‘நமது அன்றாட வாழ்வை வடிவமைக்கும் வர்க்க அதிகார கட்மைப்புக்களில் இருந்து இலக்கியத்தால் தப்பிச் செல்ல முடியாது. சண்டைக்களத்தில் ஒரு எழுத்தாளர் ஏதோவொரு தரப்பைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்துக்காளாகிறார். மக்கள் பக்கம் நிற்பதா அல்லது மக்களை அழுத்தி வைக்க முனையும் சமூக சக்திகளின் பக்கம் நிற்பதா என்பதா என்பதை எழுத்தாளர் தீர்மானித்தாக வேண்டும்.’ - கூகி வா தியாங்கோ

ingulab
ஈழத்தில் தினமும் மக்கள் கொல்லப்படுகின்றார்கள். ஈழத்தில் அமைதி திரும்ப வேண்டும். ஈழத் தமிழர்களின் உரிமைகள் பேணப்பட வேண்டும். அங்கு ஒரு போர் நிறுத்தம் கொண்டுவரப்பட வேண்டும். அதற்கு இந்திய மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். இப்படியெல்லாம் தமிழகத்தின் மூலை முடுக்குகள் எங்கும் குரல்கள் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. இந்த குரல்களுக்கு மத்தியில் எழுத்தாளர்களின் குரல்கள் எங்காவது இருக்கின்றனவா? என்று தேடிப்பார்த்தால் பா.செயப்பிரகாசம், இன்குலாப், ராஜேந்திரசோழன், (இன்னும் சில பெயர்கள் இருக்கின்றன. ஒர் உதாரணத்திற்காக மேற்படி பெயர்களை எடுத்தாண்டிருக்கிறேன்.) இப்படிச் சில பெயர்கள் மட்டும் தனித்துத் தெரிகின்றன. அவர்கள் படைப்பாளர் முன்னனியாகவும் தொழிற்பட்டுவருகின்றனர்.

தமிழகச் சூழலின் இலக்கியப் போக்குகள் குறித்து அவதானித்து வந்த ஒருவன் என்ற வகையில் அதிகாரத்தை நோக்கி உண்மைகளை பேசுவோம், அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்குவோம் என்றெல்லாம் உரத்துப் பேசியவர்கள், தங்களின் வாதங்களுக்காக பூக்கோ, தெரிதா, என்றெல்லாம் அறிமுகங்களைச் செய்தவர்கள், அதிலும் அவ்வாறான அறிமுகங்களுக்கு உரிமை கோருவதில் நான் முந்தி நீ முந்தி என்று முண்டியடித்துக் கொண்டவர்கள் எல்லாம் இப்பொழுது எங்கு போனார்கள்? அந்த பின்நவீனத்துவ பிதாமகர்களின் ஈழம் குறித்த நிலைப்பாடென்ன?

எல்லாவற்றையும் கேள்விக்குளாக்குவோம் என்று தெருக்களில் அலைந்து திரிந்த இந்த அதிமேதாவிகளிடம் முட்டையில் மசிர் புடுங்கும் கற்பனைகளைத் தவிர வேறு எதுவுமே இல்லை என்பது இப்போது வெள்ளிடைமலையாகியுள்ளது. உலகின் எங்கோ ஒரு மூலையில் இருக்கும் பழங்குடி மக்களின் விடுதலை குறித்தெல்லாம் சிந்திக்கும் இந் உயர் சீலர்களுக்கு, தங்களுக்கு மிகவும் நெருக்கமாக இருக்கும் ஒரு மக்கள் கூட்டத்தின் துயரம் மட்டும் புரியவில்லை என்றால் இவர்களின் பின்நவீனத்துவ மேதமையை என்னவென்பது.

ஒரு எழுத்தாளனின் சமூகக் கடைமை என்பது என்ன? ஒரு எழுத்தின் சமூகப் பாத்திரம் என்பது என்ன? இந்த கேள்விகளில் இருந்துதான் இவ்வாறான மேதைகளை அளவிட வேண்டும். எழுத்து பெரிதாக எதையும் சாதித்து விடப்போவதில்லை லூசுன் சொல்லியது போன்று புரட்சிக்கு புரட்சியாளர்கள் தேவையே தவிர எழுத்தாளர்கள் அல்ல. ஆனால் ஒரு எழுத்தாளனின் தார்மீக நிலைப்பாடென்ன, அவனது வெளிப்பாடு எதைச் சார்ந்திருக்கிறது என்பதைப் பொருத்து அந்த எழுத்து முக்கியத்துவம் பெறுகிறது. எழுத்து ஒரு குறிப்பிட்ட காலத்தின் எழுச்சியோடும் வீழ்ச்சியோடும் இணைந்திருக்கிறது. அவ்வாறு இணைந்திருக்கும்போது அந்த எழுத்தும் ஒரு விடுதலைக்கான கருவியாகத் தொழிற்படுகின்றது. இவ்வாறான நிலைப்பாட்டைக் கொண்ட எழுத்தாளர்களைத்தான் சமூக நோக்குள்ள எழுத்தாளர்கள் என்கிறோம்.

அவ்வாறில்லாது தனது காலத்தின் உயிர்ப்பான அரசியல் குறித்து எந்த நிலைப்பாடுமில்லாமல் ஏதோ எழுதுகிறோம் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்வோரும் இருக்கின்றனர். என்னைப் பொருத்தவரையில் இவ்வாறானவர்கள் எழுதுவதில் நேரத்தை விரையம் செய்வதிலும் பார்க்க குசினியில் மனைவிக்கு உதவியாக இருந்தால் குறைந்தது மனைவிக்காவது சற்று விடுதலை கிடைக்கும்.

ஆனால் இந்த பின் நவீனத்துவ மேதைகளை எந்த வகைக்குள் அடக்குவது, இவர்கள் உளறிக் கொட்டியதை எந்தவித பரிசீலனையும் இல்லாமல் பரப்பித்திரிவோரை எதில் சேர்ப்பது. சில வேளை நான்தான் சரியாக ஆராயாமல் அவசரப்பட்டுவிட்டேனோ என்னவோ. யாருக்குத் தெரியும்! நான் அவர்களை கண்டித்துக் கொண்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில், அந்த பின்நவீன மேதைகளில் சிலர் மனிதகுலத்திற்கு அவசியமான சில அரிய ஆய்வுகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கலாம். ‘ஈழத் தமிழர்கள் மீது சிறிலங்கா விமானங்கள் குண்டுகளை பொழிந்து அவர்களை அழித்துக் கொண்டிருக்கும் போது, மேலிருந்து போடப்படும் அந்த குண்டுகள் ஒவ்வொன்றும் எவ்வாறன அதிகாரத்தை கொண்டிருக்கின்றன, விழுந்தவுடன் அது எவ்வாறன அதிகாரத்தை வெளிப்படுத்துகின்றது’ என்று மிகவும் அவசியமான ஆய்வுகள் எவற்றிலேனும் அவர்கள் ஈடுபட்டிருக்கலாம். இன்னும் சிலரோ பதினாறு வயதுச் சிறுமிக்கு எவ்வாறு பாலியலில் வாழ்வைத் தொடங்குவது, முதல் முதலில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற வகையான ஆய்வுகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கலாம். சிலர் அதற்கும் மேலாக வகுப்புக்களையும் நடத்திக் கொண்டிருக்கலாம் சாரு நிவேதிதாவின் உன்னத சங்கீத வகுப்புப் போல். நான் அவசரப்பட்டு அவர்களை கண்டித்து விட்டேனோ என்னவோ.

- யதீந்திரா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It