17 ஆம் நூற்றாண்டின் மத்திய காலம் - இந்தியாவை ஆண்டு வந்த ஆங்கிலேயர்கள் தென் இந்தியாவின் ஆளுமை விவகாரங்களில் தீவிரம் காட்டத் துவங்கிய சமயம். 1749 இல் ஆற்காடு நவாப் அன்வர்தீனின் மறைவுக்குப் பிறகு அவரது புதல்வர் முகம்மது அலி வாலாஜாவை புதிய நவாபாக நியமித்ததில் ஆங்கிலேயர்களின் பங்கு கணிசமானது, இந்த உதவியின் மூலம் தங்களது ஆளுமையயை மதராஸ் பட்டினத்தயும் கடந்து தென் தமிழகமான திருச்சி, மதுரை, நெல்லை போன்ற நகரங்களிலும் விரித்துப் பரப்பினர்.

வாலாஜா நவாப்களைப் பொறுத்தவரையில் ஆங்கிலேயர்கள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவர்களாகவே கருதி வந்தனர், நவாப்களின் தலைநகரமான ஆற்காட்டில் இருந்து 1767 இல் மதராஸுக்கு பல ஆயிரம் உருது பேசும் முஸ்லீம் மக்களுடன் நவாப் இடம் பெயர காரணமானவர்கள் ஆங்கிலேயர்கள் என்ற அளவில் மட்டுமின்றி, மதராஸ் பட்டினத்திற்குச் சிறப்பு அந்தஸ்துடன் முஸ்லீம் மக்கள் வாழக்கூடிய அளவில் ஏற்புடைய நகரமாக மாற்றி அமைத்ததில் இவர்களின் பங்கு அதிமுக்கியமானதாகக் கருதினர்.

நவாப் வாலாஜாவின் மதராஸ் குடியேற்றமைக்கு முன்பே ஹைதராபாத் மற்றும் மத்திய பிரதேசத்தைச் சார்ந்த பல முஸ்லீம்கள் வியாபார ஸ்தலங்களைப் பரவலாக இங்கே அமைத்து இருந்தனர். இந்தக் காலக்கட்டங்கள்தான் தமிழக முஸ்லீம்களின் வியாபார வளர்ச்சிக்கான முக்கியத்துவம் வாய்ந்த காலமாகும், பெருவாரியான வியாபாரிகள் தங்களின் வியாபாரத் தொடர்புகளை ஐரோப்பிய நிறுவனங்கள் அல்லது வட இந்தியப்பகுதியில் இருந்து வந்து வியாபார உலகில் கோலோச்சிய பத்தான்களிடமுமே தொடர்பு வைத்துக் கொள்ள விரும்பினர். இருப்பினும் கோரமண்டல கடல் வழி வர்த்தகத்தில் முக்கியத் துறைமுகமான போர்ட்டோ நோவா என அழைக்கப்பட்ட பரங்கிப்பேட்டையில் சரக்குகளின் கையாடல்கள் கணக்கில் அடங்காமல் விண்ணை முட்டிக் கொண்டிருந்தது, துறைமுக வர்த்தகம் அனைத்தும் கடலூர் முஸ்லீம்களிடம் கை கட்டி நின்று கொண்டிருந்த காலம் அது.

ஆனால் இது பல காலம் நிலை கொள்ள முடியவில்லை, 19 ஆம் நூற்றண்டின் தொடக்கக் காலக் கட்டத்தில் முஸ்லீம் கடல் வேந்தர்களின் முக்கியத்துவம் ஆங்கிலேய கம்பெனிகளின் தொழில் போட்டியால் சிறுக சிறுக குறைய ஆரம்பித்தது, மதராஸ் பட்டினத்தை அரசியல் மற்றும் நிர்வாகக் கேந்திரமமாக மட்டுமின்றி வர்த்தகத் தலை நகராக மாற்றும் முயற்சியில் வெற்றிக் காணப்பட்டது, பெரும்பாலன வர்த்தகர்கள் மதராஸ் நகருக்கு தங்களது தொழிலை மாற்ற விரும்பாததும் ஒரு பின்னடைவை ஏற்படுத்தியது. மற்றொரு புறம் மதராஸ் மகாணம் முழுவதிலும் நவாப்களின் செல்வாக்கு அரசியல் ரீதியாக அதிகரிக்கத் தொடங்கியது, ஏராளமான உருது பேசும் முஸ்லிம்கள் அரசு வேலைகளில் அமர்த்தப்பட்டனர். ஆனால் எதிர்பாராத விதமாக 1855ல் நவாப் என்ற பதவி ஆங்கிலேயர்களால் ஓழிக்கப்பட்டு அவர்களின் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டு நவாப்கள் அரசாங்கத்தால் மானியம் பெருபவர்களாக அங்கீகாரம் குறைக்கப்பட்டனர். இதனால் நவாப்களைச் சார்ந்து வாழ்ந்துவந்த சமூகங்கள் அனைத்தும் தத்தம் வாழ்வாதாரங்களை இழந்து மாற்று வழிகளைத் தேட முயன்றனர். பலர் வறுமையினை அரவணைத்து கொண்டனர். இதுவே தமிழகக் குறிப்பாக முஸ்லிம் மக்களின் சமூக, பொருளாதார வாழ் நிலையில் ஏற்பட்ட மிகப் பெரும் சரிவாகக் கொள்ளலாம்.

இத்தகைய சோதனையான சூழலில்,பிரிட்டீஷ் அரசாங்கத்தின் திடீர் அரசியல் முடிவால் முன்னாள் ஆற்காடு நவாப்கள், ஆற்காடு இளவரசர்களாக உருமாற்றம் செய்யப்பட்டு இன்று வரை அது தொடர்கிறது. அரசியல் அதிகாரத்தில் உச்சாணி கொம்பில் இருந்த உருது பேசும் முஸ்லிம்கள் தங்கள் அங்கீகாரத்தை மெல்ல மெல்ல இழந்தனர், அரசு உத்தியோகத்தில் இருந்த சிறப்புச் சலுகை முற்றோடு அழிக்கப்பட்டது. அரச உத்தியோகத்திற்காக மாற்று மதத்தினருடன் போரிடும் நிலைக்குத் தள்ளப்பட்டுச் சில காலம் அலைக்கழிக்கப்பட்டனர்.

இப்படியான காலக்கட்டத்தில், புது வேகத்துடன் வியாபார முயற்சியில் உத்வேகத்துடன் சில இஸ்லாமியர்கள் மதராஸ் பட்டிணத்தை நோக்கி பயணித்தனர். 19 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் முஸ்லிம் வியாபாரிகள் மதராஸில் வேர் விட ஆரம்பித்தனர். இதில் முதன்மையானவர் திருவல்லிக்கேணியில் வியாபார ஸ்தலம் அமைத்து மிகப் பெரும் வெற்றியை ஈட்டிய முகம்மது அப்துல்லா பாஷா, 1866 ஆம் ஆண்டுகளில் ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் கொடி கட்டி பறந்த இவர் அரேபியா, எகிப்து மற்றும் பல மேலை நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டவர்.

1881 க்குப் பிறகு தொழிலில் இருந்து தனது மூப்புக் காரணமாக ஓய்வு பெற்ற முகம்மது அப்துல்லா பாஷா தனது தொழிலுலக வாரிசாகத் தனது மகன்களின் ஒருவரான முகம்மது குத்தூஸ் பாஷாவை நியமித்தார். தந்தையின் வர்த்தகத்துடன், சரக்குகளின் கமிஷன் ஏஜன்டாகவும் 1883 ஆம் ஆண்டு வரை நீடித்த இவர், தனது வியாபாரத்தில் புது யுக்தியை திடுமெனப் புகுத்தினார், இவரின் தொழில் விரிவாக்க திட்டத்திற்கு இவரது சகோதரர் முகம்மது அப்துல் ஹாதி பாஷாவின் பங்கு மிக முக்கியமானதாக விளங்கப்படுகிறது. இவரின் புது யுத்தியாக டீலர்ஷிப் என அழைக்கப்படும் மொத்த வினியோக உரிமையினை மிக முக்கியமான பொருட்களுக்கு எடுத்தது மட்டுமின்றி வங்கி மற்றும் காப்பீட்டு நிறுவனங்களின் ஏஜன்ஸியாகவும் செயல் பட்டு மதராஸ் நகரின் முக்கியப் பிரமுகராகக் கருதப்பட்டு வந்தார், தற்பொழுது நூற்றாண்டு விழா கொண்டாடிய இந்தியன் வங்கி லிமிட்டடின் எட்டு நிறுவனர்களில் குத்துஸ் பாஷா சாகிபும் ஒருவர் என்பது குறிப்பிடதக்கது

குத்துஸ் பாஷா சாகிப் தனது தொழிலில் மட்டுமின்றி ,கல்வி, சமுதய நலன், அரசியல் மற்றும் சீர்திருத்தம் போன்ற மக்கள் நல மேம்பாட்டு பணிகளிலும் தீவிர அக்கரை காட்டினார், ஏராளமான சொத்துக்களும், பல வைர சுரங்கங்களுக்கும் அதிபரான இவரைப் பிரிட்டிஷ் அரசாங்கம் கான் பகதூர் பட்டம் வழங்கி கௌரவித்தது, மதராஸ் மாகானத்தில் முதல் மைக்கா தொழில் இவர் மூலம்தான் தொடங்கப்பட்டது. இவரின் பொது வாழ்க்கையின் முக்கிய அங்கீகாரமாக 1911 ஆண்டு டெல்லியில் நடந்த மூன்றாம் டெல்லி தர்பார் கொண்டாட்டத்தில் மதராஸ் மாகாணத்தின் முஸ்லீம்களின் பிரதிநிதியாகக் கலந்து கொள்ள ஐந்தாம் ஜார்ஜ் மன்னரால் அழைக்கப்பட்டார், பாஷா சாகிப் குடும்பத்தினரின் செல்வாக்கு கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு காலம் மதராஸ் மாகானத்தின் வர்த்தக, அரசியல், சமூகப் பொருளாதாரத் துறைகளில் ஓங்கிய நிலையிலேயே இருந்தது காலத்தால் மறுக்க முடியாத உண்மை.

இவர் போலவே பல வியாபார வித்தகர்கள் 19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும், 20 ஆம் நூற்றாண்டின் துவக்க காலங்களில் மிகப் பிரபலமடைந்தனர், இவர்களில் சிலர், சாலே முகம்மது ஹாஜி இப்ராகிம் சேட், அப்துல் ஜப்பார் சேட், மாவீரர் திப்பு சுல்தானின் வாரிசான ஹுமாயூன் ஷா பகதூர், தாதா கான், தஸ்தகீர் சாஹிப், அப்துல் ஹுசைன் சம்பாஜீ, வால்ஜீ லால்ஜீ சேட், யாக்கூப் ஹஸன் சேட் போன்ற அனைவருமே மதராஸ் நகரத்தில் வர்த்தகம் புரிந்தவர்கள், மிக முக்கியமான தங்கள் சமூகம் சர்ந்த , மற்றும் சாராத இயக்கங்களிலும், அரசியல் சபைகளிளும் தவிர்க்க முடியாத இடம் பெற்றவர்கள், அதில் முக்கியமானவை அஞ்சுமன் சபை, மதராஸ் மஹாஜன சபை, இந்திய தேசிய காங்கிரஸ், இந்திய முகம்மதியர்கள் சங்கம் போன்றவை.

அதே சமயம் ஆற்காடு இளவரசர் குலாம் முகம்மது அலி மட்டுமின்றி ஆற்காடு நவாப் குடும்பத்து உறுப்பினர்களான அப்துல் லத்தீப் பரூக்கி, நவாப் முகம்மது ஹபீபுல்லா, 1884 இல் முஸ்லிம் ஹெரால்ட் ஆங்கிலப் பத்திரிக்கையின் நிறுவனரான அஹ்மது முகைதீன் போன்றோர்கள் மாகானத்தின் அரசியல் மற்றும் சமூக இயக்கங்களில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகளாகச் செயல் பட்டுக் கொன்டிருந்தனர.

1910 ஆம் ஆண்டு ஆற்காடு இளவரசர் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் மேல் சபைக்கும், 1916ஆம் ஆண்டு மதராஸ் மகாண சட்ட சபைக்கும் முஸ்லிம் மக்களின் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார், 1906 ஆம் ஆண்டு டாக்கவில் தொடங்கப்பட்ட இந்தியன் யூனியன் முஸ்லிம்லீக் இயக்கத்துக்கு இந்திய இஸ்லாமியர்களின் நலனில் அக்கரை கொண்டு ஏராளமான நிதி உதவியும் செய்தார். தென்னிந்திய இஸ்லாமிய லீக்கின் தலைவராகவும், பின்பு தொடங்கப்பட்ட மதராஸ் மாகான முஸ்லீம் லீக்கின் தலைவராக 1908 முதல் 1917 வரையிலான காலக் கட்டங்களில் செயல்பட்டு வந்தார், அந்தச் சமயம் முஸ்லீம்லீக் இயக்கத்தில் தமிழ் மற்றும் மலையாள முஸ்லீம்களின் பிரதி நிதித்துவம் மிகக் குறைவாகவே இருந்து வந்தது.

உருது மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட இஸ்லாமிய பிரமுகர்களான அப்பாஸ் அலிகான், மீர் அகமது அலி, அப்துல்லா கட்டாலா, மஹபூப் அலி பெய்க், செய்யது அகமது பாஷா, பஷீர் அகமது செய்யது போன்றோர்கள் மாகான அரசியலில் ஈடுபட்டிருந்தாலும் ஆங்கிலேயர்களின் நிழலான பெரும் வியாபாரிகள் மற்றும் அரசாண்ட நவாப்களின் கட்டுப்பாட்டிலேயெ இருக்க வேண்டிய சூழ்நிலை இருந்தது. உருதை தாய் மொழியாகவும், வட இந்திய மற்றும் முகலாய கலாச்சாரப் பிண்னனி கொண்ட இவர்களை மாகான அரசியல் சூழ்நிலைகளை அறியவே வட இந்திய இஸ்லாமிய அரசியல்வாதிகள் பெரிதும் பயன்படுத்திக் கொண்டனர் என்பதே உண்மை.

ஆங்கிலேய அரசுக்கு நெருக்கமான பிரமுகர்களான முகம்மது அப்துல்லா பாஷா, ஹுமாயூன் ஷா பகதூர் போன்றோர் 1885 இல் துவக்கப்பட்ட இந்திய தேசிய காங்கிரசுக்கு ஆதரவாகவும், அஹமது முகைதீன் போன்ற மற்றவர்கள் காங்கிரசின் ஒரே இந்தியா கொள்கையினை எதிர்த்து அதனைத் தீவிரமாக எதிர்த்தும் வந்தனர். அதே காலக் கட்டத்தில் வட இந்தியாவில் சையது அகமது கான் காங்கிரசின் மேற்கத்திய ஆதரவு கொள்கைகளுக்கு எதிராகப் போர் கொடி தூக்கி வந்தது முஸ்லீமகள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி வந்தது. ஆறு நூற்றாண்டுகளாக இந்திய அரசியலில் பெரும் செலவாக்குக் கொண்டிருந்த முஸ்லீமகளின் அரசியல் வாழ்வில் பெரும் பின்னடைவை இந்தச் சூழ்நிலை ஏற்படுத்தியது.

மதராஸ் உருது பத்திரிகையாளர்கள் சங்கம், காங்கிரஸ் இயக்கம் இந்துத்துவக் கொள்கைகளைக் கடை பிடிப்பதாகக் கடுமையாகச் சாடியது, இதன் காரணமாகச் சையது முகம்மது கான் மற்றும் அகமது முகைதீன் ஆகியோரின் போக்கை ஆதரிக்க முஸ்லீம்களை வலியுறுத்தவும் ஆரம்பித்தது.

இருப்பினும் உருது பேசும் மிகப் பெரும் தொழில் வணிகர்களே அரசியலில் பெரும் பங்கினை வகித்து வந்தனர். மற்றொரு பக்கம் வேறு விதமான சமூகக் கலாச்சார, வரலாற்று பிண்ணனி கொண்ட திராவிட மொழியான தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட தமிழ் முஸ்லீம்கள் மாகான அரசியலில் பெரும் கவணம் செலுத்தாமலேயே இருந்து வந்தனர். தொன்மையான தமிழ் கலாச்சாரப் பணபாட்டினை கொண்ட இவர்கள் தனிச் சமூகமாக அறியப்பட்டனர்.

உருது முஸ்லீம் மக்கள் போன்று இஸ்லாத்தினை மார்க்கமாகக் கொண்ட தமிழ் முஸ்லீம்கள் அரசியலினாலோ, அரசாங்க வேலையினாலோ கவரப்படவில்லை, நவாப்களிடம் இருந்து ஆங்கிலேயர்கள் ஆட்சியைப் பறித்துக் கொண்டது இவர்களைப் பாதிக்கவும் இல்லை, அரசியல் தலைமை மாறிவிட்டது என்ற அளவில் மட்டுமே இதனை எடுத்து கொணடனர். தமிழ் முஸ்லீம்கள் தங்களின் அரேபிய முன்னோர்கள் போன்றே வணிகத்துக்குப் பெரும் முக்கியத்துவம் அளித்தனர், கடல் வழி வணிகப் பாரம்பாரியம் கொண்ட இவர்கள் வணிகம் புரிவதில் பெருமிதமடைந்து வந்ததற்கு நபி பெருமானார் அவர்கள் வியாபாரத்தில் ஈடுபடுவதை உன்னதமான செயலாகக் கருதியதும் ஒரு காரணம்.

தாங்கள் பகுதி சார்ந்த சிறு துறைமுகங்களை வணிகத்துக்குப் பயன்படுத்தி வந்த தமிழ் முஸ்லீம் தொழில் சமூகம், மதராஸ் துறைமுகத்தில் இருந்து செயல்படுவதை விரும்பவில்லை, ஆங்கிலேயர்கள் அவ்வாறு செய்யத் தூண்டவும் இல்லை. ஆனால் 19 ஆம் நூற்றண்டில் தென் கோரமன்டல கடல் வழி வணிகத்தின் மீது தமிழ் முஸ்லீம்களான மரைக்காயர்கள், லெப்பை சமூகங்கள் தீவிர ஆதிக்கம் கொண்டிருந்த நிலை வரலாற்றில் தெளிவாகப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. தங்களின் பாரம்பரிய துறைமுகங்களின் மூலம் திரவியம் தேடி வந்த இவர்களை ஆங்கிலேய அரசு தங்களின் வர்த்தக வளர்ச்சிக்காக வர்த்தகத் தரகர்களாகவும், இடைத்தரகர்களாகவும்,பொது வணிகர்களாகவும் பயன்படுத்தி வந்தனர்.

இவர்களில் முக்கியமானோர், இராமநாதபுரம் கடற்பகுதி வணிகத்தில் கோலோச்சிய மண்டபம் மரைக்காயர் என்றழைக்கப்பட்ட கான் பகதூர் மண்டபம் பி.ஆர்.எம். காசிம் முகம்மது மரைக்காயர், காயல்பட்டினம் கான் பகத்தூர் ஷாஹுல் ஹமீது மரைக்காயர், தஞ்சாவூர் வி. ஹமீது சுல்தான் மரைக்காயர், நாகப்பட்டினம் சர் அகமது தம்பி மரைக்காயர் மற்றும் இவரது மகன் சர் அகமது தம்பி முகம்மது மரைக்காயர் போன்றோர்.

மண்டபம் பி.ஆர்.எம். காசிம் முகம்மது மரைக்காயரின் பரந்த வர்த்தக ஸ்தாபனத்தில் 30 க்கும் மேற்பட்ட பெரும் படகுகள் உபயோகத்தில் இருந்தது, அந்தப் படகுகளின் மூலம் சரக்குக் கையாடல்கள் தொடர்ந்து இராமநாதபுரம் கடற்பகுதிகளில் நடைபெற்று வந்தது, ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஆண்டு முழுவதும் பணியில் அமர்த்தப்பட்டிருந்தனர், அதுமட்டுமின்றி ஆங்கிலேயர்களின் பிரிட்டிஷ் இந்திய கப்பல் கம்பெனியின் முகவராகவும் மண்டபம் மரைக்காயர் செயல்பட்டு வந்தார். அந்த நேரம், ஆற்காடு இளவரசரின் அபிமானியான இராமநாதபுரம் ராஜா சேதுபதி தமது அரசியல் மற்றும் பொருளாதார நிலையில் ஸ்திரம் இல்லாத சூழலில், மரைக்காயர்களின் அயல் கடல் வணிகத்துக்கும், சங்கு குளிப்பு, முத்துச் சிலாபம் போன்ற கடல் சார் தொழில்களுக்கும் காப்பாளர்களாகப் பொதுவாக இருக்கும் நிலை ஏற்பட்டது.

காயல்பட்டினத்தைச் சார்ந்த தயாளக்குண சீலர் அஹ்மது நெய்னா மரைக்காயரின் மரியாதைக்குரிய குடும்பத்தைச் சேர்ந்தவர் கான் பகத்தூர் ஷாஹுல் ஹமீது மரைக்காயர், கால் நடைகளைக் கப்பலில் கொழும்புக்கு ஏற்றுமதி செய்யும் தொழில் ஈடுபட்டிருந்தார், இதே போல வி. ஹமீது சுல்தான் மரைக்காயர் தஞ்சாவூர் பகுதியில் மிகப்பெறும் வர்த்தகராகவும், நிலக்கிழாராகவும் திகழ்ந்து வந்தார், மேலும் இவர் பயணிகள் கப்பலின் முகவராகவும், துபாஷாகவும், ஒப்பந்ததாரராகவும் செயல்பட்டு வந்தார். அத்தோடு ஆங்கிலேயர்களின் பிரிட்டிஷ் இந்திய கப்பல் கம்பெனியின் முகவராகவும் இருந்து வந்தார்.

நாகப்பட்டினத்தில் பிரிட்டிஷ் இந்திய கப்பல் கம்பெனியின் முகவராகச் செயல்பட்டு வந்த சர் அகமது தம்பி மரைக்காயர், மதராஸை மையப்படுத்தி ஏற்றுமதி –இறக்குமதி தொழிலில் கோலோச்சி வந்தார், 1924 ஆம் ஆண்டு இவரின் மறைவுக்குப் பின் இவரது பொறுப்பை ஏற்ற இவரது மகன் மதராஸ் பட்டினத்துக்குத் தமது வர்த்தகத்தை மாற்றம் செய்து சென்றுவிட்டார்.

பெரும்பாலான மரைக்காயர் வர்த்தகச் சமூகத்தினர் தென் தமிழகத்தினை மையமிட்டே வியாபாரம் செய்து வந்தனர், தொன்றுதொட்டு தென் கிழக்கு ஆசிய நாடுகளில் அயல் வணிகம் செய்வதற்கே முக்கியத்துவம் கொடுத்து வந்த நெடிய வர்த்தகப் பிண்ணனி கொண்ட மரைக்காயர்கள் தங்களின் முன்னோர்களின் வர்த்தகப் பாரம்பரியத்தினைத் தொடரமுடியாமல் திணறும் நிலை வந்ததும், மாறிய பொருளாதார, சமூகச் சூழலுக்குள் தங்களை உட்படுத்த முயற்சி செய்தனர், இந்த நிலையில் அவர்கள் சென்ற நூற்றாண்டில் தங்கள் வசம் இருந்த அணைத்து வர்த்தகத்திலும் தங்கள் கட்டுப்பாட்டினை மெல்ல மெல்ல இழக்க நேர்ந்தது, பல முனைகளிலும் இருந்த வந்த தொழில் போட்டிகளை நேரிட வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டனர். – தொடரும்...

Pin It