எரிக் ரோமர், பிரான்சில் உதித்த புதிய அலை சினிமாவின் நிகரில்லாக் கலைஞன். புதிய அலை இயக்கம் பரவிவந்த காலத்தின் நுட்பமான மற்றும் பாரம்பரியமான கலைஞர்களுள் ஒளிமிக்க, eric-rohmer-1மாறாத திறன்களைக்கொண்ட தனித்துவமானவர் எரிக். பிரஞ்சு இலக்கிய முன்னோடிகளின் தடத்தை அடியொற்றி தனது படைப்புத் திறனை அமைத்துக்கொண்டது போலவே சினிமாவிலும் தனது பெயரைத் துலங்கச்செய்தவர். பேசும் படத்தைக் கலையம்சத்துடன் வடிவமைப்பதிலும், பூஞ்சிறகிலும் மென்மையான கற்பனை அற்புதங்கள் நிறைந்த நகைச்சுவை இழையோடும் காட்சிகளை உருவாக்குவதிலும், கைக்கு அடக்கமான செலவில் காமிராவைக்கொண்டு உள்ளூர் நாடகங்களை சினிமாக்களாக மேம்படுத்துவதிலும், பழமையை மாற்றவிரும்பாத அதே நேரத்தில் விமரிசனப்பூர்வமான கருத்துக்களுடன் வெளிப்படுவதிலும் தன்காலத்தின், தனது மண்ணின் இளைஞர்களை வசீகரித்து வசப்படுத்திக்கொண்டவர் அவர்.

அவரது தனிப்பட்ட வாழ்க்கை புதிர்த்தன்மையோடிருந்தது. அவரது உலகளாவிய புகழினை அவரைப் பெற்ற தாய் அறிந்திருக்கவில்லை. இருந்தாலும் அவரது படங்கள் உணர்ச்சிப்பூர்வமான வகையில் வெளிப்படைத்தன்மையுடனிருந்தன. அவை வாழ்க்கைக்கு மிக நெருக்கமாக, அதன் ஒவ்வொரு அம்சங்களையும் பட்டவர்த்தனப்படுத்தும் விதத்தில் வெளிச்சமிட்டன. மனிதர்கள் சமகாலத்தில் சந்திக்கும் எல்லையில்லா இடர்ப்பாடுகளையும், தோல்விகளையும், அவற்றிற்கு மாறாக, வாழ்வதற்கான சாத்தியப்பாடுகளையும்  பதிவுசெய்தன. இத்தனைக்கும் ரோமர் அழகியல்ரீதியாக அடிப்படையில் ஒரு பழமை விரும்பியாக இருந்தார், இருந்தும் அவர் படங்கள் உலகளாவிய கவனத்தைப் பெற்றன.

பிரான்சின் நான்சியில் 1920 ஆம் ஆண்டு டிசம்பர் முதல் தேதி பிறந்த எரிக் ரோமர் பின்னாளில் பாரிசில் குடியேறினார். அங்கே பத்திரிகை நிருபராகவும், இலக்கிய ஆசிரியராகவும் பல்வேறு பணிகளைச் செய்துவந்தார். 1946 ல் 'கில்பர்ட் கார்டியர்' எனும் புனைபெயரில் 'எலிசபெத்' எனும் நாவலை எழுதினார். செய்தி சேகரிக்கும் பணிiயிலிருந்து விடுபட்டு 1940 களின் இறுதியில் சினிமா விமரிசனத்தில் கவனம் செலுத்தத் தொடங்கினார். 1950 ல் ரோமர் தனது முதல் 16 எம்.எம். குறும்படத்தை எடுத்து முடித்தார். அடுத்த ஆண்டு அவரும் அவரது சகாக்களும் அந்நாளைய பிரபல பிரஞ்சு சினிமா பத்திரிகையான 'கயே ட்யூ சினிமா' வின் ஊழியர்களாகச் சேர்ந்தனர். சினிமாவின் டைரிக் குறிப்பு என்றும் இந்தப் பத்திரிகைக்குப் பொருள் கொள்ளலாம். அதற்கு முன்னால் அவரும் அவரது சகாக்களான காடார்ட் மற்றும் ரிவெட் ஆகியோரும் சிறிது காலமே ஜீவித்திருந்த 'கெஜட் ட்யூ சினிமா' எனும் பத்திரிகையை நடத்திப்பார்த்தனர். அது கையைக் கடிக்க உடனே இந்தப் பத்திரிகை வேலையில் சேரவேண்டியதாயிற்று.

கயே ட்யூ சினிமா பத்திரிகையானது ரசிகர்கள் மத்தியில் புதிய கருத்துருவாக்கத்தை மெல்ல மெல்ல ஏற்படுத்தியது. வலுவானதொரு இயக்கமென அது பரிணமித்தது. அதனை eric-rohmer-colorஅடித்தளமாக்கியே புதிய அலை உருவானது. இதற்கு அதில் பணிசெய்துவந்த ரோமர் உள்ளிட்ட சினிமா விமரிசகர்தான் முக்கிய காரணமாக இருந்தனர். 1950 கள் தொடங்கி 1060 களின் துவக்க காலம்வரையிலும் பிரஞ்சுப் பட உலகில் இப்புதிய அலையின் தாக்கம் வலுவோடிருந்தது. அதற்கு அவர்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க வகையில் அமைந்திருந்தது. என்றபோதிலும், காலங்களைக் கடந்தும் இந்தப் புதிய அலையின் வேகம் சினிமா என்ற அந்த உன்னதமான ஊடகம் உருவாக்கி வைத்திருந்த பலதரப்பட்ட புதிர்களுக்கு விடை தந்தது. புதிய அலை இந்த வகையில் கலை உலகின் புதிய திறவுகோல் ஆனது. அதுவரையில் உலகம் புழங்கிவந்த சினிமா மறுபரிசீலனைக்குப் போனது. சினிமாவும் அதன் தாக்கத்தால் கலையுலகமுழுமையும் புது ரத்தம் பாய, புத்துணர்ச்சி அலை எங்கேயும் பரவத்தொடங்கியது.

அந்தப் புதிய அலையின் காரண கர்த்தாக்கள் தன்னெழுச்சியான வெளிப்பாட்டில் அதிக ஆர்வமாக இருந்தனர். புதிய கண்ணோட்டத்தில் உறுதியும் அதே நேரத்தில் நெகிழ்ச்சித் தன்மையும் காட்டினர். ஆனால் அவர்களும் சில தவறுகள் இழைக்கவே செய்தனர். முக்கியமில்லாதனவற்றில் கவனம் செலுத்தவும், மனம் போனபடி நடக்கவுமான தவறுகளைச் செய்தனர். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னான பிரான்ஸ் தேசத்தை அழுத்திக்கொண்டிருந்த பிரச்சனைகளை அவர்கள் உதாசீனப் படுத்தினார்கள். இத்தனை திறனிருந்தும் ஏன் அந்தக் குழுவினர் சமுதாய விஷயத்தில் எல்லோரும் ஒரே விதமாகத் தவறிழைத்தார்கள் என்பதற்குக் காரணம் இருந்தது. அந்த சினிமா இதழ், போருக்குப் பின் கலாச்சார யுத்தத்தோடு தன்னைப் பிணைத்துக்கொண்டதே அதற்குக் காரணம். அதுவரையில் அந்தப் பத்திரிகை கடந்துவந்த தடத்தை மீறி, அரசியலற்ற ஒரு வெற்றுப் பாதையில், ஒரு வலதுசாரிப் பாதையில் நடக்கத் தொடங்கியதே அதற்குக் காரணம். மறுபுறத்தில் பிரான்சின் அதிகாரப்பூர்வ இலக்கிய மற்றும் சினிமாத் துறைகளின் நிலைமையும் சிக்கலாகவே இருந்ததாகவும், அது முழுவதும் ஸ்டாலினிஸ்ட் அறிவுஜீவிகளின் ஆதிக்கத்தில் இருந்ததாகவும் டேவிட் வால்ஷ் சோசலிஸ்ட் இதழில் எழுதுகிறார். ட்ரூபான்ட் மற்றும் காடார்ட் போன்ற தனி நபர்கள் இயல்பாக இடதுசாரி திசையை நேக்கி தங்களது பணிகளை நகர்த்திச் சென்றனர்.

ரோமர் ஒப்பீட்டளவில் தான் எங்கே நிற்கிறோம் என்பதைத் தெளிவாக அறிந்தவராக eric-rohmer-newஇருந்தார். அவர் தன்னை ஒரு கம்யூனிஸ்ட் என்று அழைப்பதை விரும்பவில்லை. தன்னை எந்தவொரு கட்டுப்பாடுமற்ற சுதந்திர மனிதனென்று பிரகடனப்படுத்தினார் அவர். பிரஞ்சுப் புரட்சியென்பதே தொழிற்புரட்சிதானே எனவே அவர் சிறு முதலாளிகளின் பக்கம் நின்றார். இதனாலேயே சமுதாயத்தில் முரண்பட்ட இயக்கம் எழுவதையும், அவை மாற்றத்தை முன்மொழிவதையும் கண்டு பயந்தார். இதனாலேயே அவற்றை எதிர்க்கவும் செய்தார். தொழிற்புரட்சி என்பது தொழிலாளி வர்க்கம் உருவாவதற்கான ஒரு முன்தேவை என்ற வகையில் எரிக் ரோமரின் படைப்பு மனதை இடதுசாரிகளும் நன்கு புரிந்தே வைத்திருந்தனர். அவரை விமரிசனப்பூர்வமாக அனுகினர். அவரது அறிவுத் திறனையும் கலையையும் மதித்தனர்.

1957ல் சாப்ரோலுடன் இணைந்து ஆல்பிரட் இச் காக் பற்றிய ஒரு ஆவணப்படத்தை எடுத்தார் ரோமர். அவரது சகாக்களான காடார்ட், ட்ரூபாவ்ட், க்ளாட் சாப்ரோல் மற்றும் ஜாக்குவெஸ் ரிவெட் ஆகியோருடனனான ஆரோக்கியமான ஒருங்கிணைப்பும் அதனடிப்படையில் நடந்த விவாதங்களுமே உலகளாவிய புதிய அலை சினிமாவை பிரஞ்சு மண்ணில் உருவாக்கியது. அதற்கு அவர்கள் நடத்திய, அவர்கள் பணியாற்றிய சினிமா பத்திரிகைகளுக்கு மிக முக்கியப் பங்குண்டு. ரோமர் பத்திரிகை, சினிமா, தொலைக்காட்சி என்று தனது இயங்குதளத்தை விரிவு செய்தவண்ணமிருந்தார். குறும்படங்கள், முழு நீளத்திரைப்படங்கள், காலப் படங்கள்(Period film) என்று வகைவகையான முயற்சிகளில் இறங்கினார்.

அவரது சகாவான ட்ரூபாவ்ட்டின் படங்கள் குற்றங்களை ஒப்புக்கொள்ளும் மனநிலையுடனான தீவிரமான தனிநபர்த்தனத்தைக் கொண்டவையாக இருந்தன. அதேநேரத்தில் அவரது மற்றொரு சகா காடார்ட் தனது படங்களை அரசியல் ரீதியாகத் தூண்டுபவையாக உருவாக்கினார். ஆனால், ரோமர் இவற்றிலிருந்து வேறுபட்டு, கட்டுப்பாடுமிக்க பகுத்தறிவுசார் அழகியலை முன்வைத்தார். 18 ஆம் நூற்றாண்டின் சிந்தனையாளர்களின் கொள்கைகளுக்கு மிக நெருக்கமாகவும், அவர்களின் சொற்களை அடிக்கடி தனது படங்களில் பயன்படுத்தும் விதமாகவும் இருந்தன ரோமரின் சினிமாக்கள். இத்தனைக்கும் உணர்ச்சிமயமான கற்பனைகளுக்கும் காதல் உணர்வின் வலைப்பின்னலுக்கும் அவரது படங்கள் குறையேதும் வைக்கவில்லை.

பிரான்ஸ் நாட்டின் அந்தத் தீவிரமான புதிய அலை இளைஞர்களின் பங்களிப்புகள் விமரிசனங்களுக்கு அப்பாற்பட்டவை இல்லை எனினும் அவர்கள்தான் சினிமாவைப் புதிய திசையில் மடைமாற்றி விட்டவர்கள். அந்தப் புதிய அலைக் குழுவினரில் கடைசிவரையில் இயங்கிவந்த எரிக் ரோமர் இந்த ஆண்டு ஜனவரி மாதம் 11 ஆம் நாள் பாரிசிலுள்ள ஒரு மருத்துவமனையில் காலமாகிவிட்டார். ஆம், புதிய அலையின் மிக முக்கிய பிரம்மா கடைசியாக நம்மிடமிருந்து விடைபெற்றுவிட்டார். 2007 வரையில் அவர் திரைத்துறையில் இயங்கிவந்திருக்கிறார். அவரது கடைசி படம் 2007ல் வெளியானது. 90 வயது வரை வாழ்ந்து, 64 வருடங்களாகக் கலை சார்ந்து இயங்கிய எரிக் ரோமர் ஒரு காலத்தின் விளைச்சல் மட்டுமல்ல, காலத்தை விளைவித்தவருமாவார்.
- சோழ.நாகராஜன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It