'ஹபீபி' என்றால் 'பேரன்பே' என்று பொருள். அன்புதான் படத்தின் அடிநாதம். படம் காதலில் தொடங்கி காதலில் முடிகிறது. எனினும் இது ஒரு காதல் படம் அல்ல. நெசவுத் தொழிலைப் பின்னணியாகக் கொண்ட கடையநல்லூர் இஸ்லாமியர்களின் வாழ்வைப் பேசுகிறது, எனினும் இது ஒரு தொழில் சார்ந்த படம் அல்ல. பிழைப்பிற்காக புலம்பெயர்ந்த மக்களின் துயரங்களைப் பேசுகிறது, எனினும், இது புலம்பெயர்ந்தோர் சித்திரமும் அல்ல. ஒரு நாற்பதாண்டு கால நெடும் வாழ்வை அதன் அத்தனை துயரங்களோடும், மகிழ்வுகளோடும் கவித்துவ நேர்த்தியுடன் பதிவு செய்து செல்கிறது படம். தொடங்கிய ஓரிரு நிமிடங்களிலேயே நாம் அந்த ஊருக்குள், வீடுகளுக்குள் இயல்பாக நுழைந்து விடுகிறோம்.
தமிழ் முஸ்லிம் பண்பாட்டு வாழ்வினை இயல்பாக முன்வைத்த முதல் படம் என்ற வகையில் ஹபீபி வரலாற்றில் இடம் பிடிக்கிறது.
நெல்லைப் பகுதிகளைச் சார்ந்த முஸ்லிம்கள் நெசவு, பாய்முடைதல், பீடி சுற்றுதல், விவசாயம் போன்ற தொழில்களைச் செய்து வந்துள்ளனர். இந்தப் படத்தின் குறிப்பான களம், கடையநல்லூர் ஆகும். மக்கள், நெல்லைத் தமிழ் பேசும் இஸ்லாமியத் தமிழர் ஆவர். காலம், எண்பதுகளில் தொடங்கி தற்காலத்தில் முடிவடைகிறது. நெசவுத் தொழிலையும் அது நசிந்துபோனதையும் மையமாக வைத்து, ஒரு நீண்ட காதலைச் சரடாக வைத்து தமிழ் முஸ்லிம்களின் வாழ்வியலை அழகாக முன்வைக்கிறது படம்.
இயந்திரமயமாதலால் கைத்தறி நெசவு நசிவடைந்து, நாடு முழுவதும் நெசவாளர்கள் துயர்களை அனுபவித்த காலகட்டம். இக்காலகட்டத்தில், கடையநல்லூர் மக்கள் பெருவலியினூடே நெசவைக் கைவிட்டு பிழைப்புத் தேடி புலம்பெயர்ந்து வளைகுடா நாடுகளுக்குச் செல்கிறார்கள். நெசவு அவர்களுக்கு வெறும் தொழில் மட்டுமல்ல. அது அவர்களுடன் உணர்வுப்பூர்வமாகப் பின்னிப் பிணைந்திருந்தது. அதை விட்டு அவர்கள் விலக நேரிடும்போது ஏற்படும் மன அதிர்வுகளைப் படம் அதன் முழு வீச்சுடன் பதிவு செய்கிறது.
தறிச் சத்தமும் காக்குழியும் அவர்கள் வாழ்வோடு உணர்வுப்பூர்வமாய்ப் பின்னிக் கிடந்தவை. காக்குழியை மூடும் தருணத்தில் யூசுஃப் அண்ணனின் பரிதவிப்பானது துக்கமும் கையறு நிலையும் கோபமும் கலந்து வெளிப்படுகிறது. இறுதியில் அவர் மரணமுறும் தறுவாயில் பின்னணியில் தறிச் சத்தம் அதன் முழு வீச்சில் ஒலிக்கும்போது கலங்கித்தான் போகிறோம்.
காதலியை அவப்பெயர் ஏற்படாமல் காப்பாற்றுவதற்காகப் பதின்ம வயதில் ஜமாத்தின் தண்டனையை ஏற்றுக் கொண்டு புளிய விளாரால் கசையடி வாங்கும் அபுதாகிர், இறுதிவரை தன் காதலைச் சுமந்து கொண்டே அலைவுறுவது ஒரு காவிய சோகம்.
ஆண்டுக்கணக்கில் உழைப்பின் நிமித்தம் பிரிந்து கிடக்கும் கணவன்-மனைவியரின் பிரிவுத் துயரைப் படம் அழுத்தமாகப் பதிவு செய்கிறது. 'கப்பலுக்குப் போன மச்சான்’ பாடல் ஒலிக்கும்போது நாம் அந்த இசை தரும் பிரிவின் வேதனையில் கரைந்துபோகிறோம். இது போன்ற உணர்வுப் பெருக்கான தருணங்களில் அங்கே பார்வையாளனுக்குத் தெரிவது மனிதம் மட்டுமே. அங்கே **முஸ்லிமோ**, இந்துவோ இல்லை. குறிப்பாக யூசுஃப் அண்ணன் இறந்த பிறகு அவரை அடக்கம் செய்யும் இடத்தில் அவருடைய ‘இந்து’ நண்பர் ஒருவர் கண்ணீருடனும் விம்மலுடனும் கைப்பிடி மண்ணெடுத்துச் சவக்குழியில் இடும் காட்சியில் மனிதம் உயிர்ப்புடன் மிளிர்கிறது.
மேலும், இஸ்லாமிய வாழ்வியலின் சில கூறுகளைப் படம் பொதுவான பார்வையாளருக்கு அறிமுகம் செய்கிறது. ஒருவர் இறந்துவிட்டால், அவர் உடல் அடக்கம் செய்யப்படுவதற்கு முன்பு அவர் கடன் ஏதேனும் யாரிடமாவது வாங்கியிருந்தால் அதற்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன் என அவருடைய வாரிசு வந்து அறிவிக்கும் வழக்கம்; மணமகன் தான் மணக்கவிருக்கிற பெண்ணுக்கு ‘மஹர்’ என்கிற மணக்கொடை தந்தால்தான் திருமணம் நிறைவேறும், மஹரை நிர்ணயிக்கும் உரிமை பெண்ணைச் சார்ந்தது; திருமணத்தின்போது பெண் இந்தத் திருமணத்தில் தனக்குச் சம்மதம் என்று ஒப்புக்கொள்ளாவிட்டால் திருமணம் நடைபெறாது; பெண்ணுக்கு ‘குலா’ என்கிற விவாகரத்து கோரும் வலிமையான உரிமை உண்டு போன்றவற்றை படம் பிரச்சார நெடியின்றி இயல்பாகச் சொல்லிச் செல்கிறது.
முஸ்லிம் பெண்களைப் பற்றிப் பொது சமூகம் கொண்டிருக்கும் பிரமைகளைப் படம் உடைக்கிறது. அவர்கள் வெறும் பதுமைகள் அல்ல, குடும்ப வாழ்வில் பெரும் பங்காற்றுபவர்கள் எனும் உண்மையைப் படம் இயல்பாகச் சித்திரிக்கிறது. தேவையான நேரத்தில் பெண்கள் சண்டையிடுகிறார்கள், உரத்துப் பேசுகிறார்கள். குடும்பத்தின் முடிவுகளை வழிநடத்துகிறார்கள். அவர்கள் குடும்பத்தை நடத்திச் செல்வதுடன் நெசவுத் தொழிலிலும் கடுமையாக உழைக்கிறார்கள். கூட்டுக் குடும்ப வாழ்வில் இழையோடும் அன்பை, பொருளாதாரப் பகிர்வை, சச்சரவுகளை, பாதுகாப்பை யதார்த்தமாக வெளிப்படுத்தும் அதே சமயம், இந்த அமைப்பு சிதையாமல் காக்கப் பெண்கள் எப்படி மைய அச்சாக இருக்கிறார்கள் என்பதையும் தன் போக்கில் சொல்லிச் செல்கிறது ஹபீபி.
பர்வீன் பானு எனும் பாத்திரம் தனித்துவம் மிக்கது. காலம் மெல்ல நகர்ந்து 2020களை நாம் வந்தடையும்போது பர்வீன் வருகிறார் பர்தா அணிந்தபடி, துறுதுறு பேச்சுடன், துணிவுடன். பர்வீன் படித்தவர், ஒரு தனியார் நூலகத்தில் பணிசெய்பவர், முற்போக்குக் கருத்துகளை, பெரியாரை, அம்பேத்கரை, மார்ட்டின் லூதர் கிங்கை உரத்துப் பேசுபவர். அவர் அணிந்திருக்கும் பர்தா அவருக்குத் தடையாக இல்லை.
பர்தா என்றவுடன் ஒன்று சொல்ல வேண்டும். இந்த நீண்ட கருப்பு அங்கி சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்புதான் தமிழ் முஸ்லிம்களிடம் மெல்ல வந்து சேருகிறது. கொஞ்சம் கொஞ்சமாக அது அனைத்து முஸ்லிம் பெண்களையும் தொற்றிக் கொண்டு விட்டது. ஆயினும் இந்த உடை பார்ப்பதற்குப் பெரும் அடிமைச் சின்னமாகத் தோன்றினாலும், நடைமுறையில் அது அப்படி இல்லை என்பதை இப்படங்கள் முன்வைக்கின்றன. அது ஓரளவு உண்மையும்கூட.
முன்பெல்லாம் திருமணத்திற்கு முன்பு இஸ்லாமிய இளம்பெண்கள் தாவணி அணிவார்கள், திருமணத்திற்குப் பின்பு வெளியே செல்லும்போது சேலையின் மீது வெள்ளைத் துப்பட்டா ஒன்றைப் போர்த்திக் கொள்வார்கள். இப்படத்தில், தாவணி அணிந்து, முந்தானையை எடுத்துத் தலைக்கு அரை முக்காடு போட்டுக்கொண்டு தண்ணீர் குடத்துடன், மெல்லிய சிரிப்பொலியுடன் பெண்கள் ஆற்றுக்குச் செல்கிறார்கள்.
அப்போதெல்லாம் முஸ்லிம் பெண்கள் உயர்கல்விக்கெல்லாம் செல்ல முடியாத சூழல் (ஆண்களே அவ்வாறுதான் இருந்தனர்). 2000த்தின் தொடக்கத்தில்தான் பர்தா மெல்ல மெல்லத் தமிழ்நாட்டிற்குள் பரவுகிறது. வஹாபியமும், வளைகுடா செல்வாக்கும் இதற்குச் சான்றெனலாம். பர்தா வழக்கம் பற்றி விரிவாகப் பேச வேண்டும், இன்னொரு சந்தர்ப்பத்தில்.
காலத்தின் சுழற்சியில், பர்தா அணிந்த பெண்கள் பலர் இப்போது கல்லூரி செல்கிறார்கள். ஒருசிலர் அலுவலகப் பணிகளுக்கும் செல்கிறார்கள். அதுமட்டுமல்ல, ‘ஷாகின்பாக்’ உள்ளிட்ட அரசியல் போராட்டங்களில் முன்களத்தில் நிற்கிறார்கள்.
இந்தப் படம் இஸ்லாமியப் படமா எனில் இல்லை என்பதே பதில். படத்துடன் ஒன்றத் தொடங்கிய பிறகு அங்கே முஸ்லிம் இல்லை, இந்து இல்லை. அங்கே இருப்பது ரத்தமும் சதையும் அன்பும் கலந்த மனிதன் மட்டுமே. அதுவே ஒரு கலைப் படைப்பின் வேலை. ஹபீபி அந்த வகையில் - பாக்ஸ் ஆபீஸ் கணக்குகளைத் தாண்டி - வெற்றிப் படமே.
ஆக, இந்தப் படம் முன்வைக்கும் அரசியல் என்ன? முஸ்லிம்கள் என்பவர்கள் இம்மண்ணின் மைந்தர்கள். அழகிய தமிழ் பேசும் உழைப்பாளிகள். அவர்கள் அந்நியர்கள் என்று ஒதுக்கப்பட வேண்டியவர்கள் அல்ல. பயங்கரவாதிகள் என்று வெறுக்கப்பட வேண்டியவர்கள் அல்ல. இதுவே இப்படம் தனக்குள் பொதிந்து வைத்திருக்கிற நுண்ணரசியல் ஆகும். இதுதான் காலத்தின் தேவை.
இதுநாள்வரை தமிழ் சினிமா தமிழ் முஸ்லிம்களுக்குச் செய்துவந்த துரோகத்தின் மீது இந்தப்படம் அழகிய முறையில் மருந்திடுகிறது என்றால் அது மிகையில்லை. 'ரோஜா' என்கிற மணிரத்னம் படம் வருவதற்கு முன்பு முஸ்லிம் என்றால் - சில படங்களைத் தவிர - கடத்தல்காரன், வட்டிக்காரன், கிளப் டான்ஸ் பார்த்து கும்மாளமிடுபவன் போன்ற சித்திரங்களே மிகைத்திருந்தன. அப்போதெல்லாம் பெரும்பாலும் முஸ்லிம் என்பவன் 'அரே அல்லாஹ்... சைத்தான் கி பச்சா...' என்று பேசுவான். அவன் தமிழன் அல்ல.
'ரோஜா' படம் வந்த பிறகு அதெல்லாம் போய்விட்டது. 'மணி சார்' கொடுத்த பதவி உயர்வு - 'பயங்கரவாதி' என்பதாகும். அவர் தொடங்கி வைத்த ஆட்டம் ‘ஜனநாயகன்’ வரை தொடர்கிறது. தற்போது வந்திருக்கும் ‘பரிமளா அன் கோ' படத்திலும் போதை மாஃபியாவின் முக்கிய நபரின் பெயர் அஸ்லம் முஸ்தஃபா என்பது.
இதுபோன்ற தொடர்ந்த சித்தரிப்புகள் தமிழ் பொதுச்சமூகத்தின் நனவிலி மனத்தில் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கும் என்பதை நினைத்தால் அச்சமாக இருக்கிறது. சங்பரிவாரின் வெறுப்புப் பிரச்சாரங்களுக்குத் தமிழ்சினிமா அறிந்தோ அறியாமலோ பேருதவி புரிந்து வந்திருக்கிறது. எனினும் தமிழ்நாட்டில் முஸ்லிம் வெறுப்பு வடஇந்தியா அளவுக்கு வலிமையடையாமல் இருப்பதற்கு காரணம் இங்கே நிலவும் தமிழுணர்வு சார்ந்த அரசியல்தான் என்பது எனது துணிபு. இந்துத்துவா அரசியல் என்கிற வெகுஜன விரோத அரசியலை எதிர்கொள்ள ஹபீபி போன்ற படங்கள் நிச்சயம் உதவும். இதுபோன்ற படங்கள் நிறைய வரவேண்டும்.
ஆனால் நடந்தது என்ன? முஸ்லிம் பெருமக்களே இந்தப் படத்தைத் திரண்டு வந்து பார்க்கவில்லை என்பது ஒரு கசப்பான உண்மை. சினிமா பார்ப்பது ஹராம் (தடுக்கப்பட்டது) என்கிற கருத்தினை ஹபீபியை முன்வைத்து 'மார்க்க அறிஞர்கள்' என்று அறியப்படுபவர்கள் தீவிரமாகப் பரப்புரை செய்தனர். (பொதுவாக முஸ்லிம்கள் பலரும் திரையரங்குக்குச் செல்வதில்லை. ஆயினும் தொலைக்காட்சி, கைபேசியில் அவர்கள் சினிமா உட்பட எல்லாவற்றையும் பார்க்கிறார்கள் என்பது யதார்த்தம். அந்த வகையில் இது போன்ற பரப்புரைகள், ஃபத்வாக்கள் பொருளற்றவை).
ஆயினும் 'மார்க்க அறிஞர்களின்' ஃபத்வாவினால் ஆர்வத்துடன் வந்திருக்க வேண்டிய முஸ்லிம் மக்கள் எதிர்பார்த்த அளவு அரங்குகளுக்கு வரவில்லை. அவர்கள் எதிர்மறை மன ஊக்கம் செய்யப்பட்டனர். நிச்சயமாகப் படத்தின் வசூலை இது பாதித்திருக்கிறது. இதுபோன்ற படங்கள் மேலும் மேலும் வரவேண்டிய சூழலை அரசியல் புரிதலற்ற ‘மார்க்க அறிஞர்கள்’ சற்றே சிதைத்து விட்டார்கள் என்றே சொல்ல வேண்டும்.
இயக்குநர் மீராகதிரவனின் கவித்துவ முயற்சி வெற்றி பெற்றிருக்கிறது. அவர் மிகுந்த போற்றுதலுக்குரியவர். தயாரிப்பாளர் சாகுல் அமீது மற்றும் சக தயாரிப்பாளர்கள் பெரிய செல்வந்தர்கள் அல்ல. அவர்கள் தம் சொந்தப் பணம் மட்டுமல்லாமல் திரள் நிதியாகவும் நிறைய பேருக்குக் கடன்பட்டிருக்கிறார்கள். அவர்தம் உழைப்பும் முயற்சியும் போற்றத்தக்கன. அவர்களுக்கு வணிக நோக்கம் இல்லையெனினும் வணிக ரீதியாகச் சிரமங்கள் இன்றி பயணிக்க வேண்டும். அதுதான் இதுபோன்ற முயற்சிகளுக்கு ஊக்கமளிக்கும். அது நடக்கும் என்றே நம்ப விரும்புகிறோம்.
கலைப் படைப்புகள் மூலம் சமூகங்களுக்கு இடையே புரிந்துணர்வையும் நல்லுறவையும் ஏற்படுத்த முடியும். இது 'துரந்தர்களின்' காலம். இஸ்லாமிய சமூகத்தைப் பெரும் விரோதியாகச் சித்தரிப்பதன் மூலம் ‘பார்ப்பனீய-இந்துத்துவ’ அரசியலைத் தக்கவைத்துக்கொள்ளும் தந்திரத்திற்குச் சினிமாவை ஒரு பெரும் ஆயுதமாகப் பயன்படுத்தும் காலம்.
முஸ்லிம்களின் மீது குறிவைக்கப்படும் பிரச்சாரத் துப்பாக்கிகளுக்கு எதிராக ஏந்தப்படும் அழகிய, வலிமையான சிறுமலராக ஹபீபி வந்திருக்கிறது. இது தொடர வேண்டும் என்பதே எமது ஆசை / எதிர்பார்ப்பு.
- அமுதன் இஸ்மாயில்