இந்தி எதிர்ப்புப் போர் (1937 -38 ) உச்சத்தில் இருந்த நேரத்தில் இந்தியை ஆதரித்து உரக்க குரல் கொடுத்தவர் தமிழ்நாட்டு பார்ப்பனர்களின் தலைவராக விளங்கிய சத்தியமூர்த்தி அய்யர்!. 1939 ம் ஆண்டு "பாஷா ஏகாதிபத்தியத்தை" ஆதரித்து சென்னை லயோலா கல்லூரியில் இவர் ஆற்றிய உரையை குடியரசு வெளியிட்டது.

sathyamurthy  "என் கைக்கு அதிகாரம் வந்தால், நான் சர்வாதிகாரியானால், இந்தியர்களை இந்தி மட்டுமன்றி, சமஸ்கிருதத்தையும் கட்டாயமாக படிக்கும்படி செய்வேன்!. சர்க்கார் உத்தியோகங்களுக்கு சமஸ்கிருதம் படிக்கவேண்டும் என்கிற நிபந்தனையை ஏற்படுத்தி விடுவேன்! காந்தியார் உயிருடன் இருக்கும்போதே, இந்தியாவில் ராமராஜ்ஜியம் ஏற்பட்டுவிட வேண்டுமென்று மிக ஆவலாய் இருக்கிறேன். ராமராஜ்ஜியம் என்பது, வர்ணாஸ்ரம முறைப்படி ஒவ்வொருவனும், அவனவன் ஜாதி தர்மப்படி நடந்து கொள்ள வேண்டியது தான். ராமர் காலத்தில் மக்கள் இந்த வர்ணாஸ்ரம முறைப்படியே, அதாவது பிராமணன், சத்ரியன், வைசியன், சூத்திரன் எனப் பிரிக்கப்பட்டு அவனவனுக்கு சாஸ்திரப்படி ஏற்பட்ட கர்மங்களை அவனவன் செய்துகொண்டு திருப்தியாய் இருந்தான். அதனால் யார் மீதும் வருத்தப்பட வில்லை" என்றார்.

 அருப்புக்கோட்டையில் 1937ல் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில், இந்தியை எதிர்த்து கிளர்ச்சி செய்பவர்கள் இராஜதுரோகிகள் என்றும், அவர்கள் மீது ஆயுள் தண்டனை அல்லது தூக்குத்தண்டனை விதிக்கவேண்டும் என்றும் கொக்கரித்தார்.

குழந்தை திருமண தடை சட்டமசோதா
 
 பெண்கள் திருமண வயது 14 ஆக உயர்த்த வேண்டும் என்று கருதி, குழந்தை திருமண தடை சட்ட மசோதாவை இந்திய சட்டசபையில் சாரதா என்பவர் கொண்டுவந்தபோது, சட்டசபையிலும் வெளியிலும் அதை விமர்சித்ததோடு, தனது பெண் குழந்தைகளுக்கு பருவமடைவதற்கு முன்பே திருமணம் செய்து வைக்கப் போவதாக சூளுரைத்தார் சத்தியமூர்த்தி!. பெண்களுக்கு பருவமடைந்த பின்னர் திருமணம் செய்துவைப்பது இந்து மத மரபுக்கு எதிரானது என்று வாதாடினார். தனது கருத்துக்கு ஆதரவாக "பராசர் ஸ்மிருதி"யிலிருந்து ஸ்லோகங்களை எடுத்துக்காட்டினார்.

 பிராமணன் கப்பலேறக்கூடாது என்றும் தன் பாஷையை விட்டு அந்நிய பாஷையை படிக்கக்கூடாதென்றும் அந்தப் "பராசர் ஸ்மிருதி" சொல்லுகிறதே!, இவர் ஏன் சீமைக்குப் போனார்? மிலேச்சப்படிப்பான பி.எல் ஏன் படித்தார்? கடல்கடந்து போனவனையும் அந்நிய பாஷையை படித்தவனையும் பிரஷ்டனென்று சாஸ்திரம் சொல்லுகிறது. பிரஷ்டனான இவர் வைதீகச் சபையில் தன்னை பார்ப்பனராக நினைத்து, "பராசர் ஸ்மிருதி"யை பேசுவதே குற்றமல்லவா? என்று பார்ப்பனர்களின் வேதங்கள், சாஸ்திரங்கள், ஸ்மிருதிகள் அனைத்திலும் புலமை பெற்றிருந்த சுவாமி கைவல்யம், சத்தியமூர்த்தி அய்யரைப் பார்த்து கேள்வி எழுப்பினார்.

கைவல்யம் கேட்ட அதே கேள்வியை, "ஸ்மிருதி"யின் இந்த ஸ்லோகங்களை அய்யரின் கண்ணாடி அணிந்த கண்கள் பார்க்கத் தவறிவிட்டதா? என்று நக்கலாக எழுதினார் குத்தூசி.

தேவதாசி முறை ஒழிப்புச் சட்டத்துக்கான மசோதா
 
  சுப்பராயன் தலைமையிலான சென்னை சட்ட மன்றத்தில் தேவதாசி முறை ஒழிப்புச் சட்டத்துக்கான மசோதாவை டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி கொண்டுவந்தபோது அது இந்து மரபுக்கும், ஆகம விதிகளுக்கும் எதிரானது என்று சொல்லி, கடுமையாக எதிர்த்தவரும் இதே சத்தியமூர்த்தி அய்யர்தான். கடவுளுக்கு சேவகம் செய்வதற்காகவே தேவதாசி முறை கொண்டுவரப்பட்டது என்று வாதாடினார். அப்படிப்பட்டவர்களுக்கு அடுத்த ஜென்மத்தில் மோட்சம் கிடைக்கும் என்றார். அதைக்கேட்டு வெகுன்டெழுந்த முத்துலெட்சுமி, "அப்படியானால் எங்கள் வீட்டுப்பெண்கள் இதுவரை கடவுளுக்கு சேவகம் செய்து மோட்சம் பெற்றது போதும்!. விருப்பப்பட்டால் அய்யர் தங்கள் வீட்டுப்பெண்களை இனி அந்தப் பணி செய்ய அனுப்பி மோட்சம் பெறட்டும்" என்றார். சத்தியமூர்த்தி அய்யர் சகலத்தையும் மூடிக்கொண்டார்!.
 
கட்அவுட் கலாச்சாரம்!
 
  சத்தியமூர்த்தி அய்யர் மேயராக பதவி வகித்தபோது, சென்னையில் "காங்கிரஸ் பொருட்காட்சி" நடத்தப்பட்டது. அந்தக் கண்காட்சியின் மையப்பகுதியில் சத்தியமூர்த்தி மேயர் கவுன் அணிந்து எடுத்துக்கொண்ட மிகப்பெரிய படமும், அதற்கு இருபுறத்திலும் சிறிய அளவில் அரவிந்தர் மற்றும் காந்தி படங்களும் வைக்கப்பட்டிருந்ததை இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு பதிவு செய்திருக்கிறது. இவர் மேயராக இருந்தபோதுதான் மேயர்கள் மாநாட்டைக் கூட்டி அதற்கு தன்னை தலைவராக்கிக் கொண்டதுடன் அதுவரை "மேயர்" என்று அழைக்கப்பட்ட பதவியை "வணக்கத்துக்குரிய மேயர்" என்றாக்கி புளகாங்கிதம் அடைந்திருக்கிறார்.
 
பதவிப் பேராசை!
 
  சத்தியமூர்த்தி அய்யரின் பித்தலாட்டங்களை தோலுரிக்கும் கட்டுரைகள் குடியரசு இதழ்களில் நிரம்ப காணமுடிகிறது. இந்திய சட்டசபை மெம்பர் ஆனவுடன் மந்திரி கனவில் அவர் பிதற்றியதை கேலி செய்து "சத்தியமூர்த்தியின் திருவிளையாடல்" என்ற தலைப்பில் குடியரசில் ஒரு கட்டுரை வெளியாகியுள்ளது.

"தோழர் சத்தியமூர்த்தியின் நாக்குக்கு நரம்பு கிடையாது. அவர் பேச்சுக்கும் மதிப்பு கிடையாது என்று ஒரு பழமொழி உண்டு. தோழர் சத்தியமூர்த்தி அய்யர் பொதுவாழ்வில் விளம்பரம் பெற்ற பிறகு, சுமார் ஆயிரம் தடவைக்கு குறையாமலாவது தான் பேசியவைகளுக்கும், நடந்து கொண்டவைகளுக்கும் மன்னிப்பு கேட்டிருப்பார்!. இரண்டாயிரம் தடவைகளுக்குக் குறைவில்லாமல் தான் வெளிப்படுத்திய அபிப்ராயங்களுக்கு தத்துவார்த்தமும், சந்தர்ப்ப அர்த்தமும், மாற்று சேதிகளும் வெளியிட்டிருப்பார்!. இந்திய சட்டசபை மெம்பர் ஆனவுடன் சதாசர்வ காலம் மந்திரி பதவி பற்றிய பேச்சும் எண்ணமும் கனவுமாகவே இருந்து வருகிறார்!. இந்த பயித்தியம் முத்திவிட்டதின் பயனாய் இச்செய்தி மாகாணமெங்கும் பரவியதோடல்லாமல், இந்திய தேசமெங்கும் பரவிவிட்டது. இதனால் காங்கிரஸில் சரியாகவோ, தவறாகவோ, யோக்கியர்கள் என்று பெயர் வாங்கியிருந்த சிலருடைய நிலைமை மிக ஆபத்தாக போய்விட்டது!.

 ஏனெனில் காங்கிரஸ்காரர்கள், உத்தியோகம் பெறுவதில்லை. சர்க்காருடன் ஒத்துழைப்பதில்லை என்றெல்லாம் சொல்லி ஓட்டுவாங்கியிருக்கும்போது அந்த வாக்குறுதிக்கு மாறாக நடக்க ஆரம்பித்தால் அவர்கள் மரியாதை கெட்டுப்போவதுடன், ஜனங்கள் நம்ப மாட்டார்களே!. அடுத்த எலக்‌ஷன் வரையிலாவது வாயை  மூடிகொண்டிருக்கக்கூடாதா? என்கிற கஷ்டம் வந்துவிட்டதால் அவர்கள் சத்தியமூர்த்தியை கண்டிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

 எனவே சத்தியமூர்த்தியார் ஒரு பல்டி அடிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு விட்டது. அப்பல்டியில் ஒரு மாபெரும் புளுகு புளுகி இருப்பது மிகவும் கவனித்துப் பெரியதொரு சிரிப்பு சிரிக்கக் கூடியதான வார்த்தையாக இருக்கிறது. அதாவது தான் மந்திரியாக ஆக நினைத்திருந்தால் 15 வருடங்களுக்கு முன்பே ஆகியிருப்பாராம்!. எப்படி ஆகியிருப்பார்? ஏன் ஆகவில்லை? என்பது ஜனங்களுக்குத் தெரிய வேண்டியது ஒரு முக்கிய காரியமல்லவா?

 சத்தியமூர்த்தியார் 15 வருஷம் எப்படி மந்திரி பதவியை வெறுத்துத் தள்ளினார் என்பது பற்றி யோசித்துப் பார்த்தால் அவர் சொல்வது உண்மை! உண்மை! முக்காலும் உண்மை! என்பது விளங்கும். எப்படியெனில் சத்தியமூர்த்தியார் நாடகப்பிரியர் என்பது உலகம் அறிந்த விஷயம். அவர் கொஞ்ச காலமாக சுகுண விலாச நாடக சபையிலும் ஒரு குறிப்பிட்ட மெம்பராய் இருந்து வருகிறார். அதற்கு முன்னரும் பல நாடக கூட்டத்திலும் சம்பந்தம் வைத்திருக்கிறார்.

 ஆகவே நாடகத்தில் மந்திரி வேஷம் போடும் சந்தர்ப்பம் இவருக்கு பல தடவை கிடைத்திருக்கலாம். அதிலும் இவர் அரசியலில் இறங்கி விளம்பரம் பெற்ற பிறகு இவரது மந்திரி நடிப்புக்கு அதிக கிராக்கி கூட ஏற்பட்டிருக்கலாம். அதைச் சத்தியமூர்த்தியார் தமது கவுரவத்துக்கு குறைவானது என்று கருதி மறுத்தும் இருக்கலாம். அல்லது தனக்குள்ள தகுதியை, திருப்தியைக் கருதி வேறு வேஷம் போட ஆசைப்பட்டு அடைந்துமிருக்கலாம்.

 இந்த விஷயமெல்லாம் மூர்த்தியாருடைய நாடகத் தோழர்களைக் கேட்டால் இன்னும் நன்றாய் தெரிந்து கொள்ளக்கூடும். ஆகவே அய்யர்வாள் மந்திரி பதவியை வேண்டாம் என்று சொன்னதானது நாடகத்தில் வேஷம் போடும் மந்திரி பதவியே ஒழிய சென்னை அரசாங்கத்தின் நிர்வாகத்துக்கு பொறுப்பாய் இருக்கும் மந்திரி பதவி அல்ல என்பதை வாசகர்கள் அறிய வேண்டுமாய்க் கோருகிறோம்!"

என்று அதில் குறிப்பிட்டிருந்தது.

Pin It