இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009 நாடாளுமன்றத்தில் சட்டமாக இயற்றப்பட்டு 01.04.2010 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. சட்டத்தை ஆழ்ந்து அறியும்போது, ஏப்ரல் முதல் நாளில் இந்தச் சட்டத்தை நடுவணரசு நடைமுறைக்கு கொண்டு வந்திருப்பதில் ஏதும் உள்நோக்கம் இருக்குமோ என்று தோன்றுகிறது.

1950ல் இந்தியா குடியரசாக உருவானபோது, பத்தாண்டுகளில் இலவச கட்டாய கல்வியை 14 வயது வரை உள்ள எல்லோருக்கும் கிடைக்கச் செய்வது என்று அரசியல் அமைப்புச் சட்டத்தின் கோட்பாடு 45 ன் வாயிலாக நமக்கு நாமே உறுதியளித்துக் கொண்டோம். ஆனால், 65 ஆண்டுகளை கடந்த பிறகும் அது சாத்தியமாகவில்லை. அதற்கான முழுப் பொறுப்பும் இந்த நாட்டை தனித்து 40 ஆண்டுகளும், கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து 10 ஆண்டுகளும் என மொத்தம் 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்து வரும் காங்கிரசு கட்சியையே சாரும். 1948 ஆம் ஆண்டைய அகில உலக மனித உரிமைப் பிரகடனத்தின் 26 ஆவது கோட்பாட்டில் கல்வி உரிமையும் மனித உரிமையாக அறிவிக்கப்பட்டதை ஏற்றுக்கொண்டு இந்தியாவும் கையெழுத்திட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் ‘கல்வி பெறும் உரிமையும் ஒரு அடிப்படை உரிமையே’ என்பது குறித்த வழக்கு 43 ஆண்டுகள் கழித்துதான் தொடரப்பட்டது. 1992 ல் மோகினி ஜெயின் எதிர் கர்நாடக அரசு என்ற வழக்கில்தான் உச்ச நீதிமன்றம் ‘கல்வி பெறும் உரிமையும் ஒரு அடிப்படை உரிமையே’ என்று தீர்ப்பளித்தது. அந்தத் தீர்ப்பில் தொடக்கக் கல்வி மட்டுமன்றி உயர்கல்வியும், தொழிற்கல்வியும் பெறுவது கூட அடிப்படை உரிமை என்று கூறப்பட்டது. மக்கள் நலன் குறித்து இயற்றப்பட்ட சட்டங்களையே நடைமுறைப்படுத்துவதற்கு மனமும் திறனுமில்லாத அரசு உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எப்படி நடைமுறைப்படுத்தும்? அனைவருக்கும் உயர்கல்வி வரை இலவசமாகக் கொடுப்பது சாத்தியமாகாது என்று கூறி அந்தத் தீர்ப்பை அப்படியே கிடப்பில் போட்டது நடுவணரசு. அரசு மறுத்துவிட்டால் தீர்ப்பு குப்பையில்தானே! அதுதான் இந்திய அரசமைப்பிலுள்ள மிகப் பெரிய ஓட்டை. பெரும்பான்மைத் தீர்ப்புகள் அப்படித்தான் கிடப்பில் போடப்படுகின்றன.

மீண்டும் 1993 ல் உன்னிகிருஷ்ணன் எதிர் ஆந்திர மாநில அரசு என்ற வழக்கில், உச்ச நீதி மன்றம் தனது மானத்தைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டி, மேற்சொன்ன தீர்ப்பையே மாற்றியமைத்தது. அதன்படி 14 வயதுக்குட்பட்ட அனைவருக்கும் இலவச கட்டாயக் கல்வி பெறும் உரிமை அடிப்படை உரிமை என்று திருத்தியது. மேலும், அந்தத் தீர்ப்பிலேயே ‘கல்வி உரிமை அடிப்படை உரிமை என்றாலும், தற்போதைக்கு அரசியல் அமைப்புச் சட்டத்தின் 4 ஆம் தொகுதியான வழிகாட்டு நெறிகள் பகுதியிலுள்ள 45 ஆவது கோட்பாட்டை, அடிப்படை உரிமைகளடங்கிய 3 ஆம் தொகுதிக்கு மாற்றம் செய்யப்போவதில்லை என்று கூறிவிட்டது. இந்தத் தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தின் இரண்டும்கெட்ட நிலையைத்தான் பிரதிபலித்தது. அந்தத் தீர்ப்பினால் எந்தவொரு பயனும் விளையவில்லை. மீண்டும் 1996 ல் உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற எம்.சி. மேத்தா எதிர் தமிழ்நாடு அரசு என்ற வழக்கில், ‘அரசியல் அமைப்புச் சட்டத்தின் 45 ஆவது கோட்பாடு 1993 ல் நடைபெற்ற உன்னிகிருஷ்ணன் வழக்கில் உச்ச நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பின் மூலம் அரசியல் அமைப்புச் சட்டத்தின் 3 ஆம் தொகுதியான அடிப்படை உரிமைகள் என்ற நிலையை அடைந்து விட்டது’ என்று தீர்ப்பளித்தது. ஆனால், அதை உறுதி செய்வதற்கான எந்த செயல்பாட்டையும் அறுதியிட்டுக் கூறவில்லை. இதன் மூலம் கல்வி உரிமையை எப்படியெல்லாம் உச்ச நீதிமன்றம் தனது பல்வேறு தீர்ப்புக்கள் மூலம் பந்தாடியது என்பது விளங்கும். இன்றுவரை கல்வி உரிமை குறித்த நீதிமன்றங்களின் அணுகுமுறை இப்படித்தான் இருக்கிறது.

அரசின் அணுகுமுறை

அதன் பிறகு பல்வேறு குழுக்களின் வற்புறுத்தலின் பேரில் மீண்டும் 9 ஆண்டுகளுக்குப் பிறகு 2002 ல் நடுவணரசு 1996 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை அமல்படுத்த வேண்டி அரசியல் அமைப்புச் சட்டத்தின் 86 ஆவது திருத்தத்தைக் கொண்டு வந்தது. அப்போதுதான், அரசியல் அமைப்புச் சட்டத்தின் 3 ஆம் பகுதியான அடிப்படை உரிமைகள் பகுதியில் 21யு கோட்பாடு இலவசக் கட்டாயக் கல்வியை அடிப்படை உரிமையாக உள்ளடக்கி இணைக்கப்பட்டது. ஆனால், அது தனிப்பட்ட சட்டமாக இயற்றப்படாததன் காரணமாக நடைமுறையாக்கம் பெறாமலேயே இருந்தது. அதன் தொடர்ச்சியாக, இலவச கட்டாயக் கல்வி மசோதா 2003 ல் பரிசீலனைக்கு விடப்பட்டது. அதில் பல குறைபாடுகள் இருந்தன. தரமான கல்வி, பாடத்திட்டச் சீர்திருத்தம், ஆசிரியர்-மாணவர் விகிதம், மனிதநேயமுள்ள வகுப்பறை, குழந்தைகளின் ஒருங்கிணைந்த அறிவு வளர்ச்சிக்கான திட்டங்கள் போன்றவை இடம் பெறவில்லை. குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாத பெற்றோருக்கு ரூ.500 அபராதமும், அது தொடருமானால் நாளொன்றுக்கு ரூ. 50 அபராதமும் விதிக்க பரிந்துரைத்தது. அவையெல்லாம் ஏற்றுக்கொள்ளும்படி இல்லாததால், அந்த மசோதா கைவிடப்பட்டது.

அதன் பிறகுதான், தற்போதைய இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம், 2009 நடைமுறைக்கு வந்துள்ளது. சட்டம் நடைமுறைக்கு வந்தாலும், அந்தந்த மாநில அரசுகள்தான் விதிகள் இயற்றி செயல்படுத்த வேண்டும். தமிழ்நாடு அரசு கடந்த 08.11.2011 அன்றுதான் இச்சட்டத்தின் விதிகளை இயற்றி நடைமுறைப்படுத்துவதற்கான அறிவிப்பை வெளியிட்டது. தமிழ்நாட்டையும் சேர்த்து மொத்தம் 20 மாநிலங்கள்தான் இதுவரை இச்சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அறிவிப்பை வெளியிட்டுள்ளன. மற்ற பிற மாநிலங்கள் அதைப்பற்றி இன்னும் யோசிக்கவேயில்லை.

இன்றைய இந்தியச் சூழலுக்கு இச்சட்டம் பொருந்துமா?

இந்தச் சட்டம் இந்தியாவின் இன்றைய நிலையை நன்கு அறிந்து கொண்டு இயற்றப்பட்ட சட்டமாகத் தெரியவில்லை. ஏனென்றால், இன்று உலகிலேயே கல்விச்சாலைகளை இதுவரை எட்டிப்பார்க்காத ஒட்டுமொத்த மக்களில் 35 விழுக்காட்டினர் இந்தியாவில் வாழ்கின்றனர்.

66 விழுக்காட்டினர் மட்டுமே அவரவர் தாய்மொழியிலாவது எழுதப் படிக்க அறிந்துள்ளார்கள். அதில் 76 விழுக்காடு ஆண்களாகவும், 54 விழுக்காடு மட்டுமே பெண்களாகவும் உள்ளனர். தொடக்கக் கல்வி பயிலும் வயதுடைய 4 கோடி குழந்தைகள் இன்னும் பள்ளிக்கூடம் செல்லும் வாய்ப்பு பெறவில்லை.

35 விழுக்காடு பள்ளிகளில் கரும்பலகையும், மேசை நாற்காலியும் இல்லை.

90 விழுக்காடு பள்ளிகளில் கழிப்பறை இல்லை.

50 விழுக்காடு பள்ளிகளில் மேற்கூரை ஒழுகுகிறது அல்லது இடிந்துவிழும் ஆபத்தான நிலையில் உள்ளது.

80 விழுக்காடு பள்ளிகளில் மின்வசதி இல்லை.

50 விழுக்காடு பள்ளிகளில் தண்ணீர் வசதியே இல்லை.

ஐ.நா. மனித உரிமை குழுவின் உறுப்பினர் கூற்றுப்படி, இந்தியாவில்தான் அதிக எண்ணிக்கையிலான தெருவோரக் குழந்தைகள் உள்ளனர். அவர்களில் இந்தியாவின் முக்கிய நகரங்களில் மட்டும் 1.8 கோடி குழந்தைகள் இருப்பதாகத் தெரிவிக்கிறார்.

யுனெஸ்கோ நிறுவனத்தின் புள்ளி விவரம்:

11 கோடி மக்கள் தொகை கொண்ட சப்பான் நாட்டில் 4000 பல்கலைக்கழகங்களை சப்பானிய அரசு தம் மக்களுக்காக உருவாக்கியுள்ளது.

30 கோடி மக்கள் தொகை கொண்ட அமெரிக்காவில் 3650 பல்கலைக்கழகங்களை அமெரிக்க அரசு உருவாக்கிக் கொடுத்துள்ளது.

120 கோடி மக்கள் உடைய இந்திய அரசோ தன் மக்களுக்காக உருவாக்கியுள்ள பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை வெறும் 348 மட்டுமே.

இந்த புள்ளிவிவரங்கள் கூட இந்திய அரசிடம் இருப்பதாகத் தெரியவில்லை. அதைக்கூட சர்வதேச அமைப்புகள்தான் கண்டறிந்து நமக்குச் சொல்லுகின்றன. யுனெஸ்கோ அமைப்பின் புள்ளிவிவரங்கள்தான் மேற்சொன்னவை. நம் நாட்டின் மோசமான சூழ்நிலையை பாருங்கள். தரமானக் கல்வி உரிமையை தங்களது நாட்டு குழந்தைகளுக்கு உறுதி செய்வது பற்றிய ஐ.நா. அமைப்பு கண்டறிந்த அகில உலக கல்விக்கான குறியீட்டில் 127 நாடுகளில் சீனா 54 ஆவது இடத்திலும், இந்தியா 105 ஆவது இடத்திலும் இருக்கிறது. இந்தியாவை விட சீனாவின் மக்கள்தொகை கூடுதலானது என்பது கவனிக்கத்தக்கது.

மக்கள் நம்பிக்கையைத் தகர்த்தெறியும் மோசடி சட்டமா இது?

இச்சட்டம் எதிர்பார்த்த பலன்களை அளிக்குமா என்பது கேள்விக்குறிதான். சட்டத்தில் பல முரணான அம்சங்கள் உள்ளன. சட்டத்தின் உட்கூறுகள் சட்டத்தின் நோக்கத்தையே முடக்கிப் போடுவதாக இருக்கின்றன. ஒட்டுமொத்தத்தில் கல்வியை அனைத்து மக்களுக்குமான ஒரு உரிமையாக மாற்றுவதற்குப் பதிலாக இச்சட்டம் கல்வியை தனியார்மயமாக்கி வியாபாரமாக்கப்படுவதை அங்கீகரிக்கிறது. தரமான, சமத்துவ கல்வியை உறுதி செய்வதற்குப் பதிலாக தரமற்ற, பாகுபாடுகள் நிறைந்த கல்வியை முன்னிருத்துகிறது. வசதியில்லாதோருக்கு உதவாக்கரை கல்வி என்பதை நிரந்தரமாக்குகிறது.

· 1947க்குப் பிறகு இலவச தாய் மொழி வழிக்கல்வி தருவதற்காக அரசு பள்ளிகள் கிராமம் தோறும் தொடங்கப்பட்டன. தரமிக்க பள்ளிகளாக அவை அமைந்திருந்தன. எல்லாக் குழந்தைகளுக்கும் ஆரம்பக் கல்வி, சமத்துவக் கல்வி என்பதுதான் அதன் நோக்கமாக இருந்தது. ஆனால், 1980 க்குப் பின் மெட்ரிகுலேசன் பள்ளிகள் என்ற பெயரில் தனியார் பள்ளிகள் முளைத்து இன்று திரும்பும் திசையெல்லாம் புற்றீசல் போல முளைத்துள்ளன. மிக மோசமான நிதி ஒதுக்கீடு காரணமாக எவ்வித அடிப்படை வசதியுமின்றி, போதிய ஆசிரியர்களுமின்றி அரசுப் பள்ளிகள் தரமில்லாத பள்ளிகளாகி விட்டன. எனவே எப்பாடுபட்டாவது தம் பிள்ளைகளை தனியார் பள்ளியில் சேர்த்து படிக்க வைக்க வேண்டும் என்றுதான் அனைத்து தரப்பினரும் விரும்புகின்றனர். இச்சூழ்நிலையில் தேவையான நிதியை ஒதுக்கி அரசுப் பள்ளிகளின் அடிப்படை வசதிகளைப் பெருக்கி, தரத்தை உயர்த்தி, தேவைப்படும் பகுதிகளில் புதிய பள்ளிகளைத் திறந்து, எல்லாக் குழந்தைகளும் தாய்மொழியில் தரமான கல்வி பெறுவதை உறுதி செய்வதுதான் இன்றியமையாத தேவை.

· தனியார் கல்வி நிறுவனங்கள் 25 விழுக்காடு இடங்களை நலிவுற்ற பிரிவினருக்காக ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும், அதற்கான கட்டணத்தை அரசிடமிருந்து வசூலித்துக் கொள்ளலாம் என்றும் இந்தச் சட்டம் வழியமைத்துக் கொடுக்கிறது. சட்டத்தின் நோக்கத்திற்கு முற்றிலும் புறம்பாக கட்டண வசூலை அரசே அங்கீகரிப்பதாக இந்தப் பிரிவு அமைந்துள்ளது. இது எந்தவிதத்தில் நியாயமாகும்? எனவே கல்வி வியாபாரமாக்கப்படுவதை இச்சட்டம் ஊக்குவிக்கிறது.

· மேலும் இச்சட்டத்தின் நோக்கம் சமத்துவமான, பாகுபாடற்ற இலவசக் கல்வியை குழந்தைகளுக்கு வழங்குவதுதான். ஆனால், உண்மையில் இச்சட்டம் நடைமுறையில், பாகுபாட்டையும், பெரும் பேதத்தையும் குழந்தைகளிடம் வளர்ப்பதாகவே இருக்கிறது. 25 விழுக்காடு கோட்டாவில் தனியார் பள்ளியில் சென்று பயிலும் நலிவுற்ற பிரிவைச் சார்ந்த குழந்தைகளை, ‘ஓசியில் படிக்கும் குழந்தைகள்’ என்று மற்ற பிற குழந்தைகளும், ஆசிரியர்களும் முத்திரை குத்தி பாகுபடுத்துவதை யாரும் தடுக்க முடியாது. ஏற்கனவே குழந்தைகளின் தலைமுடியை சிதைத்து தனிமைப்படுத்தும் கொடுமை பெங்களுருவில் நடந்தேறியதை நாம் அறிவோம். அப்படிப்பட்ட சூழலை எதிர்கொள்ளும் குழந்தைகளின் மனநிலை எப்படியிருக்கும் என்பதைப் பற்றி சட்டம் அக்கறை கொள்ளாமல் வெறுமனே பாகுபாடு கூடாது என்று கூறுவது ஒரு மோசடியே.

· அரசுப் பள்ளிகள் அனைத்தையும் இந்தச் சட்டத்தின் ஆளுகையின் கீழ் கொண்டு வராதது சட்டத்தின் மோசடியை மேலும் அம்பலப்படுத்துகிறது. அரசுப் பள்ளிகளிலேயே பல அடுக்குகளை வைத்து பாகுபடுத்தி அதை நியாயப்படுத்துவதாக அமைந்துள்ளது. நவோதயாப் பள்ளிகள், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் மற்றும் சைனிக் பள்ளிகள் போன்ற சிறப்புப் பள்ளிகளுக்கு இந்தச் சட்டத்திலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது. அரசே பாகுபாட்டை நிலைநிறுத்தும் விதத்தை அம்பலப்படுத்துகிறது. வசதிபடைத்த குழந்தைகளுக்கும், ஏழை குழந்தைகளுக்கும் இடையே நிலவும் ஏற்றத் தாழ்வுகளை தொடர்ந்து பராமரிக்க இதைவிட சிறப்பு ஏற்பாடு ஏதாவது இருக்க முடியுமா?

· இச்சட்டத்தில் கல்வியின் தரத்தைப் பற்றி எதுவுமே குறிப்பிடப்படவில்லை. மாறாக, யாரையும் தோல்வியடைந்தவர்களாக அறிவிக்கக் கூடாது, குழந்தைகளை ஒரே வகுப்பில் மீண்டும் இருத்தி வைக்கக் கூடாது, குழந்தைகளை அவர்களின் வயதுக்குரிய வகுப்பில் சேர்த்துக் கொள்ளவேண்டும் என சட்;டம் மிகத் தாராளமாக இருக்கிறது. இந்த நிலை பள்ளிகளில் நடைமுறைக்கு வந்தால் என்ன நடக்கும்? என்று சற்று சிந்தித்துப் பாருங்கள். தினமும் குழந்தைகள் பள்ளிக்கு வருவார்கள், போவார்கள். என்ன கற்றுக் கொள்வார்கள்? குழந்தைகள் எதையும் உருப்படியாகக் கற்றுக் கொள்ளக் கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடாக இருக்குமோ? என்று நம்மை சந்தேகிக்க வைக்கிறது இச்சட்டம்.

· படிக்கும் குழந்தைகளுக்கு 8 ஆம் வகுப்பு முடித்த பிறகு தேர்ச்சி பெற்றதாக சான்றிதழ் தர வேண்டும். படிப்பு அத்துடன் முடிந்து போகிறது. அதற்கு மேல் ஒன்றும் கிடையாது. அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில், 8 வரை படித்த குழந்தைகளில் பாதிப் பேருக்கு மேல் எழுத்து கூட்டி வாசிக்கத் தெரியாத நிலை. கூட்டல், கழித்தல், வகுத்தல் கணக்கு கூட போடத் தெரியாத அவலம். இந்நிலையில் இச்சட்டம் 8 ஆம் வகுப்புக்கு மேல் உள்ள படிப்பு பற்றி வாய் திறக்கவில்லை. உயர்கல்வி தொடர்பான தனது பொறுப்பை முற்றிலும் கைகழுவி விடும் நோக்கத்தையும் இந்தச் சட்டத்தின் மூலம் அரசு வெளிப்படுத்தியிருக்கிறது. காலனி ஆதிக்கத்தின் போது உழைக்கும் மக்களுக்கு அவர்களின் வாழ்க்கைநிலைக்கு மேல் கல்வி கூடாது என்ற கொள்கை இருந்தது. அது மீண்டும் இச்சட்டத்தின் மூலம் புத்துயிர் அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

· நம் நாட்டில் 40 விழுக்காடு பள்ளிகளில் 1 முதல் 5 வரை பயிலும் குழந்தைகள் 60க்கு மேல் இல்லை. அங்கெல்லாம் நடைமுறையிலிருக்கும் அரசுப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களை கற்பித்தல் தவிர மக்கள் தொகை கணக்கெடுத்தல், தேர்தல் பணிகள் மற்றும் பேரிடர் காலங்களில் சிறப்பு பணி செய்தல் போன்ற வேறு பணிகளை செய்ய பயன்படுத்திக் கொள்ள சட்டம் அங்கீகாரம் அளிக்கிறது. தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு அப்படிப்பட்ட பணித் தொந்தரவுகள் இல்லை. இதிலும் தனியார் பள்ளி, அரசுப் பள்ளி என்ற பாகுபாடு. பல ஆயிரக்கணக்கான

· ஆக மொத்தத்தில் கல்வியை வியாபாரமாக்கி, இருக்கின்ற அரசுப் பள்ளிகளையெல்லாம் படிப்படியாக மூடி விடுவதற்கான வழிமுறைகளை இந்தச் சட்டமே ஏற்படுத்தி தந்து விடும்.

· தனியார் கல்வி நிறுவனங்களின் கட்டணக் கொள்ளையைப் பற்றி இச் சட்டத்தில் எதுவும் சொல்லப்படவில்லை.

· ஆசிரியர்-மாணவர் விகிதம் பற்றி சொல்லும் சட்டம் அதற்கான வழிமுறைகளை தெளிவாகக் கூறவில்லை. இதனால் பெரும் குழப்பம் நீடிக்கிறது. அதை நிறைவேற்ற வேண்டுமாயின், நாடு முழுவதும் காலியாக உள்ள 5 இலட்சம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதோடு மேலும் 5 இலட்சம் ஆசிரியர்களை நியமித்தாக வேண்டும். பல மாநிலங்களிலும் அதற்கான முயற்சிகள் எடுக்கப்படவில்லை. தமிழ்நாட்டில் இந்த ஆண்டு மட்டும் 15, 549 ஆசிரியர்களை பகுதி நேர ஆசிரியர்களாக நியமித்து வருகின்றனர். கொடுமை என்னவென்றால், நியமிக்கப்படும் ஆசிரியர்கள் ஒரு ஆண்டுக்கு மட்டும் தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்கப்படுவதோடு, அவர்களுக்கு மாத ஊதியம் வெறும் ரூ. 5000 மட்டும் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது சட்டத்தின் நோக்கத்தை கேலிக்கூத்தாக்குவதாக இருக்கிறது. இந்தச் சம்பளத்தைப் பெற்றுக் கொண்டு மனம் விரும்பி தமது பணியை விருப்புடன் செய்வார்களா?

· ஆசிரியர்களின் தரம் உறுதி செய்யப்படுவதற்கு சட்டத்தில் இடமில்லை. பாடம் கற்பிக்கத் தேவையான எவ்வித உருப்படியான பயிற்சியுமின்றி நேரடியாக பணியமர்த்தப்படுவதால் பல சங்கடங்கள் உருவாக வாய்ப்புள்ளது. ஆசிரியர்கள் குழந்தைகளைக் கையாளக்கூடிய மனப்பக்குவமோ, திறனோ இல்லாத எந்திரத்தனமான அணுகுமுறை உடையவர்களாக இருப்பார்கள். பாடங்களைக் கரைத்துக் குடித்து வகுப்பில் வாந்தி எடுக்கும் ஆசிரியர்கள்தான் உருவாவார்கள்.

· சட்ட அமலாக்கத்திற்கு பெரும் நிதி அவசியமாகிறது. அவசியமான நிதியை மத்திய-மாநில அரசுகள் ஒதுக்க இதுவரை எந்த ஆக்கப்பூர்வமான அறிவிப்பும் வெளிவரவில்லை.

· சட்டத்தில் 6 வயது முதல் 14 வயது வரையுள்ள குழந்தைகள் இலவச கட்டாயக் கல்வியுரிமை பெறுவதற்கு ஆவண செய்கின்றது. ஆனால் 6 வயது நிரம்பாத குழந்தைகள் பற்றி இச்சட்டம் நடுவணரசின் பொறுப்பினை தட்டிக் கழிப்பதாகவே இருக்கிறது.

· கல்விக்கான வரவுசெலவுத் திட்டத்தில் ஆசிரியர்களின் ஊதியத்திற்கே 90 விழுக்காடு செலவழிக்கப்படுவதால், ஏனைய அடிப்படைக் கல்வித் தேவைகளை நிறைவு செய்ய முடியவில்லை. இந்த நிலையை மாற்ற சட்டத்தில் வழிவகை சொல்லப்படவில்லை.

தாய்மொழி மறுத்து கல்வி சாத்தியமாகாது:

வெறுமனே கடமைக்காக அனைவருக்கும் கல்வி என்று கூப்பாடு போடுவதாக இச்சட்டம் அமைந்துள்ளது. அந்தக் கல்வி தரமான சமநீதிக் கல்வியாகவும் இருக்க வேண்டும். கல்விக் களத்தில் தரத்துக்கும் சமநீதிக்குமான போராட்டத்தில் ஒரு முக்கியக் கருவி தாய்மொழியாகும். அனைவர்க்கும் கல்விமொழி தாய்மொழியே என்றநிலை ஏற்படாத வரை அனைவர்க்கும் கல்வி என்ற நோக்கம் நிறைவேறாது. தாய்மொழிக் கல்விதான் சிந்தனைத் திறனை வளர்த்தெடுக்கும். சீரிய சமூகநீதிக்கும் வழிவகுக்கும். எனவே முதலில் தாய்மொழி பிறகு பிறமொழி என்ற கொள்கை கட்டாயமாக்கப்பட்டாலொழிய இங்கு இப்படிப்பட்ட சட்டங்களால் விளையப்போகும் நன்மை எதுவுமில்லை. தாய்மொழியில் கல்வி கற்கும் போதுதான், கற்றலும், கற்பித்தலும் எளிதாகின்றன. அதனால்தான், வளர்ந்த நாடுகள் அனைத்துமே தாய்மொழி வழிக் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கின்றன. அடிப்படைக் கல்விக்குப் பிறகு, பிற மொழி பயில வாய்ப்பு தருகின்றன. கல்வி கற்கும் குழந்தைகளுக்கு அது எளிதாகிறது. சட்டத்தில் தாய்மொழிக் கல்வி பற்றிய எந்தவொரு தீர்க்கமான விவரமும் இல்லை.

கல்விக்கான நிதி ஒதுக்கீடு:

எந்தவொரு நாடு தனது நாட்டுக் குழந்தைகளின் தரமான கல்வியை உறுதி செய்கின்றதோ அந்த நாடே சுபிட்சமான நாடாக உருப்பெறும் என்று அறிஞர் பெருமக்கள் பலரும் எடுத்துரைத்துள்ளனர். அதனால் எந்த நாடெல்லாம் தம் மக்கள் மீது அக்கறையுடன் இருக்கின்றதோ அந்த நாடெல்லாம் தரமான சீரிய கல்விக்கு தங்கள் வருமானத்தின் மிகப்பெரும் பகுதியை செலவழித்து வருகின்றன. ஏனென்றால் நிதி மூலதனத்தை விட மனித மூலதனம் பன்மடங்கு மதிப்பு மிக்கது. உலகிலேயே மிக வறுமைப்பட்ட ஆப்பிரிக்க நாடுகளுக்கு அடுத்தாற்போல் மிகக் குறைந்த பணத்தையே கல்விக்காக தனது வருமானத்திலிருந்து செலவழிக்கும் நாடாக இந்தியா இருந்து வருகிறது. நாட்டு மொத்த உற்பத்தியில் 4.3 விழுக்காடுக்கு மேல் இந்தியா ஒரு போதும் கல்விக்காக செலவழித்ததில்லை. ஆனால் 1968 ல் நாட்டின் கல்வி நிலை பற்றி ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட கோத்தாரி குழு, அப்போதே நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 விழுக்காடாவது கல்விக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்தது. ஆனால், அது ஒருபோதும் நிகழவில்லை. 2004 ல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தனது குறைந்தபட்ச பொதுத்திட்டத்தில் கல்விக்கென ஆண்டுதோறும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 விழுக்காடு கண்டிப்பாக ஒதுக்குவோம் என்று அறிவித்தது. ஆனால் ஏற்கனவே 2001-2002 ல் ஒதுக்கீடு செய்யப்பட்ட 4.03 விழுக்காட்டிலிருந்து 3 விழுக்காடாக குறைத்ததே தவிர கூட்டவில்லை. நம்மைப் போன்ற வளமான நாடல்ல கியூபா. ஆனால், உலகிலேயே மிக அதிகமாக தனது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 17.8 விழுக்காட்டை தமது மக்களின் கல்விக்காக செலவழிக்கும் நாடாக விளங்குகிறது. அதனால்தான் பல தளங்களிலும் தன்னிறைவு பெற்ற நாடாக இருக்கிறது.

இன்று நம் நாட்டில் கல்வி உரிமை என்ற மாபெரும் கனவை உண்மையிலேயே நனவாக்க நமக்குத் தேவை இப்படிப்பட்ட மோசடியான சட்டங்களல்ல. மாறாக, நாட்டு மக்கள் மீது அக்கறையுள்ள அரசுகளும், அரசு நிர்வாகமும்தான். அப்போதுதான் பிரச்னையின் கனாகனத்தை சரியாக கண்டறிந்து கல்வி வியாபாரமாவதை தடுத்து நிறுத்தி அனைவருக்கும் தரமான, சமமான, பாகுபாடற்ற கல்வியை வழங்க முடியும். அதுவே நமது நாட்டை சுபிட்சமான நாடாக மாற்றும். இல்லையென்றால் கல்வி உரிமை ஒரு கானல்நீராகவே நிரந்தரமாக இருக்கும்.

- அ.சகாய பிலோமின் ராஜ், வழக்குரைஞர்

Pin It