hitler and seemanஇன்று நாம் காணும் உலகம் “மூலதனத்தால்” இணைக்கப்பட்டுள்ளது. காலனியம் முடிவுக்கு வந்த பின்னர், அமெரிக்கா, பிரிட்டன் போன்ற வல்லரசு நாடுகள் மூலதனத்தின் வடிவில் உலகெங்கும் தங்கள் செல்வாக்கைச் செலுத்தி வருகின்றனர். ஆசியாவிலிருந்து மூலதனம் செல்கிறது. வல்லரசு நாடுகளின் மூலதனத்திற்கும் அந்த நாடுகளின் வணிகர்களின் சுரண்டலுக்கும் இடையூறு ஏற்படுத்தும் நாடுகளின் மீது யுத்தம் திணிக்கப்படுகிறது. யுத்தங்கள் என்றுமே சாதாரண குடிமக்களின் நலனுக்காக துவக்கப் படுவதில்லை. யுத்தத்திற்குப் பிந்தைய மறுகட்டுமானத்திலும் முதலாளித்துவமே பயனடைகிறது.

இன்று உலகம் முழுவதும் மக்கள் வேலையின்மையால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி மற்றும் பிற மேலை நாடுகளின் அரசுத் தலைவர்கள் வலதுசாரித் தலைவர்களாகவும், மத, இன, சிறுபான்மை மக்களைச் சகித்துக் கொள்ளாதவர்களாகவும் இருக்கின்றார்கள். அகதிகள் மற்றும் கறுப்பு நிறத்தவர் மீதான தாக்குதல்களும் தொடர்கிறது. நமது நாட்டிலும் மதச் சிறுபான்மையினரைத் தனிமைப்படுத்தலும் நிகழ்வுகளும் நடந்து கொண்டுள்ளன.

மக்களை அழிப்பதிலும், ஆயுத உற்பத்தியிலும் ஈடுபட்டுள்ள நாடுகளின் தலைவர்கள் 'புவி வெப்பமடைதலுக்குக்' காரணமான உலகின் கரியமில வாயு உருவாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. இந்தப் புவிப்பந்தின் இருப்பின்றி மனித குலம் வாழ்வதேது? இதற்குப் பதில் தேடும் செயலை மறந்து அரசுகள் 1930 - 40களில் இத்தாலியிலும், ஜெர்மனியிலும் நடத்திய பாசிசச் செயல்களை, அதாவது யுத்தத்தின் வழியாக நடத்திக் காட்டிக் கொண்டுள்ளனர். மேலைநாடுகளின் சிரியா போரும், இஸ்ரேலின் காசா மீதான தொடர் தாக்குதல்களும் இனஅழிப்புதான்.

'இனஅழிப்பு' என்ற சொல் நாஜி ஜெர்மனி பெற்றெடுத்த சொல். இனஅழிப்பை நோக்கி மத/இனச் சிறுபான்மையினர் தள்ளப்படுவதன் உடனடி நிகழ்வு திடீரெனத் தொடங்குவதல்ல. அது திட்டமிட்டே பெரும்பான்மை மக்களிடம் வெறுப்புப் பேச்சுக்கள் மூலம் ஊட்டி வளர்க்கப்படுகிறது.

ஒரே படிநிலையில் வாழ்க்கைத் தரம் கொண்ட மக்கள் எதிரெதிர் அணியில் நின்று மோதிக் கொள்வதற்கு அரசியல் சுயநல நோக்கங் கொண்ட தலைவர்களின், கட்சிகளின் வெறுப்புப் பேச்சுக்களே காரணம். உழைக்கிற மக்களை ‘நாம்” என்றும், அவர்கள் (பிறர்) என்றும் வகைப்படுத்தலும் தனித்த, அழுத்தமான அடையாளங்களை உருவாக்குவதன் மூலமாகவும் இது நடைபெறுகிறது. ஒரு குழு மற்ற குழுவின் சிறு குற்றங்களைப் பெரிதுபடுத்தி மக்களிடையே அந்தக் குழு சாதி/ மதம்/ மொழிச் சிறுபான்மையினர் அனைவரும் குற்றவாளிகள் என்று பொதுப் புத்தியை உருவாக்குதல், இதற்காகத் திட்டமிட்ட கலவரங்களை உருவாக்குதல் ஆகியவை பாசிச வேலைத் திட்டமாகும்.

இதுபோன்ற பாசிசச் செயல்களுக்கு எதிராகத் திரளும் அறிவாளிகள், வழக்கறிஞர்கள், தனிநபர்கள், அரசியல்வாதிகள் ஆகியோரை நாட்டின் வளர்ச்சிக்கு எதிரான தேச விரோதிகள் என்று பாசிஸ்டுகள் அடையாளப் படுத்துவார்கள்.

இந்த இன/மத வெறுப்புக் கொண்ட ஆட்சியாளர்களுக்கு ஆதரவாகவும் போர்/இன அழிப்புக்கு ஆதரவாகவும் உலகெங்கும் ‘மூலதன’வாதிகளும் ஊழல் அரசியல்வாதிகளும் கல்வி அறிவற்ற அரசின் உதவியுடன் இயற்கை வளங்களைச் சுரண்டிக் கொழுக்கும் உள்ளூர் குண்டர்களும் ஆதரவாளர்களாக இருப்பார்கள்.

ஆனால் ஒரு பாசிச வேலைத் திட்டமோ/ கட்டமைப்போ திடீரென உருவாக்கி விடுவதில்லை. பொதுவாக ஆளும் சக்திகளின் பாசிச வெறுப்புச் செயல்பாடுகளும், பரப்புரைகளும் அதை உருவாக்குகின்றன. பாசிச ஆதரவுக் குழுக்கள் எப்போதும் கலவரங்களை செய்யத் தயாராக இருந்தால், பாசிச வேலைத் திட்டம் நடைமுறையில் உள்ளது என்றே பொருளாகும்.

பாசிசக் கட்டமைப்புக்கு எப்போதும் நடுத்தர வர்க்க அறிவாளிகள் தான் துணை செய்து அதன் ஆதரவு சக்திகளை ஒருங்கிணைக்கிறார்கள். அவர்களின் எஜமான் வெளியே தலை காட்டுவதில்லை. பணமும் ஆளும் கட்சியின் ஆதரவும் அவர்களுக்கு கிடைக்கிறது என்ற காரணத்திற்காக ஒடுக்கப்பட்ட வகுப்புப் பிரதிநிதிகளும்கூட பாசிசச் சக்திகளின் செயல் வீரர்கள் ஆகி விடுகின்றனர். ஆனால் அவர் சார்ந்த சமூகத்திற்கு பாசிசச் சக்திகள் எதிராகவே நிற்கும்.

இந்த நடுத்தர வர்க்க ஆதரவாளர்களை, சிறுவணிகர்கள், மத பீடங்கள், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், சாதிச் சங்கத் தலைவர்கள், கலைஞர்கள் என வகைப்படுத்த முடியும்.

அடையாள அரசியல் அதாவது மக்களை இனம், மொழி எனப் பாகுபடுத்தும் அரசியலும் பாசிசத்தை நோக்கிப் போய்ச் சேராது என்பதற்கு எவராலும் உறுதி தர இயலாது.

தேசிய இன அரசியல் என்பது தமிழகச் சூழலில் பிறமொழி பேசும் மக்களை வெறுக்கும் பேச்சுக்கள் வழியாக கட்டமைக்கப்படுவது 2009 ஆம் ஆண்டுக்குப் பின் ஏற்பட்டுவிட்ட நிகழ்வாக உள்ளது. தமிழர்களைக் கண்டுபிடிப்பதற்கு சாதிப் பெயர்களைப் பெயரின் பின்னொட்டாகப் போட்டுக் கொள்வதைப் போல ஊக்கப்படுத்தி, பரப்புரை செய்கிறார்கள். இச்செயல் சாதியத்தின் பெயரால் தீண்டாமை மற்றும் ஒடுக்குமுறைகளில் ஈடுபடுவோருக்கு ஊக்கம் ஊட்டுவதாக அமைந்து விட்டதுடன், இந்த மண்ணில் சுயமரியாதை இயக்கத்தினரும் தலித் இயக்க முன்னோடிகளும் அம்பேத்கரும் உருவாக்கிய இணக்கமான ஒரு சூழலை மாற்றி, சாதியை மீட்டு மறுகட்டுமானம் செய்ய இனத் தேசியவாதிகள் முனைகிறார்கள். அதன் ஒரு பகுதியாகவே சாதிமத எதிர்ப்பு, பார்ப்பனிய எதிர்ப்புக் கொள்கைகளை உடைய அம்பேத்கர், பெரியாரை தமிழக அரசியல் வெளியிலிருந்து நீக்கம் செய்திட முயற்சி செய்கின்றனர். இந்த முயற்சி ஆரியப் பார்ப்பனியத்திற்கு மிகவும் உவப்பானது.

மத, இனவழி தேசிய அரசியல் சிறுபான்மை மொழியையும் தலித்துக்களையும் அன்னியப்படுத்துவதுடன், அவர்களை தமிழ்ச் சமூகத்தின் மைய நீரோட்டச் செயல்பாடுகளிலிருந்தும் அகற்றும் திட்டமாகவே இருக்கும். நாஜிக்களின் செர்மானியக் குடியரசில் இப்படித்தான் துவக்கினார்கள். அவர்கள் செர்மானியர்களை ஆரியர் என்றும், அந்த இனமே உயர்வான இனம் என்றும், அவர்களே இந்த உலகை ஆளத் தகுதி பெற்றவர்கள் என்றும், அதற்காகவே இறைவனால் படைக்கப்பட்டதாகவும் நம்பினார்கள். (உண்மையில், அவர்கள் ஆரியர்கள் அல்ல) இந்த உலகின் அரிய கண்டுபிடிப்புக்களை எல்லாம் ஆரியர்கள் கண்டுபிடித்ததாகவும், ஆரிய இனம் யூதர்களாலும் மற்ற தகுதி குறைந்த ஆப்பிரிக்க, ஆசிய இனங்களாலும் ஆரிய - ஜெர்மானியர்களுக்கு அழிவு நெருங்கி வருவதாகவும் இட்லரும் மற்றவர்களும் பொய்க் கதைகளை மக்களிடம் பரப்பினார்கள்.

முதலில் யூதர்கள் மீது செர்மானியர்கள் வெறுப்பு கொள்ளும் அளவுக்கு அவர்களைப் பற்றிய தவறான எண்ணங்களைப் பிரச்சாரம் செய்தார்கள். அதன் பிறகு, செர்மானியர்களுடன் சேர்ந்து வாழ முடியாத சூழலை உருவாக்கி, தனி யூதக் குடியிருப்புக்களை 'ஜெட்டொ'வை உருவாக்கினார்கள்.

ஏற்கெனவே ஆரிய இனமே மேலானது என்றும், அதுவே ஆளத் தகுதியானது என்றும் மக்களிடம் உணர்ச்சியைத் தூண்டிப் பெருமிதம் கொள்ளும் நிலைக்கு மக்களை மாற்றி, அதன் மூலம் யூதர்களுக்கு எதிரான குற்றங்கள் – தண்டனைகள் சரியானவையே என்ற எண்ணங்களை செர்மன் மக்களிடம் உருவாக்கி இருந்தனர். யூதர்களும் செர்மானியர்களும் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்று பரப்புரை செய்ததுடன், அப்படி செய்தால் செர்மானியத் தூய ஆரிய இனத்தில் தாழ்வான இனத்தின் இரத்தக் கலப்பு உருவாகி விடும் என்றும் பொது இடங்களில் விளம்பரப்படுத்தினார்கள் (இன்று தமிழ்நாட்டில் சாதிச் சங்கங்கள் அதைத்தான் செய்து கொண்டிருக்கின்றன).

நாஜிக் கட்சியின் பாசிசத் திட்டங்கள் பின்னாளில் “நியூரம்பர்க் சட்டம் 1935” என்ற பெயரில் சட்டமாகவே நிறைவேற்றப்பட்டன. செர்மானிய ஜெட்டாவிலிருந்து மட்டுமல்ல, ஐரோப்பா முழுவதுமிருந்த யூதர்களை இரயில் மூலம் போலந்துக்குள் கடத்தி வந்தார்கள். தொடக்கத்தில் “கான்சென்ட்ரேசன் கேம்ப்” என்ற பெயரில் வதை முகாம்களை அமைத்து அங்கே அடைத்து வைத்தனர். பின்னர் அவர்களைச் சுட்டுக் கொன்றனர், சுட்டுக் கொல்வதற்கு மிகுதியான குண்டுகளும், மிகுதியான ஆட்களும் தேவைப்பட்டதால், ஒரே நேரத்தில் ஏராளமான பேரை அடைத்து வைத்து விசவாயு செலுத்திக் கொன்றனர். இவ்வாறு அழிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 70 இலட்சத்திற்கும் மேலாகும்.

இந்த அழித்தொழிப்பு முகாம்களில் முதன்மையானது 'ஆஸ்ட்விட்ச்' முகாமாகும்.

இனத்தூய்மை, இரத்த உறவு வழியாக மக்களைத் திரட்டுபவர்கள், இறுதியில் மற்றொரு மக்கள் கூட்டத்துடன் மோதல் நடத்துவதற்கும் அவர்களை அழிப்பதற்குமே திரட்டுவார்கள்.

செர்மனியில் திட்டமிட்டு வளர்த்த பாசிச யூதவெறுப்புத் திட்டம் இறுதியில் ‘யூத இன அழிப்பில்’ முடிந்ததை இந்த உலகம் மறந்து விடாது.

மானுட விடுதலைக்காகப் போராடுவோர், தமிழக வரலாற்றிலிருந்து மட்டுமின்றி, உலக வரலாற்றிலிருந்தும் பாடங்களைக் கற்க வேண்டும். அதுவே இயற்கையானது, அறிவியலுக்கும் உகந்ததாகும்.

தொன்மையான தமிழ்ச் சமூகம் இனக்குழு மனநிலையில் சிந்திப்பது பெருந்துயரம், அதிலிருந்து மீண்டு வர வேண்டும். அதுதான் வளர்ந்த ஒரு முன்னேறிய சமூகத்திற்கு அடையாளமாகும்.

ஆப்பிரிக்காவில், ருவாண்டாவிலும், தெற்கு சூடானிலும் விடுதலைப் போராட்டம் வெற்றி பெற்ற பின்னரும் உள்நாட்டுப் போரில் சிறுபான்மையினர் ‘இனஅழிப்புக்கு’ ஆளானார்கள்.

இனம், அதாவது, மரபுவழித் தமிழர், இரத்த உறவுத் தமிழர் என்ற அடிப்படையில் மக்களை அடையாளப்படுத்தி ஒருங்கிணைப்பதிலும் கூட முந்தைய இனக்குழுக் காலத்தில் இரத்த உறவுடைய குழு மற்றொரு குழுவுடன் தனது இருத்தலுக்காக சண்டையிட்ட காலத்திற்கே மக்களைப் பின்னோக்கி இழுத்துச் செல்லும் அரசியலாகும்.

மேற்படி முறையில் மக்களை அணிதிரட்டல் அறிவியலுக்குப் புறம்பானதாகும். ஒரு நாட்டில்/ மாநிலத்தில் வாழும் மக்களின், உழைக்கும் மக்களின், பின்தங்கிய மக்களின் சக்தியைத் திரட்டி மாற்றத்திற்குப் போராடுவதுதான் இயற்கையானதும், அறிவியலுக்கு உகந்ததும் ஆகும். இனம், மதம், சாதி அடிப்படையிலான திரட்சிகள் உழைக்கும் மக்களை அதிகாரத்திடம் பலியிடுவதில்தான் போய் முடியும்.

பாசிசத்தின் 10 அறிகுறிகள்

1. மக்களை ‘நாம்’, ‘அவர்கள்’ என்று வகைப்படுத்தல்

2. சிறுபான்மையினரை தனித்த அடையாளங்களுக்குள் அடைப்பது

3. சிறுபான்மையினரை திட்டமிட்டுப் பாகுபாட்டுடன் நடத்துவது

4. அந்த மக்களை விலங்குகளுடனும், நோய்களுடனும் ஒப்பிடுதல்

5. அரசு அமைப்புகளை சிறுபான்மை மக்களை அடக்குவதற்கு எனத் தனியே உருவாக்குதல்

6. அரசாங்கம், ஊடகங்களை சிறுபான்மையினருக்கு எதிராகப் பயன்படுத்துதல்

7. சிறுபான்மை மக்களை வேறு இடங்களுக்கு விரட்டுதல்.

8. அந்த மக்கள் மீது குண்டர்களை ஏவிப் படுகொலை செய்வது, சொத்துக்களை அழிப்பது, திருடுவது

9. முழுவதுமாக மக்களை அழித்துவிடத் திட்டமிடுதல்/ செய்தல்

10. அரசு தன் பொறுப்பிலிருந்து விலகிக் கொண்டு மறுத்தல்.

- ஆ.கிருட்டிணன்

Pin It