muthuraman kanjanaநவரச நாயகனின் அப்பா என்பது இன்றைய தலைமுறைக்கு. முந்தைய தலைமுறைக்கு அவர் நவரசத் திலகம். 

எத்தனை விதமான கதாபாத்திரங்கள்.... எத்தனை விதமான பாவனைகள்.

சீரியஸா... காமெடியா.... குணச்சித்திரமா..... காதலனா..... மகனா...... அண்ணனா ....... நண்பனா.... எந்த வடிவத்திலும் திரையைப் பகிர்ந்து கொள்ளும் வல்லவர். நண்பன் ரவிச்சந்திரனுக்காக அப்பா வேஷம் போட்டு வந்த இடத்தில் நண்பனின் காதலியின் அக்கா தான் தன் காதலி காஞ்சனா என்று அறிய வருகையில்.... கதை இன்னும் சூடு பிடிக்க அதற்கு தகுந்தாற்ப் போல.. முத்துராமனின் ஆட்டமும் அதிகரிக்கும்.

பாலையாவை ஏமாற்றிச் சென்னைல அவ்ளோ கப்பல் இருக்கு.... அவ்ளோ பங்களா இருக்கு... இங்க பையன் ஆசைப்பாட்டான்னு இந்த எஸ்டேட்டை வாங்கி போடலான்னு வந்தேன்னு சொல்லி அடிச்சு விடுகையில் ...... எல்லாம் திரை அதிரும். சினிமா தீபாவளி அரங்கேறும்.

அப்பா வேஷம் போட்டுக் கொண்டு.. முழு படத்தையும் தாடியில் தாங்கிய "காதலிக்க நேரமில்லை" முத்துராமன் திரை வாழ்வில் மகுடம்.

"காதலிக்க நேரமில்லை... காதலிப்பார் யாருமில்லை... வாலிபத்தில் காதலிக்க ஜாதகத்தில் வழியுமில்லை"  காஞ்சனாவை தாத்தா வேஷத்தில் கலாய்த்து பாடும்... "நவரசத் திலகம்" முத்துராமனை காலத்துக்கும் ரசிக்கலாம். 

நடுத்தர வர்க்கத்தின் நாயகன் என்று கூட சொல்லலாம். திரை பிரம்மாண்டம் இல்லாத பக்குவப் பட்ட உடல் மொழிக்கு சொந்தக்காரர். பக்கத்துக்கு வீட்டு அங்கிளின் தோரணை அவருக்கு. மிகையுணர்ச்சி வயப்படாத பாவனைகளில்... இயல்பை இலகுவாக கண்களாலும்.. குரலாலும்.. சூழ்ந்த உடல் மொழி கொண்டு மிக அற்புதமாய் தன்னை அந்த கதாபாத்திரத்துக்கு பொருத்திக் கொள்வார். நாடகத்தில் இருந்து சினிமாவுக்கு வந்தவர் முத்துராமன் என்பது குறிப்பிடத்தக்கது. 

'காசே தான்’ படத்தில்... "ஜம்புலிங்கமே ஜடாதரா ..... ஜோதிலிங்கமே அரோகரா... வாயு லிங்கமே அடா புடா..... பஞ்சலிங்கமே மடா படா " என்று டக்கென எதுகை முனையில் தேங்காய் சீனிவாசன் தப்பு தப்பாய் பாட 'அய்யயோ இது தப்புயா' என்பது போல... கண்களை அகற்றி கழுத்தை இறக்கி ஒரு பாவனை தரும் முத்துராமன் ...... சீனிவாசன் வயிற்றில் முழங்கை கொண்டு ஒரு இடி இடிப்பார். இடியென சிரிக்கும் வாய்ப்பு நமக்கு. 

அதன் தொடர்ச்சியாக சட்டென குரலெடுத்து .........." வாயுலிங்கமே சாதாசிவா... பஞ்சலிங்கமே மகாதேவா...." என்று குரலில் குழைந்து... அதற்கு தகுந்தாற்ப் போல தலையை ஆட்டி சரியாக பாடி விட்டு....' இப்படி பாடணும்... இனி பிக்கப் பண்ணிக்கோ' என்பது போல ஒரு சிறு சமிக்கை புன்னகையை காட்டுவார் பாருங்கள். உலகத்தரம் நடிப்பில். உன்னத கரம் காட்சியின் லயிப்பில். 

"பாமா விஜயம்" படத்தில்... பாமாவிடம் ஜொள்ளு விடும் நடுத்தர நாயகனை வெளிக்கொண்டு வந்திருக்கும் லாவகம்.. முத்துராமனுக்கே வரும் தெளிவு. அந்தப்பக்கம் பாலையா. இந்தப்பக்கம் நாகேஷும் மேஜர் சுந்தர்ராஜனும். ஆனாலும் தனக்கான இடத்தை மிக அழகாக தக்க வைத்திருப்பார்.

"சூரியகாந்தி"  படத்தில்... "பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது... கருடா சவுக்கியமா.." பாடல்... மேடையில் கண்ணதாசன் பாடிக் கொண்டிருக்க... அவ்வரிகளெல்லாம் தம் வாழ்வில் இருக்கிறதை ஒப்புக் கொள்ளும் விதமாக முத்துராமன் தன் மனைவியை ஓரக் கண்ணால் பார்ப்பதும்.. உணர்ந்து அவ்வரிகளோடு தன்னை ஒப்பு நோக்குவதுமாக அந்த பாடலே ஒரு நாடகத்தை செய்து கொண்டிருக்கும். கூட சேர்ந்து நாமும் நடித்துக் கொண்டிருப்போம்.

கதாநாயகன் தான் எப்போதும் என்ற எந்த பிடிவாதமும் இல்லாமல்... தனக்கான பாத்திரம் அறிந்து அதில் தன்னை வார்த்துக் கொண்ட நடிகர். 

"எதிர் நீச்சல்" படத்தில்... நாகேஷ் கதை நாயகனாக நடிக்க நண்பன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். நாயர் கதாபாத்திரம் அத்தனை நெருக்கத்துக் குள்ளிருக்கும். நேசத்துக் குள்ளிருக்கும். மாடி படி மாதுவுக்கு அன்பை நேர்மையை உண்மையை மட்டுமே தரும் நாயர் பாத்திரம் அவருக்கென்றே கனக்கச்சிதமாக அளவெடுத்த நேத்திரம். 

சக நடிகனுக்கு இடம் விட்டு தன் இடத்தில் சதம் அடிக்கும் கலை வாய்த்தவர். திரையில் இவர் தோன்றினாலே ஒரு வகை உற்சாகம் தொற்றிக் கொள்வதை பலமுறை உணர்ந்திருக்கிறேன். உடல்மொழியில் தேர்ந்த நடிகனுக்கான சாத்தியம். கேள்விப்பட்டவரை உள்ளன்போடு பழகுவதில்... தேர்ந்த மனிதனுக்கான சாத்தியம். 

பிழைப்போமா மாட்டோமா என்ற தருவாயில்.. மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருக்கும் முத்துராமன். மனைவி தேவிகா. அவருக்கு மருத்துவம் பார்க்கும் கல்யாண்குமார் மனைவி தேவிகாவின் முன்னாள் காதலன். தான் இன்னமும் காதலிக்கும் தன் காதலியின் கணவனை எப்படியாவது காப்பாற்றி விட துடிக்கும் மருத்துவர் கல்யாண்குமார். 

தன் மரணத்துக்கு பின் தன் மனைவி அவளின் முன்னாள் காதலன் கல்யாண் குமாரோடு சேர்ந்து தீர்க்க சுமங்கலியாய் மீண்டும் அவள் வாழ்வை தொடர வேண்டும் என்ற உயர்ந்த எண்ணம் கொண்ட கணவனாக முத்துராமன். 

இப்படி அன்பின் தீரா பக்கங்களைக் கொண்ட முக்கோண கதையில்.... மூச்சு முட்டும் அன்பும் முக்தி அடையும் உறவும் என முத்துராமன் நிகழ்த்தியது வாழ்வின் தீரா பகுதி. "நெஞ்சில் ஓர் ஆலயம்" இன்றும் நம் மனதில் ஓர் ஆலயம் தான். பிராத்தனைகள் நிரம்பிய அன்பின் ஆலயம் அது. "நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை.....நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை...." என்று குறிப்பால் உணர்த்தும் முத்துராமனை காலம் அத்தனைச் சீக்கிரம் எடுத்திருக்க வேண்டாம்.  

'கர்ணன்'... படத்தில் அர்ஜுனனாக வந்த முத்துராமன் தான்... இன்று வரை அர்ஜுனனுக்கு உருவம் என்று நினைக்கிறேன். 

"சித்திரை செவ்வானம் சிரிக்க கண்டேன்... என் முத்தான முத்தம்மா....... என் கண்ணான கண்ணம்மா ஹே... தையரத்தையா..." கடல்  நடுவே ஓடத்தில்..... காதல் கொள்ளும் முத்துராமன் காதலுக்கும் கெட்டிக்காரர் தான். 

நடிகர் திலகத்தோடு நிறைய படங்களில் நடித்திருக்கிறார். அந்தப் பக்கம் அவர் சச்சினைப் போல அடித்து துவம்சம் செய்ய இந்த பக்கம் இவர்... அலட்டல்... இல்லாமல் நின்று ஆடுவார்... டிராவிட்டைப் போல. "மூன்று தெய்வங்கள்... வாணி ராணி... நெஞ்சிருக்கும் வரை... ஊட்டி வரை உறவு..." என்று நீளும் பட்டியல்.

"என் அண்ணன்... ஒரு தாய் மக்கள்... கண்ணன் என் காதலன் " மற்றும் பல படங்களில்... புரட்சி தலைவரோடு சேர்ந்து நடித்திருப்பார். இரண்டு நாயகர்கள் கொண்ட சினிமாவில் முத்துராமன் தயங்காமல் நடித்திருக்கிறார் என்பதை ஆரோக்கியமான போட்டியாகத்தான் பார்க்கிறேன். அவர் மீது அவருக்கிருந்த நம்பிக்கையாகத்தான் பார்க்கிறேன். 

அதுவும் பல பெண் பாத்திரங்கள் முன்னிலை வகிக்கும் படங்களில் கூட தன்னை அழகாகவே அவர் வெளிப்படுத்தி இருக்கிறார். அவருக்கு கிடைத்த வாய்ப்புகளையெல்லாம் அவர் சரியாகவே பயன்படுத்திக் கொண்டார் என்பதும் சினிமா அரசியலில் அவர் கற்றுக் கொண்ட பாடமாகக் கூட இருக்கலாம். பெரும்பாலும் இரண்டு நாயகர்களில் ஒருவராகவே தான் அவரின் வெற்றி தீர்மானிக்கப் பட்டது சினிமாவின் விதியா என்று தெரியவில்லை. 

"போக்கிரி ராஜா"வின் வில்லனாகவும் முத்திரை பதிக்க ஆரம்பித்த காலத்தில் தான் "ஆயிரம் முத்தங்கள்" படத்தில் நடிப்பதற்காக  ஊட்டி செல்கையில்... மரணம் அவரை தழுவிக் கொண்டது. மௌனம் சூழும் திரையை அவர் மீது போர்த்திக் கொண்டது.

"ரங்கோன் ராதா" தான் முதல் படம் என்று என்று இணையம் சொல்கிறது. சினிமா உள்ள காலம் வரை முத்துராமன் என்ற அற்புதமான நடிகர் இருப்பார் என்று இதயம் சொல்கிறது. 

- கவிஜி

Pin It