இரண்டாம் உலகப் போர், உலகை உலுக்கிக் கொண்டிருந்த நேரம்....
 
 புதுக்கோட்டை மன்னரின் தர்பார் அதாவது அரசவை அவசர அவசரமாய் கூடியது. பெருந்திரளாய் பார்ப்பனர்களின் கூட்டம். நகரின் அத்தனை உயர் சாதியினரும் திரண்டிருந்தனர். மன்னரிடம் கொடுக்க கோரிக்கை மனுவோடு...

 இந்த திடீர் திரள்வுக்கும், அரசவையின் அவசர கூட்டத்திற்கும் அரசாங்க திவானின் ஒரு உத்திரவுதான் காரணம். 1738 முதல் புதுக்கோட்டை சமஸ்தானத்தில் நடைபெற்று வந்த தசரா (நவராத்திரி ) கொண்டாட்டத்தின்போது நகரின் நான்கு முக்கிய இடங்களில் பத்து நாட்களுக்கு பார்ப்பனர்களுக்கு இலவசமாய் நல்ல உணவும், ஒருபடி அரிசியும், அரசாங்க செலாவணியான நான்கு அம்மன் காசுகளும் வழங்கப்பட்டு வந்தது. அம்மன் காசு ஆங்கிலேயர் அச்சிட்ட காசுக்கு இணையாய் அங்கீகாரம் பெற்றிருந்தது. பார்ப்பன குழந்தைகளுக்கும் கூட அம்மன் காசும் படியரிசியும் இலவசமாய் வழங்கப்பட்டது. ஆனால், ஒருபோதும் இந்த இலவசங்கள் பார்ப்பனரல்லாதாருக்கு வழங்கப்படவில்லை.

 ஒவ்வொரு ஆண்டும் இப்படி கொடுக்கப்படும் அம்மன் காசாலும், இலவச படியரிசியாலும் கஜானா காலியாகிக்கொண்டே இருந்தது. இந்த தசரா கொண்டாட்ட இலவசங்களைத்தான் நிறுத்தியிருந்தார் திவான். (அதாவது முதலமைச்சர் ) இதை எதிர்த்துதான் மன்னரை முற்றுகையிட்டது பார்ப்பனர் கூட்டம். இந்த உத்திரவை மன்னர் திரும்பப் பெற வேண்டும் என கூட்டம் வலியுறுத்தியது. அப்பொழுதெல்லாம் மன்னரின் எல்லா உத்திரவுகளும் திவான் பெயரிலேயே வெளியாகும். எனவேதான், திவான் வெளியிட்ட உத்திரவை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கை. திரும்பப் பெற இயலுமா? என்றார் மன்னர் திவானைப் பார்த்து.

 திவானோ அம்மன் காசும், படியரிசியும் இலவசமாய் வழங்கிட இனி கஜானாவில் பணமில்லை. அதற்கு பதிலாக சாதி பேதமின்றி மக்கள் அனைவருக்கும் இலவச உணவு நவராத்திரி பத்து நாட்களுக்கும் நகர்மன்றத்தில் வைத்து வழங்கலாம் என்றார். உத்திரவு உடனே அமுலானது. கோபத்துடன் கலைந்துசென்றனர் உயர் சாதியினர். ஏனைய பிற சாதி மக்களோ மன்னரையும், திவானையும் மனதார, வாயார பாராட்டிச் சென்றனர். திவானுக்கு முழு சுதந்திரம் கொடுத்த அந்த மன்னர் ராஜா ராஜ கோபால தொண்டைமான்- துணிச்சலாய் முடிவெடுத்த அந்த திவானின் பெயர் கான்பகதூர் கலிபுல்லா சாகிப்.

 கலிபுல்லா சாகிப் 1888ம் ஆண்டு இன்றைய புதுக்கோட்டை மாவட்டத்தின் இலுப்பூரில் ஒரு செல்வந்தர் வீட்டு சீமானாய் பிறந்தார். தந்தை பிச்சை ராவுத்தர்- தாய் அமீரம்மாள். உடன் பிறந்தோர் ஆண்கள் ஐவர்- பெண்கள் இருவர். இவருடைய சகோதரர் சர்புதீன் சாகிப் பிற்காலத்தில் திருச்சி, சேலம் மாவட்டங்களில் மாவட்ட நீதிபதியாக பணியாற்றினார்.

 தந்தை மிகப் பெரிய அரிசி வணிகர். இவர்களின் மூதாதையர் இஸ்லாத்தை தழுவிய கதை இன்றைக்கும் அப்பகுதியில் சுவராய்மாய் பேசப்படுகிறது. கலிபுல்லா சாகிப் அவர்களின் மூதாதையர் ஒருவர் வியாபார நிமித்தமாக தூத்துக்குடி செல்லும் வழியில் கடும் வயிற்று வலியால் அவதிப்பட நேர்ந்தபோது அங்கிருந்த பள்ளிவாசல் ஒன்றில் தங்கியிருந்த சூபி ஒருவரால் உடனடியாக குணமாக்கப்பட்டதாகவும், அன்றே அதனால் ஈர்க்கப்பட்ட அவர் இஸ்லாத்திற்கு மாறியதாகவும் சொல்லப்படுகிறது.

 திருச்சியில் ஆரம்பக் கல்வி பயின்ற கலிபுல்லா சாகிப் 1913ம் ஆண்டு முதுகலை பட்டத்தை சென்னை பல்கலைக் கழகத்தில் பெற்றார். சென்னை மாகாணத்திலேயே எம்.ஏ., பட்டம் பெற்ற முதல் இஸ்லாமியர் கலிபுல்லா சாகிப்தான். பட்டம் பெற்ற முதல் இஸ்லாமியர் என்பதால் இவர் தந்தை இவருடைய நண்பர்களுக்கு ஒரு விருந்தளித்தார். 247 பேருக்கு கொடுக்கப்பட்ட விருந்திற்கு ரூபாய் 27 செலவானதாக இவரது தந்தையாரின் குறிப்பின் மூலம் அறிய முடிகிறது. பின்னர் அதே ஆண்டு லண்டனில் பார் அட்லா படிப்பதற்காக திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி முதல்வராய் இருந்த ஆங்கிலப் பாதிரியார் ஒருவரின் கடும் முயற்சியால் நன்னம்பிக்கை முனை வழியாக லண்டனுக்கு கப்பலில் பயணம் சென்றார். லண்டண் சென்று சரியாக முப்பது நாளில் கலிபுல்லா சாகிப் அவர்களின் தந்தையார் பிச்சை ராவுத்தர் காலமானார். இதனால் கலிபுல்லா சாகிப் நாடு திரும்பினார். பின்னர் முதலாம் உலகப்போர் தொடங்கிவிட்டபடியால் அவரால் திரும்ப லண்டன் செல்ல இயலவில்லை. எனவே, சென்னையில் 1929ம் ஆண்டு தனது வழக்கறிஞர் படிப்பை முடித்தார்.

 1920களில் இருந்தே நீதிக்கட்சியுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார் கலிபுல்லா சாகிப். தந்தை பெரியார், கி.ஆ.பெ.விஸ்வநாதம், பி.டி.ராஜன், சர்.ஏ.பி.டி.பன்னீர்செல்வம் ஆகியோர் கலிபுல்லா சாகிபின் நட்பு வட்டத்திற்குள் இருந்தனர். திருச்சியில் அவர் இருந்தபோது திருச்சி நகர்மன்றத் தலைவராக இருமுறை பணியாற்றினார். திருச்சி நகர்மன்றத் தலைவராக இருந்த முதல் இஸ்லாமியரும் அவரே. மிகத் திறம்பட பணியாற்றிய அவர் 1930-ம் ஆண்டு முஸ்லிம் லீக் சார்பில் சென்னை மாகாண சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1937ம் ஆண்டு மீண்டும் சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 இத்தேர்தலில் நீதிக்கட்சியும் ராஜாஜி தலைமையிலான காங்கிரஸ் கட்சியும் சமபலத்தில் இருந்ததால் ஆங்கிலேயே கவர்னர் நீதிகட்சியை சேர்ந்த குமாரவெங்கட ரெட்டியை அரசு அமைக்க அழைத்தனர். அதில் எம்.ஏ.முத்தையா செட்டியார், சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் மயிலை சின்னத்தம்பி ராஜா, ஆர்.எம். பாலக் இவர்களோடு பொதுப்பணித்துறை அமைச்சராக கலிபுல்லா சாகிப் அவர்களும் பதவியேற்றார். சென்னை மாகாணத்தின் முதலாவது இஸ்லாமிய அமைச்சர் என்ற பெருமையும் கலிபுல்லா சாகிப் அவர்களுக்கு கிட்டியது. ஏற்கனவே, ஆங்கில அரசு அவருக்கு கான்பகதூர் என்கிற சிறப்பு பட்டத்தை அளித்து கவுரவித்திருந்தது. குறைந்த காலமே இருந்த இந்த அமைச்சரவை பின்னர் பதவி விலகியது.

 முஸ்லிம் லீக் கட்சி சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது திருச்சியில் இருந்து 01.08.1938ம் ஆண்டு அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரிசாமி தலைமையில் நூறு பேருடன் இந்தி எதிர்ப்பு படை சென்னை நோக்கி புறப்பட்டது. இப்படையை தந்தை பெரியார் தலைமையில் கலிபுல்லா சாகிப் வாழ்த்தி வழியனுப்பி வைத்தார். இப்படையில் திருப்பூர் தளபதி மொய்தீன் முன்னனி வீரராக வந்தார். இந்தி திணிப்பை கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் தந்தை பெரியாரோடு இணைந்து கான்பகதுர் கலிபுல்லா சாகிப் சென்னை மாகாணம் முழுவதும் பொதுக் கூட்டங்களில் பேசினார். அதேபோல் சென்னை மாகாண சட்டசபையில் பேசிய கலிபுல்லா சாகிபின் பேச்சு இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அனைவருக்கும் பேராதரவாய் அமைந்தது. நான் ஒரு ராவுத்தர் எனது தாய்மொழி தமிழ். உருது அல்ல. இந்தி எதற்காக இந்தியாவின் பொதுமொழி என்று எங்களுக்கு சொல்லப்படவில்லை. இந்தி கட்டாயமாக புகுத்தப்படுவதை மாகாணத்தின் ஒவ்வொரு கிராமமும் எதிர்க்கிறது. நாங்களும் எதிர்க்கிறோம் என்றார். அப்போதைய முஸ்லிம் லீக் உறுப்பினராய் இருந்த கலிபுல்லா சாகிப்.

 அப்போதைய காலக்கட்டத்தில் முஸ்லிம் லீக்கில் அவர் இருந்தாலும் அனைத்து சுயமரியாதை இயக்க மாநாடுகளிலும் கலந்துகொண்டார். வட ஆற்காடு மாவட்ட சுயமரியாதை மாநாட்டிற்கு தலைமை தாங்கினார். அந்த மாநாட்டில் தந்தை பெரியார் சிறப்புரையாற்றினார். பார்ப்பன எதிர்ப்பிலும் தந்தை பெரியாரோடு கரம் கோர்த்தார் கான் பகதூர் கலிபுல்லா சாகிப்.

 சுயமரியாதை இயக்கத்துடன் தம்மை இணைத்துக்கொள்வதன் மூலம் தென் இந்தியாவில் மொழி அடிப்படையிலான தமிழ் முஸ்லிம் தனித்துவத்தை கலிபுல்லா சாகிப் வலியுறுத்தினார். திராவிட இயக்க தலைவர்களுடனான முஸ்லிம்களின் பிணைப்பிற்கு அடிகோலியவர் அவர்தான். அவரை பின்பற்றியே முஸ்லிம் லீக் தலைவர்கள் திராவிட இயக்கத்துடன் தங்கள் நட்பை வலுப்படுத்தினர்.

 மொழிப் பிரச்சனையில் முஸ்லிம் லீக் தலைவர்கள் சிலருடன் ஏற்பட்ட அரசியல் நெருடல் காரணமாக அவர் தீவிர முஸ்லிம் அரசியலில் இருந்து ஒதுங்கிட நினைத்த நேரத்தில் புதுக்கோட்டை திவானாக வேண்டும் என்கிற ஆங்கில அரசின் அழைப்பு வந்தது. இந்த அரசியல் நெருடலே அவரை திவான் பதவியை நோக்கி தள்ளியது.

 ஆங்கில அரசின் வேண்டுகோளுக்கிணங்க புதுக்கோட்டை சமஸ்தானத்தின் துணை திவானாக 1941 ஜனவரி 1ம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார். அப்பொழுது திவானாக டாட்டன்ஹாம் இருந்தார். 1944ல் டாட்டன்ஹாம் மறைந்தவுடன் கலிபுல்லா சாகிப் திவானாக பொறுப்பேற்றார். அப்பொழுது முதல் சமஸ்தானத்தில் ஏராளமான சீர்திருத்தங்களை செய்தார்.

 கோவையை அடுத்து பஞ்சாலைகளின் நகரம் என சொல்லத்தக்க வகையில் புதுக்கோட்டை சமஸ்தானத்தில் தாவுத்மில், கனகவேல்மில், காவிரிமில், புதுகை டெக்ஸ்டைல் மில் என நான்கு பஞ்சு மில்களை நிறுவினார். சிவகாசிக்கும் முன்னோடியாக 7 ஏக்கரில் தீப்பெட்டி தொழிற்சாலையை உருவாக்கினார். ஆங்கிலேயரின் வார விடுமுறையாக ஞாயிற்றுக் கிழமை இருந்தாலும் சமஸ்தானத்தில் வெள்ளிக் கிழமையை வார விடுமுறை நாளாக அறிவித்தார். அன்று மக்கள் கூடும் சந்தையும் நடந்தது. 1945ம் ஆண்டு முஸ்லிம்கள் தொழுகை நடத்த 1 ஏக்கர் 88 சென்ட் இடத்தில் ஈத்கா மைதானம் அமைத்துக் கொடுத்தார். புதுக்கோட்டை சமஸ்தானத்தில் தேவதாஸி முறையை ஒழித்துக் கட்டினார்.

 புதுக்கோட்டையின் புகழ்பெற்ற குளமான பல்லவன்குளத்தில் ஆடு, மாடுகள் குளிக்கலாம், ஆனால் முஸ்லிம்களும், தாழ்த்தப்பட்டவர்களும் குளிக்கக் கூடாது என்கிற நீண்டகால தடையை நீக்கினார். புதுக்கோட்டையில் இன்று விருந்தினர் மாளிகையாக திகழும் ரோசா இல்லத்தை உருவாக்கினார். இரண்டாம் உலகப்போர் நடைபெற்ற கால கட்டத்தில் சென்னை மாகாணத்தில் முதன் முதலாக ரேசன் முறையை கொண்டுவந்தார். இந்தியா முழுவதும் கடும் உணவுப் பஞ்சம் ஏற்பட்டபோதும் சமஸ்தானத்தில் அது வராதவாறு அரிசி, பெட்ரோல், உள்ளிட்டவைகளை ரேசனில் வழங்க ஏற்பாடு செய்தார். அவசர போர் காலத்திற்காக அன்றைக்கு உருவாக்கப்பட்ட ரேசன் முறையோ இன்றைக்கு அரசியல் வாதிகளால் இலவசப் பிச்சைபோட பயன்பட்டுக் கொண்டிருக்கிறது.

 திவான் கலிபுல்லா சாகிப் தான் இந்தியாவிலேயே முதன் முறையாக பள்ளிக் கூடத்தில் மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இதுவே பின்னாளில் நெ.து.சுந்தரவடிவேலு மூலமாக தமிழக அரசின் மதிய உணவுத் திட்டமாக கர்மவீரர் காமராஜரால் அறிமுகப்படுத்தப்பட்டது.

 திவான் கலிபுல்லா சாகிப் பொறுப்பேற்றபோது சமஸ்தான பள்ளிகளில் வெறும்1 3% சதவிகித பார்ப்பனரல்லாத மாணவர்களே கல்வி பயின்று வந்தனர். கலிபுல்லா சாகிபின் மதிய உணவு திட்டத்தின் பயனாக அது 78 சதவிகிதமாக உயர்ந்தது. புதுக்கோட்டை சமஸ்தானத்தில் அரசு உயர்நிலைப் பதவிகளுக்கு அவர் பார்ப்பனராய் இருந்தால் இளங்கலை அதாவது பி.ஏ., படித்திருக்க வேண்டும் என்றும், அதுவே பார்ப்பனல்லாதவராக இருந்தால் மூன்றாம் பாரம் (இன்றைய பத்தாம் வகுப்பு) படித்திருந்தால் போதுமானது என ஆணை பிறப்பித்தார்.

 இதனால் கோபமுற்ற உயர் வகுப்பினர் இவருடைய மகன்கள் முகமது இஸ்மாயில், முகமது அலி ஆகியோர் டைபாய்டு காய்ச்சல் வந்து இறந்தபோது பால்பாயாசம் வைத்து இலவசமாக கொடுத்து எங்களுக்கு கெடுதல் செய்ததால்தான் திவான் பிள்ளைகள் இறந்தனர் என கொண்டாடினர்.

 இரண்டாம் உலகப்போர் நடந்தபோது பத்திரிக்கை காகிதம் தட்டுப்பாடு ஏற்பட்டு இந்தியா முழுவதும் பல நகரங்களில் பத்திரிக்கைகள் நிறுத்தப்பட்டன. ஆனால், திவானின் முயற்சியால் புதுக்கோட்டை சமஸ்தானத்தில் மட்டும் எவ்வித கோட்டாவும் இல்லாமல் எல்லா பத்திரிக்கைகளும் வெளிவந்தன.

 ஒருமுறை திவானின் நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட உயர்சாதியினர் திவான் இல்லம் முன் கூட்டமாய் கூடி தாடி ஒழிக, தாடி ஒழிக என (திவான் கலிபுல்லா சாகிப் எப்பொழுதும் தாடி வைத்திருப்பார்) பெருங்கூச்சலிட்டனர். வெளியே வந்து பார்த்த திவான் தாடியை ஒழிக்க காலனா பிளேடு போதுமே! அதற்கு ஏன் வீண் கூட்டம் என்றாராம்.(அப்பொழுதுதான் சவரக் கத்திக்கு பதிலாக பிளேடு அறிமுகமாகி இருந்தது)

 1947ம் ஆண்டு இந்தியா சுதந்திரமடைந்த நேரத்தில் புதுக்கோட்டை சமஸ்தானத்தில் சிமெண்ட் தொழிற்சாலை அமைப்பதற்காக அரசு கஜானாவில் ரூபாய் 63 இலட்சம் சேர்த்து வைத்தார். பின்னாளில் 1948 மார்ச் 8ம் தேதி சமஸ்தானம் இந்தியாவுடன் இணைந்தபோது அதில் 48 இலட்சம் பணம் இந்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்தியா சுதந்திரமடைந்தபோது சமஸ்தானங்கள் இந்தியாவுடன் இணைய அன்றைய இந்திய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேல் நடவடிக்கை எடுத்தார். அதற்காக திவானிடம் இந்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. திவான் கலிபுல்லா சாகிப் சில நிபந்தனைகளை அரசர் சார்பில் விதித்தார். இந்திய அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் இணைப்பிற்கு இவர் தடையாய் இருக்கிறார் என சில தேசாபிமானிகள் இவர்மீது குற்றம் சாட்டினர். இதனால் வேதனையுற்ற திவான் கலிபுல்லா சாகிப் 1947ம் ஆண்டு நவம்பர் மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

 இவர் இஸ்லாமியர் என்பதால் துணிச்சலாக எதைப்பற்றியும் கவலைப்படாமல் அனைத்து சீர்திருத்தங்களையும் செய்தார். இன்னொறுபுறம் இவர் இஸ்லாமியர் என்பதாலேயே ஒவ்வொரு முறையும் விமர்சிக்கப்பட்டார். தூற்றப்பட்டார்.

 திவான் கலிபுல்லா அவர்களுக்கு நான்கு பெண் - ஆறு ஆண் குழந்தைகள் பிறந்தன. அவை முறையே ஆயிஷா, சபியா, பிச்சை மைதீன், ஜமால் முகம்மது(இவருடைய மகன் ராஜா கலிபுல்லா அரசு வழக்கறிஞராக சமீபகாலம் வரை பணியாற்றி வந்தார்), முகமது இஸ்மாயில், ரமீஸாபேகம், முகமது அலி, ஜெய்புனிஸா (இவருடைய மகன்தான் தற்போதைய காஷ்மீர் மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா) சலாகுதீன், குத்புதீன் ஆகியோர். கான்பகதூர் கலிபுல்லா சாகிப் அவர்களின் மனைவி பெயர் வரிசையம்மாள்.

கலிபுல்லா அவர்கள் திவான் பதவியை ராஜினாமா செய்தபின்னர் தனது இறுதி நாட்களில் திருச்சி கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள எண்.4, ராயல் ரோட்டில் வசித்துவந்தார். 1950ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பத்தாம் தேதி இவ்வுலகை விட்டு மறைந்தார். 1913-ல் அவரது தந்தை இறந்தபோது அன்றைக்கு அவர் கலிபுல்லா சாகிபிற்கு வைத்துவிட்டுபோன பணத்தின் அன்றைய மதிப்பு பதிமூன்று இலட்சம் ரூபாய்.

 முதல் இஸ்லாமிய அமைச்சர், முதல் இஸ்லாமிய பட்டதாரி- முதல் இஸ்லாமிய திவான்- முதல் இஸ்லாமிய நகர்மன்ற தலைவர்- இப்படியெல்லாம் புகழ்பெற்ற கான்பகதூர் கலிபுல்லா சாகிப் காலமான நேரத்தில் வாடகை வீட்டில் தான் குடியிடிருந்தார்.

 இதுதான் இன்றைய தலைவர்களுக்கும் அவருக்கும் உள்ள வித்தியாசம்.

 கடுங்கோபம் வரும்போது கான்பகதூர் கலிபுல்லா சாகிப் உபயோகிக்கும் வார்த்தையோ முட்டாள் என்பது. ஆனால் அவர்தன் வாழ்நாளில் ஒருபோதும் இந்த சமூகத்தை இன்றைய தலைவர்களைப்போல் முட்டாளாக்கியது கிடையாது.

- கே.எம்.சரீப்

Pin It