பஞ்சாபில் நடைபெற்ற ஜாலியன் வாலாபாக் படுகொலை அநீதிக்கு எதிராக ஒத்துழையாமை போராட்டம் நடைபெற்ற காலத்தில் சுதேசமித்திரன் ஆசிரியரும் காங்கிரஸ் காரியதரிசியுமான எ,ரெங்கசாமி அய்யங்காரும், இந்து ஆசிரியரும் தமிழ்நாட்டுத் தலைவருமான கஸ்தூரி ரங்கய்யங்காரும், பரிசுத்த தேசியவாதி என்று சொல்லப்பட்ட சத்தியமுர்த்தி அய்யரும், ராஜினாமா கொடுத்துவிட்டு ஓடிவிட்டார்கள். இந்திய தேசிய தலைவரும் 'டிக்டேட்டர்' என்று சொல்லுவதான ஏக தலைவருமான சீனுவாச அய்யங்கார் 'ஒத்துழையாமை என்பது சட்ட விரோதம்' என்று கூறிவிட்டார்.

anibesant"பஞ்சாபியர்கள் செங்கல் எறிந்ததற்கும் ஜெனரல் டயர் பீரங்கி குண்டு போட்டதற்கும் சரியாகப் போய்விட்டது. இதுதான் அரச தர்மம்" என்று அப்போது கூறியவர்தான் அன்னிபெசன்ட்!.

மாண்டேகு செம்ஸ்போர்டு அரசியல் சீர்திருத்தத் திட்டத்தில் கண்டிருந்தபடி இரட்டை ஆட்சிமுறை செயல்படுவதை பரிசீலிக்கவும் புதிய அரசியல் சீர்திருத்தம் பற்றிய ஆலோசனைகளை வகுக்கவும் சர்.ஜான் சைமன் தலைமையில் ஒரு குழு இந்தியா வருவதாக 1927ம் ஆண்டு நவம்பர் 18 ம் தேதி ஒரு அறிவிப்பு வெளியாயிற்று.

அந்தக் குழுவில் இந்தியர்கள் யாரும் இல்லை எனக் காரணம் காட்டி காங்கிரஸ் பார்ப்பன தேசியவாதிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது காங்கிரஸிலிருந்து ஒதுங்கியிருந்த அன்னிபெசன்ட் சீனிவாச அய்யங்காருடன் சேர்ந்துகொண்டு சைமன் குழுவை கடுமையாக எதிர்த்தார்.

சைமன் குழுவை வரவேற்ற தந்தை பெரியார் அவர்கள் "பெசன்ட் அம்மையின் புதிய உபத்திரம் என்னவெனில், நம் நாட்டு பார்ப்பனர்கள் இப்போது தங்களுக்குள்ள சகல நாடிகளும் விழுந்து விட்ட பிறகு அம்மையை (அன்னிபெசன்ட்) பற்றியிருக்கிறார்கள். இது பார்ப்பனரல்லாதாருக்கு பேரபாயம். இந்நாட்டில் பார்ப்பனரல்லாத மக்கள் பெரும்பான்மையும் தோட்டி நிலையிலேயே இருக்கிறார்கள். அத்தோட்டி நிலை மாற ஏதாவது மார்க்கமுன்டானால் எந்த துரையையும் கமிஷனையும் வரவேற்கவும் செய்யலாம். பகிஷ்கரிக்கவும் செய்யலாம்" என்றார்.

"கமிஷனில் அங்கம் வகிக்கக் கூடியவர்கள் ஏகபோக உரிமையாளர்களான பார்ப்பனர்களாகவே இருந்துவிடக்கூடும் என்கிறதை நினைக்கும்போது அக்கமிஷனில் இந்தியர்களை நியமிக்காதது ஓர் பாக்கியமென்றே சொல்லவேண்டும்" என்று குடியரசில் கட்டுரை எழுதினார்.

அன்னிபெசன்ட் அம்மையார் பார்ப்பனர்களுக்கு பலவகையிலும் உதவியாக இருந்ததோடு இந்து மதத்தை பரப்புவதிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்ததால் தான் இன்றுவரை அவரை பார்ப்பனர்கள் உயர்த்திப் பிடிக்கிறார்கள்!

Pin It