சட்டத்தால் குற்றம் எனக் கூறப்பட்ட ஒரு செயலைப் பற்றி தீங்கிழைக்கப்பட்ட நபரோ அல்லது தெரிந்த வேறு நபர்களோ அச்செயல் பற்றி புகார் தெரிவிக்கலாம். புகார் அளிக்கும்போது எந்த தேதியில், நேரத்தில், யாரால், எவ்வாறு குற்றம் நடைபெற்றது என்பதை தெரிந்தவரை தெளிவாகக் குறிப்பிடல் வேண்டும்.

முதல் தகவல் அறிக்கை என்றால் என்ன?

புகாரைப் பெற்ற காவல் அதிகாரி அச்சிடப்பட உரிய படிவத்தில் புகாரையும். புகாரில் கண்ட பொருன்மைக்கு ஏற்ப சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடுத்து காவல் உயர் அதிகாரிகளுக்கும் நீதித்துறை நடுவர் ஒருவருக்கும் உடனடியாக அனுப்பி வைக்கப்படும் அறிக்கையே முதல் தகவல் அறிக்கை எனப்படும்.

ஒரே குற்றச் சம்பவம் தொடர்பாக எதிர்-எதிர் தரப்பினர் மீது 2 முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய முடியாது. (2001 Air SCW 2571)

சாதாரண வழக்குகளில் புகாரைப் பெற காவல் துறையினர் மறுக்கலாமா?

எவ்வகையான புகாரையும் காவல்துறையின் பெற்றுக்கொள்ள மறுக்கக் கூடாது.  புகாரைப் பெற்று அதனை சமூக பதிவேட்டில் பதிவு செய்து அதன் நகலை புகார்தாரருக்குத் தரவேண்டும். பின் புலனாய்வில் குற்றம் நிகழ்ந்ததாக தெரியவந்தால் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யலாம் இல்லை எனில் வழக்கை முடித்துவிடலாம்.

புகாரை காவல் நிலைய அலுவலர் ஏற்காவிட்டால் என்ன செய்யலாம்?

புகாரை காவல் நிலைய அலுவலர் ஏற்காவிட்டால் காவல் மேல் அதிகாரி (மாவட்டக் கண்காணிப்பாளர், மாநகர ஆணையாளர் அல்லது காவல் துறைத் தலைவர்) ஆகியோருக்கு நேரடியாகவோ. அஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்கப்படவேண்டும். அல்லது – நீதித்துறை நடுவர் முன் ஒருவர் தனது புகார் குறித்து முறையீடாகப் பதிவு செய்யலாம்.  அதை நடுவர் விசாரித்து சாட்சியம் பதிவு செய்து புலனாய்வு செய்ய வேண்டிய வழக்கு எனில் போலீசாரை புலனாய்வு மேற்கொள்ள உத்தரவு பிறப்பிப்பார்.

('சட்டம் வழிகாட்டும் அடிப்படை உரிமைகள்' நூலிலிருந்து)

Pin It