1. சங்க காலத்தில் கோவில்களோ அல்லது அதனுடன் இணைந்த தேவரடியார்களோ இல்லை. பின்னர் வந்த களப்பிரர்கள் சமண சமயத்தவர். எனவே அவர்கள் காலத்திலும் தேவரடியார்கள் இருந்திருக்க வாய்ப்பில்லை; அதற்கான சான்றுகளும் இல்லை. பல்லவர்கள் சமண சமயத்தை விட்டு சைவ சமயத்தைத் தழுவியவுடன் கோவில்களைக் கல்லினால் கட்ட ஆரம்பித்தார்கள் (முதன் முதலில் கற்றளிகள், கல்லால் ஆன கோவில்களைக் கட்டியவர்கள் பல்லவர்களே) அவர்கள் காலத்தில் தான் கோவில் வழிபாட்டில் பெண்கள் ஆடற் பெண்டுகளாகப் புகுத்தப்பட்டிருக்கவேண்டும். அவர்கள் அப்பொழுது கூத்திகள் என்று அழைக்கப்பட்டனர்; இது தொழிற்பெயராகும். தேவரடியார்கள் என்ற பெயர் வழங்கியதற்கு கல்வெட்டு சான்றுகள் இல்லை; அடிமை என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை.

2. சோழர்கள் காலதில் தேவரடியார்கள் ஒரு அமைப்பாக, கோவில்களுடன் இணந்துவிட்ட அமைப்பாக மாறிவிட்டனர். தேவரடியார்கள் என்ற சொல்லாட்சி எல்லா கல்வெட்டுகளிலும் காணப்படுகிறது. இது ராசராச சோழன் காலத்தில் வலுப்பெற்ற ஒரு அமைப்பாக மாறியது. பல ஊர்களில் இருந்தும் பெண்களை தளிச்சேரிக்கு அழைத்து வந்து தேவரடியார்கள் என்று பெயர் சூட்டி ஒரு அமைப்பை ஏற்படுத்தினான். இந்த வகையில் அவன் ஒரு முன்மாதிரி. ராசராச சோழன், ராசேந்திரசோழன் காலத்திற்குப் பிறகு சோழர் ஆட்சி குன்றத்தொடங்கியது. குலோத்துங்கன் காலத்தில் சிறிது நிமிர்ந்து நின்றது. ஆனாலும் அதன் வீழ்ச்சி தொடர்ந்தது. பிற்காலப் பாண்டியர்கள் குறிப்பாக மாறவர்மன் சுந்தர பாண்டியன் சோழ நாட்டின் மீது படையெடுத்து அதை முற்றிலுமாக அழித்தான். சோழ நாட்டுக் கோவில்களும் செலவமும் செல்வாக்கும் இழந்தன. அத்துடன் தேவரடியார்கள் புகழும் செல்வாக்கும் வீழ்ச்சி அடைந்தது. கோவில்களின் பாதுகாப்பு பொய்யாய்ப் போனது. தங்களின் பிழைக்கும் வழிக்காக அரசர்களையும் நிலக்கிழார்களையும் மட்டும் நம்பியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அத்துடன் அவர்கள் தொழிலும் வேறு பாதையில் பயணிக்கத் தொடங்கி அதில் மீட்க இயலாத மாற்றம் ஏற்பட்டே விட்டது.

3. தேவரடியார்கள் அனைவரும் ஒரே தரப் பட்டவர்கள் அல்லர், அவர்களுடைய சமூக செல்வாக்கும் ஒரே தரப்பட்டது அன்று. பெண்களை அடிமைகள்போல் சில பொற்காசுகளுக்கு கோவில்களுக்கு தேவரடியார்களாக விற்கப்பட்ட செய்திகளும் உள்ளன. அவர்கள் கால்களில் திரிசூல முத்திரை இடப்பட்டது. ஆனால் அதற்கு சூட்டுக்கோல் பயன்படுத்தப்படவில்லை என்ற ஆறுதலான செய்தியை கே.கே.பிள்ளை அவர்கள் தமது நூலில் பதிவு செய்து உள்ளார். மேலும் பெண்களில் சிலர் தங்களையும் தங்களின் மகள், பேரன், பேத்திகள் ஆகிய பத்துப் பேரை முப்பது காசுகளுக்கு விற்றுக் கொண்ட செய்திகளும் கல்வெட்டுகளில் காணப்படுகிறது. இரண்டாம் ராசராசசோழன் காலத்தில் திருவாலங்காடுடைய நயனார்கோவிலுக்கு 700 காசுக்கு நான்கு பெண்கள் தேவரடியர்களாக விற்கப்பட்டனர் இந்தச் செய்திகள் யாவும் கே.கே.பிள்ளை அவர்கள் நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளன [பக் 340]. டி.வி. சதாசிவப் பண்டாரத்தார் தமது பிற்கால சோழர் சரிதம் என்ற நூலில் அடிமைகளாக கோவிலுக்கு விற்கப்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் பற்றிய செய்தியினை ஒரு பகுதி முழுவதும் எழுதிஉள்ளார் [பொது மக்களும் சமூக நிலையும்.] இவை யாவும் கல்வெட்டு சான்றுகளுடன் நிறுவப்பட்ட செய்திகளாகும். எனவே வறுமைக்கும் வயிற்றுப் பிழைப்புக்கும் மட்டுமே அக்காலத்தில் மக்கள் தேவரடியார்களாக மாறினார்களே அன்றி லெஸ்லியும் அவரது தமிழ்த்தேசிய நண்பர்களும் கதைப்பதைப் போல் கடவுள் பக்தியால் அல்ல என்பது தெளிவாக விளங்கும்.

மேலும் தேவரடியார்கள் வேறு தேவதாசிகள் வேறு என்ற வாதம் அடிபட்டுப் போகிறது. ஒன்று தூய தமிழ் வழக்கு. மற்றது வடமொழி வழக்கு. வேறுபாடு அவ்வளவு தான். நஞ்சு என்றாலும், விடம் என்றாலும் உடலுக்கு தீங்கே செய்யும்· அவர்கள் கோவிலுக்கு பெரிய அளவில் கொடை வழங்கினார்கள் என்று கூறிவிடமுடியாது. கோவிலுக்கு விளக்கேற்றுவதற்கு எண்ணெய் அளித்தது, அதற்காக சில ஆடு மாடுகளை நேர்ந்துவிட்டது, "ஸ்வதி ஸ்ரீ இதுவும் ஒரு கருங்கற்படிக்கட்டு என்று கோவிலுக்கு சில படிகட்டுகள் கட்டியது, தங்களிடம் இருந்த நகைகள் சிலவற்றை கொடுத்தது இவைத்தவிர பெரிய கொடை கொடுத்தாக சன்றுகள் இல்லை. எப்படி இருந்தாலும் அரசன் அளித்தது போல் பல ஊர்களை கொடையாக அளித்தமைக்கு கல்வெட்டு சன்றுகள் இல்லை. மேலும் பார்ப்பனப்பெண் அளித்த கொடை அவர்கள் குலத்தின் பெயராலே குறிக்கப்பட்டுள்ளது. அது போன்றே அரச மரபினர் கொடுத்த கொடைகளும் அவர்கள்பெயர், அரச குலம் என்று குறிக்கப்பட்டுள்ளது. பறையர் கொடுத்த கொடையும் அவ்விதமே குறிக்கப்பட்டுள்ளது ஆயின் தேவரடியார்கள் கொடுத்த கொடை 'இன்ன கோவில் தேவரடியார் அளித்த கொடை' என்றே குறிக்கப்பட்டுள்ளது. இது உற்று நோக்கத்தக்கது. இவர்கள் ஒரு தனிசாதியினராக கருதப்பட்டிருக்கலாம் அல்லது அவ்வாறு உருவாகக் கூடும் என்ற எண்ணத்தை தோற்றிவிக்கும் வண்ணமாக விளங்குகிறது.

4. கோவிலுக்கு செய்யும் பணி உரிமை தேவரடியார்களுக்கு பரம்பரையாக வந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. தங்கள் பணிஉரிமையை பிறருக்கு விற்கும் உரிமை இருந்தது. அதிலும் யார் முதலில் யார் பின்னால் என்ற வேற்றுமையும் இருந்தது. திருவிழாக்களின் போது முன்னால் திரை எடுத்தால் இவர் ஆடவேண்டும் பின்னால் திரை எடுத்தால் இவர் ஆட வேண்டும் என்றபிரிவினை கூட இருந்திருக்கிறது. பணியில் இருக்கும்போது அவர் இறந்துவிட்டால் அல்லது வேறு நிமித்தமாக பணியை விட்டு சென்றுவிட்டால் [பணியை விட்டு அயல் நாடுகளுக்குசென்றதாகவும் கருதப்படுகிறது] அவர்களது நெருங்கிய உறவினர்கள் அப்பணிக்கு நியமிகப்பட்டதை தஞ்சை தளிச்சேரிக் கல்வெட்டுகள் நமக்குத் தெரிவிக்கின்றன.

எவ்விதம் நோக்கினும் தேவரடியார்கள் அரசன் - கோவில்‍ செல்வம் என்ற முக்கோணத்தில் சிக்கிய முயல்களாகவே தோன்றுகின்றனர்.

- Donors, Devotees, and Daughters of God: Temple Women in Medieval Tamilnadu

Pin It