the boy in the striped pyjamas

மனதுக்குள் புகுந்த கூர் முனை கொண்ட கத்தியில்... மென் புன்னகை சிந்தும்.. பசி... உணவை வாங்கியதும் கண்களுக்கு கூட காட்டாமல்.. வாய்க்குள் திணிக்கும்... அந்த யூத மொட்டை பையன்....(ஸ்மோல்) ஒரு துளி சோறு.. பதம்.. அது அடிமையாக்கப் பட்ட இனத்தின் மிகப் பெரிய குறியீடு...விசில் சத்தம் கேட்டதும்... என்ன பேசிக் கொண்டிருந்தாலும்.. என்ன செய்து கொண்டிருந்தாலும்.. அதை அப்படியே விட்டு விட்டு ஓர் இயந்திரம் போல.. கூனி குறுகி..... அவமானத்தை ஒப்புக் கொண்ட உடல் மொழியோடு...ஓடி செல்கையில் அவன் கரைப்பது..நமக்குள் ஆழமாக அடைந்து, ஒரு பழைய புகைப் பட நினைவைப் போல புதைந்து விட்ட நேசத்தை மட்டுமல்ல... ஒட்டு மொத்த மனித இனத்தின் குரோதத்தையும் கூட......

இந்தப்படம்.... ஒரு யூத சிறுவனுக்கும்... ஹிட்லரின் ஆட்சியில்.. மிகப்பெரிய பதவியில் இருக்கும் ஒரு சோல்ஜரின் மகனான புருனோவுக்கும் இடையிலான நட்பும்.. அவர்களின் அறியாமையும்... மன உளைச்சலும்..அவர்களின் பார்வையில் அகப்பட்ட உள்ளமும்...உலகமும்..என்று இரு வேறு நிறங்களை நமக்கு வெளிப்படுத்துகிறது...ஒரே வயதாக இருந்தாலும் இருவருக்கும் மாறுபட்ட அனுபவங்களை கொடுத்த இந்த வாழ்க்கை அவரவர் பார்வையில் எல்லாமே வேறு வேறாய் இருக்க... அது இணைக்கும் ஒற்றைப் புள்ளியில் அவர்களுக்கு இடையில் மின்சாரமாய் பாய்ந்து பின்னிக் கொண்டு நிற்பது வெறும் முள்வேலி மட்டுமல்ல... அது அதிகார வர்க்கத்தின் ஆணவ சுருள்ளாக இருக்கிறது... அத்துமீறும் அவர்களின் அகங்கார தத்துவங்களின் வியாக்யான மிருகத்தோல்களாக நெருடுகிறது....

தனிமை.... புதிய இடம்..... புருனோவுக்கு ஒப்புக் கொள்ளவில்லை.. அவன் தன் வயது பையன்களைத் தேடி அலைகிறான்.. அவன் கண்ணுக்கெட்டும் வரை அவன் பார்வையைக் கொண்ட வலையில் யாரும் சிக்குவதில்லை.... அவன் கால்கள் ஒரு திசையில் ஒரு குறியீட்டுக் குவளையாய் வளைந்து காட்டுக்குள் சிறகடிக்கிறது.....அது முடியும் இடத்தில் ஒரு முகாம் இருக்கிறது......அது யூதர்களின் முகாம் என்பது அவனுக்கு அப்போது தெரிவதில்லை.... பின் எப்போதுமே தெரிவதில்லை.... அந்த முகாமுக்கு காவல் தலைவரே தன் தந்தைதான் என்பதும் அவன் அறியாதது.. தன் தந்தை ஒரு கண்டிப்பான அதிகாரி என்பதும் அதனால் அவரை அவ்வளவாக பிடிக்காத மன நிலையுடனும்தான் புருனோ இருக்கிறான்..

அவன் கண்களில் ஒரு முள்வேலியால் சூழப்பட்ட ஒரு இடம் தெரிகிறது.. அங்கே ஒரு சிறுவன் மொட்டைத் தலையுடன்... தலை கவிழ்ந்து அமர்ந்திருக்கிறான்.. அவன் புரூனோவின் வீட்டில் வேலை செய்யும் வேலையாளைப் போலவே உடை(Striped Pyjamas) அணிந்திருக்கிறான்... புரூனோவுக்கு ஒன்றும் விளங்கவில்லை.. மலங்க விழித்துக் கொண்டே மனதுக்குள் அலை மோதும் யோசனைகளுடன், மெல்ல தன்னை அவனிடம் அறிமுகம் செய்து கொள்கிறான்... அவனும்.. தயங்கி, பின் மெல்ல பேசுகிறான்.....

"இது என்ன.. விலங்குகள் உள்ளே வரக் கூடாது என்பதற்கா இந்த முள்வேலி" என்று கேட்கிறான்.. புரூனோ...

யூத சிறுவன்....."விலங்குகளா....?" என்று இயல்பாக கேட்டு விட்டு...." இல்லை.. நாங்கள் வெளியே போக கூடாது என்பதற்குதான் இந்த முள்வேலி" என்கிறான்...

"ஏன்"- என்று கேட்கிறான்... புரூனோ.

"நாங்கள் யூதர்கள்" என்கிறான்...ஸ்மோல்.

இந்த ஒற்றை பதில்.. எத்தனை எத்தனை கேள்விகளை நமக்குள் எழுப்பி விடுகிறது... இதற்கிடையில் "யூத இனம் என்பது தவறாக பூமியில் தோன்றி விட்ட ஒரு வகை கிரியேட்சர்.....அதை வேரோடு அழிப்பதுதான் நமது கடமை.....அதுதான் தர்மமும் கூட" என்று புரூனோவுக்கு வீட்டில் வகுப்பெடுக்கப் படுகிறது...

பதின் வயதில் இருக்கும் தன் அக்காவின் அத்தனை பொம்மைகளும் ஆடை கலைந்து வீட்டுக்குள் பழைய பொருள் போட்டு வைக்கும் அறையில் குவித்து வைக்கப் பட்டிருக்க, அதைக் கண்டு விட்ட புரூனோ... ஓடி வந்து தன் அக்காவிடம் விஷயத்தைக் கூறுகிறான்..... அக்காவோ.."அது அப்படித்தான்.. இனி நான் பெரிய பெண்.. என் லட்சியம் வேறு" என்று ஒரு புரட்சிகாரியைப் போல பேசுகிறாள்..... அவளின் அறைக்குள் ஹிட்லரின் படமும் அவன் கூறிய வாசகமும்..நிறைந்திருக்கின்றன...ஒரு படைத்தளபதியை உருவாக்கி விட வேண்டிய சூழலைக் கொண்டதாகவே காட்டப் படுகிறது...... அது ஒரு சாம்பிள்தான்...அப்படித்தான் அங்கு பதின் பருவத்து மனங்களில் நாஜி படையின் வேர்கள் முளை விட வைக்கப் படுகின்றன... என்பதைத் துல்லியமாக விளக்கும் இடம் அது...மிக மிக மெல்லிய நீரோடை போல ஓடும் படத்தில்.. ஓடிக் கொண்டிருப்பது நீரோடை அல்ல...புரவியில் மாற்றப்பட்ட நிறம் என்பதை.. பார்க்க பார்க்க பார்த்துக் கொண்டே உணரும் நொடிகளில் நாம் மிகப் பெரிய துக்கத்துக்குள் போய் விடுவதை தவிர்க்க முடிவதில்லை.....

இருவரும் தங்கள் பெயர்களை சொல்லி அறிமுகப் படுத்திக் கொள்ளும் இடத்தில் 'ஸ்மோல்லா.... இப்படி ஒரு பேரா... நான் கேள்விப்பட்டதே இல்லை" என்கிறான்... புரூனோ...

"புரூனோவா..இப்படி ஒரு பேரா... நான் கேள்விப்பட்டதே இல்லை" என்று ஸ்மோல்ம் அதே வசனத்தை கூறுகிறான்... இரு வேறு துருவங்களின் பிளவு..... அது,ஆழமாக விதைந்து விட்டதை காட்டுகிறது... பெயர் கூட ஓர் இனம் வைப்பதை இன்னோர் இனம் வைக்க கூடாது என்பது இன வெறியின் ... உச்சம்...

அடுத்த நாள் புரூனோ கொண்டு போகும் சான்விட்சை, அது என்ன என்று கூட பார்க்காமல் சட்டென வாங்கி வாய்க்குள் வைத்து திணிக்கும் 'ஸ்மோல்' பசித்த கடவுளாகவே எனக்கு தோன்றுகிறான் ..... பசித்த மனதின்.. விளிம்பு நிலை மனிதனின் மிக மோசமான பள்ளத்தாக்கை வயிறாக கொண்ட பாவப் பட்ட ஒரு படைப்பாகவே தெரிகிறான் ... ஒவ்வொரு ஜெர்மனியரும் ஹிட்லராக தெரிந்த இடம் அது....ஆனால் அதில் புரூனோ விதிவிலக்காகிறான்.. அவனை நேசிக்கத் துவங்குகிறான்.......

ஒரு நாள் வேறொருவருக்குப் பதிலாக தன் வீட்டுக்கு வேலைக்கு வரும் யூத சிறுவனுக்கு சான்ட்விச் சாப்பிட கொடுத்து விட்டு, தன் வீட்டு அதிகாரி பார்த்து விட்டதும், பயத்தில் அவனை தனக்கு தெரியவே தெரியாது என்று புரூனோ பொய் பேசும் இடத்தில்,யூத சிறுவன் தன் நண்பனைப் பார்ப்பானே ஒரு பார்வை.. அது மீண்டும் கொல்லப் பட்டால் ஜீசஸ் யூதாசைப் பார்ப்பது போல.. பசித்த வயிறு நிறைந்த வயிறைப் பார்ப்பது போல.... அது மனித தன்மையற்ற செயல் என்று உணர்ந்து.... அதை நினைத்து நினைத்து மனம் வெதும்பி புரூனோ அழும் இடம்.. திரை தாண்டி துளிக்கும்.. தவிப்பின் உச்சம்....நாமும் கண்ணீர் அடக்கவே செய்வோம்..

அடுத்த நாள் தலை கவிழ்ந்து அமர்ந்திருக்கும் ஸ்மோலிடம் மன்னிப்பு கேட்டு, "பேச மாட்டியா" என்று புரூனோ கேட்கும் போது மெல்ல தலை தூக்குவான் யூத சிறுவன்.. அவன் கண்கள் அடி வாங்கி கன்னி போய் சிவந்திருக்கும்...புரூனோ தனக்கு தெரியாது என்று கூறிய பின் திருடி சாப்பிட்டு விட்டதாக முடிவுக்கு வந்த அதிகாரி அவனை இழுத்துப் போன பின் அடித்த காட்சியை நமக்கு இயக்குனர் காட்டவே இல்லை... ஆனால்... இன்று வீங்கிய கண்ணோடு ஸ்மோல் பார்க்கும் பார்வையில்... குபுக்கென்று உடைந்து விழுகிறது நம் இதயம்.. புரூனோ... ஒடுங்கிப் போகிறான்...காட்டாத அடியின் வலி... ஒரு பூதத்தைப் போல.. பயமுறுத்துகிறது...

ஒரு கட்டத்தில் யூத முகாமுக்குள்ளேயே காணாமல் போன ஸ்மோலின் தந்தையைக் கண்டுபிடிக்க ....(அவர் செத்துப் போயிருப்பார் என்றுகூட இருவருக்கும் யூகிக்க தெரியவில்லை..) யூதர்களுக்கான சீருடையை(Striped Pyjamas) கொண்டு வர சொல்லி தானும் அணிந்து கொண்டு அந்த முகாம்க்குள் யூத சிறுவனோடு நுழைகிறான்... புரூனோ, தன் நண்பனுக்காக .....

புரூனோவின் அப்பா அம்மா... அக்கா... காவல் படை என்று அனைவரும், விஷயம் தெரிந்து அடித்து பிடித்து மழையோடு ஓடு வந்து கத்தி கூச்சலிட்டு பரபரக்கையில்.. அங்கே ஒரு ஓர் இருட்டறை சாவு அரங்கேறிக் கொண்டிருக்கிறது... ஒரு கூட்டத்தின் ஆடைகள் கழற்றப்பட்டு அறைக்குள் தள்ளி பூட்டப்பட்டு.... ஏதோ மருந்து தெளித்து.. பூட்டி விடுகிறார்கள்....அந்தக் கூட்டத்தில் கூட்டத்தோடு கூட்டமாக புரூனோவும் ஸ்மோலும் மாட்டிக் கொள்கிறார்கள்... ஒரு மாபெரும் கனத்த வாசலில்..மூடிய கதவு... இனவெறியின் மரணத்தை தாங்கிக் கொண்டு... சலனமற்று நிற்கிறது... திரையை விட்டு கண்கள் வெளியேறுகிறது.. அது சூட்சும குறியீட்டின் தவறான அழுத்தம்...... இரு புறமும் வினை செய்யும் என்ற உண்மையை மிரட்சியோடு... ஒன்றுமே புரியாத மணித் துளிகளாக நமக்கு காட்டுகிறார் இயக்குனர்...

பசி.. பயம்... தவிப்பு.. தனிமை.. இருள் இயலாமை..... என்று ஒரு சிறுவன்.. இவை எதுவுமே இல்லாமல்... மன உளைச்சலுக்குள் ஆளாகும் இன்னொரு சிறுவன்... ஒருவன் யூதன்.. ஒருவன் ஜெர்மானியன்... இடையில்.. நின்று என்ன செய்வதென்று தெரியாமல் செத்துக் குவிந்த ஹிட்லர்... சாத்தான்....

கடவுளே நீ எங்கே...?

- கவிஜி

Pin It