முற்றத்தின் ஒரு பக்கம் சின்னதாய் புதிதாய் கட்டப்பட்ட பாரதி புத்தகாலயத்தின் நெல்லை புத்தக விற்பனை மையத்தை சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் பிரபஞ்சன் திறந்து வைத்து, “அருமையான இடம். புத்தகங்களை வாசிக்கவும் _ விமர்சிக்கவும் ஏதுவான இடத்தில் விற்பனை மையம் திறக்கப்பட்டுள்ளது” என்றார்.

நெடிதாய் வளர்ந்து தென்னை மரங்கள் ஒரு பக்கத்தில் வரிசையாய் நிற்க, வேப்பமரத்தின் அடியில் நிகழ்ச்சி நடந்தது. புதுமைப் பித்தனின் கோட்டோவியத்திற்கு அருகே நின்று பிரபஞ்சன் புகைப்படம் எடுத்துக் கொண்டது ஒவியர் செல்வத்திற்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்தது. ஒவியர் வின்சென்டின் ஒவியங்களும் இடத்தை அலங்கரித்தன. ஒவியர்களுக்கு தமது கையால் புத்தகங்களைப் பரிசளித்து எழுத்தாளர் பிரபஞ்சன் கௌரவித்தார்.

கடந்த ஒன்றரை வருடங்களில் 4 லட்சத்திற்கும் அதிகமான புத்தகங்களை விற்பனை செய்துள்ள நெல்லை மையம் நதியின் கரையில் வளர்ந்து நெல்லையின் இதயமான பகுதியில் தற்போது மையம் கொண்டுள்ளது. நெல்லை மாவட்ட கடலோர மீனவர்கள் காவல்கோ, நாசரேத் தாமஸ் டி குருஸ் தமிழ்ச் சமூகமே எப்போதும் நினைவில் கொள்ள வேண்டிய பெயர்களாகும். ஆமாம், இந்திய மொழிகளிலேயே அச்சேறிய முதல் மொழி தமிழ் மொழி என்கிற பெருமைக்கு அவர்கள் காரணகர்த்தாக்கள்.

1455ல் அச்சு இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டது. கிறித்துவ மதத்தை பரப்புவற்காக 1554ல் போர்த்துக்கீசிய லிஸ்பன் நகரில் முதல் தமிழ் நூல் அச்சேறியது. தமிழ் எழுத்துகளை வார்க்க அந்த மூன்று மீனவர்களும் கப்பலேறி லிஸ்பன் சென்ற செய்தி பெரிய எழுத்து பத்திரிகையில் வெளிவந்துள்ளது. ஐன்ஸ்டினின் கட்டுரைகளும், உரைகளும் அடங்கிய புத்தகத்தை மதிதா இந்துக் கல்லூரி முதல்வர்

பேரா.பொன்ராஜ் வெளியிட மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் வீ.பழனி பெற்றுக் கொண்டார்.

முதல் விற்பனையை மானுடவியலாளர் தொ. பரமசிவன் துவக்கி வைத்தார். மயன் ரமேஷ்ராகா முதலாவதாகப் புத்தகங்களைப் பெற்றுக் கொண்டார்.

மாதந்தோறும் நூறு ரூபாயைச் செலுத்தி பத்தாவது மாதத்தில் ரூ1200க்கான புத்தகங்களைப் பெறும் வகையில் புத்தக சேமிப்பு திட்டத்தை பாரதி புத்தகாலய நிர்வாகி தோழர் நாகராஜன் துவக்கி வைக்க அவ்விடத்திலேயே 100க்கும் மேலானவர்கள் தங்களை சேமிப்பு திட்டத்தில் இணைத்துக் கொண்டனர்.

புத்தகங்களை நேசிப்பதையும் வாசிப்பதையும் சுவாரஸ்யமாக முன் வைத்து வரலாற்றுச் செய்திகளையும் பிரபஞ்சன் பதிவு செய்தார். அவரது உரையில், சமீபத்தில் மருத்துவர்கள் செய்த கண் அறுவை சிகிச்சையில் ஒருவர் கண் பார்வை பெற்றார். இதனை கியூபா நாட்டு பத்திரிக்கை செய்தியாக வெளியிட்டது. ஏனென்றால் கண் பார்வை பெற்றவர் வேறு யாருமல்ல; சேவை சுட்டுக் கொன்ற அமெரிக்க கைக் கூலியின் மகன் ஆமாம். கோழையே! ஏன் தயங்குகிறாய், மரணத்துக்குப் பயந்தவன் அல்ல நான் என்று நெஞ்சு நிமிர்த்தி துப்பாக்கிக் குண்டுகளை ஏந்திய சேவின் முன்பாக கோழையாக, கைக்கூலியாக, நாற்காலியில் கட்டிப்போடப்பட்டிருந்த சேவை சுட்டுக் கொன்றவனின் மகனுக்குத் தான்,

கியூபா நாட்டு மக்கள் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து கண் பார்வை கொடுத்தனர். சே குறித்து ஏழெட்டுப் புத்தகங்களை பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது பெருமிதத்திற்குரியது. ரஷ்ய கட்சிப் பத்திரிகை ஒரு முறை மாயகோவ்ஸ்கியின் கவிதையை வெளியிட மறுத்து விட்டது. காரணம் அந்தக் கவிதை அரசை விமர்சித்து எழுதப்பட்டு இருந்தது. கார்க்கியை சந்தித்து கவிதையை வெளியிட மறுத்த செய்தியை கூறியவுடன், அவர் நேராக லெனினிடம் அழைத்துச் சென்றார். கவிதையைப் படித்த லெனின் இப்போது தான் மாயகோவஸ்கி கவிதை எழுத ஆரம்பித்து இருக்கிறார் என்றாராம். ஆமாம் புகழை விரும்பாத லெனின் விமர்சனங்களை, குறைகளை கேட்டறிந்து இருக்கிறார். தன்னை ஒரு படிப்பாளியாக கருதாத லெனின் சைபீரிய சிறை வாழ்க்கை முடிந்து திரும்பும் போது தன்னோடு 137 கிலோ எடை கொண்ட புத்தகங்களோடு திரும்பி இருக்கிறார்.

புத்தகங்கள் உண்மையான உலகத்தை அடையாளம் காட்டுகின்றன. கூட்டங்களில் தலைவர்களுக்கு, விருந்தினர்களுக்கு சால்வை, மாலை அணிவிக்காமல் புத்தகங்களை பரிசளிப்பதைப் பழக்கமாக்க வேண்டும். குழந்தைகளுக்கு புத்தகம் படிக்கும் பழக்கத்தை உருவாக்க வேண்டும். கல்விக் கூடங்கள் அடக்குமுறை நிலையங்களாக இன்று மாறிக்கிடக்கிறது. இதை மாற்ற புத்தகமே சிறந்த பயணவழியாக இருக்கும் என்றும் அவர் பேசினார்.

பாரதி புத்தகாலய நிர்வாகி சிவசங்கரன் தலைமையேற்க, பாஸ்கரன் வரவேற்க, துரைராஜ் நன்றி கூறினார்.

புத்தகங்கள் சாகாவரம் பெற்றவை. எனவே தான் ரோசா லக்சம்பர்க் 1905-ல் எழுதிய மதபீடங்களும் சோசலிசமும் எனும் சிறுநூல் 105 ஆண்டுகளுக்குப் பின் மறுபதிப்பு கண்டுள்ளது. மார்க்ட்வெய்ன் எழுதிய தனிமைப்புலம்பலும் பல ஆண்டுகள் கடந்து முதன் முதலாக தமிழில் வந்துள்ளது. எடுத்துப் படிக்காத வரை புத்தகங்கள் உயிரற்ற சடலங்கள் தான். வாசிக்கத் துவங்கும் போது அவை உயிர் பெறுவதோடு வாசகனுக்கு புத்துயிர்ப்பையும் - விசால உலகையும் சிறப்பிக்கிறது.நெல்லை பாரதியின் பயணமும் அனேகம் பேரின் நெஞ்சங்களையும் கண்களையும் திறந்து வைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
Pin It