சுற்றலா மற்றும் சமயம் சார்ந்த காரணங்களுக்காக அன்றி மக்கள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு இடம்பெயர்ந்து செல்வது வழக்கம். இதைப் புலப்பெயர்வு அல்லது இடப்பெயர்வு என்பர். சமூகவியல் அகராதி புலப்பெயர்வு என்பதைப் பின்வருமாறு வரையறை செய்யும்.

தனிநபரின் அல்லது மக்கள் தொகையின் ஓரளவு நிரந்தரமான நகர்தல் அல்லது இடப்பெயர்வு. இது ஒரு அரசியல் எல்லையைக் கடந்து ஒரு புதிய பண்புக் குழுவுக்கோ அல்லது வாழும் பகுதிக்கோ செல்வதாக இருக்கும்.

பெருவெள்ளம், வறட்சி, பஞ்சம், கொள்ளை நோய் ஆகியன இடப்பெயர்ச்சிக்கான முக்கிய காரணங்களாகின்றன. தாம் வாழும் பகுதியில் வேலைவாய்ப்புக் கிட்டாத நிலையில் வேறு இடத்திற்கு மக்கள் இடம்பெயர்ந்து செல்வதும் உண்டு. சில நேரங்களில் இவ்வாறு இடம் பெயர்ந்து சென்றவர்கள் மீண்டும் தங்கள் இருப்பிடத்திற்கு குறிப்பிட்ட காலத்தில் திரும்பிவிடுவார்கள். இத்தகைய இடப்பெயர்வை தற்காலிக இடப்பெயர்வு என்பர்.

இக்காரணங்கள் தவிர மன்னர்களின் வரி விதிப்பும் இடப்பெயர்ச்சிக்குத் தூண்டுதலாக இருந்துள்ளது. இவ்வுண்மையை சோழர், பாண்டியர், விஜயநகர ஆட்சிக் காலத்தியக் கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன. இவ்வாறு மக்கள் இடம் பெயர்ந்து சென்ற பின்னர், வரிக் குறைப்பு செய்து அவர்களை மீண்டும் குடியேற்றிய நிகழ்வுகள் நிகழ்ந்துள்ளன. சில நேரங்களில் அதைப் பொருட்படுத்தாததுடன், இடம் பெயர்ந்தவர்களின் நிலங்களை அரசாங்கம் கைப்பற்றி அதை விற்பனை செய்து வரிப்பாக்கியை ஈடுசெய்தலும் உண்டு. அல்லது அவர்களின் நிலங்களில் மற்றவர்களைக் குடியமர்த்தியுமுள்ளனர். அதிக வரிவிதிப்பினால் பாதிக்கப்பட்டு இடம் பெயர்ந்தவர்களை, ‘உழுகுடிகள்’, ‘கைவினைஞர்கள்’ என இரண்டாகப் பகுக்கலாம். சில நேரங்களில் இரு பிரிவினரும் ஒன்றாகவே இடப்பெயர்ச்சியை மேற்கொண்டுள்ளனர். சில கல்வெட்டுக்கள் இடப்பெயர்ச்சிக்கான காரணம் அதை மேற்கொண்டவர்கள் யார்? என்பன குறித்து எதுவும் கூறாமல் இடப்பெயர்ச்சியினால் ஊருக்கு ஏற்பட்ட விளைவை மட்டும் குறிப்பிடுகின்றன.

சேலம் மாவட்டத்திலுள்ள கருங்காலி மலை சுக்கான்பூண்டி ஊரார் வரிகட்டாமல் கி.பி.1280வாக்கில் ஓடிப்போயினர். பின்னர் ராசிபுரம் பற்றுச்சபையாரும், நாட்டாரும், நகரத்தாரும் கூடி குடி ஒன்றிற்கு ஆண்டுக்கு ஒரு பணம் என்று வரி நிர்ணயம் செய்தனர் (கிருட்டிணன் 2001:235).

இராஜசேகர வீரபாண்டியன் என்ற கொங்கு பாண்டியன் காலத்து (கி.பி. 13ஆம் நூற்றாண்டு) கல்வெட்டொன்று இடப் பெயர்ச்சியினால் வரிக்குறைப்பு நிகழ்ந்தத ைக் குறிப்படுகிறது. மேலே குறிப்பிட்ட சுக்கான்பூண்டி ஊரார் இடம்பெயர்ந்த பின்னர் ராசிபுரம் பற்றிலுள்ள சபை, நாடு, நகரம் ஆகியனவற்றின் உறுப்பினர்கள் கூடி குடிக்கு ஒரு பணம் என்று வரிவாங்க முடிவு செய்துள்ளனர்.

ஒரு ஒழுங்குமுறையின்றி பலரும் விருப்பம் போல் வரி வாங்கும் நிகழ்வுகளும் மன்னராட்சி காலத்தில் நிகழ்ந்துள்ளன. இதனால் பாதிப்படைந்த மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர்.

“நம்மூர் பரப்பிலே காசும் நெல்லும் ஆகப் பலவகை வந்தபடி தண்டிக் கொள்கையாலே (வசூலித்துக் கொள்ளுவதாலே) எங்களுக்குத் தரிப்பறுதியலே (நிலைத்து வாழ ஏலாமையாலே) வெள்ளாழ்மை செய்து குடி இருக்கப் பொகுதில்லையென்று நாட்டவர் (நாட்டு மக்கள்) வந்து சொல்லுகையாலும்” (தெ.த.இ.க. 6 : 58)

இராஜராஜ சோழனின் 22வது ஆட்சியாண்டைச் சேர்ந்த இக்கல்வெட்டு தஞ்சை மாவட்டம், மன்னார்குடி ஊரினர் கொடுத்த எச்சரிக்கையைக் குறிப்பிடுகிறது.

விருதாச்சலம் விருத்தகிரியீஸ்வரர் கோயிலிலுள்ள விஜயநகர ஆட்சிக் கால கல்வெட்டொன்று அக்கோவிலுக்குச் சொந்தமான திருமுதுகுன்றம் கிராமத்திற்கு இடம்பெயர்ந்த செட்டிகள், கைச்கோளர்கள் மற்றும் பிற சாதியினர்க்கு, வரித்தள்ளுபடி வழங்கப்பட்டததைக் குறிப்பிடுகிறது. விஜயமகாராயன் (இரண்டாம் தேவராயனாக இருக்கலாம்) என்ற விஜயநகர பேரரசனின் ஆட்சியில் வலங்கை-இடங்கை என்ற இரு பிரிவினரிடமிருந்தும் அரசு அதிகாரிகள் கட்டாயக் காணிக்கை வாங்கினர். இதனால் குடிமக்கள் நாட்டை விட்டு ஓடிப் போயினர். பின்னர் அவர்களை அழைத்து வந்து காணிக்கை வாங்குவதில்லை என்று ஆளுவோர் உறுதியளித்தனர். (தெ.இ.க. 22, பகுதி ஐ; 161)

திண்டிவனம் வட்டம் உலக்கையூர் (தற்போது உழக்கூர்) என்ற இராஜமகேந்திர நல்லூரில் வரிகட்ட முடியாத கைக்கேசாளர்கள் ஊரைவிட்டு ஓடிப்போயினர். இதனால் ஊருக்கு ஏற்பட்ட விளைவையும் வரிக்குறைப்பு செய்து அவர்களை மீண்டும் அழைத்து வந்து குடியேற்றுவதையும் விஜயநகர மன்னன் இரண்டாம் அரிஹரனின் 1388-89 ஆம் ஆண்டு கல்வெட்டொன்று பின்வருமாறு குறிப்பிடுகிறது (தெ.இ.ச. 2; 375).

இவர்கள் இறையாற்றாமல் ஓடிப்போய் திருமடைவிளாகமும் பாழாய், நாயனார் பூசை கொள்ளாமல் கோயிலும் அடைத்துக் கிடைக்கையில், இந்நாள் முதல் திருமடை விளாகத்திலே குடியும் புகுந்து தறியுமிட்டு, நெய்யக் கடவர்களாகவும், தறிக்கடமை, வாசல் பணம், சோடி, ஆலவரி, வாசல்வரி, தலையாரிக்கும், நத்தவரி, பழவரி, பல காணிக்கையும் உட்பட சகல ஆயங்களுக்கும் நூறுபணம், நூறு ஆயம் ஆக ஐந்து பணம், இப்பணம் அஞ்சு ஒழிய இறக்கொண்டார் உண்டாகில் பிரமஹத்தியார் தோசம்.

திருவாமத்தூரிலுள்ள கைக்கோளர்கள் சில வரிகளை செலுத்த முடியாமல் இடம் பெயர்ந்தனர். இதன் விளைவாக தறி ஒன்றுக்கு ஆண்டுக்கு ஒன்றேகால் பணமென வரி குறைக்கப்பட்டது. வட ஆற்காடு மாவட்டம் திருவாமத்தூர் அபிராமேஷ்வரர் கோவிலிலுள்ள இக்கல்வெட்டில் இந்நிகழ்வு எந்த மன்னனின் ஆட்சிக் காலத்தில் என்பதற்கான குறிப்பு எதுவும் இல்லை.

சளுக்கி என்ற ஊரிலுள்ள நெசவாளர்களால் பல்வேறு சிறு வரிகளைச் செலுத்த முடியவில்லை. எனவே ஊரைவிட்டு வெளியேறினர். அவர்களை மீண்டும் குடியேற்றத் தூண்டும் வகையில் அவ்வரிகளெல்லாம் ஒன்றாக்கப்பட்டு ஒவ்வொரு தறிக்கும் விதிக்கப்பட்டன. அத்துடன் இயங்காத தறிகளுக்கு வரி விலக்களிக்கப்பட்டது. (க.ஆ.அ. 1921; 471) வட ஆற்காடு மாவட்டம் வந்தவாசி வட்டத்தில் சளுக்கி என்ற கிராமத்தின் மனுக்குல மகாதேவர் கோவில் மண்டபத்திலுள்ள இக்கல்வெட்டின் காலம் தெரியவில்லை.

கம்மாளர்களின் ஐந்து பிரிவினரான கொல்லர், தச்சர், பொற்கொல்லர், கல் தச்சர், வண்ணார் ஆகியோரால் சின்னப்ப நாயக்கர் என்ற தஞ்சை நாயக்கர் விதித்த சில வரிகளைச் செலுத்த இயலவில்லை. எனவே அவர்கள் இடம்பெயர ஆயத்தமாயினர். இதை அறிந்த பின்னர் அவர்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டது. (க.ஆ.அ. 1921-22; 413).

பஞ்ச கர்மர் வெளியேறியதையும் அவர்களை மீண்டும் குடியேற்றியதையும் கி.பி. 15822 ஆம் ஆண்டு கல்வெட்டொன்று குறிப்பிடுகிறது. (தெ.இ.ச. 27;503). கல்வெட்டு சேதமடைந்து உள்ளதால் வெளியேறியதற்கான காரணம் தெரியவில்லை.

கல்வெட்டுக்களில் மட்டுமின்றி குமரி மாவட்ட ஓலை ஆவணங்களிலும் இடப்பெயர்ச்சி குறிப்பிடப்பட்டுள்ளது. “நாட்டிலே வையாவரியும், செய்யாமுறையும் நடத்திவிச்சபடியினாலே 895 (1720) காடும் விசானமும் தரிசுபோட்டு இரண்டு வகை நாடும் மலைக்கு கிழக்கே குடிவாங்கிப் போன படியினாலே’ என்று ஓலை ஒன்று குறிப்பிடுகிறது. குடிவாங்குதல் என்று குமரி மாவட்ட ஓலைகளில் இடப்பெயர்ச்சி குறிப்பிடப்பட்டுள்ளது.

மூன்றாம் இராசராசனின் பதினைந்தாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு (கி.பி. 1231) கோவில் நிலங்களைப் பயிரிட்டு வந்தோர் அதிகப் பங்கைக் கொடுக்க இயலாத நிலையில் ஊரை விட்டு வெளியேறியதைக் குறிப்பிடுகிறது. பயிரிட வேறு ஆட்கள் இல்லாத நிலையில் கோவிலின் வருவாய் குறைந்தது. கோவிலின் இதரப் பணிகளுக்கும் தடங்கல் நேரிட்டது. எனவே வேறு வழியின்றி கோவில் நிலங்களுக்கான கடமை (வரி) வேலி ஒன்றுக்கு அறுபது கலம் எனக் குறைக்கப்பட்டது. ஊரை விட்டுச் சென்றவர்கள் மீண்டும் குடியேற வழி செய்யப்பட்டது (ராசு குமார், 2004; 79).

துக்காச்சி என்ற கிராமத்திலுள்ள விக்கிரம சோழீஸ்சுவரமுடையார் கோவிலுக்கு வழிபாடு நிகழவும் படையல் படைக்கவும் மாலைகள் தொடுக்கவும் இதர செலவுகளை நிகழ்த்தவும் தேவையான வருவாயைத் தர நிலங்கள் இருந்தன. இந்நிலங்களில் பயிரிட்டு வந்தவர்களால் நில வரியைச் செலுத்த இயலவில்லை. மேலும் இவ்உழுகுடிகள் ஊரை விட்டு வெளியேறிவிடலாம் என்ற நிலை உருவானது. கோவில் நிலங்களைக் குத்தகைக்குவிடும் பொறுப்பைக் கவனிக்கும் காவல் காணியாளர் பதவி வகித்த சீராண்டன் என்ற முனைய தரையன் உழுகுடிகள் வாழ்க்கை நடத்துவதற்குத் தேவையானதை வழங்கி அவர்கள் ஊரை விட்டு வெளியேறுவதைத் தடுத்து நிறுத்தினான். அத்துடன் முந்தைய ஆண்டுகளில் வேளாண்மை செய்யப்படாது தரிசாகக் கிடந்த நிலங்களைப் பயிரிட பழைய உழுகுடிகளை நியமித்தான் (க.ஆ.அ. 1918: 152, பத்தி 41).

இங்கு நிலங்களைத்த தரிசாகப் போட்டுவிட்டு ஒரு கட்டத்தில் ஊரை விட்டு உழுகுடிகள் வெளியேறும் நிலையில் அவர்களது பிரச்சனைகள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. இவ்விரு நிகழ்வுகள் குறித்து ஆராயும் இராசுகுமார் (2004: 08)

“உடைமைப் பிரிவினரின் கட்டுகளுக்கு உட்பட முடியாத நிலை ஏற்படும்போது உழுகுடிகளுக்கு இரண்டு மாற்றுகள் தாம் இருந்தன. ஒன்று கட்டுப்பாட்டினை மீறும்போது ஊரைவிட்டு அவர்களால் வெளியேற்றப்படுதல்: மற்றொன்று தாங்களாகவே ஊரை விட்டு வெளியேறி விடுதல். இதனால் உடமைப் பிரிவினரின் நிலக்குத்தகை அளவைச் செலுத்த இயலாத உழுகுடிகள் வேறு வழியின்றியே ஊரை விட்டு வெளியேறும் நிலைக்குத் தள்ளப் பட்டிருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது. முன்னது தண்டனையாக அமைந்து விடுவதால் பின்னதையே பெரும்பாலும் உழுகுடிகள் தேர்ந்தெடுக்க வேண்டியதாகி விட்டது” என்கிறார். ஊரை விட்டு வெளியேற்றப்படுவதற்கு முன்னர் அவர்களிடம் வரி வாங்குவோர் கடுமையாக நடந்து கொண்டுள்ளனர். சோழர் காலக் கல்வெட்டுக்களில் வரி வாங்கும் முறையைக் குறிப்பிடும்போது “குடாத அளவில் மண்கலமுடைத்து வெண்கலமெடுத்து கொள்ளக் கடவர் ஆகவும்” (தெ.இ.க. 7:11) “வெண்கலம் பறித்தும் மண்கலம் தகர்த்தும் கொள்ளக்கடவர்” (தெ.இ.க. 8: 291) என்ற தொடர்கள் இடம்பெற்றுள்ளன.

இத்தொடருக்கு, வரியை முறைப்படி தராதவர்களின் இல்லத்தில் அதிகாரிகள் புகுந்து உலோகத்திலான பாத்திரங்களைக் கைப்பற்றியும் மண்பாத்திரங்களை உடைத்தும் வசூல் செய்வர் என்று கோவிந்தராஜன் (1897: 459) விளக்கம் தருவார்.

சோழர் காலக் கல்வெட்டுக்கள் சிலவற்றில் “கடமைக்கு வெள்ளாளரைச் சிறைபிடித்தல் இவர்கள் அகங்களில் ஒடுக்குதல் செய்யக் கடவதல்லதாகவும்” (தெ.இ.க. ) “வெள்ளாளர் அகங்களில் புக்கு ஒடுக்காதொழியவும்” (தெ.இ.க. 6: 50, 58) என்ற தொடர் இடம் பெற்றுள்ளது. வரி வாங்கும் போது வெள்ளாளரிடம் நடந்து கொள்ள வேண்டிய முறையை இத்தொடர் குறிப்பிடுகிறது. இங்கு வெள்ளாளர் என்போர் நிலக்கிழார்கள் ஆவர். இவர்கள் நீங்கலாக, உழுகுடிகளையும், கைவினைஞர்களையும் வரி பாக்கிக்காகச் சிறை பிடிப்பதும் அவர்கள் வீடுகளில் நுழைந்து ஒடுக்கு முறை செய்வதும் நிகழும் என்பதை இத்தொடர் மறைமுகமாகச் சுட்டி நிற்கிறது.

திருக்கருகாவூரில் ராஜாதிராஜனின் பதினான்காம் ஆட்சியாண்டு (கி.பி 1176) கல்வெட்டில் உழுகுடி வெள்ளாளர்களுக்கு ஊர்ச்சபையார் வழங்கிய சில சலுகைகள் இடம்பெற்றுள்ளன. அவற்றுள் ஒன்றாக, “கடமை கொள்ளும் இடத்து, சேவகர் வீட்டில் புக்கு அரவதண்டஞ் செய்யாதே” என்ற தொடர் இடம்பெற்றுள்ளது (திருமலை 1987: 183). இதன்படி வெள்ளாளர் வீட்டினுள் சேவகர்கள் நுழைந்து கடுமையான வசவுச் சொற்களைக் கூறக்கூடாது. இதற்கு முன்னர் அரவதண்டஞ் செய்தல் திருக்காவூரில் நிகழ்ந்துள்ளதை இக்கல்வெட்டு உணர்த்துகிறது. மேலும் ஒரு குறிப்பிட்ட ஊர்ச்சபையார் எடுத்த முடிவுதான் இது. எனவே ஏனைய பகுதிகளில் அரவதண்டஞ் செய்யத் தடை கிடையாது என்பதும் வெளிப்படை. இக்கொடுமைகளுக்கெல்லாம் அஞ்சியே குடிகள் இடம்பெயர்ந்துள்ளனர்.

திருவாமத்தூரில் நீண்ட கால ஆட்கள் இல்லாமையால் கோவில் மண்டபங்களும், கோபுரங்களும் அழிந்து, பாசனக் குளமும் உடைப்பெடுத்திருந்ததாக நரசிங்க உடையார் என்ற சாளுவ மன்னனின் கல்வெட்டு (சகஆண்டு 1393) குறிப்பிடுகிறது.

இராச்சியில் வலங்கை, இடங்கை இந்த இரண்டு வகையில் குடிகளையும் பிரதானிகள், மன்மந்திரங்கள் தோறும் காணிக்கை கொண்டு இத்தாலே குடிகள் உள்ளது. நலங்கி புறராச்சியமே ஓடிப்போய் இத்தாலே தேவதானங்கள் பூசை புனஷ்காரம் திருநாளும் குலைந்து இராச்சியம் வியாதியுமாய் மனித்தர் உள்ளம் செத்து நலங்கினபடி ஆலே.

மக்களின் இடப்பெயர்ச்சி ஆளுவோர் பொருட்படுத்தாததையும் சில கட்வெட்டுக்கள் வாயிலாக அறிய முடிகிறது. கோனேரின்மை கொண்டான் என்ற மன்னனின் 13 வது ஆட்சியாண்டுக் கல்வெட்டொன்றில் இடம்பெயர்ந்து சென்றவர்களின் இடத்தில் புதியவர்களைக் குடியேற்றியது. இக்கல்வெட்டை ஆராய்ந்த மங்கையர்க்கரசி இராகவன் (ஆவணம் 4; 23-26) பின்வருமாறு குறிப்பிட்டுள்ளனர்.

திருமுனைப்பாடி நாட்டில் கி.பி. 1025-26ல் ஏதோ ஒரு காரணத்திற்காக குடிகள் தம் காணிகளை விட்டு வெளியேறி விடுகின்றனர். அவ்வாறு வெளியேறியவர் நிலங்களில் புதியதாகக் குடியேறி பயிர்செய்து அரசாங்க வரி (இறை) யிறுத்தவர்களுக்கு, காணி உரிமை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக அந்நிலங்களில் கடுகு பயிரிடுபவர்கள் வரவேற்கப்பட்டார்கள்.

கலகத்தின் காரணமாகவும் மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். மாறவர்மன் குலசேகர பாண்டியன் 34வது ஆட்சியாண்டுக் கல்வெட்டொன்று (கி.பி.1301) “நம்முடைய நாடு நெடுநாள்பட கலகமாய் நாட்டை விட்டுப் போய் கிலேசப் படுகையாலும்” என்ற தொடர் இடம்பெற்றுள்ளது. (தெ.இ.க. 22 தொகுதிஐ; 46) படையெடுப்பு என்ற பெயரால் நிகழும் கொள்ளைகளின் போது பாதுகாப்பின் பொருட்டு மக்கள் இடம் பெயர்ந்தனர். மராட்டியர்கள் மைசூர்க்காரர்கள் சந்தாசாகிப் ஆகியோரின் படையெடுப்பிற்கு அஞ்சி திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் பகுதியிலுள்ள மக்கள் இடம் பெயர்ந்ததை வலசை வாங்கி வந்தார்கள் என்ற ஆனந்தரங்கப்பிள்ளை தமது நாட்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்ப்பை வெளிக்காட்டும் ஒரு வழிமுறையாக குடியானர்களின் இடப்பெயர்ச்சியை, ரொமிலா தாப்பர் (2004: 227) கருதுகிறார். இடப்யெர்ச்சியின் விளைவாக கிராமங்களும் விளை நிலங்களும் பாலைவனமாகக் காட்சியளிப்பதுடன் மட்டுமின்றி குறிப்பிட்ட மன்னனின் ஆட்சி எல்லைக்கு அப்பால் புதிய குடியிருப்புகள் உருவாகவும் இடப்பெயர்ச்சி வழிவகுத்தது. அப்போதைய அமைப்புக்கு மாற்று அமைப்பை உருவாக்கும் தன்மையது என்றும் அவர் குறிப்பிடுகிறார். அதிக வரி விதித்து குடிகளை ஒடுக்கினால் அவர்கள் இடம் பெயர்வர். அதன் விளைவாக ஆட்சியின் வளம் அழியும். எனவே அதிக வரி விதிக்க வேண்டாமென்று அர்த்த சாஸ்திரம் கூறுவதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

(நன்றி : புதிய காற்று செப்டம்பர் 2005)

Pin It