mao 673"மாவோ" என்றழைக்கப்படும் மாசேதுங் என்ற மார்சின் மாணவர், 1893, டிசம்பர் 26 அன்று சீனத்திலே வறுமையானதொரு குடும்பத்தில்தான் பிறந்திருக்கிறார். இரவில் வயல்வெளியில் வேலை, பகலில் கல்வி என்ற அளவில் அவரது சிறு வயது அமைந்திருக்கிறது. 13 வயதில் பள்ளிக்கல்வியை நிறுத்திவிட்டு,முழுநேர வயல்வெளியில் வேலை செய்தார்.

14 வயதில் 20 வயது பெண்ணை மணமுடித்து வைக்கின்றனர் அவரது பெற்றோர். ஆனால் அப்பெண் ணுடன் அவர் ஒரு நாள் கூட வாழவில்லை. ஒரு வாய்ப்பாக... “தலைநகர் பீகிங் சென்று பல்கலைக்கழக நூல் நிலையத்தில் உதவியாளராக பணியாற்றினார். அந்த பல்கலைக்கழகத்தில் புரட்சிகர சிந்தனையாளர்களுடன், கம்யூனிஸ்டுகளுடன் பழகும் வாய்ப்பை பெற்றார். “அந்த சூழ்நிலையில்,“  "எச்சரிக்கை தரும் வார்த்தைகள்" என்ற நூலை வாசிக்கிறார்.

சீனாவின் பலவீனங்களையும், மேற்கத்திய நாடுகளின் வலிமையும் புரிந்து கொள்கிறார். இளைஞர் மாசேதுங்கை இடதுசாரி கொள்கை மிகவும் கவர்ந்தது.12 தலைவர்களுடன் இணைந்து சீன பொதுவுடைமைக் கொள்கையை தோற்றுவிக்கிறார்.

1935 -ல் கட்சியின் தலைமை பொறுப்புக்கு வருகிறார். கட்சி வலிமைப் பெறுகிறது. சீனா ஒரு விவசாய நாடு. விவசாய நிலங் களெல்லாம் நில பிரபுக்களுக்கே சொந்தமானதாக இருந்தது. பெரும்பாலான விவசாய மக்கள் நிலமற்றவர்களாகவே இருந்தனர்.

"உழுபவருக்கே நிலம் சொந்தம்" என்ற முழக்கத்தை முன் வைத்து நிலமற்ற விவசாயிககளை ஒன்று திரட்டி ஆயுதம் தாங்கிய ஒரு படையை நிறுவினார். அந்த விவசாய பெருங்குடி மக்களுக்கு மார்க்சியத்தை அறிமுகப்படுத்தினார்.

பகுதி பகுதியாக உருவாக்கப்பட்ட இந்த படைகளை பிறகு ஓர் கட்டுப்பாடு மிக்க இராணுவப் பிரிவாக மாற்றினார். அதற்கு, கம்யூனிஸ்ட்டு கட்சியை தலைமை ஏற்க வைத்தார்.

சியாங் கே ஷோக் தலைமையிலானத் தேசிய அரசை எதிர்த்து வலிமை மிக்கப் போராட்டத்தைக் கட்டமைத்தார்.

இதில் சீன செம்படை வீரர்கள் 85000 பேரும், கம்யூனிஸ்டு கட்சியினர் 15000 பேரும் இரவும் பகலுமாக இடி, மின்னல், மழை, வெயில் என்று பாராமல் 3000 கிமீ தொலைவிலுள்ள ஸ்கெ சுவான் நகரை நோக்கி நெடும் பயணம் மேற்கொண்டனர்.

இந்த பயணத்தில்....“நிரந்தரமாக பனி மூடியிருந்த 5 மலைத்தொடர்கள் உள்ளிட்ட 18 மலைத்தொடர்கள், 24 ஆறுகள், 62 மாநகரங்கள் கடந்தனர். வழியில் 25,000 வீரர்கள் மரண மடைந்தனர்.

இரண்டு ஆண்டுகள் போராட்டத்திற்கு பிறகு சீன நிலப்பரப்பு முழுக்க பொதுவுடைமையாளர் கைக்கு வருகிறது. 1949 அக்டோபர் 1-இல் சீன மக்கள் குடியரசு என பிரகடனம் செய்யப்பட்டது. 30 ஆண்டுகள் உள் நாட்டு போரினாலும், பழைய மரபுகளில் ஊறித்திளைத்த தாலும் இல்லாமையும் கல்லாமையும் தலை விரித்தாடியது அப்போது சீனாவில்.

"வலிமையும் வளமையும்" கொண்ட சீனாவை உருவாக்க கடுமையாக உழைத்தார் மாவோ.நவீன தொழில் முன்னேற்றம் அடைவதற்கு முயற்சித்தார்.

கிராம புறங்களை விடுதலை செய்து நகர்புறங்களை சுற்றி வளைத்து விடுதலை செய்ய வேண்டும் என்ற புதிய தத்துவத்தை மாசேதுங் முன் வைத்தார். இதையே ‘மாவோவின் மக்கள் போர் பாதை' என்று அழைக்கப்பட்டது. இன்று கூட இதைத்தான் இந்தியாவிலும் நேபாளத்திலும் மாவோயிஸ்டுகள் முன்னெடுக்கின்றனர்.

அந்நிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நாட்டு விடுதலைக்காகவும், பண்ணை ஆதிக்கத்தை எதிர்த்து விவசாயிகளின் விடுதலைக்காகவும் போராடி புரட்சி செய்து ஏற்படுத்துகிற ஒரு அரசாங்கத்தை மக்கள் ஜனநாயக அரசாங்கம் என்று விவரித்தார் மாசேதுங்.

நூறு பூக்கள் மலரட்டும், நூறு கருத்துக்கள் முட்டி மோதட்டும் என்பது கலை வளர்வதற்கும்,அறிவியல் முன்னேறுவதற்கும், நமது நாட்டின் சோசலிச கலாச்சாரம் செழித்தோங்குவதற்கும் உரிய கொள்கையாகும். கலையின் பல்வேறு வடிவங்களும், கருத்துக்களும் சுதந் திரமாக வளரலாம்.

அறிவியலில் பல்வேறு கருத்துக்களும் சுதந்திரமாக முகிழ்த்தெழலாம். “கலையின் குறிப்பிட்ட ஒரு நடையை அல்லது ஒரு சிந்தனை முறையை திணித்து மற்றொன்றை தடை செய்ய நிர்வாக நடவடிக்கைகள் பயன்படுத்தப்பட்டால், அது கலை அறிவியல் வளர்ச் சிக்கு தீங்கு பயக்கும் என நாம் கருதுகின்றோம" என்ற மாவோவின் கருத்து இன்றளவும் விவாதத்திற்குரியதாகவே இருக்கிறது.

கொட்டும் மழையிலும், பனியிலும் பல உயிர்களை இழந்த பிறகும் தலை நகர் தில்லியின் சாலையெங்கும்  “தீரமுடன் போராடிக் கொண்டிருக்கும் விவசாய பெருங்குடி மக்களின் போராட்டத்திற்கு ...“ கிழக்கில் உதித்த இன்னொரு செங்கதிர் (மாசேதுங்) ஒளி பாய்ச்சட்டும்!

- இரா.திருநாவுக்கரசு