“பேரக் கேட்டாலே சும்மா அதிருதுல்ல” இது சமீப காலத் திரைப்படங்களில் இடம் பெறும் முத்திரை உரையாடல். இது நிழல் உலக காட்சி

ஆனால் உண்மையிலேயே சிங்கள இனவெறி இராணுவத்தினருக்கு, விடுதலைப்புலிகள் தளபதி, பிரிகேடியர் பால்ராஜ் என்ற பெயரைக் கேட்டாலே குலை நடுங்கிப் போகும். அவரின் போர்த்திறன் அத்தகையது.

balraj_450விடுதலைப் புலிகளின் போரியல் வரலாற்றில் மாமகுடம் சேர்த்த பிரிகேடியர் பால்ராஜ், தமிழீழத்தின் இதயப் பகுதியான முல்லைத் தீவு மாவட்டத்தின் கடற்கரைப் பிரதேசமான கொக்குத்தொடுவாயில் 1965-நவம்பர் -26 அன்று பிறந்தார். அவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் பாலசேகரன்.

பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள் தன் இளம் அகவையிலேயே யுத்தக் கலையில் ஆர்வம் மிக்கவராக விளங்கினார். போராடும் குணம் என்பது இயற்கையாகவே அவரது உள்ளத்தில் குடிகொண்டிருந்தது. தமிழீழ விடுதலையின் மீது தீராத காதல் கொண்ட பிரிகேடியர் பால்ராஜ் 1983-ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்!

விடுதலைப் புலிகளின் வீரவரலாற்றில் பிரிகேடியர் பால்ராஜ் கண்ட களங்கள் பல.

1986-இல் கிளிநொச்சி கரடிப் போக்குச் சந்தியில் நிலை கொண்டிருந்த இலங்கை சிறு இராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்தி முகாமைக் கைப்பற்றி தனது முதல் சமரை வரலாற்றில் பதிவு செய்து கொண்டார் பால்ராஜ்.

இந்திய அமைதி (அமளி)ப்படை 1990- ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஈழமண்னை விட்டு அகற்றப்பட்ட பின்னர் வன்னி மண்ணின் தளபதியாக நியமிக்கப்பட்டார் பால்ராஜ். வன்னியில் தமிழர்களின் வாழ்விற்குப் பெருந்தடையாக இருந்த சிங்களப் படைத்தளங்களைத் துடைத்தழிக்கும் பணியில் ஈடுபட்டார்.

1990-ஆம் ஆண்டில் கொக்காவில் - மாங்குளம் கிளிநொச்சி ஆகிய வன்னியின் நடுப்பகுதியில் இருந்து சிங்களப் படைத்தளங்களை தனது தாக்குதல் நடவடிக்கையால் தகர்த்தெறிந்தார் பிரிகேடியர் பால்ராஜ்.

1991-1993, 1995-1997 அகிய காலக்கட்டத்தில் விடுதலைப்புலிகளின் முதலாவது மரபு வழிப்படையணியான சார்ள்ஸ் அன்ரனியின் சிறப்புப் படையணியின் முதலாவது கட்டளைத் தளபதியாக அப்படையை வழி நடத்தினார் பிரிகேடியர் பால்ராஜ்.

மணலாற்றில் சிறிலங்க சிங்களப் படைகள் மேற்கண்ட “மின்னல்” நடவடிக்கை முறியடிப்புத் தாக்குதலைச் சிறப்பாக எதிர்கொண்டார். இதன் பின்னர் தமிழ் விடுதலைப் புலிகள் அமைப்பின் துணைத்தலைவர் என்ற உயர்பதவியில் நியமிக்கப்பட்டவர் பிரிகேடியர் பால்ராஜ்.

பிரிகேடியர் பால்ராஜ் தனது முழுத்திறனையும் வெளிப்படுத்திய சமர்களாக யாழ்தேவி மற்றும் தவளைப்பாய்ச்சல் நடவடிக்கையைக் குறிப்பிடலாம். எதிரிகளின் டாங்கிகளை முதன் முறையாக அழித்த இந்நடவடிக்கையில் காலில் காயமடைந்தார்.

அச்சமரில் சிறிலங்க இராணுவத்தின் கேணலாக இருந்த சரத் பொன்சேகா தலைமையில் ஆனையிறவிலிருந்து, வடக்காக யாழ்பானம் நோக்கி நடத்தப்பட்ட ‘யாழ்தேவி’ நடவடிக்கையை பெறும் ஆறே நாட்களில் முறியடித்தார் பால்ராஜ். சிங்களர்களிடையே பேரதிர்ச்சியை உண்டாக்கியது இச்சுமர்.

சிறிலங்க இராணுவத்தினரின் முன்னேறிப் பாய்ச்சலுக்கெதிரான புலிப்பாய்ச்சலிலும், ‘இடிமுழக்கம்’ நடவடிக்கைக்கு எதிரான சண்டையிலும் பின்னர் இடம் பெற்ற ‘சூரியக்கதிர்’ இராணுவ நடவடிக்கைக்கு எதிரான தாக்குதல்களிலும் தலைமை தாங்கினார் பிரிகேடியர் பால்ராஜ். இச்சமரானது 1995-இல் யாழ்ப்பானத்தில் நடைபெற்றது.

புலிகளின் “ஒயாத அலைகள்-1” என்ற பெயரிலான தாக்குதல், 1996-ஜீலை18-இல் முல்லைத் தீவு இராணுவ முகாம் மீது நடத்தியது. இத்தாக்குதலில் 1000-க்கும் மேற்பட்ட சிங்கள இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டார்கள். இத்தாக்குதல் நிகழ்வும் பிரிகேடியர் பால்ராஜ் தலைமையில் நடைபெற்றது.

மேலும் 1998-இல் கிளிநொச்சியை மீளக்கைப்பற்றிய “ஓயாத அலைகள்-2” நடவடிக்கைக்கும் தலைமை தாங்கினார்.

2000-மார்ச்-18-இல் 1500 போராளிகளுடன் குடாரப்பில் தரையிறக்கி விடப்பட்ட பிரிகேடியர் பால்ராஜ் தன் தலைமையில் 34 நாட்கள் தாக்குப்பிடித்து ஆனையிறவுக்கான வினியோகத்தை துண்டித்ததன் மூலம் ஆனையிறவு கைப்பற்றப்பட்டது. இச்சமரே சமர்களுக்கெல்லாம் ‘தாய்ச்சமர்’ என்று புலிகளால் கருதப்பட்டது.

இச்சமரின் போது தனது சக போராளிகளிடம் பேசும் போது, “எதிரி ஆக்கிரமித்துள்ள எங்களுடைய யாழ் மண்ணில் மீண்டும் நாம் காலடி எடுத்து வைக்கப்போகிறோம். நாங்கள் வெல்லப்பட முடியாதவர்கள் என்பதை எதிரிக்குச் சொல்லி வைக்கப் போகின்றோம். புலிகள் யார் என்பதை எதிரிக்குக் காட்ட வேண்டும்” என்ற கூறி செருக்களமாட ஆயத்தப்படுத்தினார் பிரிகேடியர் பால்ராஜ்.

இத்தாவின் பெட்டிச் சமரில் சிங்களப் படைகளின் தலைமை தளபதிகள் வகுத்தத் திட்டங்கள், தந்திரங்கள், மற்றும் சர்வதேச இராணுவ வல்லுநர்களின் ஆலோசனைகளோடு களமிறங்கிய சிங்கள இராணுவப் படையை திக்குமுக்காட வைத்து, அவர்களின் இராணுவ நிலைகளைத் தவிடுபொடியாக்கியது பிரிகேடியர் பால்ராஜ் தலைமையிலான படையணி.

இச்சமரின் இடையே பெரிய தாக்குதல் ஒன்றை நடத்தத் திட்டமிட்ட சிங்கள இராணுவம் அந்நடவடிக்கையினூடே பிரிகேடியர் பால்ராஜ் அவர்களை உயிருடனோ அல்லது பிணமாகவோ கைப்பற்றுவோம் என்று கங்கணம் கட்டிக் கொண்டு அலைந்தது. ஆனால் அச்சமரின் இறுதியில் சிங்களப்படைக்கு பின்னோக்கி – புறமுதுகிட்டு ஒடுவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை

இச்சமர் தொடர்பாக தளபதி காமினி கெட்டியாராட்சியைத் தொடர்பு கொண்ட பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், “40000 பேரைக் கொண்ட படையைக் கொண்டு, வினியோகம் ஏதுமின்றி சண்டையிடும் 1500 பேரைச் சமாளிக்க முடியாத நீங்களெல்லாம் ஒரு இராணுவமா?” என்று கடுமையாக வசவு பாட, அதற்கு கெட்டியாராட்சி அளித்த இரு வரிப் பதில்தான் பிரிகேடியர் பால்ராஜின் வீரத்தைப் பறைசாற்றும் கண்ணாடியாக விளங்குகிறது.

அவரின் பதில்:

“பிரபாகரன் நேராக வந்து சண்டையிட்டாக் கூட சமாளிக்சுடுவோம், ஆனால் வந்திருப்பது பால்ராஜ், நிலை கொண்டுவிட்டால் அவரை அப்புறப்படுத்துவது கடினம்”

இந்த உரையாடல் இத்தாவில் சண்டைத் தொடர்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த உரையாடல் பதிவினை ஆனையிறவு வெற்றியுடன் திரும்பிய தளபதி பிரிகேடியர் பால்ராஜ்க்கு தலைவர் பிரபாகரன் போட்டுக் காண்பித்தார்.

குடாரப்பில் இறங்கி நடக்க முடியாத கால்களுடன் நடந்து வந்த பிரிகேடியர் பால்ராஜ் அவர்களை ஒளிப்படம் எடுத்து தன் பணிமனையின் சுவரில் மாட்டி அம்மாவீரனுக்கு மண்ணில் வாழ்ந்த காலத்திலேயே மணி மகுடம் சூட்டினார்.

தமிழர்களின் புறநானூற்று வீரத்தை நிகழ்காலத்தில் உலகுக்குக்காட்டிய புலிகளின் வரலாற்றில் பிரிகேடியர் பால்ராஜ் அவர்களுக்கு உரிய இடம் உண்டு.

வீரம் விளைந்த ஈழத்தின் விடுதலைக்கு வித்தாய்-விதையாய் மாறிப்போன பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் ஈகம் தமிழ்கூறும் நல்லுலகு உள்ளவரை நிலைந்து நிற்கும்.

சிங்கள இராணுவ நிலைகளுக்கு இடையே முள்வேலி முகாம்களில் சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்பதும், ஈழத்தின் விடுதலைக்கும் - தமிழ்தேசத்தின் விடுதலைக்கும் தொடர்ந்து குரல் கொடுப்பதும்-களமாடுவதும் தான் ஈழ விடுதலைக் கனவில் தங்கள் இன்னுயிர் ஈந்த மாவீரர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான அகவணக்கமாக அமையும்.

- தங்க.செங்கதிர்

Pin It