எல்லாரும் கொண்டாடும் ஏதாவதொரு படம் ஒவ்வொரு வருடமும் எப்படியாவது வந்து விடும்.

இம்முறை "அருவி"யாக வந்திருக்கிறது.

சரி.. நான் படத்தை ஒவ்வொரு காட்சியாக ரசித்தேனா என்றால் ஒரு ரசிகனாக என்னால் பல இடங்களில் முடியவில்லை. ஆனால் ஒரு படைப்பாளியாக படம் முழுவதிலுமே கடைசி காட்சி தவிர படத்தோடு நெருங்க முடிந்தது.

Aruvi

இந்த சமூகத்தின் அலட்சிய போக்கும் விட்டேத்தியான நிலையும்தான் இந்த படம் என்றே நான் நம்புகிறேன். கொலையோ.... கொள்ளையோ.... திருட்டோ.... வன்கலவியோ...."ஜன்னலை திற... கொண்டாடு..." என்பது போன்ற ஒரு வித குரூர நாடகபாணி வாழ்வு முறையை வீதியில் கொட்டி எல்லாரும் பாருங்க என்று சொன்னது போன்ற ஒரு தோற்றம் உணர்கிறேன்.

ஒரு கட்டம் வரை மூடி மறைத்தே கதையை நகர்த்தும் திரைக்கதை அந்த டிவி நிகழ்ச்சியில் போட்டு உடைக்கும் போது அட்டகாசப்படுத்துகிறது. முந்திக் கொண்டு வரும் சொற்களில்.. நான் அதிதியிடம் இருக்கும் அதீத நடிப்பையே சொல்லி விடுவேனோ என்று யோசித்து யோசித்து இக்கட்டுரையை நகர்த்துகிறேன். சொற்களில் சாவதென்பதும் உறவுகளின் புறக்கணிப்பு என்பதும் ஒன்றெனவே கருதுவதால்.... ஆங்காங்கே வேண்டுமென்றே திணித்த சில நகைச்சுவை காட்சிகளை எதிர்க்க தான் வேண்டி இருக்கிறது.

"அருவிக்கு எப்படி அது வருகிறது. அது ஏன் அப்படி வந்தது... அதற்கு யார் காரணம்......" என்று மார் தட்டி கிளம்பி இருந்தால் தூசு தட்டி பார்க்கும் வரிசை படங்களில் ஒன்றென ஆகி இருக்கும் என்று நானும் நம்புகிறேன். ஆனால் நாம் ஒன்று நினைக்க அதற்காகவே நாங்கள் வேறு நினைக்கிறோம் என்று அருவி டீம் செய்த வேலைப்பாடுகள் கண்டிப்பாக மாற்று சினிமாதான். எடிட்டிங் தாறுமாறாக வேலை செய்திருக்கிறது. அதற்கு தகுந்தாற் போல முதலிலேயே முடிவெடுத்து எடுக்கப்பட்ட காட்சிகள்.. அத்தனையும் அர்த்தம் பொதிந்தவை.

நேரம் எடுத்துக் கொண்டிருக்கிறார் இயக்குனர். டீமின் நேரத்தை சரியாகவும் எடுத்துக் கொண்டிருக்கிறார்.

இசை மிஞ்சவில்லை. இனிக்கிறது. கிளைமாக்ஸ் நாடகத்தன்மையாக இருப்பினும் கண்ணீர் வர வைக்கிறது. இந்த மாதிரி நோயாளிகளை காட்டியே சிம்பதி வாங்குகிறார் இயக்குனர் என்று பேசினால்... அதற்கெல்லாம் ஒன்றுமே செய்ய முடியாது. கமெர்ஷியல்தான் வெற்றி பெரும் என்ற ஆரூடத்தை அடித்து நொறுக்கும் அப்லாஸ் அருவி கதாபாத்திரத்துக்கு. அந்த சிறுவன் கதாபாத்திரம் அவன் எதிரே இருக்கும் அறிவு ஜீவிகள் அத்தனை பேரையும் எள்ளி நகையாடுகிறது. ஆனால் அவ்வப்போது ஓவர் டோஸ் ஆவதில் சிறு வருத்தம்தான்.

இந்த சமூகம் இந்த நோயைக் கண்டு ஏன் இப்படி ஓடி ஒளிகிறது என்று வார்த்தையாலும் காட்சியாலும் சவுக்கடி அடிக்கிறது கதை. அதுவும் "சொல்வதெல்லாம் சத்தியம்" நிகழ்ச்சி செய்யும் சந்தர்ப்பவாதங்கள்.. அதன் பின்புலம், அதன் பிசினெஸ் லெவல் இன்றைய கால கட்டத்தில் அலசப்பட வேண்டிய ஒன்றுதான். யாரின் கண்ணீரோ யாருக்கோ லாபம் சேர்த்துக் கொடுக்கும் கோர சம்பவங்களை நாம் ஊர் முழுக்க வீடு வீட்டுக்கு முகப்பு அறையில் வைத்து விற்றுக் கொண்டிருக்கிறோம். நாமே வாங்கவும் செய்து கொண்டிருக்கிறோம். வாங்கும் பொருளே விற்கப்படும் சந்தை நம் நாடு என்பதை "அருவி" பேசும் அந்த நீள் வசனம் வன்மையாக உணர்த்துகிறது. அருவியை கொட்டும் அந்த இடம்.. இந்த சமூகத்தின் கட்டமைப்பையே கேள்வி கேட்கிறது. ஒருவருக்கு வலித்தாலும் அது வலி தானே.. தனிமனிதன் ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜகம் அழிக்கும் அதே முட்டாள்தனமென்றாலும் அதில்தானே வாய்மை அகப்பட்டு கொண்டிருக்கிறது. அவள் வாய் மையில் எழுதப்பட்டதோ இல்லையோ.... கொட்டப்பட்டது...சமூக சாக்கடை. சந்தர்ப்ப மானுடம்...தனிமனுஷியின் தீரா துயரம்.

அட்டென்ஷன் சீக்கிங் ப்ரோப்ளேம் கூட "அருவி"க்கு.... வந்து விடுகிறது.... தனித்த இருட்டு சிசுவை சற்று மிரட்டித்தான் பார்க்கும். உலகம் பொருளற்று தொங்கும் சூனியமென பிரபஞ்சம் நோக்கும் சில நொடிகள் படத்தில் எங்கேனும் தட்டுப்பாட்டால் நீங்கள் நடுங்குவதைத் தவிர வேறு வழி இல்லை.

அருவி அழகி. பேரழகு அவளின் செயல்பாடுகள். பேரின்பம் அவளின் சிரிப்பு. பெருங்கடல் அவளின் சந்தோஷங்கள். எல்லாம் சுக்கு நூறாக உடைந்து போகிறது. சமூகத்தின் சந்தர்ப்பத்துக்கு சாட்சியாக மூன்று மனிதர்கள் அவள் வாழ்வில் அவள் கண்ட சரிவின் நீட்சியாக அவளை உபயோகப் படுத்திக் கொள்கிறார்கள். அதன் பொருட்டு அதைத் தொடர்ந்து அரங்கேறும் டிவி நிகழ்ச்சியின் ஒப்பனைகள் களையப்படும் இடம் ஆளுக்கொரு முகமூடியை கழற்றிக் கொண்டு நாம் எல்லாம் நம் நிஜ முகத்தை பார்க்க திராணியற்றவர்களாக இருக்கும் சூத்திரம் உடைபட பொடிபட துவங்குகிறது. தேவையே நாகரீகமாகிறது. தேவைதான் கட்டமைப்பாகிறது. இங்கு தகுதி உள்ளவையே தப்பி பிழைக்கிறது. குரூரத்தின் அடிவானத்தில் படியும் நிழலின் சொரூபங்கள் மாலையை மூடி விட்டு பறவையாகும் போது தனித்த வானின் தவிப்புகளை யார் அறியவும் மாற்றுகிறது. ஊர் அறியவும் மாற்றுகிறது. தனித்தே கிடக்கும் பால்நிலங்கள் தனித்தே சாகும் போது இயற்கையின் வெளிச்சமே அணைத்துக் கொள்கிறது. ஆன்ம கூடு உடையும் தருணம் தாங்க முடியாதது. தவிர்க்க இயலாதது.

அவளை நெருக்குதல் பற்றிய அக்கறை இல்லை. அவளை சூறையாடியது பற்றிய குற்ற உணர்வு இல்லை. தனித்து தவிக்கும் ஒரு பெண் எப்போதும் யாரின் படுக்கைக்காவது தன்னை தயார் படுத்திக் கொண்டே இருக்க வேண்டும் என்று மறைமுகமாக இன்னொருமுகமாக அல்லது பெருமுகமாகவே கூறுகிறது பணம் கொண்ட சமூகம். அவள் செய்ததாக நம்பப்படும் குற்றம் மட்டும் பெரிதாகிறது. இது பெண்கள் குறித்த ஆதி காலந்தொட்டு அடியொற்றும் பாவ பிழைகள் அன்றி வேறென்ன? இது ஆதிக்க போக்கின்றி வேறு எப்படி எடுத்துக் கொள்ள முடியும். இன்னும் சொல்ல போனால் சந்தர்ப்பவாத நடைமுறைகள் என்றே கழுத்தறுபடும் நியாய தர்மம் என்றே வாதிடலாம். முந்திய நொடி சாகும் கோழியின் பெருங்கனவு பிந்தைய நொடி சாக போகும் கோழி வாங்கிக் கொள்ளுதலுக்கு இணையாக இருக்கிறது... மனிதர்களை வைத்து மனிதர்கள் செய்யும் இம்மாதிரியான கேலிக்கூத்து.

எல்லாவற்றுக்கும் மேலாக அவளின் குடும்பம் அவளை ஒதுக்குவதில் துவங்குகிறது தனிமனித பயம். உறவுகளின்......பாசங்களின் புரிதல்......பற்று பற்றிய அவநம்பிக்கை......அது கொய்யும் மலரின் மொட்டுகளில் வடிவது எதன் பொருட்டான மானுட பிண்டம் இவைகள் என்று கேட்கும் கேள்விக்கு பதில் இல்லை. இது ஒரு வகை மேல்தட்டு போக்கு. இருந்தும் எதிர் நிலையில் இருந்து பார்க்கும் விதியின் பொருட்டாய் கதை முழுக்க காண இயலுகிறது கீழ்தட்டின் அச்சு பிழைகள். தவறின் பின்புறம் இருக்கும் நியாயம் அதன் பின்புறம் இருக்கும் ஒரு தவறு....அதன் பின் தொங்கும் சரி.....அதன் பின் மிச்சம் இருக்கும் தவறு என இது ஆடுபுலியாட்டம் நடத்துவதில் விடிந்த பின்னும் முடிவதில்லை நாடகம். மேடை தாங்காத பூமி சாபத்தையே அள்ளி வீசுகிறது. அதில் "அருவி" மாதிரி ஆளுமைகள் சிக்கி என்ன செய்வதென்றே தெரியாமல் வீழ்கிறார்கள். எல்லா கால கட்டத்திலும் முள்முடி சுமக்க ஒரு சிலுவை வந்து கொண்டேதான் இருக்கிறது. பேரரசுகள் மாறிக் கொண்டிருக்கின்றனவே அல்லாமல் மானுட கொலைகள் நிறுத்தப்படுவதில்லை.

திருநங்கை தோழியின் ஏளனமும் எள்ளலும் அவள் காணும் உலகின் முகங்கள் கிழிபடுவதும்.. அவளே தாயாகி அருவியைக் காத்துக் கொள்கையில்... மானுட வடிவம் திரை நீள்கிறது. அன்பின் பொருள் தான் என்ன. மாயங்களின் நிகழ்தல் படியும் பின்புற தழுவலை யார் கூறவும் எலும்பாகி மண்மீது மடியும் ஆதி வயிற்று சூட்டின் தனித்த தான் மட்டுமே என்பது தான் வாழ்வின் கூற்று. மரணத்தின் பொருள்.

"ஐந்து நிமிடத்தில் அழ வை "என்று கூறி கதையை வேறு பாதையில் செலுத்தும் போது ஊர் கிழவியோடு சற்று அழத்தான் வேண்டும். அருவி அழுகிறாள். அருவியை கொட்டியவனும் அழுகிறான். எதைப்பற்றியும் கவலை இல்லை. வெற்றி பெறவே இந்த வாழ்வு என்பதன் அர்த்தமற்ற தோலை உரித்துக் கொண்டு பாய்கிறது இந்த அருவி. தவறுதலும் திருந்தலுமே இந்த வாழ்க்கை. இங்கு எல்லாமே சரியாக இருப்பின் பிடிப்பேது. மாறி மாறி வரும் இரவும் பகலும்.. வெளிச்சத்தின் மறுபிறப்பென இருக்கும் இரவுக்கும் அதன் நுகர்வுக்குமே.. மூச்சடைத்து பிறப்பதும்.. மூச்சடைத்து இறப்பதும்.

ஒரு வீடு மூடி இருந்தாலே அதற்குள் நால்வர் தாடியோடு அமர்ந்து குண்டு தயாரித்துக் கொண்டிருப்பார்கள் என்று நம்பும் இந்த முட்டாள்தனமான காவல் கட்டமைப்புகளும் ஊடக வெளிச்சங்களும் அட போங்கப்பா... உங்கள் எண்ணத்தில் பற்றி எரியும் அருவியின் புகைகள்.

அருவி "கொட்டு" கிறது. தாங்கொணா சூடும் குளிரும் பாலைவனம் தகிக்கிறது. பார்த்த மனம் கனக்கிறது.

- கவிஜி

Pin It