valparai busபொள்ளாச்சியில் இருந்து வால்பாறை பேருந்தில் ஏறி செல்வது சாகசம் என்றால்... வால்பாறைக்குள் எஸ்டேட் செல்லும் பேருந்துகளில் ஏறுவது சர்க்கஸ்.

பொள்ளாச்சியில் வால்பாறை பேருந்து ஏறுவதற்கு.. வண்டி வந்து திரும்பும் மெயின் சாலையில் இருந்தே ஓடி சென்று சீட் போடுவது வெகு இயல்பாக நடக்கும். ஜன்னல் வழியே துண்டை போட்டுக் கொண்டே... அல்லது உள்ளிருந்து இறங்குவோரிடம் தன் பையைக் கொடுத்தபடியே ஓடும் பேருந்தோடு ஓடி சென்ற காலமெல்லாம்... கற்பனைக்கும் எட்டாதவை.

வண்டி அப்படி திரும்பி அப்படி நகர்ந்து அப்படி வந்து நிற்கையில்..... அதற்குள்... எங்கிருந்தெல்லாமோ தெறித்துக் கொண்டு ஈசல்களை போல வெளி வந்து பேருந்து நோக்கி ஓடும் நாம் பேருந்தின் முன்னும் பின்னும்... கூட்ட நெரிசலும்... சலசலப்புமாக சுழன்று வரும் 

அந்தக் காட்சியை மிக கவலையோடு பகிர்ந்து கொள்கிறேன். 

அதே போல.. அவரவர் எஸ்டேட்டுக்கு செல்ல பேருந்து கீழிருந்து வந்தாலோ... மேலிருந்து வந்தாலோ... வால்பாறைக்குள் என்ட்ரி ஆகும் இடத்தில் இருந்தே இந்த சீட் போடும் போராட்டம் நடக்கும். வண்டி மேலே சென்று திரும்புவதற்குள்... ஒற்றைக் கதவின் வழியே யுத்தம் ஒன்று நடக்கும். எல்லாம் கொஞ்சம் நேரத்துக்குத் தான். உள் சென்று சீட் ஆன பிறகு.... போருக்கு பின்னான ஒரு வகை அமைதி வந்து விடும்.

உருளிக்கல்லில் இருந்து பொள்ளாச்சி செல்ல... பொள்ளாச்சியில் இருந்து சேக்கல் முடி செல்லும் பேருந்தில் உருளிக்கல்லில் ஏறி சேக்கல் முடி வரை சென்று பிறகு அங்கிருந்து பொள்ளாச்சிக்கு சீட் பிடித்து வந்த காலமும் உண்டு. 64 கிலோ மீட்டர் பயணிக்க... இந்த பக்கம் 20 கிலோ மீட்டர் பயணித்த யுக்தியை பிறகு பெரும்பாலோர் பின் தொடர... சேக்கல் முடி... கல்யாணப் பந்தல்... சோலையார் டேம்காரர்கள் தங்களுக்கு சீட் இல்லாமல் போகிறது என்று சண்டைக்கு வர... பிறகு அதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன... என்று பேருந்து கலாட்டாக்கள் சொல்லி மாளாது. 

இந்த கூத்தெல்லாம் பெரும்பாலும்.. பொங்கல் முடிந்து ஊருக்கு கிளம்புகையில்தான் நடக்கும். திருவிழா இன்னொரு முறை பேருந்துக்குள் நிகழ்வது... அப்போது கடுப்பாக இருப்பினும்... நினைத்து பார்க்கையில்... வேடிக்கையாக இருக்கும்.

சாதாரண பேருந்தில் இருப்பது போல பேருந்துக்கு இரண்டு பக்கம் கதவுகள் அங்கே இல்லை. ஒரே கதவு. ஒரே வழி. 

ஒரு பேருந்தின் கொள்ளளவு மீறி... ஜாம் ஆகி.. ஒருவரோடு ஒருவர் ஒட்டி.. மூச்சு விடக் கூட சிரமப்படும் பயணங்கள் எல்லாம் சர்வ சாதாரணமாக நடந்திருக்கிறது. இப்போது நினைத்தால் பயமாக இருக்கிறது. ஒவ்வொரு முறையும் வால்பாறையில் எஸ்டேட்டுக்கு பேருந்து ஏறுவது என்பது ஒரு சின்ன போரில் வென்ற பிறகு நடக்கும் பவனியாகத்தான் நினைத்துப் பார்க்கிறேன்.

அதுவும் அந்த கீழ் (புது )பஸ் ஸ்டென்ட் குளறுபடி... அங்கு சென்று தான் பேருந்து திரும்ப வேண்டும் என்ற நடைமுறை... போட்டு வாங்கும். பேருந்தில் வரிசையாக ஏறும் பழக்கம் நம் மக்களிடையே அப்போது இல்லை என்பதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். இப்போது இருந்தால் நலம் என்பது ஆவல். உருளும் டயர் மீது விட்டு விட்டு கால் வைத்து எடுத்து தொங்கியபடியே பேக்கை சீட்டில் போட்டு சீட் பிடித்த காட்சியெல்லாம்... இப்போதும் சிறுமூளைக்குள் கர்ண கொடூரமாக பேருந்து ஓட்டுகிறது.

போக்குவரத்து ஒழுங்கமைப்புகள் அங்கு அப்போது இருந்ததா இல்லையா என்று தெரியவில்லை. கூட்டத்தோடு கூட்டமாக நசுங்கி... நைந்து... உறைந்து.. உராய்ந்து தான்... ஒவ்வொரு முறையும் பேருந்து பயணம் சாத்தியமாகி இருக்கிறது. அதுவும் பாலாஜி கோயிலுக்கெல்லாம்... பேருந்து கிடைத்து ஏறி அமர்வது குதிரைக் கொம்பு. வால்பாறையில் பொள்ளாச்சி பேருந்தில் இடம் பிடித்து விட்டால்... அது ஒரு வகை ஆசுவாசம். ஏனென்றால் அடுத்த 2.30 மணி நேரம் சாலை வளைவு என்ன பாடு படுத்தும் என்பது நமக்குத் தெரியும். 

குறை கூறுவதற்காக கூறவில்லை. வாழ்வின் ஒரு பகுதியாக இந்த நிகழ்வும் அங்கு இருந்தது என்பதை... நினைவு கூறவே பகிர்கிறேன்.

பேருந்து பற்றாக்குறையோ... அல்லது... பிசினெஸ் நேர்த்தியோ.. பேருந்து இல்லாத இடைவெளியில்.. வேன்கள் ஓடின. வேன்களும்... சில கூட்ட நேரத்தில்... மக்களைக் குவித்துக் கொண்டுதான் செல்லும். ஆனால் உள்ளே இளையராஜா பாடல் எல்லாவற்றையும் மறக்கடித்து விடும். சும்மா கும் கும்மென்று போட்டு தாக்குவதில் உள்ளே இருக்கும்... இறுக்கம்... மெல்லத் தளரும். வண்டி நகர நகர பேருந்தின் ஆட்ட அசைவுக்கு ஏற்ப உள்ள சிறு சிறு வெற்றிடங்கள் உருவாகி காற்று கிடைத்து விடும். 

நிற்பதும்... அமர்வதும் ஒன்று தான்... அமர்ந்திருப்போருக்கு. இரண்டுக்கும் வேறுபாடு அறிந்தவர்கள் நிற்போர்கள். ஒரே பேருந்தில் வேறு வேறு விதிகள் நிகழும். வாழ்வின் படி அப்படி.

ஒரு தீபாவளிக்கு வேனுக்குள் தலையை குனிந்து நின்றபடியே 16 கிலோமீட்டர் பயணித்தது அப்போது இயல்பாக கடந்து விட்ட போதிலும் இப்போது திகிலாக உணர்கிறேன்.

வால்பாறை அற்புதமான சொர்க்கம்தான் என்ற போதிலும்.. அங்கு கிடைக்கும் வாழ்வாதாரம்.. போக்குவரத்து... சம்பளம்... மரியாதை... சம உரிமை... என்று பார்க்கையில்... சற்று பின் தங்கி தான் இருக்கிறோம் என்று தோன்றுகிறது. பேருந்தின் கட்டுப்பாடுகள் பெரிதாக மதிக்கப்படுவதில்லை. பேருந்தின் உள் கட்டமைப்புகள் கூட மழை நாளில்... காது கிழிந்து தொங்குவதை அறிந்தே இருக்கிறோம். போகிற போக்கில் எல்லாம் சாதாரணமாகி விடும் என்பதை அப்படியே எடுத்துக் கொள்ளலாமா.

அது அப்படித்தான் என்றால்....ஓடும் பேருந்தில் ஓடிக் கொண்டே டயர் மீது கால் வைத்து... அதே நேரம்.. கீழே தொங்கி தொங்கி...காற்றில் கால் வைத்து... ஜன்னல் வழியே பேக்கை போட்டு சீட் பிடிக்கும் திகில் சம்பவங்கள் இன்றும் நிகழ்கிறதா என்று தெரியவில்லை. நிகழக் கூடாது என்பது விருப்பம். 

சிலை என்றாலும்... காந்தி தான் சாட்சி. சுற்றி வந்து நிற்கும் பேருந்துக்கும்... சூழ ஏற நிற்கும் எம் மக்களுக்கும்.

- கவிஜி 

Pin It