவனத்தில் வேலைக்கு வந்தால், நிறைய கற்றுக்கொள்ளலாம். நம்முடைய வேலை பலராலும் பாராட்டப்படும். எனவே பெரிய நிறுவனத்தில் வேலை கிடைத்தால் போக மாட்டேன்.
  2. பெரிய நிறுவனம், சிறிய நிறுவனம் என்றெல்லாம் நான் பார்ப்பதில்லை. என்னுடைய திறமைக்கு எங்கு வேலை கிடைக்கிறதோ அங்குத் தான் நான் இருப்பேன். என்னுடைய பயோடேட்டாவும் உங்களுடைய வேலை தேவையும் பொருந்துவதாக நான் நினைத்தேன். அதற்காகத் தான் இங்கு வந்தேன்.
  • எங்களை விட அதிக சம்பளத்தை இன்னொரு நிறுவனம் கொடுத்தால் அங்கு போய் விடுவீர்களா?

யோசித்துப் பாருங்கள். நீங்கள் கம்ப்யூட்டர் துறையில் சேர ஆசைப்படுகிறீர்கள். உங்கள் நண்பர் ‘மருத்துவம் படி; கோடி கோடியாகச் சம்பாதிக்கலாம்’ என்கிறார். மருத்துவம் படிக்கச் சென்று விடுவீர்களா? இல்லை தானே! ‘இல்லை நண்பா! எனக்கு கம்ப்யூட்டர் படிக்க ஆர்வம் இருக்கிறது! நான் அதில் கட்டாயம் முன்னேறி விடுவேன்’ என்று தானே பேசுவீர்கள். அதே பதிலை இங்கும் சொல்லுங்கள்.

சம்பளம் என்பது முக்கியம் தான். ஆனால் அது மட்டுமே முக்கியம் இல்லை. என்னுடைய திறமைகளும் உங்களுடைய வேலை தேவைகளும் பொருந்துவதாக நான் நினைக்கிறேன். எனவே சம்பளத்திற்காக மட்டும் வேறு நிறுவனத்திற்குப் போக மாட்டேன்.

  • இங்கு உங்களைச் சக்கையாகப் பிழிந்து விடுவார்கள். பரவாயில்லையா?

நீங்கள் சுறுசுறுப்பானவரா?  சோம்பேறியா? என்பதைத் தெரிந்து கொள்ள நிறுவனங்கள் கேட்கும் கேள்வி இது! இந்தக் கேள்வி கேட்கப்பட்டவுடன், நீங்கள் ஒரு நிமிடம் யோசித்து பதில் சொன்னால் போதும் – நீங்கள் சோம்பேறி தான் என்பதை உறுதிப்படுத்திவிடுவார்கள். இது போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்லும் போது உடல் மொழியும் ரொம்ப முக்கியம்.  மலர்ந்த முகத்துடன், ‘ என்ன சார்! என்னைப் பார்த்தால் என்ன வயதானவர் மாதிரியா தெரிகிறது! அதெல்லாம் பரவாயில்லை சார்!’ என்னும் பதில் பொருத்தமாக இருக்கும்.

  • எங்களிடம் இரண்டாண்டு காலம் ஒப்பந்தம் ('பாண்டு') இருக்கிறது. அதற்கு ஒத்துக்கொள்கிறீர்களா?

முதலில் ஒன்றைத் தெரிந்து கொள்ளுங்கள். இரண்டாண்டு / மூன்றாண்டு என ஒப்பந்தம் போடுவது சட்டப்படிக் குற்றம். அதை நேர்மையான நிறுவனங்கள் செய்யவே மாட்டார்கள். பிறகு ஏன் இப்படிக் கேட்கிறார்கள் என்கிறீர்களா? நீங்கள் எத்தனை ஆண்டுகள் இருப்பீர்கள் என்பதைத் தெரிந்து கொள்ள உதவும் கேள்வி இது! அதனால் தான் கேட்கிறார்கள். எனவே நல்ல நிறுவனமாக இருந்தால் துணிச்சலாகச் ‘சரி’ என்று சொல்லி விடலாம்.

சில நிறுவனங்கள் சட்டத்திற்குப் புறம்பாக இப்படிப்பட்ட ஒப்பந்தங்களை வைத்திருக்கின்றன. நீங்கள் நேர்காணலுக்குப் போவதற்கு முன்பே நண்பர்கள் மூலமோ இணையம் மூலமோ நிறுவனங்களைப் பற்றிய விமர்சனங்களைத் தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள். அப்படி ஒப்பந்தம் உண்மையில் இருந்தாலும் துணிச்சலாகச் ‘சரி’ என்று சொல்லிவிடுங்கள். ‘ஐயோ! சரி என்று சொல்லிவிட்டால் என்ன ஆவது? ஒத்துக்கொண்ட வருடங்கள் வேலை செய்ய வேண்டி வருமே!’ என்கிறீர்களா?

‘இல்லை! என்னால் நீங்கள் சொல்லும் வருடங்கள் இங்கு இருக்க முடியாது’ என்று நீங்கள் நேரடியாகச் சொன்னால் கட்டாயம் உங்களை வேலைக்கு எடுக்கப் போவதில்லை. ‘சரி’ என்று ஒத்துக்கொண்டால் வேலைவாய்ப்பாவது கிடைக்கும். வாய்ப்பு கிடைத்த பிறகு, சேரலாமா? வேண்டாமா? எனப் பிறகு முடிவு செய்து கொள்ளலாம். அதனால் நட்டம் ஒன்றும் இல்லையே!

  • எலெக்டிரிக்கல் / மெக்கானிக்கல் / வேறு படிப்புகள் படித்துள்ள நீங்கள், உங்கள் துறையிலேயே வேலை தேடலாமே! ஏன் ஐ.டி. துறைக்கு வருகிறீர்கள்?

வேறு துறைப் படிப்பு படித்து விட்டு, மென்பொருள் துறையில் வேலை தேடும் பலரும் எதிர்கொள்ளும் கேள்வி இது. இந்தக் கேள்விக்கு எப்படி பதில் சொல்வது? என்று பல நேரம் நாம் குழம்பிப் போயிருப்போம். ‘ஐ.டி. யில் நல்ல சம்பளம் கொடுக்கிறார்கள் என்பதால் தான் வந்தேன்’ என்று வெளிப்படையாகவும் சொல்ல முடியாது. இது போன்ற கேள்விக்கு விடை சொல்வதற்கு முன் ‘ஐ.டி.க்குப் போகலாம்’ என்று எப்போது நீங்கள் முடிவெடுத்தீர்கள் என்று நன்றாக யோசித்துப் பாருங்கள். அதிலேயே பாதி பதில் ஒளிந்திருக்கும்.

    • என்னுடைய அண்ணன் / உறவினர் ஒருஅர் ஐ.டி. படித்து விட்டு அமெரிக்காவில் இருக்கிறார். அவர் ஐ.டி. துறைக்கு வந்துவிடச் சொன்னார். அவருடைய முடிவை யோசித்துப் பார்த்தேன். நானும் கல்லூரி நாட்களில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தில் நல்ல மதிப்பெண் எடுத்திருந்தேன். எனவே ஐ.டி வேலைக்கு ஏன் போகக் கூடாது என்று தோன்றியது.
    • நான் படித்த எலக்டிரிகல் / இன்ஸ்டிருமென்டேஷன் ஆகிய படிப்புகளுக்குத் தென்னிந்தியாவில் அவ்வளவாக வேலை வாய்ப்பு இல்லை. (நீங்கள் ஒரு பெண்ணாக இருந்தால்), பெண் பிள்ளையை ஒளரங்காபாத், கோல்கத்தா என்று வேலைக்கு அனுப்ப என் வீட்டில் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். ஆனால் நான் கட்டாயம் வேலைக்குப் போக வேண்டும் என்று நினைத்தேன். எனவே ஐ.டி. யில் வேலை தேடத் தொடங்கினேன்.
    • பிளஸ் டூவில் மதிப்பெண் குறைவாக எடுத்ததால், எனக்குப் பிடித்த கம்ப்யூட்டர் படிப்பைப் படிக்க முடியவில்லை. வேறு வழியின்றி வேறொரு துறைப் படிப்பை எடுத்துப் படித்தேன். (இந்த பதிலைச் சொல்வதாக இருந்தால், பிளஸ் டூவில் உண்மையில் நீங்கள் குறைய மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்!)
    • நான் வேறு துறைப் படிப்பு படித்தாலும் சிறு வயது முதலே எனக்குக் கம்ப்யூட்டர் மீது ஆர்வம் அதிகம்.  பிளஸ் 2 படித்து முடித்த போது அவ்வளவாக விவரம் தெரியாது. வீட்டில் பெரியவர்கள் சொன்ன படிப்பில் சேர்ந்து படித்தேன். பின்னர் தான் நமக்குப் பிடித்த துறையிலேயே ஏன் வேலை தேடக் கூடாது என்று தோன்றியது.

இந்த பதிலுக்கு உறுதி சேர்க்கும் விதமாக, நீங்கள் ஏதாவது கணிப்பொறிப் பயிற்சி மையத்திலோ கல்லூரியிலோ கணிப்பொறி தொடர்பாகப் பெற்ற சான்றிதழ் படிப்புகளை ஆதாரமாகக் காட்டலாம். அது கேள்வி கேட்பவர் மன நிறைவு பெற உதவும்.

  • உங்களுடைய பிளஸ் என்ன? மைனஸ் என்ன?

இதுவும் பெரும்பாலான நேர்காணல்களில் கேட்கப்படும் கேள்வி! இது போன்ற கேள்விக்கு உண்மை என்னவோ அதைத் தயங்காமல் சொல்லுங்கள். ஆனால் பிளசையும் மைனசையும் முடிவு செய்யும் போது உண்மையிலேயே அது உங்களுடைய பிளஸ், மைனஸ் தானா? என மனத்திற்குள் கேட்டுக்கொள்ளுங்கள். அந்த பிளசையும் மைனசையும் நீங்கள் வாழ்க்கையின் எந்தத் தருணத்தில் உணர்ந்தீர்கள் என்பதை யோசித்துப் பாருங்கள். அந்த நிகழ்வையும் சேர்த்து இந்தக் கேள்விக்குப் பதிலாகச் சொன்னால் மிகவும் பொருத்தமாக இருக்கும்.

அதை விடுத்து, மற்றவர்களைக் கவர வேண்டும் என்பதற்காகத் தவறான பதிலைச் சொன்னீர்கள் என்றால் அடுத்தடுத்த கேள்விகளில் மாட்டிக் கொள்வீர்கள்.

சில பிளஸ்கள்:

  • எடுத்த காரியத்தை முடிக்கும் வரை ஓய மாட்டேன்.
  • நண்பர்கள் என்றால் உயிரையும் கொடுப்பேன்.
  • என்னுடைய தவறுகளைப் பிறர் சுட்டிக்காட்டினால் திருத்திக்கொள்ளப் பார்ப்பேன்.

ஒன்றை நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். உங்களுடைய பிளஸ் என்பதற்கு இதில் எது பொருந்துமோ அது தான் சிறந்த பதிலே தவிர, நீங்கள் மேல் உள்ளவற்றுள் தேர்ந்தெடுக்கும் பதில் இல்லை.

மைனஸ்:

மைனசை வெளியே சொல்லும் போது நாம் நினைவில் கொள்ள வேண்டியது – நான் என்னுடைய நண்பனிடத்தில் மைனசைச் சொல்லவில்லை. நண்பர்களிடமோ பெற்றோரிடமோ மைனசைச் சொல்வதாக இருந்தால், உள்ளது உள்ளபடி அப்படியே சொல்லலாம்; தப்பில்லை. அவர்கள் நம்மை ஏற்றுக்கொள்வார்கள். வேலை பார்க்கப் போகும் இடத்தில் மைனசைச் சொல்லும் போது மிகுந்த கவனம் தேவை.

மைனசே இல்லை என்று சொல்ல முடியாது; அப்படிச் சொன்னால், நம்மைப் பற்றியே நமக்குத் தெரியவில்லை என்னும் முடிவுக்கு வந்து விடுவார்கள். அதே சமயம், உள்ளது உள்ளபடியும் சொல்ல முடியாது. அப்படிச் சொல்வது உளறிக் கொட்டுவது போல் ஆகிவிடும்.

சில உளறல்கள்:

  • நான் ஒரு மகாச் சோம்பேறி; எவ்வளவு நாள் கொடுத்தாலும் கடைசி நாளில் தான் வேலையை முடிப்பேன்.

இப்படிச் சொல்வது, ‘ஓகோ, இவரை வேலைக்கு எடுத்தால், வேலை வாங்குவது ரொம்ப சிரமம்’ என நிறுவன அதிகாரி நினைக்கத் தொடங்கி விடுவார். கடைசியில் வேலை கிடைப்பதையே கெடுத்து விடும்.

  • நான் யாரைப் பற்றியும் கவலைப்பட மாட்டேன். பணம் தான் முக்கியம் என்று நினைக்கிறேன்.

இப்படிச் சொல்வது, ‘வேறு ஏதாவது நிறுவனத்தில் அதிக சம்பளத்திற்கு இவரைக் கூப்பிட்டால் போய் விடுவார்’ என்னும் எண்ணத்தை விதைத்து விடும். இந்தப் பதிலுக்குப் பிறகு வேலை கிடைப்பது குதிரைக் கொம்புதான்!

எனவே, மைனசை சொல்லும் போது ரொம்ப கவனமாகச் சொல்ல வேண்டும். மைனசுடன் சேர்த்து அதை மாற்ற நீங்கள் எடுக்கும் முயற்சிகளையும் சேர்த்துச் சொல்வது கூடுதல் பலம்.

சில மைனஸ்:

  • எனக்கு ஆங்கிலம் பேச அவ்வளவாக வராது. அதை முன்னேற்ற, கொஞ்சம் காலமாக, வானொலியில் ஆங்கிலச் செய்திகள் கேட்டு வருகிறேன்.

(ஒன்றை நினைவில் கொள்ளுங்கள் – ஆங்கிலச் செய்தி கேட்பதாக நீங்கள் சொல்வது உண்மையாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், ‘அப்படியா? வானொலியில் எத்தனை மணிக்குச் செய்திகள் வாசிக்கிறார்கள்? எந்த நிலையத்தில் வாசிக்கிறார்கள்? நேற்றைய தலைப்புச் செய்தி என்ன?’ என்பன போன்ற கேள்விகள் கேட்கப்பட்டால் மாட்டிக்கொள்வீர்கள். எனவே எப்போதும் உண்மையை மட்டும் சொல்லுங்கள்.)

  • முன்பு அதிகம் கோபப்படுவேன். இப்போது தியானம், ஆசனங்கள் ஆகியன செய்து கோபத்தைக் குறைக்க முயன்று வருகிறேன்.

(மீண்டும் கேள்விகள் – என்ன முறை தியானம்? என்ன ஆசனங்கள் செய்கிறீர்கள் என்னும் கேள்விகள் வரும்; ஆயத்தமாக இருங்கள்.)

  • முன்பு வீட்டில் வேலை எதுவும் செய்ய மாட்டேன். இப்போது தாய் தந்தைக்கு உதவ ஆரம்பித்து இருக்கிறேன்.

பிளசையே மைனசாக!

மைனசை சொல்வதில் இன்னொரு முறை இருக்கிறது. உங்கள் பிளசையே மைனஸ் போலச் சொல்வது! பழம்பெரும் அரசியல் தலைவர் ஒருவரிடம் நேர்காணலின் போது, ‘உங்களுடைய மைனஸ் என்ன?’ என்று கேட்டார்கள். அதற்கு அவர், ‘இவ்வளவு காலம் நான் அரசியலில் இருந்தாலும், பிற தலைவர்களைப் போல எனக்கு முதுகில் குத்தத் தெரியாது’ என்று பதில் சொன்னார். எப்படி நயமாக பிளசையே மைனஸ் போலச் சொல்கிறார் பார்த்தீர்களா? இதே போல் நாமும் பதில் சொல்லலாம்.

  • வேலை என்று வந்து விட்டால் சாப்பாடு, தூக்கம் எல்லாம் பார்க்க மாட்டேன் சார். எப்படியாவது முடித்து விட்டுத் தான் மறுவேலை பார்ப்பேன்.
  • நண்பர்கள் எவ்வளவு தவறு செய்தாலும் மன்னித்து ஏற்றுக்கொள்வேன். அப்படிச் செய்வதால் சில நேரங்களில் துன்பப்பட்டாலும் என்னுடைய குணத்தை மாற்ற முடியவில்லை.

இந்தக் கேள்விகளுக்கும் ஒரு பொது விதி உண்டு. நீங்கள் சொன்ன ஒவ்வொரு வார்த்தைக்கும் நீங்கள் தாம் பொறுப்பாளி! எனவே தகுந்த காரணங்கள் இன்றி எந்த பதிலும் சொல்லாதீர்கள். பதில் சொல்லிவிட்டுக் காரணங்கள் தேடாதீர்கள். அது மொத்த நேர்காணலையும் சிதைத்து விடும்.

இக்கேள்விகளுக்கும் சரி, இவை போன்ற வேறு கேள்விகளுக்கும் சரி – இது தான் சரியான பதில் என்று எந்த வரையறையும் கிடையாது. நீங்கள் யார், உங்களுடைய நிலை என்ன என்பதைப் பொருத்து பதிலைத் தேர்ந்தெடுங்கள். முடிந்த வரை, கேள்விகளை வரிசைப்படத் தொகுத்து, நண்பர்களுடன் உட்கார்ந்து விவாதியுங்கள். பல புதிய கேள்விகள் கிடைக்கும்; புதிய கோணங்களில் பதில்கள் கிடைக்கும். கிடைக்கும் பதில்களில் சிறந்த பதில் எது என்று தேடுவதை விட, நமக்குச் சரியான பதில் எது என்று தேடுங்கள். அப்படித் தேடி உங்களுக்குப் பொருந்தும் பதில்களை எடுத்துக்கொள்ளுங்கள். பொய் சொல்லக்கூடாது என்பதை ஆழப் பதிய வைத்துக்கொள்ளுங்கள். வெற்றி நிச்சயம்! 

- முத்துக்குட்டி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It