கோகோகோலா நிறுவனம் சீனாவின் புகழ்பெற்ற பழரச தயாரிப்பு நிறுவனமான ஹீயுவான் நிறுவனத்தை சுமார் 2.4 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்க முயற்சித்தது.

       இந்த முயற்சியை சீனாவின் வர்த்தக அமைச்சகம் மோனோபாலி தடைச்சட்டத்தை பிரயோகித்து தடைசெய்து விட்டது நேற்றைய செய்திகளின்படி. இது மேற்குலகத்திற்கு முதுகுத்தண்டில் சிலிர்ப்பை ஏற்படுத்திய ஒரு அறிவிப்பு. ஏனெனில் கோக் நிறுவனத்தின் தரப்பில் இந்த தடையை எவரும் எதிர்பார்க்கவில்லை போலிருக்கிறது.

       இந்த ஒப்பந்தம் முடிவாகி இருந்தால் சீனாவின் பானங்கள் சந்தையின் 40 சதவீதத்தை கோக் நிறுவனம் கட்டுபடுத்தி இருக்கக்கூடும். இந்த தடையின் மூலம் சீனா தெளிவான ஒரு செய்தியைச் சொல்லி இருக்கிறது.

       கோக், ஹீயுவானை வாங்கி இருந்தால் சீனாவில் பழரச மார்க்கெட்டில் கோக் வைத்தது தான் சட்டமாக இருக்கும். அது மட்டுமின்றி கோக் இந்த ஒரு பழரச நிறுவனத்துடன் நின்றிருக்காது. அந்த முயற்சியை அனுமதிக்காததன் மூலம் தன் நாட்டின் குடிகளுக்கு பலவித தேர்வுகளுக்கு வாய்ப்பை நிலைநிறுத்தி இருக்கிறது சீனா.

       இதை நிறுவனங்களின் லாபம் தொடர்பான நோக்கில் மட்டுமின்றி மக்களுக்கான தேர்வுகளையும் கருத வேண்டும்; அந்த வகையில் சீனாவின் செயல் மெச்சப்பட்டாலும், இதே வகையான சீனாவின் அயல்நாட்டு நிறுவன கையகப்படுத்தும் முயற்சிகளிலும் மற்ற நாடுகளும் இதே நிலையையே எடுக்கும் என்பது எதிர்பார்க்கக் கூடியதுதான்.

       இதனுடன் இந்தியாவில் 90களில் அனுமதிக்கப்பட்ட பின்னர் நடந்த நிகழ்ச்சிகளை ஒப்புநோக்கினால் காணாமல் போய்விட்ட பல பிராண்டுகள் நினைவுக்கு வருகின்றன.

       பிரான்ஸின் டாணோன்- நிறுவனத்தை கையகப்படுத்த கோக் செய்த முயற்சிகளும் இவ்வாறே நிறுத்தப்பட்டதும் நினைவு கொள்ளத்தக்கது.

       தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விசயங்களில் திறந்த பொருளாதாரக் கொள்கையின் மத்தியிலும் சீனா எச்சரிக்கையாக இருக்கிறது என்பது தெளிவாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்காக அமெரிக்கா கோபப்படலாம், ஆனால் ஆடிக் கொண்டிருக்கும் அமெரிக்கப் பொருளாதாரத்தில் ஒன்றும் செய்ய இயலாது. சென்ற மாதத்ததிலேயே அமெரிக்க பணப்பத்திரங்களில் செய்யப்படும முதலீட்டில் இனி கவனம் வைக்கப்படும் என்று சீனா அறிவித்தது. ஒரு வேளை அப்படி நடந்தால் அமெரிக்காவுக்கான ஆப்பு பெரிதாக அடிக்கப்படும் வாய்ப்புகள் இருக்கின்றன். ஏனெனில் ஏற்கனவே நிதிப்பற்றாக்குறை இருக்கும் நிலையில் அமெரிக்கப் பணப்பத்திரங்களில் அதிக அளவில் முதலீடு செய்யும் இரு நாடுகளின் ஒன்றான சீனாவைப் பொருளாதார ரீதியாக பகைத்துக் கொள்ள முடியாத அமெரிக்கா, இந்தக் காரணங்களால்தான் ஆசியாவில் ராணுவ ரீதியாக பலமான நாடாக இந்தியா இருப்பது அவசியம் என்று அணு ஆயுத ஒப்பந்தங்கள் மூலம் இந்தியாவுக்கு உதவுவது போல போக்குக் காட்டிக் கொண்டிருக்கிறது............

(மாற்று மருத்துவம் அக்டோபர் 2010 இதழில் வெளியானது)

Pin It