மனித இனத்திற்கு எதிராகத் தான் செய்த பெருங்குற்றங்களை பஞ்சமாபாதகங்களை விரிவாகப் பதிவு செய்து சாணக்கியன் எழுதி வைத்த ஒப்புதல் வாக்குமூலம்தான் அர்த்த சாஸ்திரம் என்ற நூலாகும். இது குற்றவாளிகளை உருவாக்கும் பள்ளிகளில் பாடப்புத்தகமாகப் பயன்படுத்துவதற்காகச் சாணக்கியனால் எழுதப்பட்டது. இந்நூலில் செயல்முறை விளக்க வடிவில் டூ-இட்-யுவர்செல்ப் மேனுவல் சாணக்கியன் பதிவு செய்துள்ளார். வங்காளத்தில் பார்ப்பனர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பள்ளிகளில் முதல்பாடமாக இந்நூலை கற்பித்தார்கள் என்று டி.சி. சென் பிரட்டீஷ் பங்களா என்ற 1935 ல் தான் எழுதிய நூலில் பதிவு செய்துள்ளார். காலாகாலத்திற்கும் மாற்றாரை அடிமைகளாக்கி அவர்கள் மீது வல்லாதிக்கம் செய்து, அரசியல், சமூகம் மற்றும் பொருளியல் நிலைகளில் தனது வர்ணத்தைச் சேர்ந்தோர் மேல்தட்டில் இருக்கவேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக சாணக்கியன் பல்வேறு பயங்கரவாதச் செயல்களை செய்து தனது வம்சத்தாரும் தொடர்ந்து அவ்வாறு செய்துவருமாறு அறிவுறுத்திச் சென்றுள்ளார். எத்துதல், ஏமாத்துதல், பெருமளவில் விலைமாதரைக் கருவியாக பயன்படுத்துதல், அரசுத்துறைகளைப் பயன்படுத்தி தொல்லை தந்து வீழ்த்துதல், மனிதர்களையும் விலங்குகளையும் கூட்டங்கூட்டமாகக் கொல்லுதல் முதலானவை சாணக்கியன் கையில் எடுத்த ஆயுதங்களில் சிலவாகும். தனது தனிப்பட்ட வன்மத்திற்காக தனது அரசியல் நோக்கத்திற்காக பதவியில் உள்ள அரசாங்கத்தை வீழ்த்துவற்கு அந்நாட்டிலுள்ள ஒன்றுமறியாத பொதுமக்களை கூட்டங்கூட்டமாக கொன்று குவிப்பதும் அவர்தம் ஊர்களையே எரிப்பதுந்தான் முதலாவது கருவி என்று முதன்முதலில் கண்டுபிடித்து செயல்படுத்தியவர் சாணக்கியன். எவ்வித சந்தேகத்திற்கு இடமின்றி சாணக்கியன் உலக வரலாறு காட்டும் முதன்முதல் அரசியல் பயங்கரவாதி என்றால் மிகையாகாது.

                இந்தியாவின் முஸ்லிம் ஆட்சிக்காலம் என்ற தலைப்பில் வரலாறுகள் எழுதப்படுகிறது. 1857 ஆம் ஆண்டு நடைபெற்ற சிப்பாய்க்கலகத்தின் எழுச்சியின் விளைவாக ஆங்கிலேயர்கள் தங்களை முன்னிலைப்படுத்திக்கொள்ள வரலாற்றுகளை உருவாக்கினார்கள். இதில் ஸ்டேர்சி, ஜேம்ஸ்மில் என்ற ஆங்கிலேயர் வகுத்த சட்டத்தின்படி எழுதப்பட்டது. அதனை பின்தொடர்ந்து எல்விஸ்டன், சார்லஸ், டுவர்ட் டோர்ட், வின்சென்ட் ஸ்மித், ராபர்ட் போன்றோரும் இந்திய வரலாற்றை எழுதினர். அதன்பின்னர் பல ஆண்டுகள் கழித்து 1921 ஆம் ஆண்டு முகலாயப் பேரரசின் வீழ்ச்சி என்ற தலைப்பில் கெநாத் சர்க்கார் என்பவர் நான்கு தொகுதிகளை வெளியிட்டார். அதன்பின்னர் பாரதிய வித்யாபவனின் ஆதரவுடன் வெளிவந்த ஆர்.சி.மஜூம்தாரின் இந்திய வரலாற்றுத் தொகுதிகள் வகுப்புவாத உணர்வை வளர்ப்பதில் தம் பங்கை ஆற்றியது.

                பெரும்பாலும் இந்நூல்களை அடிப்படையாகக்கொண்டே பாடநூல்கள் எழுதப்படுவதால் ஆங்கிலேயர் உருவாக்கிய வழித்தடத்திலேயே நம் மாணவர்கள் பயிலுகின்றனர். விளைவு வரலாற்றுச்செய்திகளை திரிப்பது, மறைப்பது, ஒரு சமூகத்தின் பங்களிப்பை புறக்கணிப்பது போன்ற வெறுப்புணர்வை உருவாக்கினார்கள்.

                பரந்த இந்தியாவை பல வம்சங்கள் ஆண்டிருக்கின்றன. இந்தியாவின் எல்லைகளாக வங்காளதேசம்-1905 ஆம் ஆண்டிலும், 1919 ஆம் ஆண்டில் உபகனிஸ்தான் தற்போதைய ஆப்கானிஸ்தான், 1937 ஆம் ஆண்டு பர்மாவும், 1947 ஆம் ஆண்டு பாகிஸ்தானும், 1948 ஆம் ஆண்டு ஸ்ரீலங்காவும், 1948 ஆம்ஆண்டு ஜம்மு-காஷ்மீரும், 1962 ஆம் ஆண்டு கைலாஷ்மலை தற்பொழுது சீனாவிடம் பிரிக்கப்பட்டது.

                RajarajaChola 196இந்தியாவை குப்தர்கள், மௌரியர்கள், மகதர்கள், ஹர்சர்கள், பல்லவர்கள், சாளுக்கியர்கள், குஷாணர்கள், ஹ_ணர்கள், களப்பிரர், இடைக்காடர்கள். நாயக்கர்கள், நவாப்கள், முகலாயர்கள், ஜமீன்கள் ஆகியோர் நிலவுடைமைச் சமூக அமைப்பில் அனைத்து அதிகாரங்களையும் ஒரு சேரப் பெற்று மன்னன் என்ற பெயரில் அனைத்து அதிகாரத்தையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். இவர்களுடைய குறிக்கோள் அடித்தள மக்களை ஒடுக்குவதிலும் தங்கள் குடும்பம் ஆடம்பரமாக வாழ்வதிலும் காலத்தை கழித்தனர். இதனால் பெண்கள் மீது பாலியல் வன்முறை, கொலை, கொள்ளை ஆகியவற்றை நடத்தினார்கள். இவர்களுக்கு மதமோ, சாதியோ தடையாக இருந்ததில்லை. ஒவ்வொரு கிராமங்களிலும் கன்னிமார் வழிபாடு நடைபெறும்.இதற்கு காரணம் அல்லது செவிவழிச்செய்தி ஒன்றை இன்றளவும் கிராமப்பகுதிகளில் கூறுவார்கள். மன்னன் தங்களுiடைய குலப்பெண்ணை சிரைமீட்டான் அல்லது தங்களுடைய குலப்பெண்ணை சீரழித்துவிடுவான் எனக்கருதி சோளக்குழி, பாழுங்கிணற்றில் சீவி சிங்காரித்து கொலை செய்துவிடுவார்கள். அதன்பின்னர் அந்தப்பெண் தெய்வமாக வழிபடப்படுகிறாள்.

                வகுப்பு வாதத்தை விதைக்கப்படும் நோக்கோடு ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சார்ந்த குருகோல்வால்கர் தான் எழுதிய நூலில் (1991:128) பகுதியில், ஒரு பாவமும் அறியாத கோடிக்கணக்கான மக்களின் இரத்தத்தின் மீதும், கண்ணீரின் மீதும் வாளும் கொரானும் எழுதிய நீண்ட வரலாறு தான் இஸ்லாத்தின் வரலாறு என்று குறிப்பிட்டுள்ளார்.

                இவ்வாறான திரிபுகள் ஊடகங்கள், பாடநூல்கள், வரலாற்று நூல்கள், படைப்பிலக்கியம் ஆகியனவற்றின் வாயிலாக மக்கள் உள்ளத்தில் பதியவைக்கப்படுகின்றன. இந்தியாவை ஆண்ட மன்னர்களில் வேத சமயம், சமணம், பௌத்தம், சைவம், வைணவம், கிறிஸ்தவம், இஸ்லாம் எனப் பல்வேறு சமயங்களைச் சார்ந்தவர்கள் உண்டு. ஆனால் இஸ்லாமிய மன்னர்களை மட்டுமே மத அடிப்படையில் தனியாகப் பிரித்து எடுத்து அவர்களின் தனிப்பட்ட செயல்பாடுகளுக்கு சமய வர்ணம் பூசப்படுகிறது. இதன் மூலம் ஒரு முஸ்லிம் மன்னர் செய்த கொள்ளை சம்பவத்திற்கு ஒட்டுமொத்த முஸ்லிம்களும் பலிகடா ஆக்கப்படுகின்றனர்.

                வரலாற்றுப்பாடப்புத்தகங்களில் கொள்ளையடித்த மன்னர்களில் கஜினிமுகமது, கோரிமுகமது, மாலிக்கபூர் ஆகியவர்களின் பெயர்கள் நினைவு படுத்திக்கொண்டே இருப்பார்கள். கஜினிமுகமதுவின் தாக்குதலுக்கு அடிக்கடி ஆளான நகரம் மதுரா என்ற நகராகும். இந்நகரை தேவரின் நகரம் என்றும் (தி சிட்டி ஆப் காட்) 0 கி-27 டிகிரி 30 வடக்கு மேலும் மகாபாரத போர் நடந்த ஆண்டு வெள்ளிக்கிழமை கி.மு.22.11.3067 என்றும் கி.மு.27.3.3112 என்றும் ஆதாரங்களுடன் பேராசிரியர் கே.சீனிவாச ராகவன் மகாபாரத யுத்தகாலமும் கலியுக தோற்றமும் பக்கம் 31-ல் குறிப்பிட்டுள்ளார். இந்நகரை கி.பி.1014 ல் தானேஸ்வரம் எனப்படும் ஸ்தானேஸ்வரத்தை வென்று கி.பி.1015-1016 ல் மதுராவில் உள்ள கோயில்களை அழித்தார். சோமநாதபுரம் ஆலயம் கி.பி.1026-ல் தரைமட்டமாக்கப்பட்டது என வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே மதுரா நகரை முதலாம் இராஜேந்திரனும் தன்னுடைய வடஇந்திய படையெடுப்பின்போது அந்கரை கைப்பற்றினான். இது குறித்து கே.கே.பிள்ளை (1981:278-279) பின்வருமாறு கூறுகிறார்

                அந்நகர் அக்காலத்தில் செல்வமும் புகழும் பொதிந்து காணப்பட்டதால் அந்நகரின் மேல் கஜினிமுகமது பன்முறை தாக்குதல் தொடுத்தான். பன்முறை அதிக கொள்ளையிட்டான். வட மதுரையை இராஜேந்திரனும் வென்று கைப்பற்றினான். இவ்விரு மன்னர்களின் போர்களுக்கிடையே ஒரு தொடர்பு காண விழைவதில் வழுவேதுமில்லை.

                தனது இலங்கைப் படையெடுப்பின்போது இலங்கைக்கு இராஜேந்திரன் நெருப்பூட்டியதை திருவாலங்காட்டுச் செப்பேடுகள் குறிப்பிடுகின்றன.

திரிக்கப்படும் திருவரங்கம் கோயில் வரலாறு

                திருச்சியில் உள்ள திருவரங்கம் திருக்கோயில் வரலாறு என்று தலைப்பிட்டு இந்து சமய அறநிலைத்துறையினரால் ரூ.20 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்நூல் வெளியிட்ட ஆண்டு 2011 வருடம் ஆகும்.அந்நூலில் கோயில் வரலாற்றையும், ஸ்தல புராணம் போன்றவற்றை மட்டுமே எழுதியிருக்கவேண்டும். அதனை விடுத்து இஸ்லாமிய மன்னர்களால் கோயில் கொள்ளையிடப்பட்டதாகவும், முஸ்லிம் மன்னர்களால் கோபுரத்தில் இருந்து தேவதாசி வெள்ளையம்மாள் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது. அதனைக்கண்டு அதிர்ந்து போனேன். கோவில் கோபுரத்தில் இருந்து தற்கொலை செய்து கொண்டவர்களை பட்டியலிட்டால் தங்கள் உரிமைப் பிரச்சினை, தங்களுக்கு விதிக்கப்பட்ட வரியின் கொடுமை, சைவ-வைணவ ஆதிக்கம் என பல உண்டு. அதனை விடுத்து வரலாற்றை தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்து சமய அறநிலைத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது வேதனைக்குரியது மட்டுமல்ல. இந்து-முஸ்லிம்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும் உள்நோக்கோடு வெளியிடப்பட்டுள்ளது.

அந்நூலில் உள்ள சில வரிகள்

                1.கர்நாடகா நவாப் ஆகிய சாந்தா சாகிப் என்பவருடன் சேர்ந்து, ஆங்கிலேயர்களையும் அவர்களின் படைத் துணைவர்களையும் கி.பி.1749 ஆம் ஆண்டில் டியூப்ளே தோற்கடித்தார். 1750-ல் டியூப்ளே தென்னிந்திய நவாப் ஆனார். ஆயினும் அவருடைய அதிகாரம் சிறிது காலம் மட்டுமே இருந்தது. இராபர்ட் கிளைவ் என்பவரால் தூண்டிச் செயற்படுத்தப்பட்டு ஆங்கிலேயர் சந்தா சாகிபினிடமிருந்த ஆற்காட்டு நகரத்தை முற்றுகையிட்டு கைப்பற்றினர். (பக்கம்8)

                2.கி.பி.1311 ஆம் ஆண்டு மாலிக்கபூர் என்னும் முஸ்லிம் தலைவன் மதுரையை கைப்பற்றிக்கொண்டான். பாண்டியர் மரபு வீழ்ச்சி அடைந்தது, இதனால் கருநாடகத்தில் ஏற்பட்ட கலகமும், குழப்பமும் காரணமாகத் திருவரங்கம் கோயில் முஸ்லிம்களின் கைக்குள் சிக்கியது. மாலிக்கபூர் கி.பி.1311 ஆம் ஆண்டில் ஒரு மின்னல் வேக தாக்குதல் புரிந்தான். இக்கோயிலை கொள்ளையிட்டான். இங்கு இருந்த கடவுள் சிலைகளையும் மற்றும் பல அழகிய கலைப்பொருட்களையும் டெல்லிக்கு கவர்ந்து சென்றான்.

                3).கி.பி.1323 ஆம் ஆண்டு முகமது பின் துக்ளக் என்பவன். இதன் சுற்றுப்பகுதியின் மீது படையெடுத்தான். (பக்கம் 13. 4வ பாரா)

                4)இக்கோயிலில் உள்ள பொருள்களைக் கவர்ந்து கொள்ளுவதில் மிகுந்த ஆர்வமுடையவனாக இருந்ததுடன், கொடுமை புரிவதிலும் இணையற்றவனாக விளங்கினான். அவன் மதுரையைக் கைப்பற்றித் தனது தலைநகராக்கிக் கொண்டான். திருவரங்கம் கோயிலில் முஸ்லீம்கள் குடியேறி, அதனை தாம் தங்கும் படைவீடாக மாற்றி அமைத்துக்கொண்டனர். (பக்கம் 18, 1வது பாரா)

                5)மராட்டியர், பிரெஞ்சுக்காரர் ஆகியோர் உதவிகளுடன் கி.பி.1781 ஆம் ஆண்டு மீண்டும் ஐதர் அலியால் இக்கோயில் தாக்கப்பெற்றது. ஆறு நாட்களுக்கு மட்டுமே அவரது முற்றுகை நீடித்தது. 1790 ஆம் ஆண்டு அவரது புதல்வராகிய திப்புசுல்தான் இக்கோயிலின் மீது படையெடுத்தார். ஆயினும் இப்பகுதி முழுவதும் முஸ்லிம் ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. அவர்கள் அதிகாரத்தை செலுத்துவதற்குரிய உரிமையினை வலியுறுத்தினர். அது இக்கோயிலுக்கு தொல்லைகளை விளைவித்தது.(பக்கம்-21, பாரா 3)

                6.இரண்டாம் பிரகாரமாகிய குலசேகரன் திருவீதியை அடைவதற்குத் தெற்கேயுள்ள ஆரியபடாள் கோபுர வழியாக செல்லுதல் வேண்டும். அது பதினான்காம் நூற்றாண்டில் முஸ்லிம் படையெடுப்பால் எரிந்து அழிக்கப்பெற்றது. (பக்கம் -30)

                7.கொடிக்கம்பம் முதன்முதல் சுந்தரபாண்டி மன்னரால் (கி.பி.1251-1268) நிறுவப்பெற்றது. அது முஸ்லிம்களால் அழிக்கப்பெற்றது. (பக்கம்-30-பாரா2)

                8.முஸ்லிம்களின் உட்புகவுக்கு முன்னர் சமய நிறுவனங்களின் வரிசைப்புறத்தில் கோயிலுக்கு உள்ளே ஒரு மருத்துவமனை நிறுவப்பெற்றிருந்தது. அதன் நடைமுறையில் ஒரு கிராமம் தானமாக வழங்கப் பெற்றது. அவ்வறக்கட்டளையின் மூலம் அம்மருத்துவமனை சிறப்புற நடைபெற்ற செய்தி கல்லெழுத்துக்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இடையில் முஸ்லீம் படையெடுப்பால் இம்மருத்துவமனை நலிவுற்றது(பக்கம் 55.பாரா-2.

                9.இக்கோயில் நிர்வாகம் முஸ்லிம் ஆளுநர்களின் ஆணைக்கு அடங்கி உட்பட்டே நடைபெற்று வந்தது. கோயிலின் சடங்கு நெறிமுறைகள் இதனால் வௌவேறு வகையான மாறுதல்களை அடைந்தன என்பதனை கோயில்ஒழுகு விவரித்துள்ளது. உதாரணமாக முஸ்லிம்களின் காலத்திலிருந்து கடவுள் திருவுருவங்களுக்கு அபிசேகம் செய்யப்படும்போது, முஸ்லிம்கள் அணிகின்ற கைலி என்னும் ஒரு வகைத் துணி சாத்தப்பெற்றது. சுவாமிக்கு உணவாக சப்பாத்தி, வெண்ணெய், தயிர் ஆகியவவை ஈரத்துணியால் வைத்து திவேதிக்கப்பெற்றன. தாம்பூலத்தில் இந்துக்களின் வழக்கப்படி பின்புறத்தில் தடவப்பெறுவதற்கு பதிலாக, உட்புறத்தில் சுன்னம் தடவப்பெற்றது.(பக்கம் 56-முதல் பாரா)

                10.முஸ்லிம்கள் கோயிலுக்குரிய பல கிராமங்களைப் பறிமுதல் செய்தனர். பல நிலபுலன்களை கைப்பற்றிக்கொண்டனர். எஞ்சிய சிலவற்றை ஓரளவு நியாயமும், கணிசமுமான இழப்பீட்டுத் தொகை அளித்து கோயில்களுக்கு விடுத்தனர். (பக்கம் 57-பாரா-2)

இவற்றிற்கு ஆதாரமாக கோயிலொழுகு என்ற நூலை காட்டியுள்ளார்கள்.

கோயில் ஒழுகு என்றால் என்ன?

                கோயிலொழுகு என்னும் நூல், கோயில் என்று ஸ்ரீ வைஷ்ணவர்கள் அனைவராலும் போற்றப்படும் ஸ்ரீரங்கம் கோயில் வரலாற்றை, இதிகாச புராண காலத்திலிருந்து 18-ம் நூற்றாண்டின் இறுதிவரை கூறுவதாகும். ஸ்ரீரங்கம் கோயில் அதிகாரிகளால் செவி வழிச்செய்திகளையும் கல்வெட்டுக்களையும் கொண்டு தொகுக்கப்பட்ட உருவான நூல் என ஸ்ரீ வைஷ்ணவ சுதர்சனம் ஆசிரியரும் பன்னூல்களைத்தந்தவருமான எஸ்.கிருஷ்ணஸ்மாமி அய்யங்கார் கூறுகிறார்.

                இந்நூலில் பலவித குழப்பங்கள் உள்ளது என மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் திருவாய்மொழிப் பேருரையாளர் நம்பிள்ளை உரைத்திறனை ஆராய்ந்து டாக்டர் பட்டம் பெற்றவர் இரா. அரங்கராஜன். அவர் கோயிலொழுகு பற்றிக்கூறுகையில். கி.பி.1311 மற்றும் 1323 ம் ஆண்டுகளில் நிகழ்ந்த முகம்மதிய படையெடுப்புகளைக் கோயிலொழுகு மிகவும் உருக்கமான உணர்வோடு விரித்துக்கொள்கிறது. இதில் பல சம்பவங்கள் கால மாறுபாடுகள் ஏற்பட்டுக் குழப்பத்தையும் தருகின்றன என்று தெளிவாகத் தெரிவித்துள்ளார். (மாலிக்கபூர் ஒரு மாவீரனின் மறுபக்கம்-விகடன் பிரசுரம்-செ.திவான்-பக்கம் 27 -2வது பாரா)

ஸ்ரீரங்கம் அரசியல் சூழ்நிலை

                கி.பி.1486 ஆம் ஆண்டு விஜயநகரப் பேரரசில் சங்கம குலம் அழிந்து சாளுவ குலம் உருவாகியது. சங்கம குல மன்னர்களைப் பேரரசராக ஏற்றுக்கொண்டு மணடலீகராய் பொறுப்பேற்று இருந்த கோனேரிராயன், தனக்குச் சமமான பதவியில் இருந்தவரான நரச நாயக்கனையோ, இம்மடி நரசிம்மனையோ பேரரசராக ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே கி.பி.1486 லிருந்து 1491 வரை கோனேரிராயன் தனி அரசு கண்டான். இதனால் விஜயநகர அரசுகளுக்கும் கோனேரிராயனுக்கும் பகைமை மூண்டது.

                கி.பி.1486 ஆம் ஆண்டு விஜயநகரப் பேரரசில் அரசராக முடி ச+ட்டிக்கொண்டவர் சாளுவ நரசிம்மராயன். அவரது உடன் பிறந்தவர் ராமானுஜர். இவர் ஸ்தல சாத்திரம் படித்து விரக்கிதியுற்றார். அயோத்திக்கு தீர்த்த யாத்திரை சென்றார். துறவறம் பூண்டார். அயோத்தியிலிருந்து மீண்டும் கநகரிக்கு வந்தார். தம் தம்பியமான விஜயநகரப் பேரரசரன் சாளுவ நரசிம்மராயரை கண்டு, தான் 108 வைணவத் திருப்பதிகளுக்கும் அரச முத்திரையோடு செல்ல, இராயசாசனமும் நிருபமும் வாங்கிக்கொண்டார்.

                கி.பி.1489 ஆம் ஆண்டு விஜயநகரப் பேரரசனின் அண்ணனான ராமராஜா எனும் வைணவ அடியார் திருவரங்கம் வந்hர். கந்தாடையண்ணன் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினார். ஏகாங்கி வேசம் தரித்தார். கந்தாரை ராமானுஜதாசல் என்ற தாஸ்ய நாமம் ச+ட்டிக்கொண்டார். ஸ்ரீரங்கத்து வைணவ ஏகாங்கிகளுக்குத் தலைவராகத் திகழ்ந்தார்.

                சாளுவ குல மன்னனின் அண்ணான கந்தாடை ராமனுஜதாசர் தன் தம்பியின் எதிரியான கேனேரிராயனின் நாட்டில் அரசியல் குழப்பம் ஏற்பட சமயப் போர்வையில் முயன்றார். அதுபோல தான் மதியாத அண்ணனின் கந்தாடை ராமனுஜதாசர் சமயப் போர்வையில் தன் நாட்டில் இருந்து கொண்டு சமய நடவடிக்கைகளில் ஈடுபடுவது கோனேரிராயனுக்குப் பிடிக்கவில்லை.

கோபுரத் தற்கொலைகள்

                தனது ஆட்சிப் பொறுப்பின் கீழ் இருக்கும் ஸ்ரீரங்கம் கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை கோனேரி ராஜா தனக்கு வேண்டியவர்களான கோடடை சாமந்தனார் மற்றும் சென்றப்ப நாயக்கர் ஆகியோருக்கு குத்தகைக்கு விட்டார்.

                புரவரி, காணிக்கை வரி, பட்டுவரி, பரிட்ட வரி போன்ற வரிகளை விதித்து ஸ்ரீரங்கம் கோயில் ஸ்ரீ பண்டாரத்தில் சேர்த்து வைக்கப்பட்டிருந்த உயர்ந்த திருவாபரணங்களையும் பொற்காசுகளையும் கவர்ந்து சென்றார். இவ்வாறு பல சம்பவங்கள் தொடர்ந்தன. இறுதியில் கந்தாடை ராமானுதாசரின் தூண்டுதலின் பேரில் கோனேரிராயனது செயல்களைக் கண்டித்து கி.பி.1489 தமிழ் சௌமிய ஆண்டு தைமாதம் ஸ்ரீரங்கம் தெற்கு கோபுரத்திலிருந்து, அப்பாவய்யங்கார், பெரியாழ்வார் மற்றும் இரண்டு ஜியர்களும் கீழே விழுந்து உயிர்த் தியாகம் செய்தனர்.

                ஸ்ரீரங்கம் கோயிலில் சிலைகளாக நிற்றும் அப்பாவய்யங்கார், பெரியாழ்வார் மற்றும் ஜீயர்கள் இருவரின் உயிர்த்தியாகத்துக்குப் பிறகு, கந்தாடை ராமானுஜதாசரின் வேண்டுகோளுக்கு இணங்க நரசநாயக்கன் தன் பெரும் படையுடன் போரிட்டு கோனேரி ராயனை கி.பி.1496 ல் வென்றார்.

திருப்பரங்கன்றம் கோபுரச்சாவுகள்

                மதுரை அருகே உள்ள திருப்பரங்குன்றத்தில் கி.பி.1793 ல் ஸ்ரீ கோபால ராயரவர்கள் திவானாக இருந்த காலத்தில் கர்னல் பேயர்டு தனது 700 படை வீரர்களோடு திருப்பரங்குன்றத்தில் வந்து தங்கினார். படைவீரர்கள் தங்குவதற்கு 40 சத்திரங்கள் ஒதுக்கப்பட்டன. நோயுற்று இருந்த படைவீரர்களைக் கோயிலுக்குள் தங்கவைத்துக்கத் திட்டமிட்டார் கர்னல் பேயர்டு. இதனை அந்தப்பகுதியைச் சேர்ந்தவர்கள் எதிர்த்தனர்.

                சுந்தர பட்டர், தெய்வேந்திர பட்டர், குட்டிப் பட்டர், சிதம்பர பிள்ளை, விழுப்பாதராயர், ஆறுநிருபாகக்காரர், நாட்டாண்மை, முத்துக்கருப்ப பிள்ளை, காவல் ஆறுகரைப் பேர் உள்ளிட்டோர் கூடி, வயிராவி முத்துக்கருப்பன் என்பவருடைய மகன் குட்டியைக் கோபுரத்தில் ஏறிக் கீழே விழச் செய்தனர். அவருக்கு ரத்தக் காணிக்கையாக நிலம் கொடுக்கப்பட்டது.

                எல்லப்ப முதலியின் மகன் அண்டராபரண முதலி என்பவர் கோயிலுக்கு விடப்பட்ட நிலத்தில் ஏற்பட்ட முறைகேடுகளை களைந்து உரிமைகளை நிறுவதற்காக திருப்பரங்குன்றம் கோயிலில் கோபுரத்திலிருந்து தன் உயிரை மாய்த்துக் கொண்டார்.

மதுரை மீனாட்சி அம்மன்கோயில்

                மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் உள்ள கோபுரத்தில் ஏறி ஊழியர் ஒருவர் உயிர்விட்ட சம்பவம் கி.பி.1760 ஆம் ஆண்டு நிகழ்ந்துள்ளது. சர்வமான்யமாகக் கோயிலுக்கு விடப்பட்ட நிலத்திற்கு விஜயரங்க சொக்கநாதர் ஆட்சியில் வரி விதிக்கப்பட்ட போது ஊழியர் உயிர்விட்டுள்ளார். இது ஒரு கல்வெட்டாக கோயிலில் வெட்டப்பட்டுள்ளது.

அரகண்டநல்லூர்

                திருக்கோயிலூர் அருகேயுள்ள அரகண்டநல்லூரில் உள்ள ஒப்பிலாமணி ஈச்சுவரர் கோயில் மண்டபம் ஒன்று கட்டுவதில் பிரச்சினை ஏதோ ஏற்பட்டு நீண்ட நாள் ஆனதால் அவ்வூரைச் சேர்ந்த தேவரடியார் மகன் தன் தலையைக் காணிக்கையாகத் தருவதாக வேண்டி திருப்பணி முடிந்தபின் தலைப்பலி தந்துள்ளான்.

ஸ்ரீவில்லிபுத்தூர் 

                சாந்தாசாகிப்பின் படைத்தலைவர்களில் நோபிகான் என்பவன் கி.பி.1768 ஆம் ஆண்டு ஆற்காட்டு நவாப்பு மற்றும் ஆங்கிலேயர்களால் திருவில்லிபுத்தூர் கோட்டையில் தோற்கடிக்கப்பட்டான். கோட்டையைக் ஒக, திருக்கண்ணபுரம், திருக்கண்ணங்குடி, திருக்கண்ணமங்கை, திருச்சிறு புலிய+ர் ஆகியவை ஆகும். இதில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருக்கண்ணபுரத்தில் வைணவ ஆலயம் உள்ளது. அங்கு இன்றுள்ள மதிலைத் தவிர ஏனைய மதில்களும் கோபுரங்களும் சோழ மன்னன் ஒருவனால் அழிக்கப்பட்டதாகவும், அப்போது அந்த ஊரில் வசிந்து வந்த பக்தரான திருக்கண்ணபுரத்து அரையர், கர்ப்பிணியான தன் மனைவியுடன் நின்று அந்த அழிவைத் தடுக்க முற்பட்டதாகவும், அதற்குப் பின்பு கோபுரத்தின் மீதேறி உயிர் துறந்ததாகவும் பிள்ளை லோகம் திருவேங்கடாசாரியார் வைகுந்தம் கொடுக்கும் வள்ளல் என்ற கட்டுரையில் பதிவு செய்துள்ளார்.

வெள்ளை கோபுரம்

                ஸ்ரீரங்கம் முஸ்லிம்களின் ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது தேவதாசி ஒருத்தி, எந்த உபாயத்தைப் பின்பற்றியேறும் முஸ்லிம் வீரர்களை இங்கிருந்து அகற்றிடவேண்டும் என்று விரும்பி தன்னை நன்கு அலங்கரித்துக்கொண்டு அங்குள்ள படைவீரர்களின் தலைவனைச் சந்தித்து மோக வலை விரித்தாள். படைத்தலைவனும் அதில் மயங்கினார். காதல் மயக்கத்தில் அவர் இருந்தபோது அவரை கோபுரத்தின் உயரத்துக்கு அழைத்துச் சென்று கோபுரத்தின் உயரத்திலிருந்து அவன் எட்டிப் பார்த்தபோது அவனை அங்கிருந்து கீழே தள்ளிக் கொன்றாள். பிறகு தானும் அந்தக் கோபுரத்திலிருந்து விழுந்தாள். உயிர்பிரியும் வேளையில் தேவதாசிகள் யாரேனும் மரணம் அடையும் போது திருமடைப் பள்ளியிலிருந்து நெருப்பும், திருக்கொட்டாரத்திலிருந்து அமுதுபடி, தீர்த்தம், திருமலை, திருப்பரியட்டம் ஆகியவற்றைக் கொடுத்தனுப்ப வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டாள்.

                அந்த தாசியின் பெயர் வெள்ளையம்மாள். அவள் அந்தக் கோபுரத்திலிருந்து கீழே விழுந்ததன் நினைவாக கிழக்கு கோபுரத்திற்கு வெள்ளை கோபுரம் என்று இன்று வரை அழைக்கின்றனர்.

மறைக்கப்பட்ட வரலாறு - ஸ்ரீரங்கத்தில் நவாபு செய்த பைசல்

                ஸ்ரீரங்கம் கோயிலில் நீண்ட நாள் தீர்த்தம் மரியாதை பற்றி ஒரு வழக்கு கந்தாடை அண்ணங்கார் வரதாச்சாரியார் ரெங்காச்சாரியார் இருவரிடையே நிலவி வந்தது. இவ்வழக்கு ஆற்காட்டு மன்னர் அசரத்து நவாபு சாயபு அவர்களிடம் சென்றது. அவர் நேரில் வந்து விசாரித்து தீர்ப்பு அளித்த விபரம் ஒரு ஆவணமாக எழுதப்பட்டுள்ளது. அதன் மூல நகல் தமிழ்நாடு அரசு கீழ்த்திசை சுவடிச் சாலையில் உள்ளது. அதன் எண் டி.3891 ஆகும்.

ஆவணச்செய்தி

                திருவரங்கம் வைணவர்களுக்குக் கோயில் என்று அன்றும் இன்றும் அழைக்கப்படுகிறது. அத்திருவரங்கத்தில் உள்ள கந்தாடை அண்ணங்கார் வரதாச்சாரியார் என்பவர் 1797 ஆம் ஆண்டு ஆர்க்காடு மன்னர் அசரத் நவாபு சாயபு அவர்களிடம் பிராது ஒன்றைக் கொடுத்தார். 10 தலைமுறை 120 ஆண்டுகளுக்கு முன்னிருந்த மதுரை நாயக்க மன்னர் சொக்கநாத நாயக்கர் காலத்திலிருந்து (1656-1682) தம் தம் பரம்பரை உரிமையை ரெங்காச்சாரியார் பரம்பரை அனுபவித்துக் கொண்டு வருவதாகவும், அதை தமக்கு மீட்டுத் தருமாறும் கந்தாடை அண்ணங்கார் வரதாச்சாரியார் கேட்டிருந்தார்.

                கந்தாடை குடும்பம் திருவரங்கத்தில் புகழ் வாய்ந்த பழைய குடும்பம். அவர்கள் பெயரில் திருவரங்கத்தில் கந்தாடை அண்ணன் அப்பன் திருமாளிகை என்ற பெயரில் மண்டபம் ஒன்று உள்ளது. அரங்கநாதர் நாள்தோறும் எழுந்தருளும்போது வைஷ்ணவர்களுக்கு அங்கு அன்னதானமிட பெரிய கோனம்மாள் என்பவர் 2.1.1535 அன்று 800 பொன் கொடையாக அளித்துள்ளார். அவர்கள் பரம்பரையில் கந்தாடை மாதவய்யங்கார் என்பவர் திருவரங்கம் கல்வெட்டில் குறிக்கப்பெறுகிறார்.

                ஒரு நாள் நவாபு சாயபு அவர்கள் திருவரங்கம் வந்து இந்த வழக்கை விசாரித்தார். விசாரணையின்போது வழக்காளிகள் இருவரும் இருந்தனர். மற்றும் திருவரங்கம் கோயில் தொடர்பான பன்னிரெண்டு பேரை நவாபு நேரில் அழைத்திருந்தார். மக்கள் நீதிமன்றம் போல அந்த அவை காணப்பட்டது. 1.ஸ்ரீரங்காத ஜீயர் 2.வேதவியாசபட்டர் 3.தானம் அண்ணுவய்யங்கார். 4.அமுல் சுப்பராயர் 5.பாரிசு சிராஸ்தார் வெங்கிட்டராயர் 6.கானு கோயில் சீனிவாசராயர் 7.கசானா வெங்கிட்டராயர் 8.கானு சமாளி பெடிகார் ரெட்டியார் 9.சிரஸ்தார் நாராயணய்யர் 10.சிரஸ்தார் குருநாதபிள்ளை 11.வீர ராகவ சோசி 12. சுப்பிரமணிய சோசி ஆகியோரும் தலத்தாரும் சிலர் இருந்தனர்.

                தீர விசாரித்து நவாபு அவர்கள் பின்வருமாறு தீர்ப்பளித்தார். அதனை அட்டவணை குமாரசாமி முதலியார் ஓலையில் எழுதினார்.

                நவாபு சாயபு அவர்கள் சகலமான பேர்களிடத்திலும் தயவு பண்ணுகிறபடியினாலே தயா விசயமாய் ராசா நாள் முதல் ரெங்காச்சாரியாருக்குத் தீர்த்தமானபடியினாலே வேறே பேச்சுச் சொல்லாமல் உத்தரவு பண்ணினார். என்னவென்றால் இருவருக்கும் தீர்த்த மரியாதை பேருக்குப் பாதியாய் ஒரு மாதத்துக்கு 15 நாள் அண்ணங்காருக்கும் 15 நாள் ரெங்காச்சாரியாருக்கும் திட்டம் பண்ணினார்கள்.

                இதனாலே முசுத்திகள் தலத்தார் முதலானபேரும் வழக்காளி இருவரும் சம்மதியில் திட்டம் பண்ணினார்கள்.

                அரசர் உத்திரவுப்படி வழக்காளி இருவரும் தீர்த்தம் மரியாதை கோவிலிலேயெ நடக்க ருசுவும் மிராசு இதுகள் பேர் பாதியாய் அனுபவிச்சுக் கொண்டு எண்ணெய்க்கும் செச்சறைப் படாமல் அனுபவிச்சுக் கொண்டு தம்முடைய காரியத்திலே இருக்கவும். ஒரு வேளையிலே இவர்களில் ஒருத்தர் இந்தத் தீர்ப்புக்கு சகித்தை பண்ணினார் சருக்காருக்கு நெர்த்தராய் மிராசம் விட்டு சர்க்கார் ஆக்கினைக்கும் உட்பட்டவராவர்.

                தமிழக வைணவ வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய இத்தீர்ப்பின் மூல ஓலையில் தொடர்புடையவர்கள் கையெழுத்துக்கள் உள்ளன. ஆதாரம்:தமிழக அரசின் கீழ்த்திசை சுவடி நூலகம் எண்.டி.3891

                இவ்வாறு ஆதிக்கத்தை நிலைநாட்டவும் பொருளைக் கவரவும் மன்னர்கள் நிகழ்த்தும் போர்களில் அறநெறிகள் பார்க்கப்படுவதில்லை என்பதே வரலாற்று உண்மை. சோழமன்னர்களின் இலங்கைப் படையெடுப்பு குறித்து ஜார்ஜ் ஸ்பென்சர் என்பவர் தாம் எழுதிய கட்டுரைக்கு அரசியல் கொள்ளை-பதினோராவது நூற்றாண்டு இலங்கையின் சோழர்கள் என்ற தலைப்பில் பின்வருமாறு எழுதியுள்ளார்.

                சோழ மன்னர்களின் இலங்கை படையெடுப்பை வீரச்செயல் என்று தமிழர்கள் கருதினால் சோழ மன்னர்கள் நிகழ்த்திய கொள்ளையென்று அதைச் சிங்களவர்கள் கருதுவர். அதே நேரத்தில் இலங்கையில் வாழும் இன்றைய பௌத்தர்கள், சோழர்களின் படையெடுப்பை, தமிழ்நாட்டு சைவர்களின் படையெடுப்பு என்று சமய வண்ணம் பூசி, இன்றைய இலங்கைத் தமிழ்ச் சைவர்களை வெறுப்புடன் நோக்கினால் அது எந்த அளவு தவறானதோ, அந்த அளவு தவறானது கஜினி முகமது, கோரி முகமது ஆகியோரின் படையெடுப்பை இஸ்லாமிய படையெடுப்பு என்று கருதுவதும், அப்படையெடுப்பாளர்களின் வாரிசாக இன்றைய இஸ்லாமியர்களை நோக்குவதும், படையெடுப்பு என்ற பெயரால் கொள்ளையடிக்கும் மன்னர்கள் ஏதாவது ஒரு மதத்தைச் சார்ந்துதான் இருப்பார்கள். இது இயற்கையானது இதற்கு இஸ்லாமிய சமயம் சார்ந்த படையெடுப்பாளர்களும் விதிவிலக்கல்ல என்பது வரலாறு காட்டும் உண்மையாகும்.

ஆதார நூல்கள்

1.திருவரங்கம் திருக்கோயில் வரலாறு-வெளியிட்ட ஆண்டு 2011-வெளியீடு-இந்து சமய அறநிலைத்துறை

2.மாலிக்கபூர் ஒரு மாவீரனின் மறுபக்கம்-விகடன் பிரசுரம்-செ.வதிவான் டிசம்பர் 2012.

3.தமிழக வரலாற்று ஆவணங்கள்-செ.இராசு-நேசனல் பப்ளிகேசன்ஸ்-சென்னை. டிசம்பர் 2007

4.நடுகற்கள்-ச.கிருஷ்ணமூர்த்தி-மெய்யப்பன் பதிப்பகம்-பக்கம்-313.-டிசம்பர்-2004

- வைகை அனிஷ், தேவதானப்பட்டி-625 602. செல்:9715-795795

Pin It