குமரி மாவட்டத் தலைநகரான நாகர்கோவில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அமைந்துள்ள சுற்றுலாத்தலங்களை காண்போம்.

சோழராஜா கோவில்

நாகர்கோவில் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது சோழராஜா கோவில். ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்தக் கோவில் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது. நாகர்கோவில் ரயில் நிலையத்தில் இருந்து 2 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள இந்தக்கோவிலுக்கு நாகர்கோவில் ரயில் நிலையத்தில் இருந்து ஆட்டோ மூலம் செல்லலாம்.

கற்கோவில்

நாகர்கோவிலில் மையப் பகுதியில் பார்ப்பவர்கள் பிரமிக்கும் வகையில் அமைந்து உள்ளது கற்கோவில். தென்கிழக்கு ஆசியாவில் உள்ள கல்லால் கட்டப்பட்ட மிகப்பெரிய கிறுஸ்துவ ஆலயம் இதுவாகும்.

1817- ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில் இருந்து இந்தியாவுக்கு வந்த சாள் மீட் என்பவரால் இந்த ஆலயம் எழுப்பப்பட்டது. தனது நிர்வாகத்தின் கீழ் இருந்த சிறைக் கைதிகளை இந்தக் கோயில் கட்டுமானப் பணிகளுக்கு பயன்படுத்தியுள்ளார். ஆலயத்தின் கூரையில் பயன்படுத்தப்பட்டிருக்கும் மரங்களில் பல சிற்ப வேலைப்பாடுகள் சிறப்பான முறையில் அமைக்கப்பட்டுள்ளன.

1819-ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு செயல்பட்டு வரும் இந்த கோயிலின் பழமை வாய்ந்த கட்டட அமைப்புகள் இன்றும் மாற்றப்படாமல் பாதுகாக்கப்படுகிறது.

மருத்துவா மலை

மருந்துகளும் மூலிகைகளும் நிறைந்து காணப்படுவதால் மருந்து வாழும் மலை என்றும் அழைக்கப்படுகிறது. புராணங்களின் படி சஞ்சீவி மலையை அனுமன் எடுத்துச் செல்லும்போது விழுந்த ஒரு பகுதி என்று கூறப்படுகிறது. நாகர்கோயிலில் இருந்து 11 கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. நாகர்கோவிலில் இருந்து பேருந்து மூலம் இந்தப் பகுதியை அடையலாம்.

முக்கூடல் அணை

நாகர்கோயில் மற்றும் கன்னியாகுமரி நகராட்சிகளுக்கு தண்ணீர் வழங்கி வரும் இந்த அணை ஒரு சுற்றுலாத்தலமாகும். திருவிதாங்கூரை ஆண்ட சித்திரைத் திருநாள் மகாராஜாவால் இது கட்டப்பட்டது. நாகர்கோயிலில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் இந்த அணை அமைந்துள்ளது. நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் இருந்து முக்கூடலுக்கு பேருந்துகள் அடிக்கடி செல்கின்றன.

நாகராஜா கோவில்

நாகர்கோவில் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது நாகராஜா கோவில். ஆசியாவில் பாம்புக்கென்று தனியாக இருக்கும் ஒரே கோவில் இதுதான். இந்தக் கோவில் சமணத்துறவிகளால் கட்டப்பட்டது. இதன் நுழைவாயில் சீனக் கட்டிடக் கலையை ஒத்திருக்கிறது. கன்னியாகுமரியில் இருந்து 19 கிலோ மீட்டர் தூரத்தில் இந்தக் கோவில் அமைந்துள்ளது. ஆவணி மாதத்து ஞாயிற்றுக் கிழமைகளில் இங்கு கூட்டம் அதிகமாக கூடுகிறது.

புனித சவேரியார் ஆலயம்

கிறிஸ்தவ மதத்தை பரப்புவதற்காக கோவாவில் இருந்து வந்த சவேரியார் நாகர்கோவிவ் கோட்டார் பகுதியில் தங்கி ஏழைகளுக்கு உதவிகள் செய்து வந்தார். இவரை இந்தப் பகுதி மக்கள் வலிய பண்டாரம் என்று அழைத்து வந்துள்ளனர். திருவிதாங்கூரை ஆட்சி செய்து வந்த வேணாட்டு அரசருக்கு சவேரியார் மீது மிகுந்த மரியாதை இருந்துள்ளது. எனவே தேவாலயம் கட்டுவதற்காக நாகர்கோவில் நகரின் மையப்பகுதியில் இடம் கொடுத்துள்ளார். கி.பி.1600 இல் இங்கு கத்தோலிக்க தேவாலயம் ஒன்றை சவேரியார் ஏற்படுத்தினார். அவரது நினைவாக இந்த ஆலயம் புனித சவேரியார் ஆலயம் என்று அழைக்கப்படுகிறது.

சுசீந்தரம்

நாகர்கோவிலில் இருந்து எட்டு கிலோமீட்டர் தூரத்திலும், கன்னியாகுமரியில் இருந்து ஏழு கிலோமீட்டர் தூரத்திலும் சுசீந்தரம் தாணுமாலயம் கோயில் அமைந்துள்ளது. பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரும் இணைந்து இங்கு காட்சி தருகிறார்கள். இங்கு அமைந்துள்ள 18 அடி அனுமான் சிலை உலகப் பிரசித்தி பெற்றது. இங்குள்ள தூண்கள் தட்டினால் இசை கேட்கும் வகையில் அமைந்துள்ளது.

Pin It