இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் வாழை. கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். மாரி செல்வராஜின் பள்ளிப்பருவ வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இளவயதில் தான் கண்டடைந்த அனுபவங்களை சிவனைந்தன் எனும் சிறுவன் மூலமாகக் கூறுகிறார் இயக்குநர் மாரி செல்வராஜ்.

அச்சிறுவன் 9 ஆம் வகுப்பு பயில்கிறார். விடுமுறை நாட்களில் வாழைத்தார் சுமக்கும் வேலை செய்கிறார். இருப்பினும் வாழைத்தார் சுமக்கும் வேலையை வெறுக்கிறார். அவரது குடும்பம் வறுமையில் வாடுகிறது. அவரது குடும்பத்தாரும், கிராமத்தில் உள்ளவர்களும் வாழைத்தார் சுமக்கும் வேலைக்குச் செல்கின்றனர். கூலி உயர்வு கேட்கின்றனர். கேட்ட கூலி உயர்வும் கிடைக்கிறது. அதன் பின்னர் என்ன நடந்தது என்பதே கதை.vaazhai 644உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டதாகச் சொல்லப்படும் இப்படத்தில் துளி அளவு கூட உண்மை இல்லை. 9 ஆம் வகுப்பு பயிலும் சிறுவனான சிவனைந்தனுக்கு தன் பள்ளி ஆசிரியர் நிகிலா விமல் மீது ஈர்ப்பு வருகிறது. அதுவல்ல பிரச்சினை. சிறுவயதில் வரும் பாலுணர்வு இயல்பானது. ஆனால் அதை மிகக் கொச்சையாக ஆபாசமான திரைமொழியில் காட்சிப்படுத்தியிருப்பது வணிகத் தந்திரம். ஆபாசத்தின் உச்சம். காதலனும் காதலியும் பேசிக்கொள்ளும் வசனங்களை ஆசிரியர் நிகிலா விமலும் மாணவன் சிவனைந்தனும் பேசிக்கொள்கின்றனர். கீழே விழுந்த நிகிலா விமலின் கைக்குட்டையை சிவனைந்தன் எடுத்து வைத்துக் கொள்கிறான். அதில் உள்ள வாசனையை அடிக்கடி முகர்ந்து பார்த்துக் கொள்கிறான். ஒரு கட்டத்தில் தனது கைக்குட்டையை சிவனைந்தன் எடுத்து வைத்துள்ளான் என்பதைக் கண்டறிந்து விடுகிறார் நிகிலா விமல். இருப்பினும் அவனிடம் இருக்கட்டும் என்று கூறிவிடுகிறார். பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில் சிவனைந்தன் நிகிலா விமலிடம் கைக்குட்டையைக் கொடுக்கிறான். உடனே நிகிலா விமல் ”நீயே இந்தக் கர்சிஃப்பை வைத்துக் கொள், ஆனால் நான் கொடுத்தேன் என்று சொல்லாதே“ என்கிறார். காதலனுக்குக் காதலி கொடுக்கும் பரிசு போல. யாரிடமும் சொல்லிவிடாதே என்று கண்டிப்புடன் கொடுக்கும் காதல் பரிசு.

அடுத்ததாக, வாழைத்தார் சுமக்கும் சிறுவனின் வலியை இப்படம் பதிவு செய்துள்ளதா என்றால் அதுவுமில்லை. சிவனைந்தனின் நண்பனாக வரும் சேகர் வாழைத்தார் தூக்கும் வேலை செய்வதைப் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. வாழைத்தார் சுமக்கும் வேலைக்குள் சிவனைந்தன் தள்ளப்படுகிறான் என்பதைப் புரிய வைக்கும் அழுத்தமான காட்சிகள் இல்லை. ஒரு காட்சியில் சிவனைந்தனின் தாய், “பணத்திற்காக உன்னை வாழைத்தார் சுமக்கச் சொல்லவில்லை” என்கிறார். இன்னொரு இடத்தில் உன்னைக் காரணம் காட்டி வாழைத்தார் வியாபாரியிடம் முன்பணம் வாங்கிவிட்டேன் என்கிறார். அச்சிறுவன் தான் படிக்கும் வகுப்பில் முதல் மதிப்பெண் வாங்கும் மாணவன். அவனது தாய் சிலநேரங்களில் நீ வாழைத்தார் சுமந்து பழகிக் கொள்ளவேண்டும் என்று கூறுகிறார். மற்றபடி அவனைப் படிப்பில் கவனம் செலுத்தச் சொல்லாமல் வாழைத்தார் சுமக்கும் வேலையைக் கற்றுக்கொள்ளச் சொல்வதற்கான எவ்விதமான அழுத்தமான காரணங்களும் இல்லை.

கூலி உயர்வு கேட்கும் தொழிலாளர்களைத் தண்டிக்கும் விதமாக வாழை வியாபாரி நடந்துகொள்கிறார், அதனால் 19 பேர் உயிரிழக்கின்றனர் என்ற காட்சியோடு படம் முடிகிறது. கூலி உயர்வு தான் பிரச்சினை என்றால், வாழை வியாபாரி கூலி உயர்வை எதிர்க்கிறார் என்பதைக் கூட அழுத்தமாகச் சொல்லவில்லை. கூலி உயர்வு கேட்டவுடன், வியாபாரி அதைத் தந்து விடுகிறார். பட்டியல் சாதி மக்களின் மீது சுமத்தப்படும் சாதிய இழிவைச் சுட்டிக் காட்டுகிறதா வாழை? அப்படிப்பட்ட காட்சிகளும் இல்லை. அப்படியெனில் என்ன தான் பிரச்சினை?

ஏன் இப்படத்தில் உள்ள தன்முரண்களைச் சுட்டிக்காட்டுகிறேன்? வழக்கமான வணிகப் படம் என்றால், அதை நாம் பார்ப்பதுமில்லை. விமர்சிப்பதுமில்லை. ஆனால் இப்படம் உண்மைக் கதை, சமூகப் பிரச்சினைகளைத் தோலுரித்துக் காட்டும் படம் என்று சொல்லப்படுவதால், இப்படத்தில் சொல்லப்படும் கதையில் உண்மை உள்ளதா என்று ஆராய்ந்து பார்க்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

சமூகப் பிரச்சினையைக் கூறும் படமெனில், அப்படத்திற்கு உண்மை மட்டுமே அச்சாணியாக அமைய வேண்டும். இப்படத்தில் சொல்லப்படும் காட்சிகளில் துளியளவு கூட உண்மை இல்லை என்பதால், அதைச் சுட்டிக்காட்டும் வேலையைச் செய்துள்ளோம். இது உண்மைச் சம்பவத்தைக் அடிப்படையாகக் கொண்ட சமூகப் பிரச்சினையைப் பேசும் படமல்ல. காமெடி, காதல், காமம் என அனைத்துவித வணிக அம்சங்களையும் கொண்ட முழுநீள வணிக சினிமா.

- சு.விஜயபாஸ்கர்