'இராவண காவியம், பழைமைக்குப் பயணச்சீட்டு! புதுமைக்கு நுழைவுச் சீட்டு! தன்மான இயக்கத்தார் - தமிழ்ப்பகைவர்கள், காவியச்சுவையறியாதார், கலையுணர்வில்லாதார் - என்ற அவமொழியினை அடித்துத் துரத்தும் ஆற்றலாயுதம்! தமிழ் மறுமலர்ச்சியின் தலைசிறந்த நறுமலர்! நெடுநாள் ஓவியம்! தமிழரின் புதுவாழ்வுக்கான போர்முரசு! 'காவிய உருவில் ஆரியத்தைப் புகுத்திவிட்டோம். எனவே, இது அழிந்துபடாது' -என்று இறுமாந்திருப்போருக்கு ஓர் அறைகூவல்! தமிழருக்கு உண்மையை உணருமாறு கூறும் ஓர் அன்பழைப்பு! தமிழரசுக்குக் கால்கோள்! விடுதலைக் கீதம்!'' - என்று இராவண காவியத்தின் முதற்பதிப்பிற்கு அறிஞர் அண்ணா அணித்துரை எழுதியுள்ளார்.

 தலைசிறந்த இராவண காவியத்தை இயற்றியவர் புலவர் குழந்தை. இவரது சொந்த ஊர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 'ஓலவலசு' என்னும் சிற்றூர்! முத்துசாமிக் கவுண்டர் - சின்னம்மையார் தம்பதியருக்கு 01.07.1906 அன்று மகனாக இவர் பிறந்தார்.

 திண்ணைப் பள்ளிகளில் ஐந்தாண்டுகள் கல்வி பயின்றார். தனது பத்து வயதிலேயே கவிபாடும் ஆற்றல் உடையவரானார்.

 இலக்கியத்தின் மீது கொண்ட ஆர்வத்தால் தாமாகவே தமிழ் இலக்கியங்களையும், இலக்கணங்களையும் கற்றார். கல்வியின் பெரும்பயன் என்பது, தான் கற்ற கல்வியை மற்றவருக்கும் அளிப்பதுதான், என்பதை உணர்ந்தார். தம் கிராமத்தில் இருந்த இளைஞர்களுக்கு கல்வி கற்பிப்பதைத் தொண்டாகவே செய்தார்.

 சென்னைப் பல்கலைக் கழகத்தில் 1934 ஆம் ஆண்டு புலவர் பட்டம் பெற்றார்.

 இவர், 1924 ஆம் ஆண்டு முதல் 1962 ஆம் ஆண்டு முடிய முப்பத்தொன்பது ஆண்டுகள் ஆசிரியராகப் பணி புரிந்துள்ளார்! அதில், இருபது ஆண்டுகள் பவானி, கழக உயர்நிலைப் பள்ளியில் தலைமைத் தமிழாசிரியராக இருந்துள்ளார்.

 புலவர் குழந்தை இருபத்தொன்பது நூல்களை இயற்றியுள்ளார். "இராவண காவியம்" அவரை உலகறியச் செய்தது.

 தந்தை பெரியாரின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு, சுயமரியாதை மற்றும் பகுத்தறிவுக் கொள்கைகளைப் பரப்புவதில் தீவிரமாக ஈடுபட்டார்.

 புலவர் குழந்தைக்கு ஏற்பட்ட சுயமரியாதை உணர்ச்சியின் வெளிப்பாடு தான், ‘இராவண காவியம்’ ஆகும். தமிழனத்தை இழிவு செய்யும் கருத்துக்களை எதிர்ப்பதற்கே ‘இராவண காவியத்தை’ இயற்றினார். இவ்வுண்மையை, ‘இராவண காவியம் எதற்கு?’ என்ற தன் கட்டுரை நூலில் 1948ல் தெளிவுபடக் குறிப்பிட்டுள்ளார். சுதந்திர இந்தியாவில், தமிழக ‘காங்கிரஸ் ஆட்சி’ 1948 ஆம் ஆண்டு இவரின் ‘இராவண காவியம்’ நூலுக்குத் தடை விதித்தது. அந்தத் தடையை, தமிழக முதல்வராக இருந்தபோது கலைஞர் மு. கருணாநிதியின் ‘கழக ஆட்சி’ 1971 ஆம் ஆண்டு நீக்கியது.

 தன்னேரில்லாத் தமிழ்ப் புலவரால் இயற்றப்பெற்ற ஓர் ஒப்பற்ற காவியம், இருபத்து மூன்று ஆண்டுகள் ‘தடை’ என்னும் இருட்டுச் சிறையில் கிடத்தப்பட்டது இந்தியாவில் மட்டுமே! இராவண காவியத்திற்கு மட்டுமே! என்று விழுப்புரத்தில் 04.09.1971 அன்று பகுத்தறிவுக் கழகத்தார் புலவர் குழந்தைக்கு மிகப்பெரிய பாராட்டு வழங்கினார். அப்பாராட்டுக் கூட்டத்தில் தந்தை பெரியார் கலந்து கொண்டு சிறந்த பாராட்டுரை வழங்கினார். அப்போது, “தமிழ்ப் புலவர்களெல்லாம் தமிழரை இழிவுபடுத்தும் புராணக் கருத்துக்களையே பாடிவந்தனர். அதற்கு மாறாக, இராவண காவியத்தைப் படைத்து, தமிழரின் இழிவைப் போக்கிய புலவர் குழந்தை அவர்களைப் பாராட்டுகிறேன். அத்தகைய இராவணக் காவியத்தைத் தமிழ் மக்கள் படித்துப் பயன்பெற வேண்டும். இக்காவியத்தைப் பள்ளிகளில் பாடமாக வைக்க வேண்டும்" என்று பெரியார் பேசினார்.

 இராவண காவியத்தைப் போல தமிழ்மொழி மற்றும் தமிழினத்தின் பெருமையை எடுத்தியம்பும் காப்பியம் வேறு இல்லை. கற்பனை நயத்திலும், பாத்திர வார்ப்பிலும், தமிழ் பண்பாட்டின் பெருமையைப் பேசுவதிலும், இராவண காவியத்திற்கு இணையான காவியம் தமிழில் மட்டுமல்ல பிற இந்திய மொழிகளிலும் படைக்கப்படவில்லை.

 தமிழ் பேரறிஞரும், சிறந்த உரைநூல் ஆசிரியருமான ஐயன்பெருமாள் கோனார், புலவர் குழந்தையைப் புகழ்ந்து இவ்வாறு பாராட்டியுள்ளார்.

 "இனியொரு கம்பனும் வருவானோ
 இப்படியும் கவி தருவானோ?
கம்பனே வந்தான்;; அப்படிக் கவிதையும் தந்தான்;
ஆனால் கருத்துதான் மாறுபட்டது"

  இராவண காவியத்தின் இரண்டாவது பதிப்பிற்கு 1971 ஆம் ஆண்டு தமிழக முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி எழுதியுள்ள அணிந்துரையில், புலவர் குழந்தைக்கு, கீழ்க்குறித்தவாறு பொன்மகுடம் சூட்டியுள்ளார்.

  “பன்னீராயிரம் பாடிய பாட்டரசன் கம்பன் எழுப்பாத இன்றமிழ் உணர்வை எழுப்பியவர், தமிழன் அருமையை - இனிமையை - ஏற்றத்தை - பெருமையை - தனிப்பெருந்தன்மையை உணர்த்தியவர். கம்பனின் இராமயணத்தை இராவண காவியமாக மாற்றியமைத்ததன் மூலம் செந்தமிழ்ப் பெருமக்களின் சிந்தனைத் தீயை நெய்யூற்றி வளர்த்தவர் புலவர் குழந்தை!"

  தமிழகத்தில் 1938 மற்றும் 1948 - 1965 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில், தன்னுடைய உணர்ச்சி மிக்கப் பாடல்கள் மூலமாகவும், சிந்தனையைத் தூண்டும் சொற்பொழிவுகள் மூலமாக மாணவர்களையும், இளைஞர்களையும் வீறு கொண்டெழச் செய்தார் புலவர்!

 சென்னையில் 1948 ஆம் ஆண்டு நடைபெற்ற திருக்குறள் மாநாட்டில், தந்தை பெரியார் பகுத்தறிவுக் கொள்கைக்கேற்ப, திருக்குறளுக்கு உரை எழுத வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தார். அதற்கேற்ப, நாவலர் சோமசுந்தர பாரதியார் உட்பட தமிழறிஞர்கள் பலரைக் கொண்டு அமைக்கப்பட்ட குழுவில் புலவர் குழந்தையும் இடம்பெற்றிருந்தார். அவர்கள் பெரிதும் முயன்று, இருபத்தைந்து நாட்களில் 1330 குறட்பாக்களுக்கும் புலவர் குழந்தை உரை எழுதி முடித்தார். அந்த நூல்தான் “திருக்குறள் - குழந்தையுரை" என்பதாகும்.

  புலவர் குழந்தை எண்ணற்ற பள்ளிப் பாடநூல்களையும், மாணவர்களுக்கான இலக்கண நூல்களையும் எழுதியுள்ளார். அவரது இலக்கண நூல்கள் இன்றைய இளைஞர்கள் எளிதாக இலக்கணம் கற்றுக் கொள்ள வழிகாட்டியாக உள்ளன.

  யாப்பதிகாரம், தொடையதிகாரம், இன்னூல் (சூத்திரம்) முதலிய இன்றியமையாத இலக்கண நூல்களை எழுதியுள்ளார். புலவர் குழந்தை எழுதிய ‘அரசியலரங்கம்’ என்ற நூல் தமிழக அரசியல் வரலாற்றை அறிந்து கொள்வதற்கு ஏதுவாக உள்ளது.

  ‘தீரன் சின்னமலை’ ‘அண்ணல் காந்தி’ போன்ற வரலாற்று நூல்களையும், ‘தமிழக வரலாறு’, ‘கொங்கு நாடும், தமிழும்’, ‘அருந்தமிழ் விருந்து’, ‘அருந்தமிழ் அமிழ்து’ போன்ற இலக்கிய நூல்களையும் படைத்து தமிழுலகுக்கு வளம் சேர்த்துள்ளார்.

  புலவர் குழந்தை தமிழ்ச் செய்யுள் மரபு சிதையாது இருக்க வேண்டுமென்தைத் தனது நோக்கமாகக் கொண்டிருந்தார். எனவே, தப்பும் தவறுமான பாடல்களை யார் எழுதிக் கொண்டு வந்தாலும், அவர்களை இன்முகத்துடன் வரவேற்று, அப்பாடல்களைத் திருத்திக் கொடுக்கும் தமிழ்த் தொண்டினைச் செய்தார்.

  சிறுவர்கள் தமிழ்மொழியை எளிமையாக கற்றுக் கொள்ள வேண்டும் என்ற அக்கறையோடும், அறிவியல் வளர்ச்சிக்கேற்ப தமிழ் மொழியை வளர்த்தெடுக்க வேண்டும் என்ற விருப்பத்தோடும் தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தைப் புலவர் குழந்தை செய்தார். எழுத்துக்களைக் குறைத்தால் மட்டுமே தமிழ் எழுத்துக்களை எளிமையாகக் கற்றுக் கொள்ள முடியும் என்பதை வலியுறுத்தினார்.

  தமிழ் மொழிக்கும், தமிழ் இனத்திற்கும் தன்னலம் பாராது தொண்டாற்றியவர்! தாய்மொழித் தமிழே, நம் நாட்டினை ஆட்சி மொழியாக ஆள வேண்டும் எனப் பாடுபட்டவர்! கடல் போலச் செந்தமிழைப் பெருக்க வேண்டும் என்று கனவு கண்டவர்! காடு மேடெல்லாம்-நாடு நகரெல்லாம் முழங்கிய தமிழ் இனமானக் கவிஞர் புலவர் குழந்தை, 23.09.1972 ஆம் நாளன்று இயற்கை எய்தினார்.

  புலவர் குழந்தை மிகச் சிறந்த ஆராய்ச்சியாளர்;. இலக்கணப் புலமையுடையவர். தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை மேற்கொண்ட நல்அறிஞர்; நுண்ணறிவு கொண்ட உரையாசிரியர்; பகுத்தறிவிற்காகத் தன் வாழ்வையே ஒப்படைத்தவர்; தமிழ்ப் பண்பாடு தழைக்க வேண்டுமென்பதற்காகத் தனது இறுதி மூச்சு உள்ளவரை இயங்கியவர். நம் தமிழ் மொழியின் மேன்மைக்கு நாம் பாடுபடுவதே அவருக்கு ஆற்றும் நன்றிக்கடனாகும்.

Pin It