1. மார்க்சியம் என்ற புரட்சிகரக் கொள்கை 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் ஐரோப்பாவில் எழுந்தது. 1848-ல் மார்க்ஸ், ஏங்கல்ஸ் ஆகியோர் ஒப்பமிட்டு வெளிவந்த “கம்யூனிஸ்ட் அறிக்கை”யை மார்க்சியத்தின் தொடக்கமாகக் கொண்டால் அது கடந்த 162 ஆண்டுகளாகத் தன் செல்வாக்கை உலக நாடுகள் எங்கும் பரப்பி வந்துள்ளது. மார்க்சியம் தத்துவமாகவும் வரலாற்றுக் கோட்பாடாகவும் பொருளாதாரச் சிந்தனையாகவும் அரசியல் கொள் கையாகவும், எல்லாவற்றிற்கும் மேலாக நடைமுறை யாகவும், பரவி வந்துள்ளது என்பது அதன் மிகக் குறிப்பான சாதனையாகும். ஐரோப்பாவில் தோன்றி ஆசிய, ஆப்பிரிக்க மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகள் அனைத்திலும் மார்க்சியம் குடியேறியுள்ளது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்பு உருவான 85ஆவது ஆண்டில், நமது சொந்தச் சூழலை முன் வைத்து கம்யூனிஸ்ட் இயக்கத்தின் பயணம் குறித்துப் பேசுவது அவசியம்.

2.     மார்க்சியம் அதன் தோற்ற காலத்தில் ஐரோப்பியத் தொழில் சமூகச் சூழல்களில் புதிதாக சமூக அரங்கிற்கு வந்த தொழிலாளர் வர்க்கத்தை முன்னிலைப்படுத்தியது. தொழில் முதலாளிகள் / தொழிலாளிகள் என்ற இரண்டு எதிரெதிர் வர்க்கங் களை, அவற்றுக்கிடையிலான பொருளாதார முரண் பாடுகளை அது முன்னிலைப்படுத்தியது. சமூகத்தின் பிற எல்லா வர்க்கங்களுமே மேற்படி இரண்டில் ஒன்றாகக் குறைக்கப்படும் என மார்க்ஸ் முதலில் கருதினார். மார்க்சின் வரலாறு பற்றிய சிந்தனை இந்த எதிர்பார்ப்பை அடிப்படையாகக் கொண்டே அமைந்தது. ஐரோப்பாவில் நில உடைமைச் சமூகம் முற்ற முழுதாக முதலாளியமாக மாற்றமடைந்து முதலாளிய முரண்பாடுகள் முதிர்ந்து சோசலிசம் தோன்றும் என மார்க்ஸ் கருதினார். பழைய சமூக அமைப்புகளைக் கொண்ட உலகின் பிற நாடுகளிலும் கூட முதலாளியம் அதன் ஆக்கிரமிப்புத் தன்மை களோடு நிலை கொண்டு பின்னர் தான் அந்நாடுகள் சோசலிசம் நோக்கி நகரும் என்று அவர் கணக் கிட்டார். இதே அடிப்படைகளைக் கொண்டு விவசாயிகள் சார்ந்த சோசலிச சிந்தனையைக் கற்பனாவாதம் என ஏங்கெல்ஸ் விமர்சித்ததுண்டு. விவசாயிகள் தமது நலன்களைத் தாமே முன்னிறுத்த இயலாதவர்கள் என்றும், அவர்களைப் பிறரே பிரதிநிதித்துவப்படுத்த வேண்டிவரும் என்றும் மார்க்ஸ் குறிப்பிடுவார்.

3.     மார்க்சின் காலத்திலேயே (1860களுக்குப் பிறகு) மேற்படி நிலைப்பாட்டிலிருந்து மார்க்ஸ் வேறுபட்டு யோசித்த சில தருணங்கள் உண்டு. இந்தியா போன்ற ஆசிய நாடுகளின் சமூக அமைப்பு, அமெரிக்க ஐக்கிய நாடுகளில் கருப்பர்கள் எழுச்சி பெற்ற உள்நாட்டுப் போர், அயர்லாந்து விடுதலைப் போராட்டம், ரஷ்ய சமூக அமைப்பு ஆகியவை பற்றிய செய்திகள் மார்க்சை வந்தடைந்த போது குறிப்பிட்ட அந்நாடுகளின் சமூக அமைப்புகளின் பிரத்தியேகப் பண்புகள் பற்றி மார்க்ஸ் சிந்தித்தார். ஐரோப்பியத் தொழில் முதலாளியத்திலிருந்து வேறுபட்ட சமூக சக்திகள் அங்குத் தொழில் படுவதை மார்க்ஸ் கண்டறிந்தார். இந்தியச் சாதி அமைப்பு ஐரோப்பியக் காலனி ஆதிக்கம், வெள்ளையர் நிற - இனவெறி, கீழை நாடுகளின் கிராமிய விவசாயச் சமூகம் ஆகியவை மார்க்சின் கவனத்திற்குள் வந்தன. தொழிலாளி வர்க்கத்தின் புரட்சிகர ஆற்றலோடு உடன் நின்று தொழில் படும், பல வேளைகளில் அதைவிட மிக அழுத்த மாகத் தொழில்படும், சமூக சக்திகளைப் பற்றி இப்போது மார்க்ஸ் சிந்திக்க வேண்டி வந்தது.

4.     1917-இல் ஐரோப்பாவில் மிகவும் பின் தங்கி யிருந்த ரஷ்ய நாட்டில் சோசலிசப் புரட்சி நடந் தேறியது. ரஷ்யப் புரட்சிக்கு சில முக்கிய விளைவுகள் உண்டு. புரட்சியின் தலைமை ஐரோப்பாவை விட்டு வெளியேறி விவசாயிகளை அதிகமாகக் கொண்ட கீழை நாடுகளை நோக்கி நகர்ந்தது. இதன் தொடர்ச்சியாக காலனிய நாடுகளின் விடுதலை இயக்கங்களுக்கு முக்கியத்துவம் கிடைத்தது. லெனின் இது குறித்து முதன்மைக் கவனம் செலுத்தினார். இருப்பினும் லெனினுக்குப் பிறகான உலகம் தழுவிய முதலாளிய முகாம் / சோசலிச முகாம் என்ற முரண்பாட்டில் காலனிய விடுதலைச் சக்திகள் துணைச் சக்திகளாக ஆக்கப்பட்டன. காலனிய நாடுகளின் புரட்சிகர இயக்கங்களுக்கு சோசலிச முகாம் எத்தனையோ உதவிகளைச் செய்துள்ளது. ஆயின் இதன் மறுபக்கமாக உலக அளவிலான அரசியல் மோதலுக்கேற்ப மூன்றாம் உலக நாடுகள் தமது அரசியலைத் தகவமைத்துக்கொள்ள வேண்டும் என்று கோரப்பட்டது. உலக அளவிலான முரண் பாடு என்ற மேல்நிலையிலிருந்து எழுந்த இந்த அரசியல் பல வேளைகளில் அந்நாடுகளின் உள் நாட்டு யதார்த்தங்களைப் புறக்கணிப்பதற்கு இட்டுச் சென்றது. சீனா, வியட்நாம், கியூபா, யுகோஸ்லாவியா ஆகிய நாடுகள் மேற்குறித்த உலகு தழுவிய அரசியலை மீறிச் சென்றன என்பதும் இங்குச் சொல்லப்பட வேண்டும்.

5.     இத்தகைய பின்புலத்தில் தான் ஆசிய, ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளில் தேசிய விடுதலை இயக்கங்களும் கம்யூனிஸ்ட் இயக்கங்களும் தோற்றம் பெற்றன. உலக அளவிலான கம்யூனிஸ்ட் முகாமின் நலன்கள், தேசிய விடுதலை இயக்கங்களுக்கும் கம்யூனிஸ்டுகளுக்குமான உறவுகள் ஆகியவற்றைச் சார்ந்தே கம்யூனிஸ்டுகள் தமது வேலைத் திட்டங்களை அமைக்க வேண்டியிருந்தது. இருப்பினும் சொந்தச் சமூகங்களின் உள் முரண் பாடுகள் குறித்த விவாதங்களும் நிறம், சாதி, சிறு தேசிய இனங்கள், விவசாயிகள் குறித்த பிரச்சினை களும் கீழிருந்து மேலெழுந்து வந்தன.

6. கம்யூனிஸ்டுகள்:

1. கம்யூனிஸ்டுகள் நாடெங்கும் உழைப்பு சார்ந்த சுயமரியாதை உணர்வை உருவாக்கினர். மானுட உழைப்பு ஒன்றே உபரி மதிப்பை, உபரிச் செல்வத்தைப் படைக்கும் ஆற்றல் கொண்டது என்பது மார்க்சியம். சாதிச் சமூக இழிவுபடுத் தல்கள் நிறைந்த இந்திய சமூகத்தில் இது மிக முக்கியமானது. உழைப்பே எல்லாச் செல்வங் களையும் படைக்கிறது என்ற மார்க்சியக் கோட் பாடு உழைப்பாளிகளைச் சுயமரியாதை கொண்டவர் களாக்குகிறது. ஏழை என்ற அடிப்படையில் அல்ல, உழைப்பாளிகள் என்ற அடிப்படையில் கம்யூனிஸ்டுகள் மக்களைத் திரட்டினார்கள். கருணையினால் அல்ல, உரிமை கொண்டவர்கள் என்ற அடிப்படையில் கம்யூனிஸ்டுகள் உழைப்போரைத் திரட்டினார்கள். (சுயமரியாதை பேசிய திராவிட இயக்கத்தார் உண் மையில் நிலப்பிரபுத்தன்மை கொண்ட இலவச வேட்டி சேலைக் கலாச்சாரத்தைத் தமிழகத்தில் பரப்பினர் என்பது இதனுடன் ஒப்பிடத்தக்கது.)

2.     புரட்சி அல்லது சமூக மாற்றம் குறித்த சிந்தனையை நகரங்கள், கிராமங்களில் கம்யூனிஸ்டுகள் உருவாக்கினர். புரட்சி என்பது சமூக முழுமையின் அடிப்படை மாற்றம். பல ஆயிரம் ஆண்டுகளின் ஏற்றத்தாழ்வு ஒழிக்கப்பட முடியும் என்ற உணர்வினை, நம்பிக்கையினை கம்யூனிஸ்டுகள் ஏற்படுத்தினர். ஒரு சமத்துவப் பொதுஉடைமைச் சமுதாயம் சாத்தியம் என்ற உணர்வினை ஏற்படுத்தினர். உடைமை குறித்த ஓர் எதிர்மனோ பாவத்தை கம்யூனிஸ்டுகளால் ஏற்படுத்த முடிந்தது. உழைப்பாளி / உடைமை யாளன் என்ற எதிர்வைக் கட்டியமைக்க முடிந்தது. கம்யூனிஸ்டுகள் கிராமங்கள் தோறும் புதிதாக அறிமுகப்படுத்திய சொற்களை நினைவுக்குக் கொண்டு வரவேண்டும். வரலாற்றில் சில மதங்கள் மட்டுமே விடுதலை, சொர்க்கம், சுபிட்சம் போன்ற சொற்களை இதுவரை பேசி வந்திருக்கின்றன. ஒரு நல்லநாள் வரும் என்ற எதிர்பார்ப்பை அவை மட்டுமே ஏற்படுத்தி வந்திருக்கின்றன. நம்மூர் மக்களோ எமது காலத்தில் இல்லை என்றால் எம் பிள்ளைகள் காலத்தில் நாம் நன்றாக வாழ்வோம் என்று நம்பி வந்திருக்கின்றனர். அவை போன்ற தூரத்து நம்பிக்கைகளை நடப்பு வாழ்க் கைக்கு மிக அருகாமையில் கொண்டு வந்தனர் கம்யூனிஸ்டுகள்.

3.     சமூக மாற்றங்களைப் போராட்டங்களின் மூலமாகவே ஏற்படுத்த முடியும் என்ற கருத்தை கம்யூனிஸ்டுகள் மிக ஆழமாகப் பதித்தனர். போராட்டம் என்பது தன்னுணர்வு பெறுதல். ஒரு வகையில் இதுவே ஒருவகை விடுதலை. தன்னுணர்வு பெற்றவர் மனதளவில் விடுதலை பெற்று விடுகிறார். போராட்டம் என்பது கூட்டு உணர்வை உண் டாக்குகிறது. உழைப்பாளிகளுக்கிடையிலான வேறுபாடுகளை, குறிப்பாக சாதி வேறுபாடுகளை, அது அகற்றுகிறது. போராட்டம் என்பது மனத் தளவிலான தயக்கங்களை அப்புறப்படுத்தி விடுகிறது. ஆண்டானைப் பற்றிய, அரசைப் பற்றிய மலைப்பு களை, அச்சங்களை அது அகற்றிவிடுகிறது. போராடு பவரைக் கண்டால் உடைமைதாரனுக்குப் பயம் ஏற்படுகிறது என்பதைத் தெரிந்து கொள்கிறோம். சொந்த நலன்களுக்காக முதலில் போராடத் துவங்குபவர் இன்னொருவனுடைய நலன்களுக் காகவும் போராட முன்வருகிறார். மாக்சிம் கோர்க்கியின் “தாய்” நாவலை நினைவில் கொள்ள லாம். போராட்டக் களத்தில் தியாகம் என்ற மதிப்பு உருவாகிறது. கம்யூனிஸ்டுகளின் தியாகங்களைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா?

4) அமைப்புகளின் வழியாக மக்களைத் திரட்டுதலும் போராடுதலும் நிகழுகின்றன. அமைப்பில் ஒருங்கிணைத்தலும் சனநாயக நடை முறையும் இரண்டு கூறுகள். அதீத தனிமனித நிலைப்பாடுகள் அமைப்பின் வழி அகலுகின்றன. கிராமப் புறங்களில் கம்யூனிஸ்ட் அமைப்புகள் சன நாயகத்தை சமூகத்தின் நுண்மையான வட்டாரங் களுக்குக் கொண்டு வந்தன. கம்யூனிஸ்ட் அமைப்புகள் என்பவை பள்ளிக்கூடங்கள், வாசகசாலைகள், போராளிக்குழுக்கள், மாற்று அதிகார மையங்கள், குடிமைச் சமூக நிர்வாக நிறுவனங்கள், மாற்றுக் கருத்தியல் நிறுவனங்கள், ரகசிய கொரில்லா போராட்ட மையங்கள், சில வேளைகளில், அவை ராணுவக் கேந்திரங்கள், போராட்டப் பயிற்சி மையங்கள், கூட்டு வாழ்க்கைத் தகவுகளை உற்பத்தி செய்யும் பட்டறைகள்.

5) காலனியச் சூழல்களில் நாட்டு விடுதலையோடு சமூக விடுதலை, பொருளாதார விடுதலை என்ற கருத்துக்களை கம்யூனிஸ்டுகள் விதைத்தனர்.

6) கம்யூனிஸ்டுகள் ஒடுக்கப்பட்ட மக்களை சமூக அரசியல் அரங்கினுள் கொண்டு வந்தனர். குறிப்பாக விவசாய இயக்கங்கள் தொழில்பட்ட இடங்களில் பெரும்பாலும் விவசாயத் தொழிலாளர் களாக இருந்த ஒடுக்கப்பட்ட சாதியினரை மைய மாகக் கொண்டே கம்யூனிஸ்ட் அமைப்புகள் செயல் பட்டன. எல்லாவித ஒடுக்குமுறைகளும் கம்யூனிஸ்டு களால் கவனத்திற்குள் கொண்டு வரப்பட்டன.

7. இந்திய, தமிழ்ச் சூழல்களில் கம்யூனிஸ்டு களைப் பற்றிப் பேசும்போது இரண்டு இயக்கங் களைப் பற்றிய விவாதங்கள் தேவையாகின்றன. ஒன்று: திராவிட இயக்கம், மற்றொன்று: தலித் இயக்கம்.

8. திராவிட இயக்கம்:

i. வர்க்க அரசியல் அல்லாத அடையாள அரசியல் என்ற வேலைத்திட்டத்தை திராவிட இயக்கம் உருவாக்கியது. இவ்வகை அரசியலுக்கு மரபுசார்ந்த வேர்கள் இருந்தன. சாதிச் சமூகம் குறித்த கவனம் திராவிட இயக்கத்திற்கு இருந்தது. உள்நாட்டு உடனடிச் சூழல்கள் பற்றிய குவிமையம் இவ்வகை இயக்கங்களுக்கு உண்டு.

ii. அதன் தோற்றகாலத்திலிருந்தே நில உடைமை, முதலாளியம் மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பற்ற பார்ப்பன‌ எதிர்ப்பு திராவிட இயக்கத்தின் வேலைத் திட்டமாக இருந்து வந்திருக்கிறது. திராவிட. இயக்கத்தில் அரசு எதிர்ப்புப் பண்பும் பலவீன மானதே. சாதி ஆதிக்கம், நில உடைமை மற்றும் ஆரம்ப முதலாளியப் பண்பு கொண்ட ஒரு முக்கிய போட்டியாளரை அப்புறப்படுத்தும் நோக்கமே அதன் முதன்மையான முயற்சியாக இருந்தது. அதற்காக பார்ப்பன‌ரல்லாத அனைவரையும் அது ஒன்றுபடுத்த முயன்றது.

iii. வெளிப்படையாக சமயம் சாராத மொழி வழி அரசியல், இந்தி எதிர்ப்பு ஆகியவற்றின் ஊடாக மாணவர், ஆசிரியர், வழக்கறிஞர்கள் போன்ற நடுத்தரவர்க்கங்களைக் கையகப்படுத்திய அரசியல். அவை நவீன சமூகத்தின் மக்கட் பிரிவுகள். தொழிலாளர் வர்க்கம் நவீன தொழில்நுட்ப சமூகத்தின் வர்க்கம் என்றே மார்க்ஸ் அதனை முன்னிலைப்படுத்தினார். ஆயின் தொழிற்சாலைகள் பெருகாத இந்தியா போன்ற பழைய நாட்டில், மாணவர், ஆசிரியர், நடுத்தர வர்க்கம் ஆகியவை நவீனமயமாக்கத்தின் முனைப்பான சக்திகள். அவை கல்வி, அரசு பதவிகள், சட்ட நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு நெருக்கமானவை என்பது குறிப்பிடத் தக்கது. நவீன வெகுசன உருவாக்கத்தின் கருத்தியல் மற்றும் பண்பாட்டு ஆயுதங்களான மேடைப்பேச்சு, திரைப்படம், பத்திரிகைகள் ஆகியவற்றையும் திராவிட இயக்கம் முன்னுரிமை வழங்கிப் பயன் படுத்திக் கொண்டது.

iv. திராவிடக் கருத்தியல் பார்ப்பன‌ரல்லாத தமிழ்நாட்டு உடைமைச் சாதிகளின் படிநிலை வர்க்க நலன்களைப் பங்கீட்டு அடிப்படையில் ஒருங்கிணைத்து அதனையே ஒட்டுமொத்த தமிழ்ச் சிந்தனையாகக் காட்டியது. பார்ப்பன‌ரல்லாதார், தமிழ் என்ற கருத்தாக்கங்கள் வெற்றி பெற்றன. ஆளும் வர்க்கம் தனது நலன்களை எல்லா வர்க்கங் களின் நலனாகவும் காட்டும் என்று மார்க்ஸ் கூறியது இங்கு ஒப்புநோக்கத்தக்கது.

v. திராவிட இயக்கத்தின் தோற்றம், வளர்ச்சி ஆகியவற்றைத் தமிழ் தேசியத்தின் தோற்றம், வளர்ச்சி எனக் கொள்ளலாம். ஆயின் ஒவ்வொரு தேசியத்தின் வரலாற்றினுள்ளும் அதன் முதலாளிகள் தோன்றுகிறார்கள் என்ற வரலாறு அடங்கியுள்ளது. படிப்படியாகத் திராவிடக் கட்சிகளின் கொள்கை மற்றும் நடைமுறையின் ஊடாக முதலாளி வர்க்கத் தமிழ் தேசிய உருவாக்கம் நிகழ்ந்தேறியது. அதாவது அடையாள அரசியலைக் கீழ்நோக்கி நகர்த்தத் தவறினால் அது மேட்டிமைச் சக்திகளால் கைப் பற்றப்பட்டுவிடும் என்ற பாடம் கிடைக்கிறது. இன்னும் சரியாகச் சொல்லுவதானால், அடை யாள இயக்கத்தைப் புறக்கணிப்பதால் அதனை வெல்லமுடியாது, குறிப்பாக இந்தியா போன்ற நாட்டில், தோழர்கள் சிங்காரவேலரும் ஜீவாவும் அடையாள இயக்கங்களைப் புறக்கணிக்காத நோக்கையும் போக்கையும் கொண்டிருந்தனர். அவற்றோடு நெருக்கமான உரையாடல்களையும் அவற்றை இடதுபுறம் திருப்பும் அணுகுமுறையையும் கொண்டிருந்தனர். அடையாள இயக்கத்தைக் கீழ் நோக்கி நகர்த்துவதற்கான நாட்டுப்புறப் பண் பாட்டுத் தளத்தை பேராசிரியர் நா. வானமாமலை வழங்கினார்.

vi. இன்று திராவிட அரசியல் அம்மணமாகி நிற்கிறது. ஈழத்தமிழர் பிரச்சினை, ஸ்பெக்ட்ரம் ஊழல், கலைஞரின் குடும்ப நலன்கள் ஆகியவை திராவிட அரசியலைத் துணியுரிந்து காட்டிவிட்டன. ஆயின் அடையாள அரசியலுக்கு இன்னும் ஆற்றல்கள் உள்ளன. இவ்வேளையில் கீழிருந்து தமிழ் அடை யாளத்தைக் கட்டி எழுப்பும் வேலைகளைக் கம்யூனிஸ்டுகள் செய்யவேண்டியுள்ளது. கீழிருந்து தமிழ் அடையாளம் என்பதில் விவசாயிகளுக்கு முக்கிய பங்கு உண்டு. நிலம், சுற்றுச் சூழல், நீர் ஆதாரங்கள், நாட்டுப்புற மக்கட் பண்பாட்டு, போர்க்குணம் சார்ந்த தமிழ் அடையாளம் கட்டி எழுப்பப்படவேண்டும்.

9. தலித் இயக்கம்:

i. கம்யூனிஸ்டுகளின் விவசாய அரசியலில் தலித் அரசியல் உண்டு. தலித் அரசியல் சாதி அரசியலாக முடங்கிவிடக் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வு கம்யூனிஸ்ட் அரசியலில் உண்டு. மார்க்சியத்தின் வழியாக தலித் அரசியல் ஒரு தத்துவார்த்த கோட் பாட்டுப் பலத்தைப் பெற்றது. ஆயின் வெளிப் படையாக சாதியும் வர்க்கமும், அம்பேத்கரும் மார்க்சும் என்ற உரையாடல்கள் நடத்தப்பட வில்லை. அவை நடத்தப்படவேண்டும்.

ii. நாம் அம்பேத்கரிலிருந்து தொடங்க வேண்டும். அம்பேத்கர் சாதிகளைப் பல வேளைகளில் வர்க்கங்கள் என்றே குறிப்பிட்டார். இந்திய வரலாற்றை வர்க்கப் போர்களின் நாடு என்றார். வர்க்கப் போராட்டம் குறித்த மார்க்சியக் கோட் பாட்டிற்கு இந்திய வரலாறு மிகச் சரியான எடுத்துக் காட்டு என்றார். இந்தியாவில் உழைப்புப் பங்கீடு உழைப்பாளர்களின் பங்கீடாகவே (பிறப்பு அடிப் படையில்) நடந்துள்ளது என்றார். பண்டைய இந்தியாவில் பௌத்தம் சார்ந்த ஒரு புரட்சியும் பிராமணியம் சார்ந்த ஓர் எதிர்ப்புரட்சியும் நிகழ்ந் துள்ளன என்றார். சாதிகளற்ற சமத்துவம் ஒரு கட்சியாகவும் வருண சாதி அமைப்பு இன்னொரு கட்சியாகவும் தொடர்ந்து தொழில்பட்டு வந்து உள்ளன என்று அம்பேத்கர் சுட்டிக்காட்டினார். பொருளாதாரச் சுரண்டல், அகமணமுறை, சமயக் கோட்பாடு ஆகிய அடிப்படைகளோடு (அடித்தளக் கூறுகளும் மேற்கட்டுமானக் கூறுகளும் இணைந்து) சாதி அமைப்பு இங்கு வலுவாக நிறுவப்பட்டு உள்ளது என்றார். இந்திய வரலாறு ஒரு மிகப் பெரிய சமூகக் கருத்தியல் முரண்பாட்டின் மீது கட்டியெழுப்பப்பட்டுள்ளது. அம்முரண்பாடு இன்று வரை தீர்க்கப்படாமல் தான் உள்ளது என்றார்.

பண்டைய இந்தியாவில் பௌத்தத் திற்கும் பிராமணியத்திற்கும் இடையில் நிகழ்ந்த அன்றைய போராட்டத்தை இன்று மீட்டு நிகழ்த்த வேண்டும் என்றார். பூர்வ பௌத்தம், பூர்வீகத் தமிழ்ப் பண்பாடு ஆகியவை இன்றுவரை கிராமப் புற உழைக்கும் மக்களின் நாட்டுப்புறப் பண் பாடாகத் தொடர்ந்து வாழுகிறது என்று அயோத்தி தாசப் பண்டிதரும் குறிப்பிட்டார். சுதந்திரமடைந்த இந்தியா அரசு சோசலிசம் என்ற வடிவத்தை ஏற்க வேண்டும் என்று அம்பேத்கர் வலியுறுத்தினார். இது தேர்தல் அரசியல் பெரும்பான்மையால் மாற்றப்பட முடியாதபடி அரசியல் சட்டத்தின் முன்முடிவாக வரையறுக்கப்பட வேண்டும் என்றார். தொழிற்சாலைகள் தேசியமயமாக்கப்பட வேண்டும் என்றார் அம்பேத்கர். நிதி நிறுவனங்களும் இன்சூரன்ஸ் கம்பெனிகளும் நாட்டுடைமையாக்கப்பட வேண்டும் என்றார்.

கிராமப்புறங்களில் விவசாயக் கூட்டுப்பண்ணைகள் அமைக்கப்பட வேண்டும் என்றார். கூட்டுப்பண்ணைகள் சார்ந்து தொழிற் சாலைகள் அமைக்கப்பட வேண்டும் என்றார். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இரட்டை வாக்குரிமை, தனித்தொகுதிகள், கல்வி-வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்றார். சிறுநில விவசாயிகளுக்கு இடுமுதலீட்டு வாய்ப்புகளை அரசே வழங்கவேண்டும் என்றார். பிராமணியமும் முதலாளியமும் இந்தியாவின் மிகப்பெரிய இரண்டு அபாயங்கள் என்றார். சாதி ஒழிப்புக்கான போராட்டம் இந்தியாவில் சோசலிசத்திற்கான போராட்டத்திற்கான முதற்படி என்றார். மேற் குறிப்பிட்ட அம்பேத்கரின் நிலைப்பாடுகளில் எந்த ஒன்றும் எந்த வகையிலும் கம்யூனிஸ்டுகளுக்கு அந்நியமானது அல்ல.

iii. தமிழ்நாட்டிலும் அகில இந்திய அளவிலும் செயல்பட்டு வரும் தலித் அரசியல் கட்சிகள் அம்பேத்கரின் ஒட்டுமொத்த நிலைப்பாடுகளைக் கவனத்தில் கொள்ளுவதில்லை. நில உடைமை, முதலாளியம், ஏகாதிபத்தியம் ஆகியவை குறித்த காத்திரமான மதிப்பீடுகள் இல்லாதவையாக அவை இருக்கின்றன. முதலாளியம், ஏகாதிபத்தியம், உலகமயமாக்கம் ஆகியவற்றைக் காரியவாத நோக்கில் ஆதரிப்பவையாக அவை உள்ளன. சாதியத் திரட்சி, அடையாள அரசியல் ஆகியவற்றை அவை முற்ற முடிந்தவையாகக் கொள்ளுகின்றன. சில தலித் அமைப்புகள் கம்யூனிச எதிர்ப்பு நிலைப்பாடு களையும் கொண்டுள்ளன.

10. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 85 ஆண்டுக் காலப் போராட்ட வரலாற்றுக்குப்பிறகு, இன்றைய சூழல்களில், கம்யூனிஸ்டுகளின் கடமைகளைக் கீழ்க்கண்டவாறு வரையறுக்கலாம்.

i. தொழிலாளர் வர்க்கம், விவசாயிகள் வர்க்கம் என்ற இரட்டை நிலை சாத்தியமில்லை. தொழிலாளர்- விவசாயிகள் ஒற்றுமை என்ற நிலை சாதிக்கப் படவேண்டும்.

ii. சோசலிசப் புரட்சி, சனநாயகப் புரட்சி என்ற இரட்டை நிலையும் சாத்தியமில்லை. சோசலிசத்திற்கு இட்டுச் செல்லக்கூடிய சனநாயக வேலைத்திட்டத்தை நாம் கொள்ளவேண்டும். இந்தியச் சூழல்களில், சனநாயகப் புரட்சி என்பது நில உடைமை மற்றும் சாதி ஒழிப்பு எனில், அது சோசலிசப் புரட்சியை விட தீவிரமானதாகவும் வன்முறை கொண்ட தாகவும் அமையலாம். ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேலான சாதியச் சுரண்டல் மற்றும் அடக்குமுறை மரபுகளுக்கு எதிரான போராட்டம் அத்தகைய தீவிர வடிவம் பெறுவதைத் தடுக்க இயலாது. இத்தகைய சூழல்களில் தான் மார்க்சிய அம்பேத் கரிய உரையாடல் முக்கியப்படுகிறது.

iii. இதே விவாதத்தின் தொடர்ச்சியாக, தமிழ் அடையாள அரசியல் குறித்த நமது அணுகுமுறை யையும் வகுக்க வேண்டும். அடையாள அரசியலை நாம் புறக்கணிக்க முடியாது. தமிழ் அடையாளத்தை மேலிருந்தும் கட்டலாம், கீழிருந்தும் கட்டலாம். கம்யூனிஸ்டுகளும் அம்பேத்கரியர்களும் மிகவும் உணர்வுபூர்வமாகத் தமிழ் அடையாளத்தைக் கீழிருந்து கட்டி எழுப்ப வேண்டும். அதற்கான தொடக்கப் புள்ளிகள் தோழர்கள் சிங்காரவேலர், ஜீவா, நாவா ஆகியோரிடம் உண்டு.

iv. முதலாளியம் இந்திய சமூகத்தை, இந்திய விவசாயத்தை அழித்தொழிக்கும் என்ற கம்யூனிஸ்டுகளின் கருத்து, காலம் செல்லச் செல்ல மெய்ப் பட்டே வருகிறது. சுற்றுச் சூழல் அழிவு, நகர்ப்புற சமூகத்தின் ஆழமான உளவியல் நெருக்கடிகள், விவசாயத்தின் அழிவு, அரசு மற்றும் பிற துறைகளில் ஊழல், பழங்குடிகளின் நிலங்களை வெளி நாட்டு மூலதனக்காரர்கள் கைப்பற்றி வருதல், உள் நாட்டு - வெளிநாட்டு மூலதனங்களின் முன்னால் அரசு தனது கட்டுப்பாட்டை இழந்து வருதல் ஆகியவற்றை முன் எப்போதையும் விட இப்போது மிக அதிகமாகச் சந்தித்து வருகிறோம். கம்யூனிஸ்டுகள் அமைப்புரீதியாகத் திரளுவதும் தீவிரமடைவதும் சமூகரீதியாக கீழிருந்து மேலாகப் பலதரப்பட்ட மக்கள்பகுதியினரை அணைத்துச் செல்லுவதும் முன் எப்போதையும்விட இப்போது அவசியமாகிறது. ஏற்கனவே அமைப்புரீதியான போராட்ட அனுபவம் கொண்ட விவசாயிகள் இயக்கமும் தொழிலாளர் இயக்கமும் இப்பணியில் முன்னிலை வகிக்க வேண்டியதும் முன் எப்போதையும்விட இப்போது அவசிய மாகிறது.

(25.12.2010 திருவாரூரில் நடைபெற்ற இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 85 ஆவது அமைப்பு தின விழாக் கருத்தரங்கில் பேசப்பட்ட உரையின் சுருக்கம்)

Pin It