சென்னை கார்ப்பரேஷனைக் கைப்பற்ற வேண்டும் என்கிற எண்ணத்தின் மேல் மகாத்மா பெயரையும் காங்கிரஸ் பெயரையும் சுயராஜ்ய கட்சியின் பெயரையும் சொல்லிக் கொண்டு சிலர் உங்களை ஏமாற்றப் பார்க்கிறார்கள்.

அதோடு மாத்திரம் நில்லாமல் தாங்கள் யோக்கியமான கட்சியைச் சேர்ந்தவர்கள் என்றும், தங்களுக்கு எதிரிடையாய் நிற்கும் அபேட்சகர்கள் யோக்கியப் பொருப்பில்லாத கட்சியைச் சேர்ந்தவர்கள் என்றும், கட்சிப் பிரசாரம் செய்து, ஒரு கட்சியார் பேரில் வெறுப்புண்டாக்கவும் பாடுபடுகிறார்கள். முனிசிபாலிட்டிகளுக்கு கட்சிப் பிரதானம் பார்க்க வேண்டியதே இல்லை. அபேட்சகர்கள் யோக்கியர்களா என்று பார்ப்பதுதான் உங்கள் கடமை. இப்பொழுது பெயருக்கு முனிசிபல் விவாதத்தில் பிரஸ்தாபிக்கப்படும் கட்சிகள் இரண்டேதான். ஒன்று பிராமணரல்லாதார் கட்சி என்று சொல்லப்படும் ஜஸ்டிஸ்கட்சி; மற்றொன்று சுயராஜ்யக் கட்சி. இவ்விரு கட்சிகளும் ஒன்றையொன்று தூற்றிக்கொண்டு பலமான பிரசாரங்கள் நடத்தி வருகின்றன.

இரு கட்சியின் தத்துவங்களும் தேசத்திற்கு விடுதலை உண்டாக்காது. தற்கால நிலையில் கட்சிப் பேர்கள் சொல்லிக் கொள்வதாலேயே ஜனங்கள் ஏமாறக்கூடாது. சென்ற வருஷம் சென்னை முனிசிபல் தேர்தல்களில் ஜனங்கள் கட்சிப் பெயர்களைக் கேட்டு ஏமாந்துவிட்டார்களே அல்லாமல், உண்மை அறிந்து தங்கள் கடமைகளைச் செய்யவேயில்லை. ஆனாலும், அவர்கள் முன்னிருந்தவர்களைவிட என்ன சாதித்து விட்டார்கள் என்பதைத் தெரிந்து கொண்டிருப்பார்கள். காங்கிரசானது சுயராஜ்யக் கட்சியாரை முனிசிபாலிட்டியைக் கைப்பற்றும்படி ஒரு தீர்மானமும் செய்யவேயில்லை. மகாத்மாவும் கட்டளையிடவில்லை. யோக்கியர்கள் கைப்பற்ற வேண்டும் என்பதுதான் அவர் கருத்து.

இப்பொழுது காங்கிரஸ், மகாத்மா பெயரைச் சொல்லிக்கொண்டு அபேட்சகராய் நிற்கும் கனவான்களும் ஜஸ்டிஸ் கட்சி கனவான்களைவிட எவ்விதத்திலும் சிறந்தவர்களல்ல.

சுயராஜ்யக் கட்சி அபேட்சகரில் பெரும்பான்மையோர் உங்களிடம் ஓட்டுக் கேட்க வரும்போதுதான் கதர் கட்டிக்கொண்டு மகாத்மா பெயரைச் சொல்லுகிறார்கள். ஜஸ்டிஸ் கட்சியில் கதரில் நம்பிக்கை உள்ளவர்கள் கட்டுகிறார்கள். நம்பிக்கை இல்லாதவர்கள் கட்டுவதில்லை. சுயராஜ்யக் கட்சியிலும் அநேகருக்கு கதரில் நம்பிக்கையேயில்லை. அவர்கள் உங்களை ஏமாற்ற கதர் கட்டுவதேயல்லாமல், தேச nக்ஷமத்திற்கு கட்டுபவர் வெகுசிலர். அவர்களின் வெளி வேஷம்தான் இப்படியென்றால் உள் வேஷமோ, மகாத்மாவை (இம்பீச்மெண்ட்) குற்றவாளியாக்கி தண்டிக்கவேண்டும் என்று சொன்னவர்களும், ஸ்ரீமான் தியாகராஜ செட்டியாரை பஞ்சாப் படுகொலைக்குக் காரணமாயிருந்த டயர் என்று சொன்னவர்களும், தீண்டாமை விலக்கில் நம்பிக்கையில்லாதவரும், பிறப்பினால் தாங்கள் உயர்ந்தவர்கள் மற்றவர்கள் தாழ்ந்தவர்கள் என்கிற ஜாதி இறுமாப்புடையவர்களும், ஒத்துழையாமை ஏற்பட்டது முதல் நாளது வரை பெயரே கேள்விப்பட்டிராதவர்களும், தேச நலத்துக்குக் கூட்டமாய் தலைவர்களும் தொண்டர்களும் ஜெயிலுக்குப் போய்க்கொண்டிருந்த காலத்தில் மறைந்து கொண்டிருந்தவர்களும், “ஒரு வேளை சாப்பாடு ஒரு பிராமணக் குழந்தை ஒரு பிராமணரல்லாத பிள்ளை கூட உட்கார்ந்து சாப்பிட்டால் ஒரு மாதத்திற்கு பட்டினி விரதம் இருப்பேன்” என்று சொன்னவரும், மகாத்மா தீண்டாமையைப் பற்றிப் பேசினால் அவரை எதிர்த்துக் கவிழ்த்துவிட வேண்டுமென்று சொன்னவரும் மற்றக் கட்சியாரைவிட தாங்கள் யோக்கியர்களென்று சொல்லிக் கொண்டு உங்களிடம் வருகிறார்கள். சுயராஜ்யக் கட்சியிலிருக்கும் சிலர்களைவிட எத்தனையோ மடங்கு யோக்கியர்கள் மிதவாதக் கட்சியிலும் ஜஸ்டிஸ் கட்சியிலும் இருப்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

ஒத்துழையாமை என்கிற தத்துவம் காங்கிரஸிலிருந்து ஒழிக்கப்பட்ட பிறகு கதர், தீண்டாமை விலக்கு என்கிற இரண்டு திட்டங்களைத்தவிர மற்றபடி எந்த விதத்திலும் ஒரு கட்சிக்கு மற்றொரு கட்சி வித்தியாசப்பட்டதல்ல. இந்த இரண்டு திட்டங்களைப் பொருத்தவரை சுயராஜ்யக் கட்சியானது ஜஸ்டிஸ், மிதவாதக் கட்சியைவிட மேலானதென்று சொல்ல முடியாது.

சுயராஜ்யக் கட்சியாரின் பிடிவாதத்தால்தான் காங்கிரசும் வெளி வேஷத்திற்கு மாத்திரம் கதர் கட்டினால் போதும் என்கிறது போல் மீட்டிங்குகளுக்கு வரும்போது மாத்திரம் கதர் கட்டினாலும் அவர் காங்கிரஸ் அங்கத்தினராகலாம் என்றும், தாங்களே ராட்டினம் சுற்றாவிட்டாலும் வேறு ஒருவர் சுற்றிய நூலைக் கொண்டாவது காங்கிரஸ் அங்கத்தினராகலாம் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீண்டாமை விஷயத்திலோ சுயராஜ்யக் கட்சியாரின் மனோபாவத்தை நாம் சொல்லவே வேண்டியதில்லை. குருகுல சம்பந்தமான விவகாரம் சென்னையில் மகாத்மா வந்திருந்தபொழுது அவரிடம் பிரஸ்தாபிக்கப்பட்ட சமயத்தில் நடந்த வாக்குவாதங்களால் தெரிந்திருக்கலாம். அன்றியும் ஸ்ரீமான் எம்.கே. ஆச்சாரியார் கூற்றினாலும் தெரிந்திருக்கலாம். வர்ணாசிரம தர்மக் கூட்டங்கள், பிராமணர் சங்கங்கள் இவைகளில் சுயராஜ்யக் கட்சியாரின் உள்குணத்தாலும் அறியலாம். ஆகையால் சென்னை ஓட்டர்களும், வெளி ஜில்லாக்களில் உள்ள ஓட்டர்களும் தேர்தல் காலங்களில் கட்சியின் பேரைக்கண்டு ஏமாந்து போகாமல், நிற்கும் கனவான்களின் யோக்கியதாபட்சத்தை அறிந்தும், அவர் நாட்டிற்கு என்ன செய்திருக்கிறார், என்ன செய்யக்கூடும், நாட்டை நடத்த இவர்களுக்கு எவ்வளவு பாத்தியதை உண்டு என்பதைக் கவனித்து தங்கள் ஓட்டுரிமைகளை உபயோகிப்பார்களென்று நம்புகிறேன்.

(சித்திரபுத்திமான் பெய‌ரில் எழுதிய‌து; குடி அரசு - கட்டுரை - 28.06.1925)

Pin It