தமிழ் சினிமாவுக்கு தந்தை மகள் பாசம் புதிதில்லை. பார் மகளே பார் இல் ஆரம்பித்து அபியும் நானும் வரை (எனக்கு தெரிந்து) பல படங்கள் இவ்வுறவின் அழகிய புரிதல்களை நமக்கு கண்கள் பனிக்க காட்சிப் படுத்தியிருக்கின்றன. ஆனால் தங்கமீன்கள் திரைப்படத்தை நான் முன்னம் பார்த்த "தந்தை-மகள்" படங்களோடு ஒப்புப் படுத்த விரும்பவில்லை. கொஞ்சமும் சினிமாவுக்கான செயற்கைத் தனமில்லாத தந்தை மகள் பாசத்தை காட்டுகிற தங்க மீன்கள் கூடவே குழந்தைகளின் உளவியலை நமக்கு புரிய வைக்க முயற்சித்திருக்கிறது. குழந்தைகளின் மீது நேரடியாக மறைமுகமாக இச்சமூகம் தொடுக்கும் வன்மங்களையும் சொல்லிப் போகிறது.

ராம் தேர்ந்தெடுத்திருக்கும் கதை நடக்கும் களம், எழில்மிகுந்த ஒரு ஊர். மலை, ரயில், குளம், அதில் தங்கமீன்கள் என எந்தப் பக்கம் frame வைத்தாலும் அழகு அழகு அழகு மட்டுமே அவ்வூரில். திரைப்படம் தொடங்கிய சிறுது நேரத்திற்க்கெல்லாம் அந்த ஊர் நம்மை தன் வசம் ஈர்த்துக் கொள்கிறது. யாரும் விரும்பாத தந்தையை தன்னுடைய உலகின் சில்வர் மேனாக கொண்டாடுகிற செல்லம்மா, யாரும் கொண்டாடாத செல்லம்மாவை தன் உலகின் பேரரசியாக தேவதையாக எல்லாமுமாக நேசிக்கிற கல்யாணி என்னும் கல்யாணசுந்தரம்.

நலிந்து போன தன்னுடைய பொருளாதார சூழலிலும் மகளோடு அதிகம் நேரம் செலவிடுவது தான் வேறெதையும் விட முக்கியம் என்று கருதுகிற கல்யாணி. இவள் மந்தமானவள் என்று சொல்லிக் காட்டி சொல்லிக் காட்டி செல்லம்மாவின் மீது இச்சமூகத்தின் பல முகங்களும் சிடுசிடுக்கும்பொழுது, கனிவானவனாக தன்னுடைய எல்லா கேள்விகளுக்கும் பதில் வைத்திருக்கிற தந்தையை ஆகச் சிறந்தவனாக கடலளவு நேசிக்கிற செல்லம்மாவுக்குமிடையே இருக்கிற பிணைப்பு அத்தனை நேர்த்தி, சிலிர்ப்பு, நெகிழ்ச்சி.

செல்லம்மாவை அவளுடைய வகுப்பாசிரியர் இவள் "W" எழுதக் கற்றுக்கொள்ளும்வரை "W" என்றே கூப்பிடுங்கள் என்று மற்ற மாணவர்களிடம் சொல்வதும் கூனிக் குறுகி வெம்பி வெடிக்கிற செல்லம்மாவும், அந்தக் காட்சி இன்றைய தனியார் பள்ளிகள் குழந்தைகளின் மீது தொடுக்கிற வன்மம் நிறைந்த தாக்குதலை நமக்கு அப்பட்டமாக சொல்கிறது. புத்தகத்தில் இருப்பதை அப்படியே ஒப்பிக்கிற குழந்தை அறிவாளி என்றும் தன்னுடைய சூழலில் இருக்கும் எது ஒன்றையும் சதா கேள்விகள் கேட்டு புரிந்துகொள்ள முயலுகிற ஒரு குழந்தை மக்கு மந்தம் என்றெல்லாம் சொல்லிக் கொடுக்கிற தனியார் பள்ளிகள் மற்றும் குடும்பத்தின் ஏனைய உறுப்பினர்கள் என தமிழ் ரசிகர்களுக்கு உரைக்கும்படியாக அந்த முட்டாள் கற்பிதத்தின் முகத்தில் காரி உமிழ்கிறது தங்கமீன்கள்.

தன் மகளுக்கு ஆட வராது என்று சொல்கிற ஆசிரியையிடம் நேர்மையான கோபம் கொப்பளிக்க வந்து கேள்விகள் கேட்கிற ராமை அந்த ஆசிரியையும் தலைமை ஆசிரியையும் நடத்துகிற விதம் திரைக்குள் சென்று நாலு வாங்கு வாங்கலாம் போல சினத்தை உண்டு பண்ணியது. "இதுக்குதான் டிகிரி படிக்காத பெற்றோர்களின் பிள்ளைகளை நாங்கள் சேர்த்துக் கொள்வதில்லை" என்று சொல்லுகிற தலைமை ஆசிரியர் பணம் புடுங்கி தனியார் பள்ளிகளின் பிரதிநிதியாக எதேச்சாதிகாரத்தின் அரக்கத்தனத்தை பிரதிபலிக்கிறார்.

செல்லம்மாவுக்கும் கல்யாணிக்கும் இடையே இருக்கிற தந்தை-மகள் பாசம் மட்டுமே இப்படத்தில் சொல்லப் படவில்லை. அது மட்டுமே இப்படத்தை எடைபோடுவதற்கான மதிப்பீடு அல்ல. ராம் இப்படத்தில் சொல்ல வருகிற சேதி அது மட்டுமே அல்ல...வேறு...

அப்பா என்றால் சம்பாதிக்கவேண்டும், பிள்ளையின் மீது அன்பு வைக்க பாசம் வைக்க கவனித்துக் கொள்ள தான் அம்மா இருக்கிறாளே என்று பொருள்படும்படியாக கல்யாணியின் தந்தை "பூ" ராம் சொல்கிற போது இச்சமூகம் ஒரு ஆண் எப்படி இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறது, அவன் பணம் சம்பாதிப்பவனாக மட்டும் தான் இருக்க வேண்டும் என்று நிர்பந்திப்பதாக எனக்கு அக்காட்சி நுண்ணிய இழையாக பிரித்துக் காட்டியது. இப்படி சொல்கிற தந்தை, கல்யாணியிடம் எப்படி இருந்திருப்பார் என்ற அத்தியாயம் படத்தில் இல்லை என்றாலும், இக்காட்சியின் மூலம் என்னால் கல்யாணியின் பால்யத்தை யூகிக்க முடிகிறது, இப்படத்திற்கு அது தேவையில்லை என்றாலும்.

"பூ" ராம் தான் கல்யாணியின் தந்தையாக நடித்திருக்கிறார். நீர்ப்பறவை திரைப் படத்தில் எனக்கு "பூ" ராமை அவ்வளவு பிடித்திருந்தது. மனிதர் எத்தனை யதார்த்தமாக முகத்தில் உணர்வுகளை கொண்டுவருகிறார். தன் மகனை அறைந்து கோவப்பட்டு, பின் அவனில்லாத போது "அவன் ரொம்ப நல்லவன்டி, கொஞ்சம் கெட்டவனாகத் தான் திரும்பி வரட்டுமே..." என்று தன் மனைவியினிடத்தில் கண்கலங்குகிற பொழுது என்ன நடிப்பு.... தமிழ் சினிமாவில் அசைக்கமுடியாத குணசித்திர நடிகர் என்ற அந்தஸ்தைப் பெற "பூ" ராமுக்கு முழுத் தகுதியும் இருக்கிறது.

கல்யாணியாக "கற்றது தமிழ்" ராம், செல்லம்மாவாக சாதனா இருவரும் சினிமாவிற்காக தந்தை மகளாக நடிக்கிறார்கள் என்ற உணர்வே எனக்கு வரவில்லை. அவர்கள் ஒரு நிஜ தந்தை மகளாக மனதில் அழுந்த பதிந்து போகிறார்கள். இயக்குனர் ராம் தானே இப்படத்தில் நடிப்பது என்று முடிவு செய்தது இப்படத்திற்கு உண்மையில் இன்னொரு பலம். வேறு ஒருவர் நடித்திருந்தால் கதையின் உயிர்த்துடிப்பை தன் நடிப்பில் உடல்மொழியில் இவ்வளவு யதார்த்தமாக கொண்டு வந்திருப்பாரா என்பது சந்தேகம்.

"அப்பாவுக்கு உடம்பு சரியில்லம்மா -அவருக்கு அங்க கஞ்சி வச்சித் தர யாருமில்லம்மா - அதனால தான் நான் போயி சமைச்சிக் கொடுக்கலாம்னு போனேன்.." என்று அழுகிற பொழுது சாதனாவும், அதை கேள்விப்பட்டு "நான் உனக்கு ஒன்றுமே செய்ததில்லையே செல்லம்மா - நீ கேட்ட எதையுமே நான் வாங்கிக் கொடுத்ததில்லையே -எதுக்கு செல்லம்மா இப்புடி பண்ணே" என்று தன் முகத்தில் தானே அறைந்துகொண்டு கதறுகிற இயக்குனர் ராமின் நடிப்பும் உயிரை உலுக்கியது. தன்னுடைய இயலாமையை நினைத்து நினைத்து அழுகிற கல்யாணியாக, தன்னுடைய மகளுக்காக சோறு தண்ணி தூக்கமின்றி வேலை செய்து சம்பாதிக்கிற தந்தையாக, "நீயும் எங்க அப்பா முன்னாடி என்ன அசிங்கப்படுத்திட்ட இல்ல.." என்று கூனிக் குறுகுகிற கணவனாக, "காக்கைக்கு தன் குஞ்சி பொன் குஞ்சுன்னு உங்ககிட்ட வந்து சொல்லுச்சா" என்று சீறுகிற தந்தையாக இயக்குனர் ராம் இத்திரைப்படத்தில் நடிக்கவில்லை - வாழ்ந்திருக்கிறார்.

கல்யாணிக்கு ஒரு தங்கை ஆஸ்திரேலியாவில் கணிப்பொறியாளராக இருக்கிறார் என்று திரைப்படத்தின் ஆரம்பத்திலேயே நமக்கு சொல்லிவிடுகிறார்கள். எப்படியும் அவரை ஒரு ஈவு இரக்கமற்றவராக திமிர் பிடித்தவராக உறவுகளை, அன்பை கொச்சைப்படுத்துகிறவராகத் தான் காட்டப் போகிறார்கள் என்று எதிர்பார்த்துக் கிடந்தேன் (கற்றது தமிழ் அப்படி என்னை இப்படத்தில் எண்ண வைத்தது). ஆனால் நல்லவேளையாக அப்படி எதுவும் செய்யாமல் விட்டதற்கு நன்றிகள் ராம்.! தமிழ் சினிமாவே அப்படி மட்டும் தானே காட்சிப் படுத்த விரும்புகிறது கணிப் பொறியாளர்களை. சரி அந்த கதை இப்போது இங்கே வேண்டாம்.

ஆஸ்த்ரேலியாவில் கணிப்பொறியாளராக இருக்கும் தங்கையைப் பார்க்க வரும் அண்ணனிடம் ஆரம்பத்தில் "பணம் தரமாட்டேன், குழந்தை கேட்பதை எல்லாம் வாங்கிக் கொடுக்க முடியுமா " என்று முகம் காட்டுகிற பொழுது திமிர் பிடித்தவள் போல தெரிந்தாலும், பின் தன் மகனுக்கு அண்ணன் வாங்கிக் கொடுத்த சாக்லேட்டில் தனக்கும் பங்கு கேட்டு கெஞ்சுகிறாரே.. ராம் என்னும் இயக்குனர் அங்கே ஆழ மனதிற்குள் வந்து ஒட்டிக் கொள்கிறார். "அம்மா சொன்னாங்கன்னு நீங்களும் என்ன இப்புடி நெனைக்கலாமா மதினி" என்று கேட்டுக் கொண்டே செல்லம்மாவின் புகைப்படத்தை சுவற்றில் மாட்டுகிற தங்கை பாத்திரத்திற்காக உங்களுக்கு தனிப்பட்ட முறையில் வணக்கங்கள் மற்றும் நன்றிகள்.

ராமின் மனைவியாக நடித்திருப்பவர், ரோகிணி, "மனுஷன மாதிரி தொழிலுக்கும் வயசாகுமில்ல" என்று பொட்டில் அறைகிற பெரியவர் என எல்லோருமே மனதில் நிற்கும்படியான நடிப்பை கொடுத்திருக்கிறார்கள். ரெவிடா டீச்சராக வருகிற பத்மப் பிரியா கொஞ்ச நேரம் வந்தாலும் என் பால்யத்தின் ஆசிரியை நாகரத்தினத்தை நினைவுப் படுத்தினார்.

இத்திரைப்படத்தில் ஒளிப்பதிவாளரின் பணி.. அட அட அட...அந்த மலைகளை, பசுமைப் புல்வெளியை, செல்லம்மாவை எவ்வளவு அழகு ததும்ப ததும்ப கண் முன் கொண்டுவருகிறார்.. அதுவும் "ஆனந்த யாழ்" பாடலுக்கான காட்சியமைப்பு இந்த வருடத்திற்கான விருதுக்கு பரிந்துரைக்கும் என்று கொஞ்சமும் சந்தேகமில்லை. என்ன மாயமோ தெரியவில்லை, யுவன் சங்கர் ராஜாவின் இசை மற்ற இயக்குனர்களோடு இணைகிற பொழுது எனக்குள் செய்யாத மந்திரத்தை செல்வராகவனோடும் ராமோடும் சேரும்போது மட்டும் உயிரை அப்படியே உலுக்கி உருக்கிப் போகிறது. நா.முத்துகுமார் எப்பவும் போல :-) ஆனந்த யாழ் எத்தனை இரவுகளில் என்னை ஆக்கிரமித்திருக்கிறது கிறங்கடிதிருக்கிறது.... வாழ்த்துக்கள் முத்துகுமார்!!!

தனியார் பள்ளிகள் செக்குமாடுகளை உருவாக்கும் தொழிற்சாலை என்பது ஒருபுறம் சொல்லுகிற இத்திரைப்படம், உள்ளீடாக இன்னொன்றை சொல்கிறது. தனியார் பள்ளியில் படிக்கும் குழந்தை செல்லம்மா- கல்யாணி போன்ற பெற்றோரோடு பிணைப்பை பெற்றிருந்தால் அக்குழந்தை உருப்படாது என்ற பொய்யான கற்பிதத்தையும் தகர்த்திருக்கிறது. தன் மகளுக்காக காடு மலை தாண்டி ஒரு இசைக் கருவியை பெற முயற்சிப்பதை அநேகம் பேர் விமர்சித்திருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன். உண்மையில் அப்படி விமர்சிக்கிறவர்களின் ரசனையில் தான் பிழை இருக்கிறதே தவிர, அக்காட்சியில் இல்லை. அந்தக் காட்சியில் எந்த மிகையும் இல்லை. தன் உலகமே தன் மகள் தான் என்றிருக்கிற தந்தை எந்த எல்லையும் போய் வருவான்.

இத்திரைப்படம் என்னை கண்கலங்க வைத்தது, என் அப்பனை நினைக்க வைத்தது, அவரை பல frameகளில் எனக்கு அருகில் கொண்டு வந்து நிறுத்தியது. "எல்லாரும் செத்துப் போகட்டும் நீ மட்டும் சாகாக் கூடாது என்ன...promise?" என்று தந்தையின் காதில் சொல்கிற செல்லம்மா போல நானும் கூட என் அப்பனிடம் சத்தியம் வாங்கி இருந்திருக்கணும் என்று வலித்து வலித்து அழ வைத்தாள் செல்லம்மா. அப்படியான ஒரு திரைப்படத்திற்கு இங்கே விமர்சனம் மதிப்பெண் எல்லாம் அளவுகோலே கிடையாது. தங்கமீன்கள் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டது. கற்றது தமிழ் எனக்குள் ஏற்படுத்திய பாதிப்புகள் வார்த்தைகளில் சொல்லக் கூடியதில்லை. அதைப் போல தங்கமீன்கள் எனக்குள் எழுப்பிவிட்டிருக்கிற உணர்வலைகளையும் என்னால் வெறும் வார்த்தைகளில் சொல்லிவிடமுடியாது.

ஒருமுறை மருத்துவர் ஷாலினி "உன்னை இயக்குனர் ராமை சந்திக்க வைக்க வேண்டும்" என்று என்னிடம் சொன்னார். அவர் ஏன் அப்படி சொன்னார் என்று நானும் கேட்கவில்லை, அவரும் சொல்லவில்லை. இயக்குனர் ராம்...!!! உங்களை முதல் முறை நான் சந்தித்தது மெரினா கடற்கரையோரம். வாழ்வில் உன்னத மனிதர்களை எனக்கு அறிமுகப்படுத்திய கடற்கரை மெரீனா. அப்போது உங்களின் கரம் குலுக்கி விட்டு கையை எடுத்துக் கொண்டேன். ஆனால் அடுத்த முறை சந்திக்கும் வாய்ப்பேற்பட்டால் உங்கள் கரங்களை இறுகப் பிடித்துக் கொண்டு இரு சொட்டு கண்ணீர் உகுக்க வேண்டும். இந்த எளியவன் வேறெப்படி உங்கள் மீதான மரியாதையை தங்க மீன்களின் மீதான என்னுடைய மதிப்பீட்டை வெளிப்படுத்த முடியும்..?

- க.உதயகுமார் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It