தமிழ்க் கலை இலக்கிய வரலாற்றில் சிறப்பான இடத்தை எட்டயபுரம் பெற்றுள்ளது. எட்டயபுரத்து அரசர் ராமவெங்கடேசுவர எட்டப்ப மன்னர் ‘சுத்தசேவன்’ என்ற நாடகத்தை எழுதியுள்ளார்.

வெங்கடேசுவர எட்டப்ப மன்னரின் இளைய குமாரர் காசி விசுவநாதப் பாண்டியன். இவர் 1888-ஆம் ஆண்டு மார்ச் 7-ஆம் நாள் எட்டயபுரத்தில் பிறந்தார். எட்டயபுரத்தில் ஆரம்பக் கல்வியையும், திருநெல்வேலி இந்துக் கல்லூரியில் உயர் கல்வியையும் பயின்றார். சென்னை ஓவியக் கல்லூரியில் ஓவியக்கலை பயின்று ஓவியத்தில் பட்டம் பெற்றார்.

காசிவிசுவநாதப் பாண்டியன் நாடக ஆசிரியராகவும், நாடகக் கலைஞர்களை ஆதரிக்கும் புரவலராகவும் விளங்கினார். சங்கரதாஸ் சுவாமிகள், பம்மல் சம்பந்த முதலியார், காசிவிசுவநாதப் பாண்டியன் ஆகிய மூவரும் தமிழ் நாடக மும்மூர்த்திகளாவர்.

‘தேவராச ஜெகதீச தியேட்டர்ஸ் கம்பெனி’ என்ற நாடகக் குழுவை காசி விசுவநாதப் பாண்டியன் அமைத்திருந்தார். இந்த நாடகக் குழுவிலிருந்து டி.பி. சங்கர நாராயணன், பி.எஸ்.வெங்கடாசலம், எஸ்.பி.வீராச்சாமி, நடிகமணி டி.வி.நாராயணசாமி முதலிய நாடகக் கலைஞர்கள் உருவானார்கள். இவர் சிறந்த ஓவியராக இருந்ததால், தமது நாடகக் குழுவிற்கு வேண்டிய திரைச் சித்திரங்களை தாமே வரைந்தார். மேலும், எட்டயபுரத்தில் ‘ஸ்ரீராமச்சந்திரவிலாஸ் தியேட்டர்’ என்ற நவீன நாடக அரங்கை அமைத்தார்.

‘பிரகலதா’, ‘மாருதி விஜயம்’, ‘கபீர்தாஸ்’, ‘ராமதாஸ்’, ‘மனோகரன்’, மற்றும் வி.சி. கோபாலரத்தினம் எழுதிய ‘ராஜபக்தி’, ‘தயாளன்’, முதலிய பல நாடகங்கள் இக்குழுவால் நடிக்கப்பட்டன. இக்குழுவினரின் நாடகங்கள் எட்டயபுரம் சுற்றுவட்டாரத்திலும், சாத்தூர், மதுரை, அருப்புக்கோட்டை, திருநெல்வேலி, தூத்துக்குடி முதலிய நகரங்களிலும் நடைபெற்றன.

இவர் சிறந்த இசைக் கலைஞரும் ஆவார். வீணை, ஆர்மோனியம், தபேலா போன்ற இசைக்கருவிகளை வாசிப்பதில் வல்லவராகத் திகழ்ந்தார்.

காசிவிசுவநாதப் பாண்டியன் சிறந்த நிழற்பட நிபுணராகவும் விளங்கினார். நாடகக் கலைஞர்களை நிழற்படங்களாக எடுத்துள்ளார். நாடக ஆசிரியர் எம்.கந்தசாமி முதலியார், எம்.கே.இராதா, ஜே.கே. பெருமாள், கே.பி.மீனாட்சி, கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், எஸ்.வி. சகரஸ்ரநாமம், டி.கே.எஸ். சகோதரர்கள் முதலிய கலைஞர்களின் நிழற்படங்கள் இவரால் எடுக்கப்பட்டவை. இவை தமிழ் நாடகக் கலையின் வரலாற்றைக் கூறும் வரலாற்றுப் பெட்டகங்களாகும்.

டி.கே.எஸ். சகோதரர்கள் நாடகக் குழுவை கலைத்துவிட முடிவு செய்தபொழுது காசிவிசுவநாதப் பாண்டியன் டி.கே.எஸ். நாடகக்குழு தொடர்ந்து நடைபெறுவதற்கு உதவினார்.

இவர் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் புலமையும், கன்னடம், மலையாளம் முதலிய மொழிகளைப் பேசவும் திறமைப் பெற்றவர். ‘தயாளன்’ என்னும் நாடகம் இவரால் எழுதப்பட்டு அச்சிலும் வெளிவந்துள்ளது. ‘தயாளன்’ நாடகம் ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட ஒரு சரித்திர நாடகமாகும். இந்த நாடகத்தை 1937-ஆம் ஆண்டு சேலம் மாடர்ன் தியேட்டரின் கூட்டுறவோடு திரைப்படமாகத் தயாரித்தார்.

மகாகவி பாரதியாருடன் நெருங்கிய நட்பு கொண்டு விடுதலை வீரர்களுக்குப் பல உதவிகள் செய்தார். சிறந்த தேசபக்தராக விளங்கினார். தன்னுடைய திரைப்பட அரங்கிற்கு, ‘பாரதமாதா டாக்கீஸ்’ என்று பெயர் சூட்டினார். இவரது திரையரங்கில் பங்கிம் சந்திரரின் ‘வந்தே மாதர’ கீதத்துடன் தான் திரைப்படக் காட்சி துவங்கும். ஆங்கிலேயே ஆட்சியினர் தடுத்தபோதிலும் இவரது திரையரங்கத்தில் தேசபக்திப் பாடல்கள் தொடர்ந்து ஒலித்தன. காங்கிரஸ் கட்சி மாநாடுகள் நடைபெற தமது திரைப்பட அரங்கை அளித்து உதவினார்.

நாடகக் கலையின் வளர்ச்சிக்காக தம் வாழ்நாளை அர்ப்பணித்து பல கலைகளில் சிறந்து விளங்கிய காசிவிசுவநாதப் பாண்டியன் 1941-ஆம் ஆண்டு நவம்பர் 10-ஆம் நாள் காலமானார். நாடகத் தமிழ் வளர்ச்சிக்கு காசிவிசுவநாதப் பாண்டியன் ஆற்றிய தொண்டைப் பாராட்டி மதுரையில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில், அவரது திருவுருவப்படம் திறந்து வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Pin It