தமிழ் பதிப்புலகில் புதிதாக உதயமாகி உள்ள தழல் பதிப்பகம் தனது முதல் வெளியீடாக சோழ. நாகராஜன் எழுதிய ‘சினிமா சில மனிதர்களும், சில சர்ச்சைகளும்’ என்ற நூலை வெளியிட்டுள்ளது. 

சமகால சமூகத்தில் சினிமா என்ற கலை வடிவத்தின் தாக்கம் ஆழ்ந்த ஆய்வுக்குரியது. வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் சினிமா, வாழ்க்கையின் திசைவழியையே தீர்மானிக்கிறதோ என்ற எண்ணம் வருமளவிற்கு அதன் விளைவுகள் உள்ளன. 

பெரும்பாலான வணிகப் பத்திரிகைகள் சினிமாவையே மூலதனமாக்கி வியாபாரம் செய்கின்றன. திரைப்படக் கலைஞர்கள் தொடர்புடைய எதுவும் இங்கே பரபரப்பான ஒன்றாக மாற்றப்படுகிறது. ரஜினிகாந்த் இமயமலைக்குச் செல்லும் மர்மப் பாதை ஒரு தொலைக்காட்சியில் தொடராக மாற்றப்படுகிறது. ஒரு பத்திரிகையில் அட்டைப்படக் கட்டுரையாகிறது. திரைப்பட நடிகர், நடிகைகளின் குடும்பங்களில் ஏற்படும் சிக்கல்கள் தமிழ்ச் சமூகத்தின் பிரதான பிரச்சனையாக மாற்றப்படுகிறது. 

மறுபுறத்தில் சினிமா என்ற கலைவடிவம் குறித்து ஆரோக்கியமான விவாதங்கள் மிக அரிதாகவே நடக்கிறது. தமிழில் திரைப்படம் குறித்த புத்தகங்கள் ஓரளவிற்கு வந்திருந்த போதும் சோதிடம், வாஸ்து பற்றிய நூல்களோடு ஒப்பிடும்போது குறைவே. 

சோழ. நாகராஜன் எழுதியுள்ள இந்த நூலில் 17 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. இந்தக் கட்டுரைகள் ‘புதிய ஆசிரியன்’ இதழுக்காக எழுதப்பட்டவை. ஒரு பத்திரிகையில் எழுதி அதை தொகுக்கும்போது ஏற்படும் பலம், பலவீனம் ஆகிய இரண்டும் இந்த நூலில் உள்ளது. 

‘இப்புத்தகம் பல கோணங்களைப் பதிவு செய்திருக்கிறது. மௌனச் சினிமாவின் பெருமையிலிருந்து சமகால சினிமாவின் மூடநம்பிக்கைகள் வரை பல விஷயங்களைச் சிலாகித்தும், எள்ளி நகையாடியும் பதிவு செய்திருக்கிறது’ _ என்று அணிந்துரையில் மிகச் சரியாகவே குறிப்பிட்டிருக்கிறார், சமகால சினிமாவின் அபூர்வமான கலைஞர்களில் ஒருவரான நாசர். 

தமிழகத்தில் தயாரிக்கப்பட்ட முதல் பேசாப்படம் மற்றும் பேசும்படத்தின் கதாநாயகியான டி.பி. ராஜலட்சுமியில் துவங்கி, கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன், நடிகவேள் எம்.ஆர். ராதா ஆகியோர் குறித்தும் திரையுலகின் தந்தை எனப்போற்றப்படும் தாதாசாகேப் பால்கே, வெள்ளித்திரையில் வித்தியாசமான முயற்சிகளை மேற்கொண்ட ஷியாம் பெனகல், தசாவதாரக் கலைஞன் கமல்ஹாசன் வரை, அவர்கள் குறித்த ஏராளமான கேள்விப்படாத தகவல்களை அதன் பின்னணியோடு தருகிறது இந்த நூல். 

நடிகவேள் எம்.ஆர். ராதாவை டக்ளஸ் ஃபேர் பாங்க்ஸ் என்று அழைப்பார்கள் என்று எழுதியதைத் தொடர்ந்து, யார் அந்த டக்ளஸ் என்ற கேள்வி எழ ஹாலிவுட் சினிமாவின் ஆளுமைகளில் ஒருவரான டக்ளஸின் கலையுலக வாழ்க்கை முழுமையாக விவரிக்கப்பட்டுள்ளது. 

‘சினிமா பாடிய கடவுள்’ என்ற கட்டுரை விரிவான தளத்தில் உலவியுள்ளது. கடவுள் சார்ந்த புராணக்கதைகள் மக்களிடம் ஏற்கனவே நன்கு பதிந்துள்ளதால், துவக்க கால பேசாப் படங்கள் புராணப் படங்களாகவே வெளிவந்துள்ளன. படத்தில் கடவுள் பேசாவிட்டாலும் அவர் என்ன பேசுவார் என்பது மக்களுக்குத் தெரியும். தமிழகத்தில் திராவிட இயக்கம் மற்றும் பொதுவுடைமை இயக்கத்தின் தாக்கம் காரணமாக வலுவான நாத்திக கருத்துகள் இடம்பெற்றன. இப்போது கடவுள் படங்கள் அதிகபட்ச கிராபிக்ஸ் வேலைகளுக்கே பயன்படுகிறது. இந்தக் கட்டுரை தனியரு நூலாக விரியும் அளவிற்குக் கருத்துச் செறிவு கொண்டது. 

எம்.ஜி.ஆர். குறித்து இரண்டு கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. ஒரு லட்சியக் கதாநாயகனாக திரையில் தெரிந்த எம்.ஜி.ஆர் திட்டமிட்டு அந்த பிம்பத்தை பெரிதுபடுத்தினார். சமூகத்தில் இந்தப் பிம்பம் ஏற்படுத்திய விளைவு விரிவாக ஆராய வேண்டிய ஒன்று. கட்டுரையாளர் கூறியுள்ள சில கருத்துகள் முரண்பாடானவையாக தோன்றலாம். எனினும், இது குறித்து விரிவான விவாதத்திற்கு இட்டுச்செல்ல இக்கட்டுரை திறவுகோலாக இருக்கிறது என்பது உண்மை. 

சினிமா குறித்து பாசாங்கற்ற அக்கறையும், தகவல் அறிவும் கொண்ட சோழ. நாகராஜன் சினிமாவின் மனிதர்களையும், சர்ச்சைகளையும் விரிவாக எழுதிச் செல்லலாம். அதற்கான கருவும், துவக்கமும் இந்நூலில் உள்ளது. சினிமா பார்ப்பவர்கள் கட்டாயம் படிக்கவேண்டிய நூல்களில் இதுவும் ஒன்று. 

Pin It