ஒரு பயண நூல் எழுத்தாளர் என்கின்ற முறையில், தமிழகத்தில் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக, சில கருத்துகளைத் தெரிவிக்க விழைகின்றேன். 

1. தமிழ்நாட்டில் பொதுக்கழிப்பிடங்களை செங்கல், மண், சிமெண்ட் கொண்டு கட்டுவதால், காற்றுப்புக வழி இல்லாமல், மிக விரைவில் துர்நாற்றம் வீசுகின்றது. போதிய அளவு தண்ணீர் வசதிகள் இல்லாததால், கழுவி விடுவதும் இல்லை. பேருந்து நிலையங்களின் ஒரு மூலையில் உள்ள கழிப்பு அறைகளில் இருந்து கிளம்பும் நாற்றம், ஒட்டுமொத்தப் பேருந்து நிலையத்தையுமே நாறடிக்கிறது. பேருந்து நிலையங்களுக்கு உள்ளே நிற்கவே முடியவில்லை.

எனவே, ‘தமிழகத்தில் பொதுக் கழிப்பிடங்களுக்கு உள்ளே செல்லாதீர்கள்’ என்று அயல்நாடுகளில் வெளியாகின்ற சுற்றுலா வழிகாட்டிப் புத்தகங்களில் எழுதி உள்ளார்கள். அதனால், அயல்நாட்டுப் பயணிகள் எவரும் தமிழகத்துக்கு வர அஞ்சுகின்றார்கள் என, நான் அண்மையில் நோர்வே சென்று இருந்தபோது, அங்கே உள்ள நண்பர்கள் என்னிடம் தெரிவித்தார்கள். அந்த அளவுக்குத் தமிழ்நாட்டின் பெயர், உலக அளவில் கெட்டுக் கிடக்கின்றது.

மேற்கு நாடுகளில் உள்ளது போல, மிக எளிதாக நவீன பிளாஸ்டிக் தடுப்புகளால், தடுத்தாலே போதுமானது. அங்கே, உட்கார்ந்து பயன்படுத்துகின்ற பொதுக்கழிப்பு இடங்களில், உள்ளே அமர்ந்து இருப்பவரின் கால்கள் வெளியே தெரியும். கீழே ஒரு அடி உயரத்துக்குத் தடுப்பு எதுவும் இருக்காது. அதனால், கெட்ட காற்று எளிதாக வெளியேறி விடும். தலைக்கு மேலேயும் திறப்புகள்தாம் உள்ளன. எனவே, கழிப்பு அறைகளுக்கு உள்ளே நல்ல காற்றோட்டம் நிலகிறது, நாறுவது இல்லை.

கழிப்பு அறைகளை ஏன் கல், மண், செங்கல் வைத்துப் பாதுகாப்பாகக் கட்ட வேண்டும்? அதில் என்ன புதையலை வைத்துப் பாதுகாக்கிறோமா? எனவே, தமிழகம் முழுமையும் உள்ள பொதுக்கழிப்பு அறைகளை உடனே இடிக்க வேண்டும். இனி, செங்கல், மண் வைத்துக் கட்டவே கூடாது.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பே இந்தக் கருத்தை, சுற்றுலாத் துறைச் செயலரை நேரில் சந்தித்துப் பேசி, கடிதமாகவும் எழுதிக் கொடுத்தேன்.

புதுச்சேரி கடற்கரையில், இத்தகைய கழிப்பு அறைத்தடுப்புகளை அமைத்து இருக்கின்றார்கள் என்றார். அதுபோலத் தமிழகத்திலும் ஏற்பாடு செய்யுங்கள் என்று கேட்டுக் கொண்டேன். சுற்றுலா அமைச்சருக்கும் கடிதம் எழுதி உள்ளேன். சுற்றுலாத் துறையில் பணி ஆற்றுகின்ற பலரிடமும் இந்தக் கருத்தைத் தெரிவித்து உள்ளேன். இதுவரையிலும் எந்த நடவடிக்கையும் இல்லை. 

2. ஆயிரம் கிலோமீட்டர் நீள கடற்கரையைக் கொண்டு இருக்கின்ற தமிழ்நாட்டில், கடல்வழிப் பயணம் என்பது அறவே இல்லை. மலேசியாவில் கடற்கரையோர நகரங்கள் அனைத்தும் படகுப் போக்குவரத்தால் இணைக்கப்பட்டு உள்ளன. படகுப் பயணம், பாதுகாப்பானதும்கூட. அதிகம் விபத்துகள் இருக்காது.

லங்காவி தீவில் இருந்து, குவால கெடா என்ற இடத்துக்கு அவ்வாறு படகில் சென்றேன். மிக இனிமையான பயணம் அது. அதுபோல, தமிழகத்தின் கடற்கரையோர நகரங்களை, படகுப் போக்குவரத்தால் இணைக்க வேண்டும்.

அதன்வழியாக, நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசலைப் பெருமளவு குறைக்கலாம். முதல் கட்டமாக, சென்னையில் இருந்து புதுச்சேரிக்கும், நாகப்பட்டினம், இராமேஸ்வரத்துக்கும் கடலில் பயணிகள் படகுப் போக்குவரத்து தொடங்க வேண்டும். இதனால், ஏராளமான அயல்நாட்டுச் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கலாம்.

3. கேரள மாநிலத்தின் படகு வீடுகள், உலக அளவில் சுற்றுலாப் பயணிகளை இலட்சக்கணக்கில் ஈர்த்து வருகின்றன. அண்மையில், ஃபிரான்ஸ் நாட்டில் இருந்து வந்த என்னுடைய நண்பர்கள், அங்கிருந்தே முன்பதிவு செய்து வந்து, படகு வீடுகளில் தங்கி மகிழ்ந்தார்கள். இதே கீற்று இணையதளத்தில், பிச்சாவரம் குறித்து நான் ஒரு கட்டுரை எழுதி உள்ளேன். அங்கே, படகு வீடுகளை உடனடியாக அமைக்கக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன.

4. அயல்நாடுகளில், பலூன்களில் பறக்கின்ற விளையாட்டுகள் மிகவும் பிரபலம். தமிழ்நாட்டின் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் அடிவாரப் பகுதிகளில் நல்ல காற்று வீசுகின்றது. அங்கே, சுற்றுலாப் பயணிகள், பலூன்களில் பறந்திட வசதிகளை ஏற்படுத்தினால், வட இந்தியாவில் இருந்து இலட்சக்கணக்கான பயணிகளையும், அயல்நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான பயணிகளையும் தமிழகத்துக்கு வர வைக்கலாம். இந்தத் திட்டத்தை, முதலில் கோவை, நீலகிரி மாவட்டங்களில் தொடங்கலாம்.

5. ஊட்டி, அரசு தாவரவியல் பூங்காவுக்கு உள்ளே (Botanical Garden), ஹேண்டிகேம் கேமரா கொண்டு செல்வதற்கு ரூ 500 கட்டணம் விதிக்கப்பட்டு உள்ளது. இது மிகவும் அதிகம்.

திரைப்படக் காட்சிகளைப் படமாக்குவதற்கு, பல்லாயிரக்கணக்கில் கட்டணம் வசூலிப்பது சரிதான். ஆனால், இன்றைக்கு சாதாரண கேமராக்களில் கூட வீடியோ படம் எடுக்கின்ற வசதி உள்ளது. பூங்காவுக்கு வருகின்ற நடுத்தர மக்கள் எடுக்கின்ற படங்களை உறவினர்களிடம் காண்பிப்பார்கள். அதைப் பார்ப்பவர்களிடம், ஊட்டிக்குச் சென்று வர வேண்டும் என்ற ஆவல் ஏற்படும். ஆனால், 500 ரூபாய் என்ற கட்டணத்தைக் கேட்டவுடன், பலரும் அதிர்ச்சி அடைவதைப் பார்த்தேன். பெரும்பாலான நடுத்தரக் குடும்பத்தினரிடம் அத்தகைய கேமராக்கள் உள்ளன. அவர்களுக்கு இந்தத் தொகை மிகவும் அதிகம். நானும் என்னுடைய வீடியோ கேமராவை உள்ளே கொண்டு செல்லவில்லை. எனவே, தமிழக அரசின் சுற்றுலாத்துறை வீடியோ கேமரா கட்டணத்தை 100 ரூபாயாகக் குறைக்க வேண்டும். 

6. தாஜ்மகாலில், உத்தரப்பிரதேச சுற்றுலாத் துறையின் அனுமதிபெற்ற முகப்படக் கலைஞர்கள் பணி ஆற்றுகின்றார்கள். அவர்கள் வைத்து இருக்கின்ற படக்கருவிகள் புதிய, அண்மைக்காலத் தொழில்நுட்பம் கொண்டவையாகவும் இருக்கின்றன. அவர்கள் எடுத்துத் தருகின்ற படங்கள் அழகாக இருக்கின்றன. கடந்த மாதம், நான் தாஜ்மகாலைச் சுற்றிப்பார்த்துத் திரும்புவதற்குள் அவர்களே பிரிண்ட் போட்டுக் கொடுத்து விட்டார்கள்.

ஊட்டி பூங்காவில் 10 படங்கள் 75 ரூபாய் என்று பேசி ஒருவரிடம் படம் எடுத்தேன். அவர் வைத்து இருந்தது மிகப்பழைய கேமரா. ஜூம் கிடையாது. படம் எடுத்த பிலிமைத்தான் என்னிடம் தந்தார். வெளியில் வந்து பிரிண்ட் போட்டுப் பார்த்ததில், பத்து படங்களுள் மூன்று மட்டுமே ஓரளவு தேறியது. ஏமாற்றம்தான் மிஞ்சியது. எனவே, சுற்றுலாத் துறையின் சார்பில் நல்ல தரமான முகப்படக் கலைஞர்களை, புதிய தொழில் நுட்பம் வசதிகள் உள்ள கேமராக்களைப் பயன்படுத்தி படம் எடுக்கச் செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றேன். அத்தகைய கேமராக்களை, தவணைத்திட்டத்தில் அரசே அவர்களுக்கு வழங்கலாம். 

- அருணகிரி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

(குறிப்பு: கட்டுரையாளர் ஒரு பயண நூல் எழுத்தாளர். 11 நாடுகளைச் சுற்றிப் பார்த்து, உலகம் சுற்றும் வாலிபன், ஆல்ப்ஸ் மலையில் அருணகிரி, அந்தமானில் அருணகிரி, உலக வலம் ஆகிய பயண நூல்களை எழுதி வெளியிட்டு உள்ளார். பயணித்த நாடுகளில் எடுத்த படக்காட்சிகளைத் தொகுத்து, உலகம் சுற்றும் வாலிபன் என்ற தலைப்பிலேயே, ஒளிப்படக் குறுவட்டாகவும் (DVD) வெளியிட்டு உள்ளார். தமிழில் உள்ள ஒரே பயண ஒளிப்படக் குறுவட்டு அதுதான்.)

Pin It